Advertisement

அத்தியாயம் 1

               மிகச்சிறந்த பேஷன் டெக்னாலஜி கல்லூரி அதில் பேஷன் டிசைனிங், இன்டீரியர் டிசைனிங், டெக்ஸ்டைல் மேனேஜ்மென்ட் என பல்வேறு துறைகளில் மிகச்சிறந்த படிப்புகளை கொண்ட பெரிய வளாகம் அது அங்கு தான் மகிமா மூன்றாமாண்டு மாணவியாக இருக்கிறாள். பேஷன் டெக்னாலஜி எடுத்து படித்துக் கொண்டிருப்பவள்., பார்க்கும் போதே துருதுரு கண்களோடு எப்பொழுதும் குறும்பாக பேசி அனைவரின் ரசனையும் தன் பக்கம் ஈர்த்து வைப்பவள் மகிமா.

         பார்க்கும் அனைவருக்கும் அவளை பிடித்தாலும், அவளை பிடிக்காத சிலரும் அக்கல்லூரியில் உண்டு அதில் வகுப்பில் ஒன்றாக படிக்கும் இரு பெண்களும்., அவளுக்கு சீனியர் மாணவராக இருந்து இப்பொழுது அவளுக்கு வகுப்பெடுக்கும் ஒருவனும் மட்டுமே, அவளை கண்டால் ஆகாமல் போனவர்கள், அவள் பேஷன் டெக்னாலஜி முதல் வருடம் அடியெடுத்து வைத்தபோது பி.ஜி ஃபேஷன் டெக்னாலஜி படித்துக் கொண்டிருந்தவன். கடைசி வருடத்தில் இருந்தவன் அவனது படிப்பும் திறமையும் அவனது டிசைனிங் புதுமையும் அக்கல்லூரியில் அவனை வேலை செய்ய துறையின் தலைவர் அவனை இருக்க வைத்திருந்தார்.

      அவன் யூ.ஜி படித்தது டெக்ஸ்டைல் மேனேஜ்மென்ட்., அவனுக்கும் இன்னும் இத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். என்ற ஒரே காரணத்திற்காக மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க சம்மதித்து இருந்தான்.

       மகிமாவின் வகுப்பிற்கு அவன் எப்பொழுதும் வகுப்பெடுக்க வருவதுண்டு., ஏனோ அவனுக்கு மகிமா வை கண்டால் ஆகவே ஆகாது. மகிமா இரண்டாவது வருடம் படிக்கும்போது தான் அவளுக்கு வகுப்பு எடுக்க வர தொடங்கியிருந்தான். அவளது துருதுரு அல்லது எப்பொழுதும் ஏதாவது குறும்பு செய்யும் அவளது குணமோ ஏதோ ஒன்று அவனுக்கு பிடிக்காமல் போக வகுப்பிற்கு வரும் போதெல்லாம்., அவள் அவனிடம் தண்டனை பெறும் நிலையிலேயே  இருந்தாள். ஏதாவது ஒரு காரணத்தில் ஒன்று வகுப்பில் எழுந்து நிற்பாள் . அவன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தெரிந்தாலும் பதில் சொன்னாலும் அவன் அதிலிருந்து துருவித்துருவி கேட்கும் கேள்விகளுக்கு விடை தெரியாமல் நிறைய நேரங்களில் அவன் வகுப்பு முழுவதும் நிற்கும் படியான தண்டனை கிடைக்கும் ., இல்லையென்றால் வகுப்பை விட்டு வெளியே அனுப்பி விடுவான். இதையெல்லாம் அறிந்த பிறகு அவன் வகுப்பு என்றாலே ஒன்று பாடத்தில் மிக கவனமாக இருப்பாள் இல்லையெனில் அவன் வருவதற்கு முன்னால் இவள் எழுந்து வெளியே ஓடி விடுவாள்.

         இப்படியாக தான் அவனுக்கும் இவளுக்கும் கண்ணாம்பூச்சி ஆட்டம் நடந்து கொண்டிருந்தது. அவன் நிரஞ்சன் பெரும் தொழில் செய்யும் தொழில் அதிபர் குடும்பத்தில் இருந்து வந்தவன்.  தனியே தொழில் தொடங்கி பெரும் தொழில் சாம்ராஜ்யத்தை தொடங்க வேண்டும்., டெக்ஸ்டைல் பிசினஸில் தனக்கென தனி முத்திரை பதிக்க வேண்டும் என்ற ஆசையோடு இப் படிப்பை தேர்ந்தெடுத்து இதனுள் நுழைந்தவன். அவள் ஓரளவு நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்தவள் தான், ஆனால் கட்டுப்பாடு நிறைந்த கூட்டுக் குடும்பத்தில் இருந்து வந்தவள் மகிமா அவளுக்கு வேலை தொழில் என்றெல்லாம் பெரிய எண்ணம் எதுவும் இல்லை., ஆனாலும் கூட்டுக்குடும்பத்தில் படிப்பிற்கு பிறகு திருமணம் என்ற சூழ்நிலை தான் அவளது வீட்டை பொருத்தவரை., அவளுக்கு சிறுவயதிலிருந்தே வரைவதில் அதிக ஆர்வம் இருந்ததால் இப்படி படிக்க வேண்டுமென அடம் பிடித்த ஒரே காரணத்திற்காக தமிழ்நாட்டை விட்டு வெளியே வந்திருந்தால்., படிப்பதற்காக அவனும் அப்படித்தான்..

    இரண்டாம் வருட தொடக்கத்தில் அவன் வகுப்பு எடுக்க வரும்போது ஒருமுறை அவன் ஏதோ முக்கியமான வகுப்பில் துணிகள் பற்றியும் , அதன் தரம் அறிவது பற்றியும் , அதில் எந்த வகை துணியில் எவ்வாறெல்லாம் வடிவமைக்க முடியும் என்பதை பற்றியும், மும்மரமாக சொல்லிக் கொண்டிருக்கும் போது இவள் ஏதோ விளையாட்டுத்தனமாக வரைந்து கொண்டிருக்க முதன் முதலாக அவனுக்கு அவள் மீது கோபம் வந்தது., அன்று எழுப்பிவிட்டு கேள்வி கேட்கத் தொடங்கியவன்  தான்., அதன் பிறகு எப்போதும் அவளை எழுப்பி விட்டு கேள்வி கேட்பது வழக்கமாகிவிட்டது..

  மூன்றாம் வருடம் பாதி தாண்டிய பிறகும் கூட இருவருக்கும் பிரச்சினை தான் .,அவன் எடுக்கும் பாடங்களை  இவள்  நல்ல படியாகவே பரீட்சை எல்லாம் எழுதினாலும் ஏதாவது காரணம் சொல்லி அவளது மதிப்பெண்ணை குறைப்பது அவனுக்கு வாடிக்கை., அதுமட்டுமல்லாமல் அவள் அடிக்கடி வகுப்பிற்கு வெளியே நிற்பதும் வழமை ஆகிவிட்டது  காரணம் ஒன்று., மற்றொன்று அவன் வகுப்பை  பாதி  நாட்களில் இவள் புறக்கணித்து விட்டு வெளியே செல்வது., எப்படியும் வந்து எழுப்பி விட தான் போகிறான் . அப்புறம் எதுக்கு கிளாஸ்ல உட்கார வேண்டும் என்ற எண்ணத்தோடு வெளியே சென்று விடுவாள்..

    அன்றும் அப்படித்தான் அவள் வகுப்பு  முடிவின் கடைசி ஒரு மணி நேரம் அவனுடைய வகுப்பாக இருந்தது.,  எப்படியும் வந்து எழுப்பி விட தான் போகிறான் என்ற எண்ணத்தோடு அவன் வருவதற்கு முன் தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு ஹாஸ்டலுக்கு செல்வதாக தோழிகளிடம் சொல்லி விட்டு வெளியே வந்துவிட்டாள்.,

     வெளியிலிருந்து வகுப்பிற்கு வந்தவன் பாடத்தை நடத்திக் கொண்டிருக்கும் போதே அவள் இடத்தை பார்க்க அவளிடத்தில் அவள் இல்லாமல் இருப்பது., இவனுக்கு அவள் எப்பொழுதும் தன்னை அவமானப் படுத்துவதாக உணர்ந்தான்.

      எனவே அருகில் இருக்கும் அவளது அறை தோழியை எழுப்பி “மகிமா எங்கே..?  பாதி நாள் வகுப்பிற்கு வருவதில்லை வந்தாலும் ஒழுங்காக கவனிப்பதில்லை., இவ எல்லாம் எதுக்கு படிக்க வர்றா” என்று ஏக வசனத்தில் திட்டவும்.,

       அவளது தோழிக்கு தான் என்னவோ போல் இருந்தது. “இல்ல சார் அவளுக்கு தலை வலி அதனால தான் ஹாஸ்டல் போய்ட்டா” என்று சொல்லி சமாளித்துக் கொண்டிருந்தாள்.,

         ஆனால் அவனோ “அதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை” அவளைப் பற்றி தெரியும் பாதி நாள் வெளியே இருப்பவள்., ஒன்று இவன் வகுப்பு நேரங்களில் கேன்டீனில் இருப்பாள்.  இல்லையென்றால் ஏதாவது மரத்தடியில் அமர்ந்து இருப்பாள்., அப்படியே வகுப்பில் இருந்தாலும் திட்டு வாங்கி எழுந்து நிற்கும் சூழ்நிலையில் நிற்பாள்., இல்லையெனில் வகுப்பை விட்டு வெளியே சென்றிருப்பாள்.  இப்படியே போக அவனுக்கு அவள் மீது கோபம் தான் ஏறிக் கொண்டு சென்றது.

“ பிள்ளையா வளர்த்து வச்சிருக்காங்க பிசாசு மாதிரி வளர்த்து விட்டிருக்காங்க., என் உயிரை வாங்குவதற்கு ன்னு.,  இந்த கிளாஸ்ல வந்து உட்கார்ந்து இருக்கு” என்று திட்டிக்கொண்டே அவன் வேலையான வகுப்பை தொடங்கினான்.  இருந்தாலும் அம் மாணவிடம் சொல்லி தான் அனுப்பினான்.,  “நாளை காலை பிரின்சிபாலிடம் கம்ப்ளைன்ட் போயிருக்கும்.,  அவளை வந்து பார்க்கச் சொல்” என்று சொல்லி விட்டு போய்விட்டான்.,

           ஹாஸ்டலுக்கு வந்தவள்.. “ஏய் லூசு பக்கி கிளாஸ்ல இருந்து பேசாம வந்துட்ட., நிரஞ்சன் சார் வந்து உன்னய பத்தி என்ட்ட கேட்டாரு”.,

      “அவர் எதுக்கு என்னைய பத்தி கேக்குறாரு.,  என்ன பார்த்தாலே மனுஷனுக்கு ஆகாது, என்ன பார்த்தால் எப்படித்தான் தெரியுமோ, தெரியலப்பா., தலையில் கொம்பு முளைச்சிருக்கா என்ன.? எதுக்கு என்ன பார்த்தாலே டென்ஷனாகி எழுப்பிவிட்டு கேள்வி கேட்கிறதே பொழப்பா வச்சிருக்காரு.,  கிட்டத்தட்ட அவர் கிளாஸ் எடுக்க ஆரம்பித்து ரெண்டு வருஷம் ஆகப்போகுது இன்னும்  இப்படித்தான் பண்றாங்க”.

        “நான் என்ன படிக்காம இருக்கேனா இல்ல., மார்க் எடுக்காம  இருக்கேனா., எப்ப பாரு என்ன  வைத்து கருத்து கூறுவது தான் இந்த மனுஷனுக்கு சந்தோஷமே”  என்று இவள் சொல்லவும்..,

          “பாரு டி எப்ப பார்த்தாலும் அவர் என்னை எழுப்பி விட்டுட்டு இருக்காரு என்று சொல்லும் போதே, எதுக்கு எழுப்பி விட்டு ., என்னை  கண்டாளே ஏதோ இரிடேட் ஆகி., நானும் டென்ஷன் ஆகி., எதுக்கு தேவை இல்லாத பிரச்சனை., எனக்குப் பிடிக்கிறது இல்ல அதனால தான் நானும் வெளியே வந்தேன்”.

        “தெரிஞ்சது தானே”…. விடுடி

     “அவர் வந்த்தும் எப்படியும் எழுப்பி விடுவார் இல்லை., அடிக்கடி ஏதாவது காரணம் சொல்லி கொஸ்டின் கேப்பாருஇல்லன்னா., நீ சொன்ன பேச்சு கேட்க மாட்டேங்கிற., நீ பக்கத்துல உள்ள பொண்ணுட்ட கதை பேசுறேன்னு ஏதாவது காரணம் சொல்லி என்ன கிளாஸ் விட்டு வெளியே அனுப்புவாறு., அப்புறம் எதுக்கு நான் அங்கு உட்கார்ந்து இருக்கனும்”., அதனால கிளம்பி வந்துட்டேன்.

    “லூசு மாதிரி பேசாத மகி…  நாளைக்கு அந்த மனுஷன் பிரின்சி கிட்ட கம்ப்ளைன்ட் கொடுப்பாராம்.,  நீ போய் பார்க்கணும் னு சொல்லிட்டு போயிருக்கார்”.

             “ரொம்ப நல்லதா போச்சு., பிரின்சி ட்ட போய் பேசுறது, இந்த ஆள் கிட்ட பேசுறதுக்கு எவ்வளவோ மேல்” …,

         “புரிஞ்சிக்காம பேசுற மகி., பிரச்சனை ஆகிற கூடாது” …

                “அதுக்கெல்லாம் பயந்துகிட்டு இருக்க முடியாது., எப்பவும் இவர் வேலையே இதுதான்., என்ன பாத்தா எப்படி தெரியுது., நான் என்ன எப்பவும் ஜாலியா பேசிட்டா இருக்கேன்., எப்பவாச்சும் பேசுறேன்.  இதுல என்ன இருக்கு எப்ப பாத்தாலும் பேசுதே பேசுதே ன்னு., சொல்லிட்டே இருக்காரு.,  அவர மாதிரியே சிடு மூஞ்சி மாதிரி இருக்கணுமா., அவருக்கு பெயர் சிசி ன்னு வச்சது சரி தான்., அந்த சிசி எப்பவும் இப்படி தான் பண்ணும்”…

      “ஆமா இல்ல நான் உன்கிட்ட கேக்கனும் ன்னு நினைச்சேன் அன்னைக்கு ஒருநாள் சொன்ன இல்ல., என்கிட்ட நீனு சிசி கிளாசுக்கு வந்துச்சா இன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு கேட்ட இல்ல…, சிசி நான் என்னடி அர்த்தம்” …,

“சி சி ன்னா சிடுமூஞ்சி சிங்காரம்” என்று அர்த்தம்.

      “அடிப்பாவி இது தெரிஞ்சா இத வச்சி இந்த மனுஷன் ஒரு பெரிய பிரச்சினையே கிரியேட் பண்ணுவாரே…, நீ பேசாம விதவிதமா பெயர் வைக்க ஆரம்பிச்சுட்ட” …

     “இன்னும் பெயர் வைப்பேன் ஆனால் போனா போகுதுன்னு பார்க்கிறேன்., மத்ததெல்லாம் அந்த பெயரில் உள்ளவங்க எல்லாம் அவமானப்படுத்தக் கூடாது இல்ல அதனால தான்” …

   “நாளை காலையில பிரின்ஸி பார்க்க போகணும்., டி  நீ ஹாயா சிரிச்சு பேசிட்டு இருக்க”…

       “பிரின்சி பார்க்கிறது எல்லாம் ஒரு மேட்டரே இல்ல., போய் ஓகே சார், ஓகே சார் என்று சொல்லிட்டு வந்துட்டே இருப்பேன்…, ஆனா இந்த சிடுமூஞ்சி சிங்காரத்தை பார்க்கிறது தான் பெரிய பிரச்சினை., அந்த ஆள் கிட்ட பேசவே முடியாது., வந்தாலே என்னா வாயாடியா இருக்குறேன்னு சொல்றாரு..,  ஆனா அவரு பதிலுக்கு பதில் பேசிட்டே இருப்பாரு.,  நம்ம வாயை திறந்து ஒரு விஷயம் பேச விடுவாரா., குறுக்கே பேசாதே ம்பாரு., இந்த படிப்ப படிக்க வந்ததுக்கு பதிலா வக்கீலுக்கு படிச்சி இருந்திருக்கலாம் நல்ல சம்பாதிச்சு இருப்பாரு”…

     “அடிப்பாவி நீ பேசாம ஒன்னு ஒன்னா சொல்லுடி” அவர் காதுல கேட்கிற அன்னிக்கி நீ தொலைந்த”…

      “ஹலோ நான் பயப்படமாட்டேன் நேர்ல வந்தா கூட சொன்னாலும் சொல்லுவேன்.,  அவர் என்ன பெரிய இவரா.,  நமக்கு சீனியர்,  என்ன நம்மள விட வயசுல மூத்தவரே அந்த ஒரு மரியாதைக்கு தான் அமைதியா போய்கிட்டு இருக்கேன்., இல்ல ன்னா  டா  போட்டு திட்டிட்டு போயிருவேன்” என்று சொல்லவும்..

“ உன்ன தாண்டி  சொல்லனும்.,  அவர் கிட்ட பேசாம தான்  இருந்து பாறேன்”..

        “நாங்க கூட்டுக்குடும்பமாக எங்க பேமிலில எல்லாரும். நல்ல ஜாலியா பேசுவோம். எனக்கும் அதே பழக்கம்.,  இந்த ஆள் தனியா இருந்து பழகி இருப்பாரா இருக்கும். அதனால் தான் அவருக்கு பிடிக்காதா இருக்கும்., அவர் மட்டும் என்ன பதிலுக்கு பதில் பேசாமலா இருக்காரு., எப்பவும் லோட லோட ன்னு  பேசிட்டு தான் இருக்கிறார்..,  கிளாஸ் நடத்தும் போது பாரு,  அது யாருக்கும் தெரிய மாட்டேங்குது.,  நான் மட்டும் தான் கண்ணுக்கு தெரிவேன் போல எழுப்பி விட்டு அவர் கேட்கிற கேள்விக்கு நம்ம கரெக்ட் ஆன்சர் பண்ணா கூட.,  அதில் எப்படி வரும்  சொல்லு., அந்த கொஸ்டினுக்கு இது எப்படி வரும்., இந்த மாதிரி டிசைன் வர என்ன பண்ணனும்.,  இந்தக் கிளாத்தில் எந்த மாதிரி டிசைன் உருவாக்கணும்.,  மெட்டீரியல் எப்படி செலக்ட் பண்ணுவ., ன்னு கேட்பாரு.,  எத்தனை  தடவை  சொன்னாலும் அந்த மெட்டீரியல் உள்ள மிக்ஸ்ட் எப்படி இருக்கும்., இந்த மெட்டீரியல் மிக்ஸ்ட் எப்படி இருக்கும்., என்று கேட்பாரு  இதெல்லாம் தெரியாமலா எக்ஸாம் கிளியர் பண்றோம்.,  எத்தனை நாள் பிரக்டிகல் கிளாஸ் நடக்குது.,  இவர் தொல்லை தாங்க முடியல”..,

         “ஆத்தி நான் ஒரு கொஸ்டின் தானடி கேட்டேன்.., நீ பேசாம லொட லொட லொட பேசிக்கிட்டே போற.,  ஒருவேளை அவர் உன்னை சைட் அடிப்பதற்காக எழுப்பி விடுதாரோ”…

         “யாரு சிசி சைட் அடிக்கும்.,  போடி நீயும் உன் கண்டுபிடிப்பும்.,  திரும்பிக்கூட பார்க்காத  ஒரு சாமியார் டி அவரு உனக்கு விஷயமே தெரியாது..,  யாரையும் நிமிர்ந்தே பார்க்காது நானும் பாத்திருக்கேன்…, சீனியர் கேர்ள்ஸ் சொல்லுறத., அது மட்டுமா ஸ்டாப் ரூம்ல ஸ்டாப்ஸ் சொல்லுவாங்க.., இப்ப புதுசா வந்திருக்கிற ஒரு லேடி ஸ்டாஃபை கிண்டலுக்காக சொல்ல., இந்த மனுஷன் திரும்பியே பார்க்க மாட்டாராம்.,  சின்ன பையன் தான் ஆனா நிமிர்ந்து கூட பார்த்து பேச மாட்டேங்குறான்.,  அப்படின்னு சொல்லுவாங்க..  அதுமட்டுமில்லாம காலேஜுக்கு தெரியும் அந்த ஆளு ஒரு சாமியார் ன்னு”.,

    “இப்போ நீ என்ன சொல்ல வர்ற.., அப்படி இருக்குறவரு சைட் அடிக்க கூடாது ன்னு சொல்றியா”..,

            “போடி., நீயும் உன் கண்டுபிடிப்பும்., உன் கண்டுபிடிப்பில் தீய வைக்க”..

    “அடிப்பாவி பெங்களூரில் படிக்கிற புள்ள மாதிரியா.,  பேசுற  உன் கூட சேர்ந்து  நானும்  லோட லோட ன்னு  பேச ஆரம்பிச்சிட்டேன்..,  நீயும் அப்பப்ப கிராமத்துப் பழமொழி எல்லாம் எடுத்து விடுற நான் உன் கூட சேர்ந்து கிராமத்து பழமொழி எல்லாம் பேசிட்டு சுத்துதேன்”…

      “ஹலோ ஓவரா பண்ணக்கூடாது தெரிஞ்சுக்கோ., எங்க ஊர்ல எல்லாம் பழமொழி கரெக்டா சொல்லுவாங்க., ஒரு பழமொழி சொன்னா அதுல பத்து அர்த்தம் இருக்கும்., அது தெரியுமா இப்ப இந்த ஆளுக்கு ஆயிரம் பழமொழி சொல்லலாம்”.

       “அம்மா தாயே உன் பழமொழியை நீயே வெச்சுக்கோ., உன் பேச்சை நீயே வச்சுக்கோ தயவு செய்து  இப்ப படி.,  நாளை காலையில கண்டிப்பா நீ பிரின்சி முன்னாடி போய் நிக்கணும் பிரின்சி என்ன கேட்டாலும் ஆன்சர் பண்ற அளவுக்கு நீ பாத்துக்கோ”…

“அதெல்லாம் அழகாக சூப்பரா அன்ஸர் பண்ணி விடுவேன்.., நீ எதுக்கு பயப்படுற”…

  நன்றாக படிக்கும் மாணவி தான் மகிமா., இருந்தாலும் மறுநாள் பிரின்சி அழைத்து விட்டால் என்ன பேசவேண்டும் என்ற யோசனையோடு.,  எப்பொழுதும் வீட்டில் இருந்து வரும் அழைப்பை பேசிவிட்டு இரவு உணவை முடித்துக் கொண்டு., மீண்டும் படிக்க வந்தவளுக்கு மனதிற்குள் ஏதோ ஒரு சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது.., ஏன் நிரஞ்சனுக்கு தன்னை கண்டால் பிடிப்பதில்லை., சீனியர் என்பது போக இப்பொழுது வகுப்பில் பாடம் நடத்தினாலும் தன்னை மட்டும் ஒதுக்கி வைக்கும் அவனது குணநலன் ஏன்..? இப்படி என்ற எண்ணமும் அவளுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.., ஆனால் மற்ற தோழிகளோடு யாருடனும் இதுபோன்ற குழப்பங்களையும் மற்ற விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள மாட்டாள்., அவளுடைய சந்தோஷமும் துறுதுறுப்பும் மட்டுமே அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருக்கிறது., அவளது குடும்ப சூழ்நிலை அவளை சில விஷயங்களை அழுத்தமாக மாற்றியிருந்தது…

Advertisement