Advertisement

ஒரு காதல் இடைவேளை

அத்தியாயம் 1

கையிலிருந்த செய்தித்தாள் காற்றில் படபடத்துக் கொண்டிருக்க, கனத்துப் போன இதயத்துடன், கண்ணில் திரையிட்ட கண்ணீருடன் பெரிய எழுத்தில் தலைப்புச் செய்தியாய் வந்திருந்த வார்த்தைகளை மீண்டும் ஒரு முறை வாசித்தாள் நித்யஸ்ரீ.

பரஸ்பர விவாகரத்து கோரி பிரபல திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளருமான  ராம்சரண் நடிகை நித்யாஸ்ரீ நீதிமன்றத்தில் மனு

கொட்டை எழுத்தில் வெளியாகியிருந்த செய்திக்குக் கீழே பார்வையை ஓட்டியவள் இதயம் சொல்லவொணா பாரத்தைத் தாங்கியிருந்தது.

இயக்குநர் ராம்சரண் மற்றும் நடிகை நித்யஸ்ரீ இருவரும் பரஸ்பரம் விவாகரத்துக் கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

சுமார் 60 படங்களுக்கும் மேல் நடித்து தனது திறமையான நடிப்பால் பல விருதுகளையும், ஆயிரக்கணக்கான ரசிகர்களின் மனதையும் கவர்ந்த நடிகை நித்யஸ்ரீ இயக்குநர் ராம்சரணைக் காதலித்துக் கரம் பிடித்தவர்.

முதலில் உதவி இயக்குநராகப் பல படங்களில் பணி புரிந்து, தனது திறமையாலும் முயற்சியாலும் முன்னேறிச் சொந்தமாய் படம் தயாரித்து, இயக்கிய முதல் படத்திலேயே முத்திரையைப் பதித்த வெற்றி இயக்குநர்தான் ராம்சரண்.

ஆண்களே பெரிதாகக் காலூன்றி நிற்கும் தமிழ் திரைப்படத் துறையில் பெண்களுக்குத் தனி முக்கியத்துவமும், மரியாதையும் கொடுக்கும் கதையம்சம் நிறைந்த குடும்பப்பாங்கான திரைப்படங்களைக் கொஞ்சமும் விரசமான காட்சிகள் இன்றிக் கொடுத்து, மக்கள் மனதில் பிரத்யேக இடத்தைப் பிடித்தவர் இயக்குநர் ராம்சரண். காதலித்துக் கரம் பிடித்த மனைவி நித்யாவின் மீது உயிரையே வைத்திருந்தார் என்றுதான் இதுவரை அனைவரும் அறிந்திருந்தனர்.

அழகிய காதல் ஜோடிகளாய் வலம் வந்த இவர்களுக்குக் கல்யாணம் முடிந்து 12 வருடங்கள் ஆகின்றன. ஒரு மகளும், மகனும் இருக்கின்றனர். இதுநாள் வரை எந்தக் கிசுகிசுவுக்கும் ஆளாகாத இந்தக் காதல் ஜோடிகள் இப்போது பரஸ்பரம் பிரிய விரும்பி விவாகரத்துக் கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு கொடுத்திருப்பது ரசிகர்களுக்கும், திரைத் துறையினருக்கும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

இதைத் தொடர்ந்து இயக்குநர் ராம்சரண் மற்றும் நடிகை நித்யஸ்ரீ தாக்கல் செய்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

அவர்களுக்குள் பிரிவு ஏன்? எதனால்? என்பது அவர்களுக்கும், ஆண்டவனுக்கும் மட்டுமே வெளிச்சம்.’

இறுதி வரிகளைப் படித்து முடிக்கையில் நித்யாவின் விழிகள் நிற்காமல் கண்ணீரைப் பொழியத் தொடங்கின.

ஏன்? எங்கு நான் தவற விட்டேன் உங்கள் நம்பிக்கையை? எதனால் இந்தப் பிரிவு? ராம்நீங்க இல்லாம இந்த உலகத்துல எனக்கு எதுவுமே இல்லையே! என்னை ஏன் தனியா விட்டிங்க? எதுக்குப் பிரிய நினைச்சிங்க? எனக்கு என்ன தெரியும்? நீங்க இல்லாத வாழ்க்கையை என்னால நினைச்சுக் கூடப் பார்க்க முடியலியே, நான் என்ன பண்ணுவேன்?’

மனதின் கதறல் ஒவ்வொன்றும் விழியில் மீண்டும் மீண்டும் கண்ணீரைப் பெருக்கத் தன்னை மறந்து அழுகையில் கரைந்து அமர்ந்திருந்தவளை உலுக்கியது அருகில் கேட்ட மகளின் குரல்.

அம்மா! எனக்கு இந்த வீடு சுத்தமாப் பிடிக்கவே இல்ல, நாம நம்ம வீட்டுக்கே போயிடலாம் மா…”

ஆமாம் மா, இங்க விளையாட வசதியாவே இல்ல, ரொம்ப ஹாட்டா இருக்கு. ஏசியும் இல்லாம வேர்த்து ஊத்துது. நாம அப்பா வீட்டுக்கே போயிடலாம் மா…” என்றான் மகன். இத்தனை நாள் சொகுசாய் பங்களாவில் வாழ்ந்துவிட்டு வாடகை வீடு பிடிக்காமல் குற்றம் சொன்ன பிள்ளைகள் இருவரையும் வெறித்துப் பார்த்த நித்யா எந்தப் பதிலும் கூறாமல் இருக்க விழிகள் மட்டும் விடாமல் கதறிக் கொண்டிருந்தன.

தாயின் சிவந்த விழிகளும், மூக்கும், வீங்கிய முகமும், நிற்காத அழுகையும் குழந்தைகளுக்கு எதை உணர்த்தியதோ நிமிஷா,  நிதீஷைச் சமாதானப்படுத்தினாள். இருவரும் இரட்டையர்கள்.

நிதீ, அம்மா ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்காங்க, நீ போயி விளையாடு…” எனக் கூறி அவனை அனுப்பி விட்டு அன்னையின் அருகே அமர்ந்தாள்.

அம்மாநீங்க ஏன் இப்படி அழுதுட்டே இருக்கீங்க, நீங்களும் அப்பாவும் பேசித் தான தனித் தனி வீட்டுல இருக்கலாம்னு முடிவு பண்ணீங்க. நாம எப்ப வேணா நம்ம அப்பா வீட்டுக்குப் போகலாம், வரலாம்னுதான அப்பாவும் சொன்னாங்க? அப்புறம் எதுக்கு இப்படி ஃபீல் பண்ணறிங்க? அப்பாவைப் பார்க்கணும் போலருக்கா?” எனக் கேட்ட மகளை இழுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கதறினாள் நித்யா.

10 வயதுக் குழந்தைகளுக்குப் புரியும் விதத்தில் அப்படித்தான் பெற்றோர் இருவரும் தங்கள் பிரிவைச் சொல்லி வைத்திருந்தனர். இதுவரை தாய், தந்தையர் இருவரையும் மிகவும் அன்னியோன்யமாய் பார்த்து மட்டுமே குழந்தைகள் வளர்ந்திருந்தனர். அவர்களுக்குள் எந்தச் சண்டையோ, குரல் உயர்த்திப் பேசியோ கூடக் குழந்தைகள் கண்டிறாத போது அவர்களால் வேறு எப்படி யோசிக்க முடியும்?

சிறிது நேரம் மகளைக் கட்டிப் பிடித்து அழுத நித்யா, “நிமி, தம்பியப் பார்த்துக்க…” எனச் சொல்ல தலையாட்டிய நிமிஷா அன்னையின் கண்ணீரைத் துடைத்துவிட்டு எழுந்து தம்பியிடம் சென்றாள்.

மீண்டும் சுவரில் தலை சாய்த்துக் கொண்டவளுக்கு கணவனின் முகமே கண்ணில் வந்து நின்றது.

எதுக்கு ராம், என்னை இவ்ளோ லவ் பண்ணீங்க? எல்லாரயும் போலச் சராசரிப் புருஷனா என்னை நேசிச்சிருக்கலாமே? நீங்க என் வாழ்க்கைல வந்த பிறகு தான் வாழ்க்கை ரொம்ப அழகா மாறுச்சுஎனக்குன்னு ஒரு குடும்பம், எனக்குன்னு ஒரு வாழ்க்கை, என் மேல கொள்ளை அன்பு வச்சிருக்கற நீங்கன்னு ஒவ்வொரு நிமிஷமும் நான் ரொம்பச் சந்தோஷமா, ரசிச்சு வாழ்ந்தேன். கடவுள் எனக்குக் கொடுத்த வரமாதான் உங்களைப் பார்த்தேன். நீங்க என் மேல வச்சிருக்கற அன்பைக் கண்டு ஒவ்வொரு நிமிஷமும் பிரம்மிச்சேன்அப்படில்லாம் இருந்திட்டுப் பிரிவுன்னா…’

அவள் இதயம் படபடக்க அழுகை இப்போது விசும்பலாய் மாறியிருந்தது.

நான் இத்தனை படம் நடிச்சதையோ, நிறைய விருது வாங்கினதையோ நினைச்சு எப்பவுமே பெருமைப்பட்டது கிடையாது. உங்க மனைவிங்கற அந்தஸ்தோட உங்க பக்கத்துல நிக்கற சந்தோஷம்தான் எனக்கு ஆயிரம் விருதுக்குச் சமம். நீங்க அன்போட ஆசையா வாங்கிக் கொடுக்கிற ஒரு முழம் மல்லிப்பூ தான் இந்த உலகத்துலயே பெரிய விருது. என்னைப் பெரிய நடிகையாகக் கொண்டாடின சினிமா ஃபீல்டை விட்டுட்டு, என் குடும்பத்தை விட்டுட்டு நீங்களே, நீங்க மட்டுமே என் உலகம்னு வாழ்ந்த எனக்கு எதுக்கு இப்படி ஒரு பிரிவைக் கொடுத்திங்க ராம்?’ அவள் மனது அவனிடம் நேரில் கேட்காத கேள்விகளை எல்லாம் இப்போது மனதில் கேட்டுக் கொண்டிருக்க விடை மட்டும் கிடைக்கவில்லை.

உங்களோட வாழ்ந்த இந்தப் 12 வருஷத்துல எதுக்காகவும் நம்மளுக்குள்ள சண்டையே வந்ததில்லை. எனக்கு என்ன பிடிக்கும், பிடிக்காதுன்னு கூட என்னை விட உங்களுக்குதான் நல்லாத் தெரியும். என்னைக் கண்ணுக்குள்ள வச்சுப் பார்த்துகிட்டீங்க. நான் உங்களுக்கு நல்ல மனைவியா இல்லியா? உங்க பிள்ளைகளுக்கு நல்ல அம்மாவா இல்லியா? என் கடமையைச் சரியா செய்யாம இருந்தேனா? ஏன் எங்கிட்ட அப்படி ஒரு சத்தியத்தைக் கேட்டிங்க? உங்களோட இல்லாத இந்த ரெண்டு நாளே எனக்கு நரகமா இருக்கே. மீதியுள்ள என் காலத்தை எப்படி வாழப் போறேன்செத்துடலாம் போலருக்கே ராம்…’ சுய கழிவிரக்கத்தில் உருகிக் கரைந்து கண்ணீர் விட்டாள். அவளுக்குப் புருஷனுக்குப் பின் தான் பிள்ளைகள் கூட. அவர்களை யோசித்ததை விட அவனைப் பிரிந்து தான் எப்படி வாழப் போகிறோம்? என்ற எண்ணமே பூதாகரமாய் நின்றது.

அந்தளவுக்கு நித்யாவின் வாழ்க்கையில் ராம் அவளின் எல்லாமாய் மாறிப் போயிருந்தான். அவளது வாழ்வில் சந்தோஷம், நிம்மதி, அழுகை எல்லாமும் அவனால் மட்டுமே. அவனில்லாத வாழ்வை நினைத்துக் கூடப் பார்க்க இயலவில்லை அவளால்.

தன் அன்னையிடம் கூட உணராத அன்பையும், அரவணைப்பையும் ராமிடம் தான் உணர்ந்தாள் நித்யா. அவளைத்தான் தன் முதல் குழந்தையைப் போல் பரிவுடன் பார்த்துக் கொண்டான் ராம். அவளது முகம் சின்னதாய் சோர்ந்தால் கூட அவனால் தாங்கிக் கொள்ள முடியாது.

எப்போதும் சிரிக்க மட்டுமே வைத்தவன் இப்போது அழ வைக்கிறான். இத்தனை நாள் இனிப்பை மட்டுமே கொடுத்தவன், இப்போது கசப்பைக் கொடுக்கிறான். அவளை விட்டு விலகி நின்று வேதனைப் படுத்துகிறான். தன்னையே உலகமென்று நினைத்தவளை அநாதை போல் தவிக்க விடுகிறான். இதெல்லாம் எதனால்? ஆனந்தம் மட்டுமே நிறைந்திருந்த அழகிய காதல் வாழ்க்கையில் இந்த இடைவேளை வரக் காரணம் தான் என்ன?

அழுகையில் தொலைந்திருந்த நித்யாவை நிகழ்வுக்கு அழைத்து வந்தது அலறிக் கொண்டிருந்த நிமிஷாவின் அலைபேசி.

ஹாய் அப்பா…” என்ற மகளின் குரல் கேட்கவும் ஓடிச் சென்று அதை வாங்கப் பரபரத்த கையை அடக்கிக் கொண்டாள் நித்யா.

நாங்க இன்னும் சாப்பிடல பாநீங்க சாப்பிட்டிங்களா?”

சாப்பிடணும் மா

ம்ம், அம்மாதான் அழுதுட்டே இருக்காங்க

அவங்களை அழாம இருக்கச் சொல்லு, நல்லாப் பார்த்துக்க டா.”

சரிப்பா, நாங்க அம்மாவைப் பார்த்துக்கறோம்நீங்களும் அம்மாவை நினைச்சு ஃபீல் பண்ணிட்டு இருக்கிங்களாப்பா?” மகள் கேட்கவும் நித்யாவின் கண்கள் மீண்டும் உடைப்பெடுக்க, எதிர்ப்புறமோ மௌனத்தை மட்டுமே பதிலாகத் தந்தது.

எப்பப்பா, நீங்க வீட்டுக்கு வருவீங்க?”

சனிக்கிழமை வந்திருவேன், நீங்க உங்க பாட்டி வீட்டுக்குப் போகலியா?”

நாங்க பாட்டி வீட்டுல இல்லப்பா. முதல்ல பாட்டி வீட்டுக்கு தான் போனோம். பாட்டி ஏதோ சொல்லவும் அம்மாக்கு அவங்க மேல கோபம் போல. எங்களை நேத்தே ஒரு ரென்டல் ஹவுஸுக்குக் கூட்டிட்டு வந்துட்டாங்க…” என மகள் சொல்ல நித்யா அவர்களின் பேச்சைக் கவனித்தாள்.

சரிப்பா, நாங்க சண்டே உங்களைப் பார்க்க வீட்டுக்கு வரோம் பாநிமிஷா பேசும்போதே அருகே வந்துவிட்ட நிதீஷ், “நிமி, எங்கிட்டக் கொடுஎன அலைபேசியைக் கேட்டுக் கொண்டிருக்க,

நிதிக்கு உங்ககிட்டப் பேசணுமாம் பாகொடுக்கறேன்என்ற நிமிஷா நிதீஷின் கையில் அலைபேசியைக் கொடுத்தாள்.

அப்பா, இந்த வீட்டுல ஏசியே இல்ல, எனக்கு இந்த வீடு பிடிக்கவே இல்ல. அம்மா அழுதுட்டே இருக்காங்க, எனக்கு உங்களைப் பார்க்கணும்…” தனது பிடித்தமின்மையைச் சிணுங்கிக் கொண்டே சொன்னான்  நிதீஷ்.

அப்பா கொஞ்ச நாள் வெளியூர் ஷூட்டிங் போறேன். வந்ததும் உங்களைப் பார்க்கறேன், சரியா. சமத்தா அம்மா சொல்லுறதைக் கேட்டு அவங்களைக் கஷ்டப்படுத்தாம குட் பாயா இருக்கணும்…”

ம்ம்நீங்க இத்தன நாள் வெளியூர் ஷூட் போனப்ப நாங்க நம்ப வீட்டுல தானப்பா இருந்தோம். இப்ப மட்டும் ஏன் இந்தச் சின்ன வீட்டுல இருக்கணும்? நாங்க அங்க இருந்தா என்ன?” மகனின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் ராம் திகைக்க, வழக்கம் போல் உதவிக்கு வந்தாள் அவன் (முன்னாள் ஆகப் போகும்) மனைவி.

நிதி, அப்பாவை ரொம்ப நேரம் பேசி டிஸ்டர்ப் பண்ணக் கூடாது. அவங்க ஷூட்டிங் முடிஞ்சு வந்ததும் சொல்லுவாங்க, அப்போ போயி பார்த்திட்டு வாங்க. இப்ப கட் பண்ணு…” என்றாள் அதட்டலாய்.

ம்ம்நீங்க அப்பாட்டப் பேசலயாம்மா?” மகன் கேள்விக்கு இப்போது வாய் மூடிக் கொள்வது அவள் முறையாக, அழைப்பு கட்டானது. பெருமூச்சுடன் அமர்ந்தவளின் மனம் நேற்று அன்னையின் வீட்டுக்குச் சென்றபோது அவர் சொன்ன வார்த்தையில் வந்து நின்றது.

இங்க பாரு நித்தி, நான் இப்படிச் சொல்லறனேன்னு தப்பா நினைக்காத. நீ எங்க வீட்டுப் பொண்ணு. நீ சினிமால நடிச்சு நம்ம குடும்பத்தை நல்ல நிலைக்குக் கொண்டு வர நிறைய உழைச்சிருக்க. அதுக்காக, உன்னை வேணா நாங்க இந்த வீட்டுல ஏத்துக்குவோம். ஆனா, இது அவன் புள்ளைங்க, அவன் பொறுப்பு. எங்களை எதிர்த்து வீட்டை விட்டு ஓடிப் போயி கல்யாணம் பண்ணிட்டு, அவன் மட்டுமே போதும்னு போனவ, இப்ப நாங்க பிரியப் போறோம்னு சொல்லி அவன் பிள்ளைங்களை எதுக்கு இங்க அழைச்சிட்டு வந்திருக்க? இவங்களைப் பார்த்துக்க வேண்டியது அவன் பொறுப்பு தானே?” தன் அன்னை கணக்குப் பார்த்துச் சொன்னதைக் கேட்டு நித்யாவுக்குக் கோபம் வந்தது.

அம்மா, இவங்க அவருக்கு மட்டுமில்லை, எனக்கும் பிள்ளைங்க தான்எனக்கும் இவங்க வாழ்க்கைல உரிமையும், உத்திரவாதமும் இருக்கு…” என்றவள் அடுத்த நொடி பிள்ளைகளுடன் இடத்தைக் காலி செய்திருந்தாள்.

அப்போதும் கணவனை நினைத்து தான் கலங்கினாள் நித்யா.

என்னை இப்படி நிக்க வச்சிட்டிங்களே ராம்நான் இந்தப் பிள்ளைகளோட எங்க போவேன்என நினைக்கச் சரியாய் சாலையின் எதிர் பக்கம் டாக்ஸியுடன் வந்தார், அவர்கள் வீட்டில் முன்பு வேலை செய்த டிரைவர் ரவி. இவர்களைக் கண்டு தவிப்புடன் வண்டியை நிறுத்திச் சாலையைக் கடந்து ஓடி வந்தார்.

நித்யாம்மா, என்ன நடந்து போறிங்க? கேள்விப்பட்டேன். ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு, வாங்கம்மா நம்ம டாக்ஸி இருக்கு. நான் கொண்டு வந்து விடறேன், பேகைக் கொடுங்க…” என அவளது கையிலிருந்த பேகை வாங்க வர அவள் மறுத்தாள்.

கண்கள் மட்டும் கட்டுப்பாடின்றி கண்ணீர் நிறைய, “வேண்டாம் ரவிண்ணா, இத்தனை காலம் எல்லாத்துக்கும் மத்தவங்களைச் சார்ந்து இருந்தே பழகிட்டேன். அதுக்குதான் கடவுள் என்னைச் சுயமா யோசிச்சு நீயே எதுவும் பண்ண மாட்டியான்னு இப்படி ஒரு சூழ்நிலைக்குத் தள்ளி விட்டுட்டார் போல…”

என்னம்மா இது? இப்படில்லாம் பேசிட்டு.” என்று அவர் கேட்கும்போதே சாலையில் நடந்து செல்லும் சிலர் நித்யாவைக் கவனித்து நின்று தங்களுக்குள் பேசிக் கொண்டு இவளை நோக்கி ஆவலுடன் வருவதைக் கண்டு சட்டென்று முகத்தைத் துடைத்தாள்.

நீங்க, நடிகை நித்யஸ்ரீ தானே…” எனக் கேட்கவும் பளிச்சென்று நடிகையர் திலகமாய் மாறிக் கன்னத்தில் குழி விழ, தனது டிரேட் மார்க் புன்னகையைக் கொடுத்தவள், “அண்ணே, குழந்தைகளை டாக்ஸிக்கு அழைச்சிட்டுப் போங்க…” என ரவியிடம் சொல்லிவிட்டு இவர்களிடம் திரும்பினாள்.

ஆமா, நான் நித்யஸ்ரீ தான்…” எனவும்,

நான் உங்க பெரிய ரசிகை மேடம், எனக்கு உங்க படம் எல்லாம் ரொம்பப் பிடிக்கும். நீங்க எந்த வேடத்தில் நடிச்சாலும் ரொம்ப நல்லாருக்கு. உங்க புன்னகையைப் பார்த்தாலே ஒரு எனர்ஜி தோணும். நீங்க சாமி வேஷத்துல நடிக்கும்போது கையெடுத்துக் கும்பிடலாம் போல ஒரிஜினலா இருக்கும். ஏன் இப்ப எல்லாம் படம் பண்ணறதே இல்ல மேடம்எனப் படபடவென்று கேள்வியாய் கேட்க புன்னகைத்தாள் நித்யஸ்ரீ.

எல்லாத்துக்கும், சூழ்நிலை தான் காரணம். பியூச்சர்ல நடிச்சாலும் நடிக்கலாம், நம்ம கைல என்ன இருக்குஎனச் சொல்ல,

கண்டிப்பா நடிங்க மேடம்உங்களைப் போலத் திறமையானவங்க ஒதுங்கி இருக்கக் கூடாதுஎனச் சொல்ல மீண்டும் கன்னத்தில் குழி விழச் சிரித்தவள்,

நிச்சயமாசரி, நான் வர்றேன்…” என்ற நித்யா ஓட்டமாய் சாலையைக் கடந்து வந்து ரவியின் டாக்ஸியில் ஏறிக் கொண்டாள். நல்ல வேளையாய் மறுநாள் செய்தித் தாளில் தான் அவளது விவாகரத்து பற்றிய செய்தி வெளியாகி இருந்தது.

அண்ணா, எனக்கு ஒரு உதவி வேணும். செய்வீங்களா?”

என்ன பண்ணனும்னு சொல்லுங்கம்மா

இப்போதைக்கு தங்க ஒரு வாடகை வீடு வேணும்.” எனவும் யோசித்தார். “சரிம்மா, ஏற்பாடு பண்ணிடலாம்என்றவர் யாரோ இரண்டு பேரிடம் அழைத்துப் பேசிவிட்டு, “ஒரு வீடு இருக்கு மா, போயி பார்க்கலாம்எனவும் தலையசைத்து பெருமூச்சுடன் சீட்டில் சாய்ந்து கொண்டாள்.

நடுத்தரக் குடும்பங்கள் வசிக்கும் தெரு ஒன்றுக்குள் நுழைந்த டாக்ஸி ஒரு வீட்டின் முன் நின்றது. மேல் மாடியில் இரண்டு படுக்கை அறைகளுடன் பொதுவான வசதிகளுடன் இருந்தது அந்த வீடு. நித்யாவுக்கு தான் வீடு என்றதும் அந்த ஹவுஸ் ஓனர், அட்வான்ஸ் வேண்டாம், ஒரு மாத வாடகை மட்டும் முன்பணமாய் கொடுத்தால் போதுமென்று சொல்லி விட்டார்.

வீட்டில் கட்டில், அலமாரி, சோஃபா, ஃபான் எல்லாம் இருக்க மீதி அத்தியாவசியப் பொருட்களான கேஸ் அடுப்பு, மிக்ஸி, வாஷிங் மெஷின் போன்றவை வாங்க வேண்டி இருந்தது. அதை எல்லாம் யோசிக்கும் நிலையில் இல்லாத நித்யா, பிள்ளைகள் இருவருக்கும் நல்ல ஹோட்டலில் உணவு வாங்கித் தருமாறு ரவியிடம் சொல்ல, அவர் வாங்கிக் கொடுத்து அவர்களை உண்ண வைத்து மறுநாள் வருவதாகச் சொல்லிக் கிளம்பி இருந்தார்.

அன்றைய இரவு உறங்காமலே விடிந்தது நித்யாவிற்கு. மறுநாள் காலையில் தான் பேப்பரில் வந்த நியூஸைப் பார்த்துவிட்டு ஹவுஸ் ஓனர் செய்தித்தாளை அவளிடம் கொடுத்துச் சென்றிருந்தார்.

அதையே பார்த்துக் கலங்கிக் கொண்டிருந்தவள் பிள்ளைகளின் பசியைக் கூட மறந்திருந்தாள்.

தாயின் சோர்ந்த, கலங்கிய முகத்தைக் கண்டு வருந்திய நிதீஷ், மெல்லத் தாயின் அருகே வந்து அமர்ந்தான். நிமிஷா அவளது புத்தகங்களை செல்ஃபில் அடுக்கிக் கொண்டிருந்தாள்.

இருவருக்கும் பள்ளியில் பரீட்சை முடிந்து விடுமுறையில் இருந்தனர்.

அம்மா…” மென்மையாய் ஒலித்த மகனின் குரல் அன்னையின் செவியை அடையாதிருக்க மீண்டும் அழுத்தமாய் அழைத்தான்.

அம்மா…” அவள் தோளைப் பற்றி இழுத்தான் நிதீஷ்.

ஹூம்…”

ஏன்மா, இப்படி ஃபீல் பண்ணிட்டே இருக்கீங்க?

ஹாங், ஒண்ணும் இல்லப்பா

அம்மா, ஃபீல் பண்ணறதால எதுவுமே மாறாது. எந்த ஒரு விஷயத்தையும் ஃபேஸ் பண்ணனும்னு நீங்கதான எப்பவும் எங்ககிட்டச் சொல்லுவிங்க, நீங்களே இப்படி இருக்கலாமா?”

மகனின் கேள்வி மனதைத் தைக்க அவனை நெஞ்சோடு இழுத்து அணைத்துக் கொண்டவள் கண்ணீர் விட்டாள்.

உங்களுக்குப் பசிக்கலையா மா? எனக்கு ரொம்பப் பசிக்குதும்மாஎனக் கூறவும், தன்னையே நொந்து கொண்டவள் எழுந்தாள்.

இப்படியே அமர்ந்திருப்பது எதற்கும் தீர்வாகாது என்று அவளுக்கும் தெரியும்.

நிதி, கொஞ்சம் வெயிட் பண்ணுப்பா, அம்மா டிபன் வாங்கிட்டு வரச் சொல்லறேன்…” என்றவள் கண்ணை அழுந்தத் துடைத்துக் கொள்ள அலைபேசி சிணுங்கி அவளை அழைத்தது.

டைரக்டர் மணிபாரதி அழைத்திருந்தார்.

என்னம்மா நித்யா, ஏதேதோ நியூஸ் எல்லாம் கேள்விப்படறேன் அதெல்லாம் உண்மையா?”

ஒரு தந்தையைப் போல் தன் வாழ்வில் முக்கியமான நபரான அவர் கேட்கவும் பொங்கி வந்த அழுகையை உதட்டைக் கடித்து அடக்கியவள், “உண்மைதான் சார்…” என்றாள்.

என்னம்மா சொல்லற? உங்க ரெண்டு பேருக்குள்ளயும் ஏதும் சண்டை, சச்சரவு கூட வந்து நான் பார்த்ததில்லையே, நான் வேணும்னா ராம் கிட்டப் பேசட்டுமா?”

வே..வேண்டாம் சார்அவரை எதுவும் கேட்டு சங்கடப் படுத்தாதீங்க

அதுக்காக அப்படியே விட முடியுமா? நீங்க ரெண்டு பேரும் நான் பார்க்க வளர்ந்தவங்க, அவன் என் பிள்ளை மாதிரி தான. நான் பேசி எந்தப் பிரச்சனைனாலும் சரி பண்ணறேன்…”

சார், ப்ளீஸ். தப்பா நினைக்காதீங்க, எனகாக யாரும் அவர்கிட்டப் பேசி அவரைச் சங்கடப்படுத்த நான் விரும்பல…”

என்னமா இப்படிச் சொல்லிட்ட? அப்ப உன் வாழ்க்கை

ஹூம், அதான் சார் எனக்கும் புரியல. இத்தனை நாள் நான் வாழ்ந்தது வாழ்க்கையா? இனிமே நான் வாழப் போறது தான் வாழ்கையான்னு எதுவுமே புரியல. இத்தனை நாள் வாழ்ந்ததை தான் நான் வாழ்க்கைன்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா, அது உன் வாழ்க்கை இல்லன்னு சொல்லி, இப்ப என் கண்ணு முன்னாடி வேறொரு வாழ்க்கையைக் காட்டி வாழ்ந்து பார்க்கச் சொல்லி விதி சொல்லுது. விதியோட விளையாட்டுல நம்ம வாழ்க்கைக் கணக்கு எப்பவுமே தப்பா தான் சார் இருக்கு…” என்றாள் விரக்தியுடன்.

ப்ச்எனக்கு என்ன சொல்லண்ணே தெரியலமா. ஆனா, எந்த ஒரு நேரத்துலயும் உனக்கு எந்த உதவி வேணும்னாலும் என்னைக் கேட்கத் தயங்காத. உனக்கு உதவி செய்ய நான் கடமைப் பட்டிருக்கேன்மனசைத் தளர விட்டுடாம தைரியமா இதைக் கடந்து வரணும்னு நீ எப்பவும் நம்பற சம்யபுரத்தாளை வேண்டிக்கிறேன். நான் வச்சிடறேன் மா…” என்றவர் வருத்தத்துடன் அழைப்பை வைத்தார்.

அடுத்தடுத்து அவளது அலைபேசியில் திரைத்துரையினர்,  நண்பர்கள், உறவினர்கள் என மாறி மாறி ஏதோ துக்க செய்தியை விசாரிப்பது போல் அழைக்கத் தொடங்க வெறுத்துப் போனவள் மூச்சு முட்டுவது போல் தோன்றியதில் அலைபேசியை அணைத்து விட்டுக் கதறி அழத் தொடங்கினாள்.

அன்னையின் அழுகையில் பசி மறந்து போகப் பிள்ளைகள் இருவரும் அவளின் ஆளுக்கொரு பக்கமாய் அமர்ந்து அவளைத் தேற்ற முயன்றனர்.

அவர்களையும் அணைத்துக் கொண்டு அழுதவளுக்கு எதிர்காலம் பெரிய சூன்யமாய் தெரிய, ஏதோ இருண்ட குகைக்குள் தொலைந்து போனது போல் வெளிச்சம் தெரியாமல் மனம் பதறியது.

ஒரு காதல் இடைவேளை…

– லதா பைஜூ 

 

Advertisement