Advertisement

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 15

தன்னை மறந்து உறங்குவதென்பது மிகப்பெரிய வரம். சந்திரனும் தன் மனைவியின் இனிய நினைவுகளில் கண் அயர்ந்திருந்தான். மாலை வரை எந்த தொந்தரவுமின்றி தொடர்ந்த அவனது உறக்கத்தை, கைப்பேசியின் சிணுங்கல் கலைத்தது.

அர்ஜுன் தான் அழைத்திருந்தான். இருவருக்குள்ளும் மிக ஆழமான நட்பு இல்லையென்றாலும், நல்ல நண்பர்கள் தான். அந்த நட்பின் அடிப்படையில் நண்பனுக்கு சில விஷயங்களை உணர்த்த வேண்டும் என்று அர்ஜுன் எண்ணிக் கொண்டிருக்கிறான். உண்மையிலேயே அதற்கான நேரம் அமையவில்லை. அதோடு எப்படித் தொடங்க என்றும் அவனுக்குத் தெரியவில்லை.

சந்திரனுக்கு திருமணம் முடிந்த பொழுதே லுனாவுடனான தொடர்பை முடித்திருப்பான் என்று அர்ஜுன் நினைத்திருந்தான். ஆனால், ரவியின் மகள் ரித்திகாவின் பிறந்தநாள் விழாவில் இருவரையும் ஒன்றாகப் பார்த்த அர்ஜுனுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி. அவன் மனம் ரோகிணிக்காக வருந்தியது. அர்ஜுனே அதிர்கையில், ரோகிணியின் நிலையைச் சொல்லவும் வேண்டுமோ?

அதுகுறித்து இரண்டு, மூன்று தினங்களிலேயே சந்திரனிடம் பேச முற்பட்டான். ஆனால், அப்பொழுது இருந்த சந்திரனின் முக தெளிவும், அவனது தெளிவான பேச்சும்… கணவன், மனைவிக்குள் எந்தவித சுணக்கங்களும் இல்லை எனத் தெளிவாக உணர்த்தியிருக்க, மேற்கொண்டு அவனால் எதுவும் தொடர முடியவில்லை. ஆனால், அர்ஜுன் வார்த்தைகளால் சொல்ல விரும்பிய விஷயங்களை, உணர்த்த விரும்பிய விஷயங்களை அவன் தன்னையும் அறியாமல் அவன் செய்கையாலேயே உணர்த்தப்போகிறான் என்பதை அவன் அப்பொழுது அறிந்திருக்கவில்லை.

அரைத்தூக்கத்தில் கைப்பேசி அழைப்பை ஏற்ற சந்திரன், “ஹாய் அர்ஜுன், ஹௌ ஆர் யூ?” என்று தொடங்க, “பைன் டா… ரோகிணி எப்படி இருக்காங்க?” என்றான் அர்ஜுன்.

“அர்ஜுன் முதல்ல என்னைய பத்தி விசாரிக்கணும் டா” என்று கேலியாகப் பதிலளித்த சந்திரனுக்கு நண்பனின் செய்கையை நினைத்துப் புன்னகை பூத்தது. பிறகு மனைவியின் நலம் குறித்த கேள்வியால் சட்டென புன்னகை மறைய, “இன்னும் நார்மல் ஆகலைப் போல டா. அவங்க அம்மாவை ரொம்ப மிஸ் பண்ணறா” என வருத்தமாகப் பதில் தந்தான்.

நண்பனின் வருத்தம் புரிந்தாலும், அர்ஜுனுக்கு அவனது செய்கை பிடிக்காமல், “ஏன்டா அவங்கள தனியா விட்டுட்டு வந்த?” எனச் சிடுசிடுப்பாய் கேட்டான். அர்ஜுனுக்குச் சந்திரன் சிகாகோவிற்குத் தனியாக வந்ததில் துளியும் உடன்பாடில்லை. ரோகிணி வர மறுக்கிறாள் என்பது அவனுக்கும் தெரியாதல்லவா?

‘ஹ்ம்ம் எனக்கு மட்டும் ஆசையாடா? அவகிட்ட காலையில கூட கேட்டேன். அதுக்கு அவ சொல்லறா இங்கே வந்தும் தனியா தான் இருக்க போறாளாம்’ என மெல்லிய கோபத்தோடு மனதோடு சந்திரன் பேசிக்கொள்ள, அர்ஜுன் சந்திரனுடைய மௌனத்தில் குழப்பமானான்.

“சந்திரா…?” என அவனது இருப்பை அர்ஜுன் உறுதி செய்ய, “ஹ்ம்ம் சொல்லு டா” என்றான் தன் நினைவிலிருந்து மீண்டு.

“உன் பர்சனல் பேசறேன்னு தப்பா எடுக்காத, உங்களுக்குள்ள எதுவும் சண்டை இல்லையே! ரோகிணி உன்மேல கோபமா எதுவும் இல்லையே?” என அர்ஜுன் சிறு தயக்கத்துடன் கேட்க, இப்பொழுது சந்திரனுக்கும் அந்த சந்தேகம் வந்து விட்டது. “ஏன்டா கோபப்பட்டா என்ன பண்ணுவாங்க?” என அவனிடமே திரும்பி கேட்டான். உண்மையில் அவனுக்கு அது தெரியவில்லை தான், அதனால் தான் கேட்டிருந்தான்.

சந்திரன் அப்பாவியாய் கேட்ட பாவனையில் சிரித்து விட்டவன், “ சமாதானம் செய்ய கால்ல கூட விழ வேண்டி இருக்கும்டா. அதுலயும் முகம் கொடுத்து கூட பேசாம சுத்துவாங்க பாரு, நொந்தே போயிடும்” என்றான் தன் மனைவி ரேகாவை மனதில் நினைத்து மெல்லிய புன்னகையுடன்.

“ஐயோ! செம டிபிகல்ட் போலயே!” என அர்ஜுனுக்காகச் சந்திரன் கவலை கொள்ள, “எனக்கு முன்னாடி உனக்குக் கல்யாணம் ஆச்சு. உனக்குத் தெரியாததா?” என்று அவனை வாரிய அர்ஜுன், பிறகு, “இப்போ எனக்குக் கூட அப்படிப்பட்ட கஷ்டம் வரப்போகுது டா. நீ கொஞ்சம் அதுல இருந்து காப்பாத்த முடியுமா?” என்றான் சந்திரனிடம்.

“என்னடா இவ்வளவு பில்டப் தர? என்ன வேணும்?” எனச் சந்திரன் கேட்க, தன் மனைவிக்கு நாளை பிறந்தநாள் இருப்பதையும், இது திருமணம் முடிந்து வரும் முதல் பிறந்தநாள் என்பதையும், அதற்காக சிறப்பாகப் பரிசு வாங்க வேண்டும், ஆனால், இன்று வேலை சற்று அதிகம் என்பது குறித்தும் கூறி, எனக்காக ஒரு புடவை வாங்கி வந்து தருகிறாயா? என்று கேட்க, சந்திரனுக்கு மறுக்கவே தோன்றவில்லை.

சந்திரன் ஒப்புக்கொண்டதும் அவனுக்கு அத்தனை சந்தோசம். என்ன நிறம் வேண்டும்? என்ன டிசைன் வேண்டும்? என்ன மெட்டீரியல் வேண்டும்? எந்த கடையில் புடவை வாங்க வேண்டும்? என்று அனைத்தையும் அர்ஜுன் சொல்ல, “எப்படிடா?” எனச் சந்திரன் வியந்தே விட்டான்.

“கல்யாணம் ஆகி நாலு மாசம் ஆகுது டா. அவளோட டேஸ்ட், என்ன புடிக்கும், அவளுக்கு எது பொருந்தும் இது கூடவா தெரியாது” எனப் பதில் கூற, “ஓ…” என்று உள்வாங்கியவனுக்கு தன் மனைவி குறித்து எதுவுமே தெரியவில்லையே என்னும் பாரம் புதிதாய் ஏறியது.

அர்ஜுன் பேசும்பொழுதே, ‘தன் மனைவியும் இங்கே கிட்டத்தட்ட ஒரு வருடம் இருந்தாளே! அவளுக்கு எப்பொழுது பிறந்த நாள் வந்தது? நமக்குப் பிடித்த ஆடை வகைகளை அவளிடம் சொல்லி, அணிய சொல்லியிருக்கிறோம். ஆனால், அவளுக்கு விருப்பமான ஆடை எது?’ என விடையில்லா பல கேள்விகள் அணிவகுத்து நிற்க, ரோகிணி கூறிய தனிமையின் அர்த்தம் இப்பொழுது புரிவது போல இருந்தது. அதோடு இவன் நண்பர்களோடு சேர்ந்து செய்த வேலைகளை அவளைத் தனியாகச் செய்ய சொல்லிக் கேட்டிருக்கிறான் என்பதை நினைக்க அவமானமாய் இருந்தது. ‘யார், யாரிடமோ நட்பை வளர்த்து விட்டு… மனைவியிடம் நட்பைத் தொடங்காது விட்டுவிட்டோமே! அவளுக்குத் தனிமை உணர்வு வரும்வரை கொண்டு சென்று விட்டோமே!’ எனச் சந்திரனின் மனம் புதிதாய் கவலை கொண்டது.

ரோகிணி அருகினில் மட்டும் தான் இல்லை. ஆனால், அவள் கணவனை முழுதும் ஆக்கிரமித்திருக்கிறாள். பிரிவை விடச் சிறந்த தண்டனை எதுவும் இல்லை. ஆனால், இங்கே தண்டனையைக் கொடுத்தவளும் நிம்மதியாக இல்லை, அனுபவிப்பவனும் நிம்மதியாய் இல்லை, என்ன விதியோ! மனம் நோகும், வருந்தும், துயரைச் சுமக்கும் விதி.

மனைவியின் நினைவில் மூழ்கினால் மீள்வது கடினம் என்று உணர்ந்த சந்திரன், அதிலிருந்து வெளியில் வந்து, நண்பன் கூறியபடி புடவையை வாங்க ‘மெக்னிபிஷண்ட் மைல்’ பகுதிக்குச் செல்லலாம் என்று தீர்மானித்தான். எதிலிருந்து மீண்டாலும், இந்த ஒரு வருடத்தில் சொல்லி கொள்ளும்படி அவளுக்காக எதையுமே செய்ததில்லையோ என மனம் தவிப்பதை நிறுத்தவே முடியவில்லை. அதிலும் அவளது பிறந்ததினம்? அது எப்பொழுது என்று தெரிந்தே ஆக வேண்டும் என மனம் ஏங்கியது. அவனுடைய பிறந்ததினத்தைக் கூடத்தான் அவளோடு செலவழிக்கவில்லை என்பது இன்னும் நினைவில் வரவில்லை போலும். அவளை சிறுக சிறுக சிதைத்ததைப் போல இவனும் சிறுக சிறுக தான் சிதைவானோ என்னவோ?

‘மெக்னிபிஷண்ட் மைல்’ பகுதியில் அர்ஜுன் கூறிய கடையைக் கண்டறிந்து சென்றவனுக்கு, மனதிற்குள் ஒரே புன்னகை. ‘நாளே மாசத்துல அவன் பொண்டாட்டி, அர்ஜுனைக் கடை கடையா சுத்த விட்டிருக்கும் போலயே! ரோவும் இருக்காளே!’ என்று எண்ணியவனுக்கு யார் உணர்த்துவது அவள் எங்காவது அழைத்துச் செல்லக் கேட்டால், அவளைக் கீழாகப் பார்த்து, கீழாகப் பேசி மறுமுறை கேட்க வேண்டும் என்ற எண்ணம் வராத அளவு நடந்து கொண்டான் என்று.

துணிக்கடையில், அர்ஜுன் கூறிய விவரங்களைக் கூறி, அது மட்டும் தான் வேண்டும் என்று அழும்பு செய்து, அந்த விற்பனைப் பெண்ணை ஒரு வழி ஆக்கிக் கொண்டிருந்தான் சந்திரன்.

பொதுவாக விற்பனையாளர்களிடம் ஒரு கணிப்பு இருக்கும். எந்த உடையைப் பார்த்ததும், வாடிக்கையாளர்கள் விழி விரித்து கண்களில் ஆசையை வெளிப்படுத்துகிறார்களோ அதை அவர்கள் நிச்சயம் வாங்கி விடுவார்கள் என்று பொய்த்துப் போகாத கணிப்பு ஒன்று இருக்கும். பொதுவாகக் கடைவீதி பகுதிகளில் நடக்கும்பொழுது, “வாங்க! வாங்க! பாக்கறதுக்கு காசில்லை. சும்மா வந்து பாருங்க. வாங்கனும்ன்னு அவசியம் இல்லை” என நமது ஊர்களில் கூறி அழைப்பவர்களின் ஒரே நம்பிக்கை வாடிக்கையாளர்களது விழி பேசும் பாஷை மட்டும் தான்.

ஆனால், இங்குச் சந்திரனோ எதையும் ஆர்வமாய் பார்க்காமல், மனதிற்குள் ஒரு உருவகம் கொண்டு வந்து, அது மட்டும் தான் வேண்டும் என்று அடமாய் நிற்க, அந்த விற்பனைப்பெண் களைப்பானது என்னவோ உண்மை. இருந்தும் அந்த பெண் முகம் சுளிக்காது புடவைகளைக் காட்ட, அவனது கைப்பேசி சிணுங்கியது. மீண்டும் அர்ஜுன் தான்.

அர்ஜுனிடம் பேசி, “என்னடா வேலை இது?” என அவனைக் கடிந்து, சில நிமிடங்கள் வீடியோ கால் வரமுடியுமா என்று கேட்டு, அங்கிருந்த குவியலை எல்லாம் காட்ட… அவன் கூறி அனுப்பிய கடல் நீல வர்ண குவியலிலிருந்த ஒரு ஆடையை அர்ஜூனே தேர்வு செய்தான். அர்ஜுன் உள்ளே நுழைந்ததும் தான் விற்பனைப் பெண்ணுக்கு மூச்சே வந்தது.

பேசி முடித்து அர்ஜுன் வைத்துவிட, கைப்பேசியை அருகிலிருந்த டேபிளில் சந்திரன் வைத்தான். ஸ்கிரீன் சேவரில் அழகிய புன்னகையுடன் ரோகிணி மிளிர சந்திரனின் விழிகள் சில நொடிகள் அவளில் நிலைத்தது. அவன் பார்வை சென்ற இடத்தை கவனித்த விற்பனைப்பெண் ரோகிணியின் புகைப்படத்தைக் கவனித்து, தன் நினைவடுக்குகளை மீட்க முயற்சிக்க, அவள் முகம் யோசனையைக் காட்டியது. சந்திரன் அவளது முகபாவனையைப் பார்த்து, “ஹே சாரி. ரொம்ப தொல்லை தந்துட்டனா? இந்த புடவை செலக்ட் பண்ணறதுக்கு நான் புதுசு. சோ ஒன்னும் தெரியலை. அதான்” என்று விளக்கம் தந்தான்.

“இல்லை. இல்லை. இது என் வேலை. விரும்பி தான் செய்யறேன். இன்னும் கூட காட்டுவேன்” என புன்னகையுடன் பதில் கூறிய பெண், மேலும் சிந்தனையோடே, “உங்க ஸ்கிரீன் சேவர்ல இருக்கறவங்களை பத்தி யோசிச்சேன்” என்றாள் அதே புன்னகையோடு.

“என்னோட வைஃப்” என்று கர்வமாகக் கூறியவன், “அழகா இருக்கிறா தான!” என இன்னும் கர்வமாய் கேட்டான். முகம் கூட அத்தனை மென்மை, அத்தனை வசீகரம்.

“ஓ உங்க வைஃப்? செம ஸ்வீட் அவங்க. ஒரே ஒருமுறை தான் பார்த்தேன். மறக்கவே முடியாது. உங்களுக்கு அப்படியே ஆஃபோசிட். நீங்க இவ்வளவு பார்த்தும் என்ன வாங்கன்னு யோசிக்கறீங்க, எதுவுமே பிடிக்கலை. ஆனா, அவங்க பார்வையாலேயே அலசி அவ்வளவு அழகா ஒரு புடவையை எடுத்தாங்க. அவங்களுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. ஆனா, வாங்கவே மாட்டேன்னுட்டாங்க” என்று ஆர்வமாய் தொடங்கியவள், சோர்ந்து முடித்தாள்.

அதெல்லாம் சந்திரனின் நினைவில் பதியவில்லை. ஏன் பிடித்திருந்தும் ரோ வாங்கவில்லை? என மனம் அதிலேயே நிற்க, மிகுந்த குழப்பமானான். அவனையும் அறியாமல் அவன் இதழ்கள், “இன்னும் அந்த புடவை இருக்கா?” எனக் கேட்டிருந்தன.

அவனை விசித்திரமாகப் பார்த்துவிட்டு, “இல்லை அவங்க வந்து மூணு, நாலு மாசம் இருக்கும். அந்த புடவை அப்பவே வித்துடுச்சு” என்றாள் அந்த பணிப்பெண். “அந்த புடவை உங்களுக்கு நினைவிருக்கா? ஆர்டர் கொடுத்தா மறுபடி தருவீங்களா?” எனச் சந்திரன் மீண்டும் கேட்க,

அந்த பெண்ணுக்கு அத்தனை ஆச்சரியம். மனைவி ஆசைப்பட்டால் என்பதற்காக இத்தனை தூரம் பார்க்கிறாரா என்றிருந்தது. ஆனால், அவனுக்குத் துளியும் உதவ முடியாத நிலை அவளுடையது. “சாரி, அவங்க என் மனசுல நின்ன அளவு அந்த புடவை நிக்கலை. என்ன நிறம்ன்னு கூட மறந்துடுச்சு” என பாவமாய் அந்த பெண் பதில் கூற, சந்திரனுக்கு முகம் தெளியவே இல்லை. தன் மனைவி ஆசைப் பட்டும் ஒன்றை வாங்காமல் இருப்பதா? என்றிருந்தது. கொடுத்த பணம் தீர்ந்திருந்தாலும் கிரெடிட் கார்டில் வாங்கி இருக்க வேண்டியது தானே? என்று மனம் குழம்பியது.

அதன்பிறகு, தெளிவில்லாமல் பயணித்து மருத்துவமனையை அடைந்து அர்ஜுனிடம் ரேகாவிற்கு வாங்கிய புடவையைக் கொடுத்தான். “அர்ஜுன், அப்பப்ப எங்களுக்குள்ள சண்டை எதுவும் இல்லையா கேட்டயே! ஏன்?” என சம்மந்தமே இல்லாமல் சந்திரன் கேட்க, அர்ஜுன் குழப்பமானான்.

சமாளித்து என்ன செய்யப் போகிறோம். நாமே இதைப்பற்றிப் பேச நினைத்தோமே, அதற்கான வாய்ப்பு தானாக அமையும் போது ஏன் விடவேண்டும் என்று எண்ணியவனாய், “லுனா விஷயம்? அதை எப்படிடா தங்கச்சி சாதாரணமா எடுத்துப்பா? அதான் கேட்டேன். ரேகாவா இருந்திருந்தா என்னை விட்டுட்டே போயிருப்பா? ஆனா, தங்கச்சி உண்மை தெரிஞ்சு எவ்வளவு வேதனை பட்டா? இருந்தும் இதுவரை உங்களுக்குள்ள சண்டை வரலைன்னா, அவ மாணிக்கம் டா. அவ இருக்கும்போது, கண்ட சகவாசம் உனக்குத் தேவையா? இந்த ஊர் கலாச்சாரப்படி கூட, மனைவி வந்துட்டா லிவ்விங், fwb எல்லாத்தையும் ட்ராப் பண்ணிடறாங்க. உன் குணம் மட்டும் ஏன் இப்படி ஆச்சு டா?” அவனை முன்பிருந்தே தெரியும் ஆதலால், தாங்க மாட்டாமல் கேட்டே விட்டான்.

சந்திரனுக்கு நொடியில் பல புதிர்களுக்கு விடை கிடைக்க, நண்பனை இறுக அணைத்தவன், “மச்சான்! அப்ப என் ரோவுக்கு என்னைப் பிடிக்காதா? என்னை வேண்டாம் சொல்லிடுவாளா? என்னை விட்டு போயிடுவாளா?” எனக் கலக்கமாகக் கேட்டவனின் இதயத்துடிப்பு அவனது பயத்தைத் தெளிவாக பறைசாற்றியதில் அர்ஜுன் ஸ்தம்பித்தான்.

Advertisement