Advertisement

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 05

சந்திரனுக்கு ரோகிணியை மிகவும் பிடித்திருந்தது. ஆனால், அவளின் சிறுபிள்ளைத் தனமான செய்கைகளும், அவனைச் சார்ந்திருப்பது போன்ற தோற்றமும் அவனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவன் அறிந்த அனைவரும் தன்னிச்சையாய் செயல்படுபவர்கள். ஏன் அவனே இங்குத் தனியாக வந்து அனைத்தையும் கற்றுக் கொண்டவன் தானே! அவனை யார் வழி நடத்தினார்கள்? அவன் இங்கு பழகவில்லையா? ஆனால், இவனானால் கல்லூரியில் இணைந்தான். அங்குக் கிடைத்த நட்பு வட்டம், இவனுடைய அனுபவம், எதையும் தானாகவே செய்யும் அறிவும், திறமையும் இதெல்லாம் தான் இவனை எளிதாக இவ்விடத்தில் ஒன்றிப் போக வைத்தது. ஆனால், அவளுக்கு இப்படி எதுவுமே இல்லையே! அப்படி இருக்கும்பொழுது அவளால் எப்படி இவனுக்கு இணையாக நடந்து கொள்ள முடியும்? இதையெல்லாம் இவனுக்கு உணர்த்துவது யார்?

“முன்பு கடைகளைக் காட்டிக் கொடுங்கள்” என்று ரோகிணி கேட்டுக்கொண்ட பொழுதே, சந்திரனுக்கு எரிச்சல் மூண்டது. சரி புது இடம், தெரிந்த நாமும் அருகிலேயே இருக்கிறோம் என்று தன்னைத்தானே சமாளித்துக் காட்டிக் கொடுத்தான். அவன் அறியவில்லை, மற்ற பெண்களெனில் ஒவ்வொரு முறையும் இவன்தான் அழைத்துச் செல்ல வேண்டுமென்று! அதற்கே கோபம் கொண்டவன், இப்பொழுது ரோகிணி வீட்டிற்குள்ளேயே துணை கேட்டதும் அதீத எரிச்சல் அடைந்து விட்டான். இவள் இவ்வளவு பயம் நிறைந்தவளாக இருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை, அது அவன் மகிழ்வுக்குத் தடையும் கூட!

சந்திரனுடைய மகிழ்ச்சி பல கிளைகளைக் கொண்டது. பார்ட்டி, பஃப் கலாச்சாரம் இல்லாமல் அவனுடைய வார இறுதிகள் களையிழந்து விடும். அதிலும் லுனாவுடனான நேரம் அவனுக்கு மிகவும் பிடித்தம். அவனை அவள் ஏதோ ஒரு விதத்தில் வசீகரித்திருந்தாள். லுனா விஷயம் தவிர மற்ற எதையும் அவன் மனைவியிடம் மறைக்க வேண்டும் என்று எண்ணியதில்லை. இப்பொழுது தான் சிகாகோ வந்திருக்கிறாள், இங்குப் பழகட்டும் பிறகு நாம் வழக்கம் போல இருந்து கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டான். இப்பொழுது இவள் இப்படி நடுங்கினால் அவன் எப்படி இரவில் தாமதித்து வருவது, அல்லது வராமல் இருப்பது? அதனால் எழுந்த கோபமும், எரிச்சலும் தான் இப்பொழுது.

ஆனால், இதற்காகவெல்லாம் சந்திரன் தனது மகிழ்ச்சிகளை இழந்து விடுவானா, இல்லை ஒத்தி வைக்க போகிறானா? எதுவும் இல்லை. பிறந்ததிலிருந்து அனுபவிக்காத சொர்க்கம். கடந்த சில வருடங்களாகத் தான் அனுபவித்து மகிழ்கிறான். இதைப்போய் மனைவிக்காக விட்டுக்கொடுப்பானா? ஏற்கனவே போட்ட திட்டப்படி இந்த வார இறுதிகளில் பஃப் செல்ல முடிவெடுத்தான்.

சந்திரன் எதிர்பார்த்த அந்த சனிக்கிழமையும் வந்தது. “வர லேட்டாகும் ரோ… என்கிட்ட இருக்க கீ யூஸ் பண்ணி வந்துப்பேன். நீ எங்கேயும் போகணும்ன்னா போயிட்டு வந்துக்கோ” என்று விடைபெற்றுச் சென்றான். இது வழக்கமாகச் சொல்வது தான், ஆனால் எங்குச் செல்வது? கடைக்கும், ஆலயத்திற்கும் மட்டும் சென்று வருகிறாள், வேறு எங்குச் செல்ல என்றும் தெரியவில்லை. தனியாக ஏன் போகவேண்டும் என்றும் புரியவில்லை. மனம் இந்த சொற்களால் சோர்வடைந்து போகிறது.

‘கோயில் எங்கு என்று தெரியவில்லை’ என்று முன்பு வாய்க்கு வந்ததை உளறியதற்காக ‘அதற்குக் கூட நான் வேண்டுமா?’ என்னும் ரீதியில் கணவன் மூக்குடைத்திருந்தான். அவள் கூட அருகில் தான் நடந்து செல்லும் தூரம் என்று நினைத்திருக்க அவர்கள் தங்கியிருக்கும் இடத்திலிருந்து ஏழு மைல் தொலைவிலிருந்தது அந்த ‘ஹிந்து டெம்பிள் ஆஃப் கிரேட்டர் சிகாகோ’. ஒருவழியாகப் பேருந்து பிடித்துப் போய் வரவும் பழகி விட்டாள்.

ஆனால், வழக்கமாகச் சொல்வதைக் காட்டிலும் சந்திரன் இன்று இன்னும் ஒரு விஷயத்தைக் கூறினானே! வருவதற்குத் தாமதமாகும் என்றால்? எப்பொழுதுமே மாலை மங்கித் தான் வருகிறான், இன்று அதையும் விடத் தாமதமா? ஏன் என்று ரோகிணிக்கு உண்மையிலேயே புரியவில்லை. ஏற்கனவே அவள் இங்கு வந்ததிலிருந்து அவன் ஒருநாள் கூட ஓய்வெடுத்ததில்லை. என்ன வேலை என்றாலும் விடுப்பு கூட தரமாட்டார்களா? என்று பலமுறை யோசித்திருக்கிறாள். ஆனால், இன்னும் சராசரி மனைவி போன்று கேள்வி கேட்கும் உரிமையோ, நெருக்கமோ, கண்டிப்போ, அன்னியோன்னியமோ அவளுக்குச் சுத்தமாக வரவில்லை. ஏதோ ஒன்று அவளைத் தள்ளி நிறுத்தியிருந்தது. இருவருக்குள்ளும் இன்னும் உறவு பலப்படவில்லை என்று மட்டும் புரிந்தது. அதை எப்படியாவது பலப்படுத்தி விட வேண்டும் என்று போராடினாள் என்பதே உண்மை.

சந்திரன் மீது ரோகிணிக்கு இருந்த காதல், அது மட்டுமே அவளை வழி நடத்தியது. உறவை எப்படி பலப்படுத்த என்று உண்மையிலேயே அவளுக்குத் தெரியவில்லை. ஆனால், இயன்றவரை அவன்மீது அன்பு செலுத்தினாள். அவனுக்கு ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்தாள். எந்த எதிர்பார்ப்பையும் வைத்துக் கொள்ளக் கூடாது என்பதில் மட்டும் இரும்பைப் போன்று உறுதியாக இருந்தாள். அது தானே ஏமாற்றம் தருகிறது! மன சுணக்கத்தையும், சஞ்சலத்தையும், பயத்தையும், ஏமாற்றத்தையும் தரும் எதிர்பார்ப்புகளோ, கனவுகளோ வேண்டாம் என்று நினைத்தாள். திருமண வாழ்க்கை, தன் கணவன் தன்னிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது போன்ற ஆழ்மனது ஆசைகளும், கனவுகளும், ஏக்கங்களும் அவள் வளைத்த வளைப்புக்குக் கட்டுப்படுமா என்ன? ஏனோ அதைப் புதைத்து வைக்கவும் தோன்றியது அந்த பேதைப் பெண்ணுக்கு.

வழக்கம்போல அன்றைய தினத்தையும் மிகவும் நெட்டித் தள்ளினாள் ரோகிணி. என்னவோ ஒரு சோர்வு, பிடித்தமின்மை, சலிப்பு எனச் சமீப காலமாய் அவளை வாட்டுகிறது. அவளும் எத்தனை நேரம் தான் தனிமையை அனுபவிப்பாள். கணவன் கூறிய தாமதம் நினைவில் இல்லாமல், அவன் வருகைக்காகக் காத்திருந்தாள். நேரம் நகர்வதாய் இல்லை, மணி பத்தையும் தாண்டி இருந்தது. பசி வேறு வயிற்றைக் கிள்ள, மனதோரம் ஒரு சின்ன எதிர்பார்ப்பு! சமீபத்தில் கார்த்திகா கருவுற்றிருந்தாள், அவளுடைய முதல் அறிகுறியே பசி தானாம். இரவு பத்தை தாண்டியதால், எடுத்த பசியையும் அதனோடு தொடர்புப் படுத்திக்கொண்டது அந்த பெண்ணுள்ளம்.

திருமணமான புதிதில் பல பெண்களுக்கும் இருக்கும் எதிர்பார்ப்பு தான், அந்த எதிர்பார்ப்பின் தீவிரம் சாதாரணமாக நடக்கும் சிறு சிறு விஷயங்களுக்கும் மனம் குழந்தையோடு தொடர்புப்படுத்தி மகிழ்ந்தது. வயிற்றில் இல்லாத குழந்தையை, பட்டினி போட மனமில்லாமல் சமத்தாகச் சாப்பிட்டு விட்டு காத்திருக்கலானாள். பிறகு தான் நினைவில் வந்தது, கணவன் கூறி சென்ற தாமதம். ‘ஓ! லேட்ன்னா, இவ்வளவு நேரமாகுமா?’ என நள்ளிரவை நெருங்கி கொண்டிருந்த கடிகாரத்தைப் பார்த்துவிட்டு படுக்கையறையில் சென்று கண்மூடி படுத்து கொண்டாள். பயமும் தான்… இருளும், தனிமையும் அதிகமாக அச்சுறுத்தியது. ஆனால், இன்னும் எத்தனை நாட்களுக்கு அப்படியே இருக்க முடியும்? இனி ஒரு குடும்பத்தின் தலைவி, மிகப்பெரிய மருத்துவரின் மனைவி அதற்கேற்ப தனது குறைகளை மேம்படுத்தி செப்பனிட வேண்டும் என்பதில் சமீப காலமாக ஒரு உறுதி வந்திருந்தது.

படுக்கையறையின் விளக்கை மட்டும் ஒளிரவிட்டு, படுத்தவள், சிறிது நேரத்தில் உறங்கியும் போனாள். அதன்பிறகு, நள்ளிரவா, விடியற்காலையா என வரையறுக்க முடியாமல் மூன்றரை மணிவாக்கில் மெல்லிய தடுமாற்றத்துடன் வந்து படுக்கையில் விழுந்த சந்திரனை அவள் அறியாள்.

விடியலில் எழுந்தபொழுது தாறுமாறாகப் படுத்திருந்த சந்திரனைக் கண்டதும் ரோகிணி மெலிதாக அதிர்ந்தாள். எப்பொழுதுமே அவனிடம் ஒரு ஒழுங்கு இருக்கும் உறங்கும்பொழுது கூட, அவள் மிகவும் அதிசயிக்கும், ரசிக்கும் விஷயத்தில் அதுவும் ஒன்று. இன்று உடையைக் கூட அரைகுறையாகக் களைந்து, என்னவாயிற்று என்று தான் மனம் பதறியது. பாவம் அதிக வேலை போல என்று அவனுக்காக வருந்தினாள். அவள் மனதில் இருக்கும் மருத்துவர் என்னும் பிம்பமே வேறு! அவளால் இவன் செய்து கொண்டிருப்பதைத் துளியும் அனுமானிக்கக் கூட இயலாது. ஆகவே, வேலைப்பளு என்று தான் எண்ணத் தோன்றியது.

‘ஐயோ! பாவம், ராப்பகலா வேலை செயராரு! நாம என்னடான்னா நம்ம கூட இருக்கிறதில்லை, எங்கேயும் கூட்டிட்டு போறதில்லைன்னு பொலம்பிட்டு இருக்கோம்’ என மனதோடு வருந்தியவள், அவனை இன்னும் நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும், நிம்மதியாக வைத்துக் கொள்ள வேண்டும், மகிழ்ச்சியாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணினாள். முன்பே செய்கிறாள் தான், ஏனோ இன்னும் செய்ய வேண்டும் என்று தோன்றியது.

சந்திரன் வெகு நேரமாகியும் எழவில்லை. அன்றாடமும் அவள் தான் எழுப்பிவிடுவாள், இன்று சோர்ந்து போய் உறங்கிக் கொண்டிருந்தான், இருமுறை எழுப்பியும் எந்த பயனும் இல்லை. நேரம் அதிகமாகிக் கொண்டே செல்லவும், “என்னங்க, என்னங்க…” என தொடங்கியவள், பின்பு சுதாரித்து, “சந்துரு, சந்துரு எழுந்திரு. சாப்பிட்டு தூங்குவியாம்” எனப் போர்வையை விளக்கிக் கேட்க, மெல்லிய அசைவு அவனிடம். சிறிது நேரம் நெளிந்தவன், விழித்து பார்க்க, புது மலர் போலப் பிரகாசமாகவும், புன்னகையோடும் அவனுடைய மனையாள். அவனுக்கும் அவளுடைய புத்துணர்வு தொற்றிக் கொள்ள, எழுந்து வேகமாகக் கிளம்பி வர, ஒரு விருந்தே தயாராகி இருந்தது.

“ரோ! என்ன இவ்வளவு?” என மெச்சுதலாக ரோகிணியின் மீது பார்வையைச் செலுத்தவும், சிறு வெட்கம் எழத் தலைகுனிந்து கொண்டாள். பின்னே, முதல்முறை கணவன் வீட்டில் இருக்கிறான், அவள் ஊரிலிருந்து வந்த புதிதில் கூட இருக்கவில்லையே! அதோடு இரவெல்லாம் அதிக வேலை வேறு செய்து வந்து இருக்கிறான். அவளைப் போன்று தானே அவனுக்கும், இங்கு அவனுக்கென்று யார் இருக்கிறார்கள்? அவனை யார் கவனித்துக் கொள்வார்கள்? இங்கு மட்டுமா அவன் ஊரில் இருந்த பொழுது கூட, அவனுடைய தாயார் அப்படி ஒன்றும் பெரிதாகக் கவனித்துக் கொண்டதாய் அவளுக்கு நினைவில்லை. ஆகவே அன்றையதினம் அவனை நன்கு கவனித்துக் கொண்டாள்.

“என்ன ரோ பதிலையே காணோம்?” எனச் சந்திரன் மீண்டும் கேள்வியெழுப்ப, “இல்லை சந்துரு நீ எழவே இல்லையா? அதான் வீட்ல இருப்பேன்னு தோணுச்சு, அதான்…” எனத் தயக்கமாகக் கூறி நிறுத்த, “தேங்க்ஸ் ரோ…” என்று மனமார கூறியவன், உணவில் கவனமானான். அபாரமான ருசி! ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்திருந்தாளே, ருசி இல்லாமல் இருந்தாள் தான் அதிசயம்.

“ரோ இனிமே தினமும் லன்ச் செஞ்சு கொடுத்து விடறயா? ரொம்ப பிரமாதமா சமைச்சிருக்க. எனக்கு ரொம்ப பிடிச்சது” என்று உணவை ருசித்தபடியே சந்திரன் கேட்க, ரோகிணி நிச்சயம் இதை எதிர்பார்க்கவில்லை. தினமும் காலையும், மாலையும் வீட்டில் சாப்பிடுவான் தான், ஆனால் மதிய உணவு எடுத்துச் செல்கிறீர்களா எனக் கேட்ட பொழுது, வேண்டாம் என்று மறுத்திருந்தவன் இப்பொழுது அவனாகக் கேட்கவும் மகிழ்ச்சியுடன் தலையசைத்தாள்.

“ஆமா, அதென்ன பொடி? ரொம்ப மணமாவும், பிரெஷாவும் இருக்கு” எனக் கேட்டான். அவள் வீட்டில் நேரம் போகாமல் தவித்தபொழுது, ஆன்லைனில் நோண்டி ஒரு குளியல் பொடியைத் தயார் செய்தாள். அவள் உபயோகித்து திருப்தியாக இருக்கவும், இன்று கணவனுக்கும் தந்தாள். அது குறித்து தான் இப்பொழுது சந்திரன் கேட்டான்.

“அது ஆன்லைன்ல பார்த்து செஞ்சேன். உங்களுக்கு பிடிச்சு இருக்கா? கன்டினு பண்ணவா?” என ஆர்வத்தோடு கேட்க, “ஹ்ம்ம் பண்ணு, பண்ணு அதோட இந்த வாங்க, போங்க சொல்லறதையும் நிறுத்து” என்றான் சிறு முக சுளிப்போடு. ‘இவரு வேற! இதுக்கெல்லாம் கோபம் வந்திடும்!’ என்று நினைத்தாலும், “சாரி சந்துரு” என்றாள் சின்ன குரலில்.

ஏற்கனவே மதியம் வரை உறங்கியே கழித்ததால், அதன்பிறகு தொலைக்காட்சி, இன்டர்நெட், போன் என அவனது நேரம் ரெக்கை கட்டி பறந்தது. அவனைத் துளியும் தொந்தரவு செய்யவில்லை. அவன் விருப்பத்திற்கு விட்டு விட்டாள். அவனுக்குத் தேவையானதைப் பார்த்துப் பார்த்து செய்தாள். ஆனால், அவளின் தனிமையைப் பற்றி அவன் சிறிதும் சிந்திக்கவில்லை. மொத்தத்தில் அந்த ஞாயிற்றுக் கிழமையைச் சந்திரன் மறக்க முடியாத அளவு அவனைப் பார்த்துக் கொண்டாள். விளைவு அவ்வப்பொழுது விடுமுறையை வீட்டிலும் இருந்தான். அதற்கே ரோகிணி அடைந்த மகிழ்ச்சி அளப்பரியது. அந்த மகிழ்ச்சியிலும் ஒரு இடைச்சொருகள் இருக்கத்தான் செய்தது.

Advertisement