Advertisement

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 07

 

ரோகிணி சிகாகோ வந்து ஆறு மாதங்கள் ஆகியிருந்தது. இந்த ஆறு மாதக் கணக்கு எல்லாம் புதுமண தம்பதிகள் வாழ்வில் எப்படி ஓடும், என்பதைச் சொல்ல வேண்டியதே இல்லை. ரோகிணி கூட புதிதாய் மணமானவள் தான், அவளுக்கும் இந்த மாதங்கள் அனைத்தும் வேகமாக ஓடியிருக்க வேண்டும். ஆனால், இது ஒரு கை ஓசை அல்லவா? எங்கிருந்து சப்தம் எழும்?

 

அன்றையதினம் வழக்கம் போல ரோகிணியால் வீட்டில் அடைபட்டு இருக்க முடியவில்லை. அவ்வப்பொழுது சென்றுவரும் ‘தி ஹிந்து டெம்பிள் ஆஃப் கிரேட்டர் சிகாகோ’ கோயிலுக்கு வந்திருந்தாள். சிகாகோவில் இருக்கும் அந்த புகழ்பெற்ற ஆலய வளாகத்தினுள் ராமர் கோயிலும், சிவ-துர்கா கோயிலுமாய் இரண்டு கோயில்கள் இருக்கும். இரண்டு கோயில்களிலும் விநாயகர் முதல் சனிபெருமான் வரை அனைத்து கடவுள்களும் அருள்பாலிப்பார்கள். அதுபோக மனதைச் சமன் செய்ய விவேகானந்தர் தியான மண்டபமும் அமைந்திருக்கும்.

 

எப்பொழுதுமே அந்த கோயிலின் அமைப்பும், அங்கு வீற்றிருக்கும் தெய்வங்களும் ரோகிணிக்கு மிகவும் பிடித்தம். அதில் மெய்மறந்து போவதும் உண்டு. அந்த சூழலும், அங்குக் காணும் இந்திய முகங்களும், இந்திய மொழிகளும் தாயகத்தில் இருப்பதாகவே ஒரு உணர்வைத் தரும். ஆனால், இன்றையதினம் எதிலும் லயிக்கத் தோன்றவில்லை. எப்படித் தோன்றும்? இன்று அவளுடைய பிறந்ததினம், அதனைக்கூட மறந்து, (அல்லது இன்னும் தெரிந்து வைத்துக் கொள்ளவே இல்லையோ?) அவள் கணவன் மருத்துவமனைக்குக் கிளம்பி விட்டான். மனம் பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூடவா எதிர்பார்க்காது? அதற்குக் கூட கடிவாளம் இட அவளால் எப்படி முடியும்? எத்தனை கனவுகளைத் தான் அவளால் புதைக்க இயலும்?

 

‘பிறந்தநாள் அன்னைக்கு அழக் கூடாது பாப்பா’ என்று சிறு வயதில் அம்மா கூறிய நினைவு, அதையும் அழித்துப் பொங்கிக்கொண்டிருந்தது அவளின் கண்ணீர். அழுந்த துடைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். அதுவும் நிற்பதாய் இல்லை, இவளும் நிறுத்துவதாய் இல்லை. ‘இதைக்கூட மறந்து போக முடியுமா?’ என்னும் கவலை பிரதானமாய் இருக்க, யாரேனும் பார்த்து விட்டால்? என்கிற நினைவெல்லாம் பின்னுக்குப் போயிருந்தது. ஒவ்வொரு வருடமுமா நினைவு வைக்க வேண்டும் என்று நினைக்கிறாள்? திருமணம் முடிந்து வரும் முதல் பிறந்ததினம் இதற்குக் கூட, எதிர்பார்ப்பு இல்லாமல் அவளால் இயலுமா? ஏற்கனவே இருவருக்குள்ளும் இருக்கும் மாயத்திரை அவளை வெகுவாக அச்சுறுத்த, இப்பொழுது இந்த நிகழ்வுகள் இன்னும் பூதாகரமாய் மிரட்டியது.

 

ஆயிரமாயிரம் ஆசைகளோடு தான் கணவனின் கரம் பற்றினாள். அவளின் கணவன் மிகவும் வித்தியாசமாக இருந்தான், சரி அதிகம் படித்தவர், இந்த சிறு வயதிலேயே பெரிய வேலையில் இருக்கிறார். அவருக்கு இருக்கும் கடமைகளின் இடையே நாம் வேறு தொல்லை செய்ய வேண்டுமா? என்பது அவளுடைய சுயசமாதானம். அவனுக்கும் இங்கு யார் இருக்கிறார்கள் என்று மனதைத் தேற்றி அவனுக்கு வேண்டிய அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்கிறாள். அவனை நிம்மதியாக வைத்திருக்க முயல்கிறாள். இவள் அவன் மீது இத்தனை பாசத்தைப் பொழிய அவனின் செய்கைகள் எல்லாம் பெரும் ஏமாற்றத்தை மட்டுமே தருகிறது.

 

இரண்டு மாதங்கள் முன்பு தெரியவந்த அவனுடைய குடிப்பழக்கத்திலிருந்து இன்று வரையும் அவளால் மீள முடிந்ததில்லை. அவனிடம் அதைப்பற்றிக் கேட்கவும் விடாமல் அவளை எதுவோ தள்ளி நிறுத்துகிறது. இதெல்லாம் சேர்ந்து ஏற்கனவே சோர்விலிருந்தவள், இன்றைய எதிர்பார்ப்பில் இன்னும் சோர்ந்து போனாள். சந்திரன் விடுமுறை எடுக்க மாட்டான் என்று தெரியும். ஆனால், ஒரு வாழ்த்து, பரிசு, ‘நேரமாக வந்துவிடுகிறேன்’ என்பது போல உரிமையான பேச்சு இப்படி எதுவுமே இல்லாமல் போக, என்ன வாழ்க்கை வாழ்கிறோம் என்று வெறுப்பாக இருந்தது.

 

இதற்கும் ரோகிணியுடைய பிறந்ததினத்தைப் பற்றி முன்பே குறிப்பு கூட கொடுத்திருக்கிறாள். திருமணமான புதிதில் சந்திரனுடன் பேசும் பொழுது, “உங்களுக்குத் தெரியுமா நான் உங்களை விட ஒரு மாசம் பெரியவ” என்றாள் தோரணையாக,

 

புரியாமல் முகம் சுருக்கியவனிடம், “ஹ்ம்ம் உங்களோட பர்த்டே ஆகஸ்ட் மூணு, என்னோடது ஜூலை மூணு. அஃப்கோர்ஸ் நீங்க என்னை விட அஞ்சு வருஷம் பெரியவர் தான், ஆனாலும் நான் உங்களை விட ஒரு மாசம் பெரியவ! கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு சரியா வரும்” என்றாள் கை விரல்களைக் குறுக்கே ஆட்டியபடி சினிமா வசனம் போல. அவளுடைய தோரணையில் மலர்ந்து சிரித்த கணவனின் முகம் இன்றும் நினைவிலிருந்தது. ‘சொன்னதை கூட ஞாபகம் வெச்சுக்க முடியலை’ என்று எண்ண எண்ண எதிலுமே பிடித்தம் வராத நிலை. அழுகை ஓய்ந்து சோர்ந்து அமர்ந்து இருந்தவளை நோக்கி ஒரு மூத்த தம்பதியினர் வந்தனர்.

 

ரோகிணிக்கு இந்த ஆலயத்தில் பல இந்தியர்கள் பழக்கம். இவள் அடிக்கடி வருவதால், தொடர்ந்து பார்ப்பவர்களிடம் சினேகமாகப் பேசிப் பழகி இருந்தாள். அவளுடைய தனிமையின் வடிகால் அவர்கள் மட்டும் தான். “ஏம்மா ரோகிணி என்ன ஆச்சு? இப்படிச் சோர்ந்து போய் உக்காந்து இருக்கிற?” என்ற குரலில் மீண்டவள், விசாலம் அம்மாவைக் காணவும், “வாங்க மா!” என்று வரவேற்பாகப் புன்னகை சிந்தி விட்டு, தனசேகரன் அய்யாவைப் பார்த்தும், “நல்லா இருக்கீங்களா பா?” என்றாள் புன்னகை முகமாகவே.

 

விழிகளில் கலக்கமும், உதட்டில் சிரிப்புமாய் என்னவோ அவளைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாகத் தெரியும். முன்பெல்லாம் அத்தனை கலகலப்பாக இருப்பாள், இந்த இரண்டு மாதமாய் முகம் பொலிவிழந்து போனது என்றால், இன்று வாடி வதங்கியே போய் விட்டது. பெரியவர்கள் இருவரும் அவளையே ஆராய்ந்து ஆதுர்யமாக பார்த்தனர். “என்னடாம்மா பண்ணுது, உடம்பு எதுவும் சரியில்லையா?” என்று கேட்ட விசாலம் அம்மா, “இல்லை எதுவும் விசேஷமா? இப்படிச் சோர்ந்து தெரியற?” என மென்குரலில் அவளுக்கு மட்டும் கேட்குமாறு கேட்க, அவளுக்கு ஏது அந்த பாக்கியம்? திருமணம் முடிந்த மாதத்திலிருந்து அவள் எதிர்பார்க்கும் வரம் அல்லவா? ஒவ்வொரு மாதமும் அந்த கனவுகள் சிதையும் நாள், அன்று அவள் அடையும் வேதனை, அதை யாரிடமும் இதுவரை சொன்னது கூட இல்லையே! மனம் மேலும் மேலும் பாரம் ஆனது. வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும்? என்று தெரியவே இல்லை அவளுக்கு. ‘அனைத்தையும் பொறுத்து, அவருக்கு பிடித்ததைப் பார்த்துப் பார்த்து தானே செய்கிறேன், இன்னும் என்ன செய்ய வேண்டும்?’ என்று ஏற்கனவே இருக்கும் வருத்தம், இப்பொழுது குழந்தைப்பேறு கூட இல்லையே என்னும் எண்ணத்தில் மேலும் அதிகரித்தது.

 

மீண்டும் ரோகிணியின் முகம் வாட, “விசாலம் புள்ளையே சோந்து தெரியுது. நீ வேற என்னத்த கேட்டு கஷ்ட படுத்தற?” என்று மனைவியை அதட்டிய தனசேகரன் ஐயா, “முகம் ரொம்ப வாடி இருக்கு மா? யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க, முகத்தைக் கழுவி இந்த தண்ணிய குடி” என்றார் அக்கறையுடன். மறுப்பேதும் சொல்லாமல் அவர்கள் சொன்னதை செய்தாள். பிறகுத் தனது சோர்வைத் தள்ளி வைத்து அவர்கள் இருவருடனும் சிறிது நேரம் மனம் விட்டுப் பேசினாள். பெரியவர்கள் இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தான், தனது மருமகள் கருவுற்றிருந்த சமயம் இங்கு வந்துவிட்டனர், இப்பொழுது குழந்தையைக் கவனிக்க வேண்டி இருப்பதால் இங்கேயே தங்கி விட்டனர்.

 

“வீட்டுக்கு ஒரு நாள் வரலாம் தான ரோகிணி, கூப்பிட்டே இருக்கோமே” என விசாலம் அம்மா கேட்க, “சீக்கிரம் வரேன்மா” என்றாள் புன்னகை முகமாகவே, “நீ கொடுத்த குளியல் பொடி, என் மருமகளுக்கு ரொம்ப பிடிச்சு இருக்காம் அது தான் அவ போடறா. அங்க அப்பார்ட்மெண்ட்ல கூட கொஞ்ச பேரு கேக்கறாங்க போல, செஞ்சு தரியா?” எனக் கேட்க, அவளுக்கு என்ன சொல்ல என்றே புரியவில்லை. இவள் ஒரு நாள் பேச்சு வாக்கில் குளியல் பொடி பற்றிச் சொல்ல, அந்த அம்மாள் அவர் மருமகளுக்காகக் கேட்டார், அப்போதிருந்து இவர்களுக்குத் தயார் செய்யும் பொழுது அவர்களுக்கும் சேர்த்து தயார் செய்து தந்து விடுவாள். இவள் எவ்வளவு மறுத்தும் அவர்கள் பணம் தந்து விடுவார்கள். இப்பொழுது மேலும் சிலருக்கும் என்றதும், “நான் யோசிச்சு சொல்லறேன்மா” என்று அப்போதைக்குத் தள்ளிப் போட்டாள். இருக்கும் சூழலில் எதையும் யோசிக்க இயலாது என்று தெரியும். மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு அங்கிருந்து வந்திருந்தாள். அன்னை நீலவேணி, தோழிகள் என யாரும் அவளுடைய பிறந்தநாளை மறக்கவில்லை, ஆனால், அவள் கணவன் மறந்திருந்தான், என்ன முயன்றும் அந்த நினைவை, நினைவு தரும் வலியை, வேதனையை ஒதுக்கவே முடியவில்லை.

 

ஒரு மாதம் கடந்திருந்த நிலையில் ஓரளவு தேறியிருந்தவள், சந்திரனின் பிறந்தநாளையேனும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று எண்ணியிருக்க, முந்தைய நாளே கேக் வாங்கி வைத்து நள்ளிரவில் வெட்டத் திட்டம் எல்லாம் தயார் செய்து வைத்தாள். அவனுக்காக ஒரு பரிசையும் வாங்கி வைத்திருந்தாள். ஏதோ அவளுக்கு தெரிந்தளவு கொண்டாட்டம். ஆனால், அதற்குக் கணவன் என்கிற ஒருவன் வரவேண்டும் அல்லவோ! அவன் வரவில்லை. பொதுவாக இரவு வராவிட்டால் மனம் கேட்காமல் என்னவாயிற்று என இவளாகக் காலையில் அழைத்துப் பேசுவதுண்டு. இப்பொழுது அதற்கு கூட மனம் ஒப்பவில்லை. அவனுடைய செய்கைகளில் இருக்கும் நிராகரிப்பும், முக்கியத்துவமின்மையும் அவளை வெகுவாக பாதித்தது. அடுத்த நாள் முழுவதும் வராமல், பிறந்தநாளுக்கு மறுநாள் மிகுந்த சோர்வோடு வீடு திரும்பினான். அவனின் முகம் கூட பார்க்க விருப்பமில்லாமல் இயந்திர கதியில் அனைத்தையும் செய்தாள். தன் வாழ்வை குறித்த பயம் எல்லாம் போய், நம் வாழ்வில் இவன் எத்தனை நாட்களோ? என்னும் கலக்கம் வந்திருந்தது.

 

வாழ்வு நிலைக்காது என்னும் எண்ணம் அவளாலேயே தாங்க முடியவில்லை. அவளுடைய தாயாரால் எப்படி முடியும்? என்னவோ பயம் மனதிற்குள். கணவனுக்குத் தன்னை பிடிக்கவில்லை, ஒதுக்கி வைக்கிறான், எப்பொழுது வேண்டுமானாலும் வேண்டாம் என்று முடிவெடுத்து விடுவான் என்று மனம் கூறியது. யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாத கவலைகள். மொத்தத்தில் அவளது வாழ்க்கையே இயந்திரத்தனமாய் மாறிவிட்டது. அவளுடைய மௌனத்தைச் சந்திரன் பொறுப்பாக நடந்து கொள்கிறாள் என்று நினைத்துக் கொண்டான். என்னவோ பொறுப்பின் அகராதியே அவன் என்பது போல!

 

“ரோ வரவர நீ ரொம்ப சைலன்ட் ஆகிட்ட, நல்லா இருக்கு, இருந்தாலும் என்னவோ மிஸ்ஸிங்” என ஒருநாள் சந்திரன் பேச, சொல்லும் அவனையே இமைசிமிட்டாது பார்த்திருந்தாள். ‘இவனுக்கு நம்மை ஏன் பிடிக்கவில்லை? நல்லவிதமாகத் தானே நடந்து கொள்கிறான்? ஒருவேளை மனைவி என்னும் உரிமை இன்னும் காதல் என்னும் உணர்வைத் தரவில்லையோ!’ குழப்பமும், கலக்கமுமாய் அவள் பார்க்க, அந்த கண்களிலிருந்த வலி அவனை ஏதோ செய்தது.

 

“ரோ, ஆர் யூ ஆல்ரைட்?” எனச் சந்திரன் கேள்வியாக நிறுத்த, “ஹ்ம்ம்…” என்றவள் கூடவே, “தெரிஞ்சவங்க அவங்க பேரனுக்கு பர்த் டே ன்னு இன்வைட் பண்ணி இருக்காங்க, கம்மிங் பிரைடே” என்று கூறி விட்டு அவன் முகம் பார்த்தாள். ‘பரிசு பொருள் வாங்கக் கூட வருகிறாயா?’ என்று கேட்க ஒரு தயக்கம், ‘பார்ட்டிக்கு என்னுடன் வருகிறாயா?’ என்று கேட்க முடியாமல் ஒரு உரிமையற்ற தன்மை, மேற்கொண்டு என்ன பேச என தெரியாமல் நிறுத்தி விட்டாள். ஆனால், நிச்சயம் ‘போய் வரவா?’ என்று அனுமதி கேட்க தோன்றவில்லை. தன் கணவன் தனக்கு முழு சுதந்திரம் தந்திருக்கிறான், இது போல எல்லாம் எப்பொழுதும் எதிர்பார்க்க மாட்டான் என்பதோடு, அது அவனுக்குக் கோபத்தை வரவழைக்கும் என்று தெரிந்து வைத்திருந்ததால் கேட்கவில்லை.

 

“ஓ வாவ், என்ஜாய் ரோ. இங்க வந்து இத்தனை மாசத்துல, இப்போ தான் பார்ட்டிக்கு போற, நான் எல்லாம் வந்த ரெண்டாவது மாசத்துல இருந்து போறேன் தெரியுமா? நீ இவ்வளவு ஸ்லோவா இருப்பேன்னு, ஐ நெவர் எக்ஸ்பெக்ட்” என்றான் தோள்களைக் குலுக்கியபடி. கேலியான குரல், ‘இவ்வளவு தானா நீ!’ என்பது போன்ற பார்வை. அவமானமாக உணர்ந்தாலும், ‘இதெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமென்ன?’ என்னும் கர்வம் எழச் சற்றே நிமிர்வாக அவனைப் பார்த்தவள், ஒரு மெல்லிய புன்னகையைக் கர்வத்தோடு உதிர்த்தாள்.

Advertisement