Advertisement

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 01

இனிமையான இசை அலாரமாக அடித்து, சந்திரனின் உறக்கத்தைக் கலைக்க முயற்சிக்க, ஏனோ அந்த இசை அவனின் செவிகளில் நாராசமாய் ஒலித்தது. அதற்காக அவன் விடியலை விரும்பாதவனோ, உறக்கத்தைத் தொலைத்தவனோ, சோம்பல் பேரரசனோ அல்ல. இருந்தும் அவனின் மனம் இந்த இசையின் சப்தத்தில் எழ முரண்டியது.

மெல்லிய கொலுசொலிகளின் கீதத்திற்கு இந்த இசை ஈடாகாதே! தன்னவள் தன் பிஞ்சு விரல்களினால், தயக்கத்துடன் போர்வையை விலக்கி, “என்னங்க… நேரம் ஆயிடுச்சு” என தேன் குரலில் எழுப்பி, நாளை தொடக்கி வைத்த பொழுது இருந்த சுகம், இதில் வந்துவிடாதே! மனமும், உடலும் இப்பொழுதெல்லாம் தொலைத்து விட்ட மகிழ்ச்சிக்காகத் தான் அதிகம் ஏங்குகிறது. ‘தொலைப்பானேன்? இது தற்காலிக பிரிவு தானே! விரைவில் அவள் வந்துவிடுவாளே அதன்பிறகு ஏக்கங்களுக்கு ஏது நேரம்?’ என்னும் நினைவு சற்று ஆறுதலைத் தந்து, புத்துணர்வையும் தந்தது.

அவள் நினைவில் அகமும், முகமும் பசியாறிய மழலை போல மலர்ந்து பிரகாசிக்க, தன்னருகே அவள் வழக்கமாய் படுக்கும் இடத்திலிருந்த போர்வையை எடுத்து முகர்ந்தான். அவளுடைய வாசம்… அது அதில் மட்டுமல்ல, இந்த அறையில், இந்த சிறிய இரண்டு படுக்கை அறை கொண்ட வீட்டில் முழுவதுமாக நிரம்பியிருப்பது போல எண்ணம் அவனுக்கு. ஆனாலும், அவள் மட்டும் பிரத்தியேகமாக உபயோகித்த அவளது போர்வை, ஆடைகளில் எல்லாம் இன்னும் கூடுதலாக இருக்கும் அல்லவா! ஏனோ சமீப காலமாக அதை அடிக்கடி நுகர ஆரம்பித்தான். அவளே அருகில் இருப்பது போல மாயையைத் தந்து செல்லும் அவளின் பிரத்தியேக மணம் அவனுக்கு மிகவும் பிடித்தம்.

அமெரிக்க வாசத்தில் இருப்பவனுக்கு இந்தியா சென்றிருக்கும் மனைவியின் வாசனையை வேறு எப்படி உணர முடியும்? அதிலும் அவள் சென்று சில மாதங்கள் கடந்திருக்கும் நிலையில். அவள் அருகிலேயே இருந்தபொழுது அவளின் நேசத்தை அனுபவித்தானா தெரியவில்லை. ஆனால், இப்பொழுது ஒவ்வொரு நொடியும் அவளுக்காகவும், அவளின் அக்கறைக்காகவும், தேன் குரலுக்காகவும் ஏங்கித் தவிக்கின்றான் என்பதுதான் அவனும் முழுமையாக அறிந்திடாத உண்மை. விடிந்துவிட்ட பிறகு ஏற்றப்பட்ட மெழுகுவர்த்தி போல, காலம் கடந்த ஞானோதயம் அவனுக்கு.

படுக்கையில் படுத்தவாறே கைப்பேசியைச் சிறிது நேரம் ஆராய்ந்தான், இது அன்றாட வழக்கம் தான். ஆனால், சந்திரன் எதிர்பார்த்தபடி ரோகிணியிடமிருந்து எந்தவித அழைப்புகளோ, குறுஞ்செய்திகளோ இல்லை. அதில் அவனுக்கு வழக்கம் போல ஏமாற்றம் தான். ஒரு மெல்லிய பெருமூச்சுடன் அவனே அவளுக்கு அழைத்தான். இங்கு விடிந்திருந்தது, இந்நேரம் அங்கு அவள் உறங்கத் தயாராக இருப்பாள் என்பதும் அவன் அறிந்ததே! ஆனாலும் அவளோடு பேசாது, நாளினை தொடங்க அவன் சமீப நாட்களாய் விரும்புவதில்லை.

சந்திரனின் ஒவ்வொரு அசைவையும் ரோகிணியும் உணர்வாள் போலும், அழைப்பு சென்றவுடன் எடுத்திருந்தாள். அதேபோல இவனின் காதலையும், நேசத்தையும் கூட உணர்ந்திருப்பாளா, என்பது மிகப்பெரிய கேள்விக்குறி தான். அவளை விட்டுவிடுவோம் முதலில் அதை இவன் உணர்ந்திருக்கிறானா என்பது அவனைப் படைத்த பிரம்மனுக்கே பெரும் குழப்பம் என்னும் பொழுது இதில் இவனும், அவளும் உணர்வது எம்மாத்திரம்?

அழைப்பு சென்ற சிறிது நேரத்தில் அதை ஏற்றது அவனவள் ரோகிணிஸ்ரீ. வழக்கம் போல விசாரிப்புகள் தான். ஆனால், சமீப காலமாக அவளிடம் ஒரு மௌனம் குடிவந்து விட்டதோ என்கிற சந்தேகம் சந்திரனுக்கு. அவளைத் திருமணமான புதிதில் சிட்டுக்குருவியாய் சிறகடித்துப் பார்த்தவன் அவன். அவளின் செய்கைகளில் ‘இவளுக்கு இன்னும் மெச்சூரிட்டியே வரலைப் போலவே!’ என நொந்து கூட போயிருக்கிறான். ஏன் பலமுறை அவள் பேசும் பொழுது, அவன் கடிந்து கொள்ளும் சொற்களே, ‘யூ ஆர் நாட் மெசூர்ட் எனாஃப் ரோ…’ என்பதுதான். ஆனால், நாட்கள் செல்ல செல்ல அவளிடம் நல்ல பக்குவம் வந்திருந்தது. மிகமிக பொறுப்பாக நடந்து கொண்டாள் அல்லது அப்படி நடந்து கொள்ள முயன்றாளா? அவளிடம் அசட்டுத்தனங்களே இல்லாது இருந்தது. ஆனால், அதிலிருந்த செயற்கை பூச்சை உணரும் அளவு, அவன் மனையாளை இப்பொழுது போல அப்பொழுதும் அவன் தெரிந்திருக்கவில்லை.

வெகு சமீபமாய் ரோகிணியிடம் பக்குவம் என்பதையும் தாண்டி ஒருவித நிசப்தம்! அது என்னவென்று அவனுக்கு புரியவில்லை. அதை அவனால் ஆராயவும் முடியவில்லை, அதேசமயம் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. ஒருவேளை உயிருக்கு உயிரான தாயை இழந்ததால் இப்படி இருக்கிறாள் போலும் என எண்ணிக் கொண்டான். இருந்தும் ஏதோ ஒரு நெருடல் அவனுள், விடையறியாமல்!

ரோகிணியின் குரலில் மனம் பரவசமடைவதும், மகிழ்வதும் உண்மையே! ஆனால், அது இவனுக்கு தானே. அவளின் நிலை? அவள் ஏன் இன்னும் இயல்பாகவில்லை. அவளுடையது பெரும் இழப்பு தான். அதற்காக இத்தனை நாட்கள் கடந்தும் அதிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கிறாளே! அவளுடைய தாயின் மீது அத்தனை பாசமா? சந்திரனின் மனம் அவளுக்காக அனுதாபப் பட்டது. ‘அன்னை’ என்பதன் பிம்பம் அவன் மனதில் காளிதேவியாக இருக்கும் பொழுது, அவளின் செய்கைகள் எப்பொழுதுமே அவனுக்கு அதிசயமே!

இருந்தும் மனைவியின் துயரத்தில் தோள் கொடுக்கும் கணவனாய், ரோகிணியிடம் அக்கறையாக, “இன்னும் எவ்வளவு நாள் அதையே நினைத்துக்கொண்டு இருப்ப ரோ. ஆன்ட்டி இல்லாதது பெரிய இழப்பு தான். ஆனால், நீ மீண்டு வரவேண்டும்” என அவனுக்குத் தெரிந்தமட்டில் ஆறுதல் மொழிகளைக் கூறினான்.

“ஹ்ம்ம்…” என்ற சன்னமான பதில் ரோகிணியிடமிருந்து. ஓயாது வாய் பேசும் அவனின் பைங்கிளியின் மௌனம் அவனுக்குப் பிடிக்கவே இல்லை. சந்திரன் அவன் மனதில் நினைத்ததைக் கேட்கும் நோக்கத்தோடு மீண்டும், “ரோ…” என்று கூறி நிறுத்தினான். “சொல்லுங்க…” என்ற பதில் எதிர்முனையிலிருந்து அதிசிரத்தையாக வந்து விழுந்தது. ஆனால், அதைக் கவனிக்கும் மனநிலையில் அவன் இல்லை.

“இங்கே வேண்டுமானால் வருகிறாயா, டிக்கெட் புக் பண்ணவா? ஆன்ட்டி தவறி இரண்டு மாசம் ஆகி இருக்கும். இன்னும் அங்க, நீ மட்டும் தனியா இருக்கிறதை விட, இங்க வந்தால் மன மாறுதலா இருக்கும் இல்லை?” என அவன் தனது மனதில் அரித்துக் கொண்டிருந்ததைக் கேட்க, அவளிடம் ஒரு நீண்ட மௌனம். இது போன்ற சூழல்கள் எல்லாம் அவள் எதிர்பார்த்ததே! இருந்தாலும், இந்த கேள்வியை அவ்வளவு எளிதாக அவளால் கடந்துவிட முடியவில்லை.

ரோகிணியின் மௌனத்தைத் தொடர்ந்து, சந்திரனே “நீ சொன்னா டிக்கெட் அவைலபிலிட்டி பார்த்து புக் பண்ணிடறேன்” என்றான் மீண்டும். இம்முறையும் அவளிடம் நிசப்தம் மட்டுமே. அவள் வருந்துவது… தொலைத்துவிட்ட அவள் வாழ்க்கையையும், சந்தோஷத்தையும், கனவுகளையும் எண்ணி. அதை அறியாத மூடனல்லவா அவன்! ஏன் அதை அழித்த பெருமைக்குரியவனும் அவனேதான்! அவளின் மௌனம் கூட உரைக்காமல் அந்த அறிவிலியே மேலும் தொடர்ந்து, “உனக்கே தெரியும் கொஞ்சம் முன்னாடியே புக் பண்ணுனா ஈஸின்னு…” என்றான். அவன் யாரிடமும் இவ்வளவு இறங்கிப் பேச மாட்டான், அவன் மனைவியிடம் இன்று பேசினான்.

உண்மையில் சந்திரன் நினைத்தது, முன்பே புக் செய்தால் அதிக விமானங்கள் மாற வேண்டியதில்லை, கடைசி நேரம் என்றால் இரண்டுக்கும் மேல் கனெக்டிங் பிளைட் அமைந்து விடப்போகிறது, தனியாக விமானம் மாறி வர வேண்டுமே என்று. ஆனால், அவன் இதற்கு முன்பு ரோகிணியிடம் ஏற்படுத்திய பிம்பம் தானே, அவள் நினைவில் எழும். “சின்ன குழந்தையா நீ? அம்மாவை பார்க்கவேண்டும், ஆட்டுக்குட்டியைப் பார்க்கவேண்டுமென்று அடம் பிடிக்கிற? அப்படி நினைத்த உடனே எல்லாம் இந்தியாவிற்குப் போக முடியாது” என்றும் கடைசி நேரத்தில் புக் செய்தால் டிக்கெட் விலை அதிகம் என்பது வரையும் கூறி, முன்பே அவன் பேசிய கடுஞ்சொற்கள், இன்னும் அவள் நினைவை விட்டு அகலவே இல்லை. காயங்கள் ஆறிய பொழுதும், வலி தரும் வடுக்கள் அவை!

சந்திரனின் இந்த கேள்விக்கும் ரோகிணியிடம் மௌனம். ஒரு வழியாக அவளின் தொடர் மௌனம் உரைத்து விட்டது போலும், கட்டுப்படுத்திக் கொண்ட எரிச்சலுடன் அவனே தொடர்ந்து, “ஏன் இன்னும் ஒரு மாசம் கழித்துக் கூட அங்கிருந்து வர ஐடியா இல்லையா? அங்க தனியா இருந்து என்ன பண்ணப் போகிறாய்?” என்றான் மனதின் எரிச்சலைக் குரலிலும் காட்டி.

இதற்கு மேலும் அமைதி காக்க முடியாது என ரோகிணியும் உணர்ந்துவிட்டாள் போலும். இம்முறை மௌனத்தை உடைத்து பதில் கூறினாள். “அங்க வந்தும் தனியா தானே இருக்க போகிறேன்” மிகமிக மெதுவாய், அழுத்தமாய் அவள் கூறிய சொற்களைக் கேட்டவனுக்கு அதீத அதிர்ச்சி. அவளால் இப்படி எடுத்தெறிந்து பேசவே முடியாது. ஏன் அவளுக்கு இதுபோல எல்லாம் பேச வரவே வராது! அப்படிப்பட்டவளா இப்படிப் பேசுவது? ஆனால் ஏன்? இங்கு என்ன முழு தனிமையா? பெரும்பாலும் இரவுகளில் வந்துவிடுகிறேன் தானே! அவ்வப்பொழுது விடுமுறையும் அவளோடு தான் செலவிடுகிறேன். இதைப்போய் யாராவது தனிமை என்பார்களா? அவனுடைய எண்ணங்கள் இந்த குறுகிய வட்டத்தில் தான். சிலருக்கு அவரவர் பிழைகள் தெரியாது. சந்திரனுக்கும் அவ்வாறே அவன் சில இரவுகளில் வராமல் இருப்பதோ, பல விடுமுறைகளை அவளோடு செலவிடாததோ பெரிய பிழையாய் தெரிந்ததில்லை! சுட்டிக்காட்ட வேண்டிய பெண்ணவளும் மௌனமாக இருந்து விட்டாள். உண்மையில் அந்நாட்களில் அவளுடைய கனவுகள் சிதைந்து விட்ட அதிர்வு அவளுக்கு, ஆகையால் அவனுக்குச் சுட்டிக்காட்டத் தோன்றியதில்லை. சுட்டிக்காட்டினாலும் பயன் இருந்திருக்குமா என்பதும் சந்தேகமே!

ரோகிணியின் பதில் ஏற்படுத்திய அதிர்விலிருந்து மீண்ட சந்திரன் சற்று கோபத்துடனே, “சரி உன் இஷ்டம். டேக் கேர்” என்பதோடு அழைப்பைத் துண்டித்து விட்டான். அவனுக்கு தன் மீதே கோபமாய் வந்தது. ‘எப்பவோ வரா, உனக்கென்ன? அவள்கிட்ட எதற்கு கெஞ்சிட்டு திரிகிற?’ என எரிச்சலாகக் கூட இருந்தது. இருந்தும் மனம் ஒரு ஓரத்தில், ‘பாவம் ரொம்ப ஸ்ட்ரெஸ் போல! இல்லாட்டி இப்படிப் பேசுவாளா? இல்லை இப்படி இருப்பாளா?’ என அவளுக்குப் பரிந்து பேசவும் செய்தது. காதல் எப்பொழுதுமே முரண்பாடானது தான்! அவளது தவறுகளில் மனம் குமுறும் பொழுது, அவள் புற நியாயமும் ஆராயத் தோன்றுகிறதே!

சந்திரன் அமெரிக்காவில் இருக்கும் சிகாகோ நகரத்தில் ஒரு புகழ்பெற்ற மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை மருத்துவராக இருக்கிறான். பிறந்த பொழுதே மருத்துவன் என முடிவுசெய்யப்பட்டு, அதையே ஒவ்வொரு நொடியும் அவனுள் புகுத்தி, அவன் வாழ்நாளில் கல்வி என்பதைத் தவிர வேறு எதுவுமே இல்லை என்பது போல வளர்க்கப்பட்டவன் அவன். ஏன் ஒரு திருமணம், விசேஷம், பண்டிகை எனச் சிறுவயது நினைவுகள் எதுவுமே அவன் நினைவடுக்குகளில் இல்லை. பறக்க வேண்டிய வயதில் சிறகுகளைக் கட்டி அவனைப் பெற்றவர்கள் வளர்த்து விட்டிருந்தனர். அந்த சிறகுகள் விரிந்த இடம் அமெரிக்கா. வாழ்க்கை வாழ்வதற்கே என்று அவன் உணர்ந்த இடம் இது. படிப்பினை முடித்து, இங்கு மேற்படிப்புக்கு வந்தவன், இங்கேயே வேலையும் வாங்கி இருந்தான்.

அமெரிக்கா தான் அவனுக்கு வாழும் முறையை, சந்தோஷத்தை அனுபவிக்கும் முறையை, உல்லாசத்தின் உச்சக்கட்டத்தைச் சொல்லிக் கொடுத்தது… ஆனால், அனைத்துமே தவறான கண்ணோட்டத்தில்! பல நாட்களாக அடைபட்டு இருந்து பறவை விடுதலை கிடைத்ததும் அதீத மகிழ்ச்சியில் திக்கு தெரியாமல், வெளி உலகம் புரியாமல் சுற்றித் திரிந்து மகிழுமே, அப்படித்தான் அவனும், அதுவரை அனுபவிக்காத எல்லாவற்றையும் அனுபவித்தான். நல்லவற்றை எப்படி அனுபவித்து மகிழ்ந்தானோ, சரியான வழிகாட்டுதல் இல்லாததாலும், வாழும் நாட்டின் பழக்கவழக்கங்களாலும் நல்லவற்றிற்கு இணையான தீயவற்றையும் விட்டு வைக்காமல் அனுபவித்து மகிழ்ந்தான்.

நம் குழந்தைகளுக்கு நாம் சரியான விஷயங்களைச் சரியான முறையில் கற்றுத் தராவிட்டால், இந்த உலகம் அவர்களுக்குச் சரியான விஷயங்களைத் தவறாக கற்றுத் தரவும் வாய்ப்புகள் அதிகம். சந்திரனின் பெற்றோர்கள் தான் அதற்கு வாழ்வியல் உதாரணம். அவர்கள் அவனுக்கு மகிழும் வழியை கற்றுத் தரவில்லை, மனதைச் சமன்படுத்தும் வழிகளை அறிமுகப் படுத்தவில்லை. அமெரிக்கா அனைத்தையும் அவர்கள் கலாச்சாரத்தில் கற்றுத் தந்து விட்டது. அவன் அமெரிக்கா வந்ததிலிருந்து இன்றுவரை தான்தோன்றித் தனமான வாழ்வு தான் வாழ்கிறான். இது தெரியாமல், இவனிடம் திருமணம் என்ற பெயரில் மாட்டி, சிறகொடிந்து தவிப்பது என்னவோ இவனின் மனைவி ரோகிணிஸ்ரீ தான்.

இங்கே சந்திரன் மருத்துவமனைக்குக் கிளம்ப, அங்கே ரோகிணி வழக்கம் போலக் குழப்பத்தில் ஆழ்ந்தாள். அவள் எடுத்த முடிவு மிகவும் பெரியது, அதைச் செயல்படுத்துவது அவ்வளவு சுலபமானது இல்லை. மிகமிக கடினமான விஷயம். பின்னே, அவள் வாழும் சூழலில், அவள் வளர்ந்த முறையில் கணவனைப் பிரிய வேண்டும் என்று சொன்னால் யார் ஏற்பார்கள்? அது எத்தனை கடினமானது?

இருந்தும் சந்திரனைப் பிரிவதில் ரோகிணி உறுதியாக இருந்தாள். மொத்த கனவுகளும், நம்பிக்கையும் அழிந்துவிட்ட பிறகு, அவளது வாழ்வுக்கு அடிப்படை எது? பிரிவு மட்டும் தானே வழி. பொதுவாக மனிதனின் பாதம் படும் இடங்களில், அந்த பாத சூட்டிற்குப் புற்கள் கூட வளராதாம். வளர்ந்திருந்த செடிகளும் மடிந்து, மண்ணோடு மண்ணாக மக்கிப் போய்விடுமாம். அவள் மனதில் இருந்த நேசமும் அப்படித்தான், அவள் பெற்ற சூட்டினால், ஏமாற்றங்களினால் முழுவதும் மடிந்து, மக்கிப் போயிருந்தது.

மெல்லிய பெருமூச்சுடன், ஒரு பாயை விரித்துப் படுத்துக் கொண்டாள். விட்டத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு பெரும் குழப்பமாக இருந்தது. பொதுவாக இப்படி தினமும் எல்லாம் சந்திரன் அவளை அழைக்க மாட்டான். சமீப காலமாய் இது என்ன புது பழக்கம்? அதுவும் அவன் எழுந்தவுடன். எண்ணங்கள் ஒரு இடத்தில் மட்டுமா சுற்றும். அதுவே ஒரு தொடர்ச்சங்கிலியை இணைத்துப் பயணித்துக் கொண்டே இருக்குமல்லவா? அவளின் நினைவுகளும் திருமணம் நிச்சயித்த பொழுதான நாட்களுக்குப் பயணித்திருந்தது.

அந்த நாட்களில் எல்லாம் கைப்பேசியை அருகில் வைத்துக் கொண்டே சுற்றுவாள் சந்திரனின் அழைப்புக்காக. எப்பொழுதாவது அழைப்பான், வாரம் மூன்று முறை. அதிலேயே அவளுக்கு பூரித்துப் போய்விடும். அத்தனை வேலைகளின் நடுவேயும் அழைக்கிறாரே என அகமகிழ்ந்து போயிருக்கிறாள். அவன் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அவளுக்கு மனப்பாடம். அசட்டுத்தனங்கள் சிறிதும் இல்லாத, ஆண்மையின் இலக்கணமாய் திகழும் சந்திரனின் மீது அவளுக்குக் கொள்ளை காதல்.

இப்பொழுது சிரிப்பாக இருக்கிறது. எத்தனை ஏமாளியாக இருந்திருக்கிறாள். பத்தோடு பதினொன்றாக இருந்து விட்டு அதை நினைத்து பெருமையும், பூரிப்பும் வேறு? இந்த எண்ணங்கள் எழும் போதெல்லாம் உடல் அவமானத்தில் சிறுத்து விட, கண்களில் நிற்காமல் கண்ணீர் வந்தது, அழுந்த துடைத்துக் கொண்டாள். இது எப்பொழுது தான் வற்றுமோ என்றிருந்தது. அவளுக்குள் இருப்பது வற்றாத நீரூற்று என்று அறியாதவள் பாவம்!

சரி இனி அழுதெல்லாம் என்ன ஆகப் போகிறது. நம்முடைய விதி இப்படி எனும்பொழுது யாரைக் குறை சொல்ல? மனதை ஒருவாறு சமாதானம் செய்து உறங்க முயன்றாள். மனமும், உடலும் ஓய்வெடுக்க முரண்டு பிடித்தது. இருந்தும் மனம் தன் சந்தோஷங்கள் தொலையத் தொடங்கிய இடத்தை, தான் ஏமாளியாக வலம் வந்த நாட்களை, தன் சிறகுகள் ஒடிந்த தருணத்தை அசை போட்டது. வலி தரும் நினைவுகள் தான், இருந்தும் மனம் அதிலிருந்து மீள முயன்றதே இல்லை.

Advertisement