Advertisement

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 02

*** சில மாதங்களுக்கு முன்பு ***

திருமணம் என்ற ஒற்றை சொல் ஓராயிரம் கனவுகளை உள்ளடக்கியது. காதல், அரவணைப்பு, பாதுகாப்பு, அக்கறை, மரியாதை எனப் பெண்களுக்கான திருமண கனவுகள் ஏராளம். ரோகிணிஸ்ரீயும் அதற்குத் துளியும் விதிவிலக்கல்ல. மனதில் பூட்டி வைத்த மொத்த காதலையும் தனக்கு நிச்சயிக்கப்பட்ட மணாளன் மீது பொழியத் தொடங்கினாள். அவன் எது செய்தாலும் பூரித்து விடுவாள். அவனது பேச்சினில் மதி மயங்கி விடுவாள்.

ரோகிணி சிறு வயதிலேயே தந்தையை இழந்து தாயின் நிழலில் வளர்ந்தவள். அவளுடைய தாயார் நீலவேணி, மகள் மீது உயிரையே வைத்திருந்தார். அன்பு, அரவணைப்பு, கண்டிப்பு, பாசம் என எதிலுமே அவரிடம் குறைவிருக்காது. அவளைத் தனி ஆளாய் நின்று ஆளாக்கி இன்று திருமணம் வரை வந்துள்ளார். அவருக்கு அமெரிக்கா மாப்பிள்ளை என்றதும் மகளை அவ்வளவு தூரம் அனுப்ப வேண்டுமே என்று தயக்கம் இருந்தது. ஆனால், சந்திரன் தங்கமான பிள்ளை, இருக்கும் இடமே தெரியாது, மிகவும் ஒழுக்கமானவன் என அறிந்தவர், தெரிந்தவர் என ஒருவர் விடாமல் கூறும்பொழுது நல்ல சம்பந்தத்தை விட மனமின்றி ஒப்புக் கொண்டார். அந்த உறவினர்களுக்கும்… அமெரிக்கா, சந்திரனுக்கு கற்றுத் தந்த பாடங்களைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லையே! விதி அதன் விளையாட்டைத் தொடங்கியிருக்க, யார்மீது குற்றப்பத்திரிகை வாசிக்க இயலும்?

கோலாகலமாக திருமணம் நடந்தது. சந்திரனுக்கு சில நாட்கள் மட்டுமே விடுப்பு இருந்தது. மனைவியை தாங்கினான் என்று சொல்ல முடியாது, ஆனால் அவள்மீது அன்பாகத் தான் இருந்தான். அவளையே சுற்றிச் சுற்றி வந்தான் என்று கூற முடியாது, ஆனால் அவளை ஆண்டான். அவனுடைய ஒவ்வொரு செய்கையையும் காதல் கொண்ட பெண் உள்ளம் ரசித்து மகிழ்ந்தது.

அசட்டுத்தனங்கள் இல்லாமல், மாப்பிள்ளை என்கிற அலட்டல் இல்லாமல், இதழ்களில் தவழவிட்ட புன்னகையுடன், அவன் சுற்றி வரும்போது அவளது பார்வை அவனை மனதில் நிறைத்து மகிழும். அதிலும் அவன் செல்லமாக “ரோ…” என்று அழைக்கும் பிரத்தியேக அழைப்பு அவளுக்கு மிகவும் பிடித்தம். அவன் அங்கிருந்தவரை அவனுக்குத் தேவையான அனைத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்து மகிழ்ந்தாள்.

சந்திரனும், ரோகிணியும் உறவினர் வீடுகளுக்கு விருந்திற்காகச் சென்றனர். சந்திரனின் பக்கம் அவனது தாய்மாமா ஈஸ்வரனின் வீட்டிற்கு மட்டும் சென்று வர, ரோகிணியின் பக்கம் பல உறவுகள் இருந்தது. அனைவரிடமும் அவள் அளவளாவியதை வியப்புடன் பார்த்தவன், “ரோ… என்ன எங்கேப் போனாலும் உன்னை எல்லாருக்கும் தெரியுதே!” என்று அவன் வியப்பை வார்த்தைகளிலும் வெளிப்படுத்த, சட்டெனச் சிரித்து விட்டாள். “என்னங்க, என் சொந்த பந்தத்துக்கு என்னைத் தெரியாமல் இருக்குமா?” என்றாள் புன்னகையோடே, அவனுக்கு இதெல்லாம் மிகவும் புதிது.

வீட்டில் இருந்த பொழுதும், அறையை விட்டு பெரும்பாலும் வெளியில் வர மாட்டான், மடிக்கணினி மட்டுமே அவனது பொழுதுபோக்கு. உண்மையில் அவனுக்கு இந்திய வாசம் பிடிப்பதே இல்லை. பிறந்ததிலிருந்து மருத்துவம் முடிக்கும் வரை இங்கு தான் இருந்தான், இங்கு தான் வளர்ந்தான். ஆனாலும் அவனுக்கு இந்தியாவில் நண்பர்கள் என்று யாருமில்லை. பொழுதுபோக்கு என்று எதுவும் பழக்கப் படுத்தப்படவில்லை. படிப்பு! படிப்பு! படிப்பு! என்று குதிரையின் கடிவாளம் போல அவனை வேறு எந்த திசையும் நோக்க விடாமல் அவனது பெற்றோர்கள் பார்த்துக்கொண்டனர்.

அவன் அன்றாடமும் பள்ளி செல்ல வேண்டும். பள்ளியிலிருந்து வந்ததும் அவனது தாயார் சுசீலா அவனுக்குப் பாடங்களை கற்றுத் தருவார். பிறகு அவனுடைய தந்தை மாணிக்கவேல், வேலை முடிந்து வந்ததும் அவர் சிறிது நேரம் கற்றுத்தருவார். படிக்கவில்லை என்றாலோ, சோர்வாக இருக்கும் தருணங்களில் உறங்க வேண்டும் என்று கேட்டு விட்டாலோ, மதிப்பெண் குறைந்தது என்றாலோ அவ்வளவுதான், அன்று பெற்றவர்கள் ஆடும் ருத்ரதாண்டவமே வேறு மாதிரி இருக்கும். விடுமுறை நாட்களிலோ மேலும் கொடுமை, ஏதாவது கோச்சிங் கிளாஸில் சேர்த்து விடுவார்கள்.

“நீ நன்கு படித்து டாக்டர் ஆக வேண்டும்” என்று மீண்டும் மீண்டும் வற்புறுத்தியவர்கள், அவனுக்கு வேறு எதிலுமே கவனம் சிதற விடாமல் பார்த்துக் கொண்டனர். பறவையின் சிறகை ஒடித்து, அதனை அடைத்து வைத்து, அடிபணிய வைக்கும் வீரம் அவர்களுடையது. இதில் தாங்கள் தான் சிறந்த பெற்றோர்கள் என்ற இறுமாப்பு வேறு! இப்படியும் சில படித்த முட்டாள்கள். கண்டிப்புடன் வளர்க்கப்பட்டவன், பாசம் என்பதனை முழுமையாக அனுபவித்ததில்லை. அதோடு சுயநலம் மிக்க பெற்றவர்களின் வளர்ப்பு என்பதால் அது அவனிலும் பிரதிபலித்ததில் பெரும் வியப்பில்லை. தன் மகிழ்வை, இன்பத்தை மட்டுமே கருத்தில் கொண்டவன், அடுத்தவர் மனநிலையை அறியாதிருந்தான்.

சந்திரன் இப்படி அறைக்குள்ளேயே அடைந்திருப்பதைப் பார்த்த ரோகிணி, “நீங்க இங்கேயே இருக்கீங்களே! அத்தை, மாமா கிட்ட எதுவும் பேசலையா? கொஞ்ச நாளில் மறுபடியும் யூ.எஸ் கிளம்பணுமே?” எனச் சந்தேகமாகத் தொடங்க, “என்ன பேசணும் ரோ?” என புரியாமல் பார்த்தான் கணவன். “எதுவுமே பேசறதுக்கு இல்லையா?” என விழி விரித்து மறு கேள்வி எழுப்பவும், அவனுக்கு உண்மையிலேயே புரியவில்லை. இதுவரை அப்படி அவர்களுடன் அமர்ந்து பொதுவாகப் பேசி அவனுக்குப் பழக்கமில்லை. புதிதாய் எப்படி வரும்?

சந்திரன் அவனுடைய பெற்றவர்களிடம் காட்டும் ஒதுக்கம் ரோகிணிக்கு மிகவும் வித்தியாசமாக இருந்தது. ஆனால், அவள் பார்த்த வரையிலும் அவனுடைய பெற்றவர்களும் அப்படித்தான். அவர்களும் தான் உண்டு தன் வேலையுண்டு என்று தான் இருந்தார்கள். நான்கு பேர் இருந்த வீடாயினும் அது மியூசியம் போல நிசப்தமாக இருந்து, அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஏன் உறவினர்கள் கூட திருமணம் முடிந்த கையோடு சென்றிருந்தனர்.

சந்திரன் ரோகிணியிடம் நன்றாகத் தான் பேசினான். அவள் அவனைப்பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் எதையும் கேட்பாள், அவனும் அதைக்கொண்டு பேச்சை வளர்ப்பான். அவளிடம் இருக்கும் சிறுசிறு குறைகள் அவனுக்கு பிடித்தம் இல்லை, மிகவும் சிறுபிள்ளைத் தனமாக இருந்தது, அவன் வாழும் நடைமுறைக்கு அவள் அதை எல்லாம் மாற்றிக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. இருந்தும் நாகரிகம் கருதி, பழகத் தொடங்கிய சில நாட்களிலேயே அதை எல்லாம் அவளிடம் சொல்ல வேண்டாம் என்று ஒத்தி வைத்தான்.

ரோகிணியை பொறுத்தமட்டிலும் அவனின் பேச்சு, செய்கை என அனைத்தும் பிடித்தது. அதோடு அவன் புது கணவன் என்று அதிக வம்பு செய்வதெல்லாம் இல்லை. மனைவி என்கிற ஆதிக்கம் இரவில் மட்டுமே! அதில் அவளுக்கு மெல்லிய ஏமாற்றமும் கூட. ‘அவன் ஒரு பெரிய மருத்துவன், அவனிடம் போய் சினிமாத்தனமாக எதிர்பார்க்கலாமா?’ என ஏங்கும் மனதிற்கு ஒரு குட்டு வைத்துச் சமன்படுத்துவாள். ஆனாலும், இதெப்படி இவ்வளவு கண்ணியம்? அவளின் உயிர் தோழிகள் பகிர்ந்து கொண்ட விஷயங்களுக்கு நேரெதிராய்! அதுவும் மனைவியுடன் சில நாட்கள் மட்டும் தான் வசிக்க முடியும், பிறகு அவள் விசா கிடைத்து அமெரிக்கா வரும் வரையிலும் தனியாகத் தான் இருக்க வேண்டும் என்ற நிலையில் கூட கண்ணியமா? அவளால் வியக்காமல் இருக்க முடிந்ததில்லை.

சந்திரன் அமெரிக்காவிற்குப் புறப்படும் நாளும் வந்தது. அதில் அதிகம் தவித்தது என்னவோ ரோகிணி தான். முந்தைய நாள் அவனை விட்டுப் பிரியவே விரும்பாதவள் போல, அவனோடு ஒன்றி, இறுகி படுத்திருந்தாள். பிரிவைத் தாங்காமல் கண்கள் கூட கலங்கத் தொடங்கியிருந்தது. அதை அவன் அறிந்து வருந்தப்போகிறான் என்று, அப்பொழுதே குளியலறைக்குள் தஞ்சம் புகுந்து கொண்டாள்.

ஆனாலும் அவள் கண்ணீர் அவன் அறிந்திருக்கக் கூடும் என்று ரோகிணிக்குப் புரிந்தது. ‘இருந்தும் அவர் ஏன் சமாதானம் செய்ய முனையவில்லை?’ என மனம் குழம்பித் தவித்தது. ‘மேலும் மேலும் அழவைக்க விருப்பம் இல்லை போலும்’ என்று தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டவளுக்கு, மீண்டும் அவன் பிரிவுத் துயர் மனதில் நிறைய, சிறிது நேரம் கண்ணீர் வடித்தாள்.

ரோகிணி எண்ணியதும் சரி தான். சந்திரன் அவள் கண்ணீரை உணர்ந்திருந்தான். அவனுக்கு அவளது செய்கைகள் எல்லாம் மிகவும் வித்தியாசமாகப் பட்டது. திருமண நாளன்றும் இப்படித்தான், அவள் தாயைப் பிரிய வேண்டியது நினைத்து அழுது கரைந்தாள். அப்பொழுதே சமாதானப்படுத்த வேண்டும் என்று தோன்றாமல் அவளை எட்டாம் அதிசயமாய் பார்த்தவன் அவன். இப்பொழுதும் அவளின் செய்கையை உணர்ந்ததும், ‘என்னுடன் பத்து நாட்கள் தான் இருந்திருப்பாள், இப்பொழுது என்னைப் பிரியவும் அழுகிறாளே!’ என்கிற ஆச்சரியம் தான் அவனுக்கு. ‘என்ன இது சிறுபிள்ளைத்தனமான செய்கை? இப்படி இருப்பவள் எப்படி அமெரிக்காவில் வந்து வாழ்வாள்? இனி ஊர், உறவு, நட்பு என ஒவ்வொருவர் பிரிவுக்கும் அழுதுமுடித்துத் தான் அமெரிக்கா வருவாள் போலவே! இப்படி குழந்தையைப் போன்று நடந்து கொண்டால் இவளை மனைவி என்று எங்கும் அழைத்துக் கூடப் போக முடியாது போலவே! இவளை எப்படி மாற்றுவதோ?’ என்றுதான் சிந்தனையில் ஆழ்ந்தான்.

அதன்பிறகு நீண்ட மௌனம் மட்டுமே அந்த இரவை ஆண்டது. ரோகிணிக்கு அவனைப் பிரியப் போகும் வருத்தமும், ஏக்கமும். சந்திரனுக்கு அவளது சிறுபிள்ளைத்தனமான செயல்பாடுகளில் ஏற்பட்ட குழப்பம் என இருவரும் அவரவர் சிந்தனைகளில் மூழ்கிக் கொண்டனர். என்ன குழப்பம் இருந்த பொழுதும், அவன் மனதை ஏதோ ஒரு விதத்தில் அவள் பாதித்திருந்தாள் என்பது மட்டும் மறுக்கமுடியாத உண்மை. அவன் மனதில் அவளது நேசமும், வெட்கமும், புன்னகையும், அழகும் அஜந்தா ஓவியமெனப் பதிந்திருந்தது. அது அவனை மொத்தமாக ஆளத் தயாராகும் விதையென்று அவன் அப்போது அறிந்திருக்கவில்லை.

அடுத்த தினம் அமெரிக்கா கிளம்பும் பொழுது, வெயிலில் வாடிய மலரென இருந்த ரோகிணியை பார்க்கையில் சந்திரனுக்கும் மனம் இளகத்தான் செய்தது. இதுவரை யாரும் அவன் பிரிவை எண்ணி வருந்தியதாய் அவனுக்கு நினைவில்லை. சில நாட்களாய் அறிமுகமாகிய பெண் தனக்கு இத்தனை முக்கியத்துவம் தருகிறாளே என்று வியப்பாய் கூட இருந்தது, அது ஆழ்மனதில், ரகசியமாக ஒருவித இதத்தையும் தந்து சென்றது. அதன்பிறகு வந்த நாட்களில் அவளுக்கென நேரம் ஒதுக்கி அவளிடம் கைப்பேசியில் பேசினான். முன்பு அவளிடம் காட்டிய ஒதுக்கம் சற்று குறைந்திருந்தது.

கணவன், மனைவி உறவைப்பற்றியோ, கடமையைப் பற்றியோ சந்திரன் அறியாதவன் இல்லை. ஆனால், இந்திய பெண்களின் நுணுக்கமான உணர்வுகளைப் பற்றியோ, எதிர்பார்ப்புகளைப் பற்றியோ அணுவளவும் அறியாதவன். தன் வாழ்வில் ஒரு துணை வேண்டும் என்று தோன்றவும், அவனுடைய தோழமை வட்டத்தில் யாரையும் பிடிக்கவில்லை என்றதாலும், அவன் அதிக மதிப்பு வைத்திருந்த தாய்மாமன் ஈஸ்வரனின் தேர்வு என்பதாலும், அதோடு ரோகிணியை அவனுக்கும் பிடித்திருக்கவும் மணந்து கொண்டான். அவளிடம் இருக்கும் சிறுசிறு குறைகள் சுணக்கம் தான் என்றாலும், சொன்னால் புரிந்து கொள்வாள் என்று தோன்றியது. அவளும் இந்த ஊரை தாண்டி வராதவள் தானே! போகப்போகப் பழகிக் கொள்வாள் என்று நம்பினான்.

சந்திரன் கூறியபடியே அவன் சென்றதும் தன்னுடைய அமெரிக்கா பயணத்துக்குத் தேவையான உடைகள், பொருட்களை எல்லாம் ரோகிணி தன் உயிர்த் தோழிகளான கார்த்திகா, கோமதியுடனும், அவளுடைய அன்னையோடும் சென்று வாங்கி வந்தாள். அவளுடைய மாமனார், மாமியார் எதிலும் கலந்து கொள்ளவில்லை. ஆனாலும் அவ்வப்பொழுது அறிவுரைப்படலம் மட்டும் பலமாக இருக்கும். “உன் புருஷன் சம்பாரிக்கிற காசெல்லாம் என்ன பண்ணறான்னே தெரிய மாட்டீங்குது, நாங்க கேக்கறப்ப மட்டும் கொஞ்சம் அனுப்பறான். கொஞ்சம் மிச்சம் வைத்து அங்கேயும் சொத்து சேர்க்கிற வழிய பாருங்க” என ஓயாது கூறுபவர்களிடம் மண்டையை ஆட்டுவதைத் தவிர அவளுக்கு வேறு வழி தெரிந்ததில்லை. உண்மையில் அவன் அனுப்பிய பணத்தில் தான், இங்கே இத்தனை வசதி வாய்ப்புகள். இங்குள்ள பல சொத்துகள் மகனின் சம்பாத்தியத்தில் வாங்கியது. இருந்தும் போதவில்லை அவர்களுக்கு.

அவர்கள் பேசும் பொழுது ரோகிணியின் மனதில், ‘இவர்களே இவ்வளவு சொத்து சேர்த்து வைத்து இருக்கிறாங்க. இதில் அவர் வேறு  புதிதாக எதை சேர்த்துவார்? எல்லாத்தையும் சேர்த்து என்ன பண்ணுவாங்க?’ என்ற கேள்விகள் அணிவகுத்து நிற்கும், அவளுக்குத் தெரியாதே இது கணவனின் சம்பாத்தியம் என்று. இருந்தும் அவர்கள் பேசும்பொழுது குறுக்கே எதுவும் பேச மாட்டாள். அவர்கள் வாயைத் திறப்பதே அறிவுரைக்குத் தான். அப்பொழுதாவது பேசட்டும் பாவம் என்ற உயரிய மனப்பான்மை அவளுக்கு. அதோடு அவளுடைய கணவன் அவர்களிடம் பேசாமல் இருந்ததன் பரம ரகசியமும் அவளுக்கு இப்பொழுது தெளிவாக விளங்கியது.

அதன்பிறகு, விசா முதலிய பிராஸஸ் எல்லாம் முடிந்து ரோகிணி தன் கணவன் சந்திரனிடம் இணையத் தனியாக அமெரிக்கா புறப்பட்டாள். அவன் வந்து அழைத்துச் செல்ல முடியாது என்பது முன்பே அறிந்ததுதான். இருப்பினும் மனம் முரண்டு பிடித்தது. ஒருவித பயமும் கூட, அவ்வளவு தூரம்? அதுவும் தனியாக? தன்னை அதிகம் தயார்ப்படுத்தித் தான் அந்த பயணத்தை எதிர்கொண்டாள்.

அவளுடைய ஆருயிர் தோழிகளும் விமான நிலையம் வரை வந்து வழியனுப்பி வைத்தனர். நண்பர்கள் இணையும் பொழுது கேலிகளுக்கா பஞ்சம். அவளை இலகுவாக்கித் தான் விமானத்தில் ஏற்றினர்.

கோமதி கார்த்திகாவிடம், “அவனவன் ஊட்டி, கொடைக்கானல் ஹனிமூன் போகக் கூட முடியாமல் திண்டாடுகிறான். நம்ம ராகி சேமியா பார்த்தியாடி. பெரிய ஆள்! அமெரிக்காவுக்குத் தான் ஹனிமூன் போவாங்க…” என்று கிண்டல் செய்ய,

அதற்கு கார்த்திகாவோ, “ஏய்! கோமாதா, என்னடி ஹனிமூன்னு சின்ன வட்டத்துக்குள்ள ராகியை அடைக்கிற. அவ காலம் பூரா குத்துவிளக்கு ஏத்தறது, கூட்டி பெருக்கிறது… ஐயோ! சாரிடி” என்று கன்னத்தில் போட்டபடி, “குடும்பம் நடத்தறது எல்லாமே அங்க தான்” என்றாள் மேலும் கேலியாக.

ரோகிணியோ முகத்தைப் பாவமாக வைத்து, “போதும்டி விட்டுடுங்க” என கெஞ்ச, அதனைக் கேட்கும் நிலையில் அவர்கள் இல்லை. கார்த்திகா அவளிடம், “அங்க போனதும் பத்திரமா போயிட்டேன்னு போன் பண்ணுடி” என்க, அதற்குக் கோமதியோ, “ஏய் குருத்து! அங்க போனா, மேடம் புல்ல்ல்… பிஸிடி, போனெல்லாம் பல மாசம் கழித்துத் தான் வரும்” என்று மேலும் வம்பு செய்தாள். கேலியும் கிண்டலுமாகக் கழிந்த பொழுதில் அவள் இறுக்கம் தளர்ந்திருந்தது என்னவோ உண்மை.

திருமதி. சந்திரனாக, கணவனைச் சார்ந்து, அவன் நிழலில் வாழ்வதற்கென்று… தெரியாத நாடு, புரியாத மொழி, அந்நிய பழக்கவழக்கங்கள் கொண்ட நாட்டிற்கு அவனை மட்டுமே நம்பி தனது பயணத்தை தொடங்கினாள். அனைத்து பெண்களைப் போன்று எண்ணற்ற கனவுகளுடன் மகிழ்வோடு அவர்கள் திருமண வாழ்வை எதிர்கொள்ளும் அந்த பூம்பாவைப் பெறப்போவது என்னவோ?

Advertisement