உள்ளே நுழைந்தவுடன் நேராக அறைக்குள் சென்றுவிட்டாள் தீராநதி.
“என்ன குமரா இதெல்லாம்? என்ன நடக்குது இங்க?” என்றார் கோதாவரி கோபமாய்.
“என்ன நடக்குது?” என்றான் சாதரணமாய்.
“நேத்து சென்னையில இருந்து வந்தவன், வந்த உடனே இவளைக் கூப்பிடனும்னு கிளம்பிப் போன? நீ போன நேரமென்ன? இப்போ வீட்டுக்கு வந்திருக்க நேரமென்ன?” என்றார்.
“நதியை பிக்கப்பன்னிட்டு, அப்படியே அவங்க வீட்டுக்குப் போய்ட்டு, ஒரு நாள் அங்க தங்கிட்டு இப்போ வந்தோம். இதுல என்னம்மா பிரச்சனை உங்களுக்கு?” என்றான் பொறுமையாக.
“என்ன பிரச்சனையா? அவங்க வீட்டுக்குப் போறோம்னு ஒரு வார்த்தை சொல்லலை எங்ககிட்ட. வீட்ல பெரியவங்கன்னு நாங்க எதுக்கு இருக்கோம்?” என்றார்.
“அவ ஒன்னும் தனியா போகலை, சொல்லிட்டு போக. அதுமட்டுமில்லாம நான்தான் அவளை அழைச்சுட்டு போனேன். நான் தான் உங்ககிட்ட சொல்லியிருக்கணும். சொல்லாம விட்டது என் தப்புத் தான். இனிமேல் சொல்லிட்டே கூட்டிட்டுப் போறேன் போதுமாம்மா” என்றான்.
அவனிடமிருந்து வார்த்தைகள் சற்று கோபமாய் வர, அதற்கு மேல் பேசினால் கோபத்தில் கத்துவான் என்று அவருக்குத் தெரியும். அதனால் அவனிடம் பேசி பிரயோஜனம் இல்லை என்று எண்ணியவர், அப்போதைக்கு அதை மனதிற்குள் வைத்துக் கொண்டார்.
“சரி வந்து சாப்பிடு குமரா.! அம்மா உனக்குப் பிடிச்ச மீன் குழம்பு சமைச்சு வச்சிருக்கேன்” என்றார்.
“அவர் சாப்பிட்டுட்டார்” என்றவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
“நானும் கொஞ்ச நேரம் தூங்குறேன்மா” என்றவன் அறைக்குள் சென்று விட்டான். அங்கு ஏற்கனவே நதி நல்ல உறக்கத்தில் இருக்க,
‘வர வர இந்த ரூம்குள்ள வர்றது பாகிஸ்தான் பார்டரையே கடந்து வர்ற மாதிரி இருக்கு’ என்று மனதிற்குள் எண்ணி சிரித்துக் கொண்டான். அவளின் அருகில் படுத்தவன், அவளை அணைத்தபடியே தானும் உறங்கிப் போனான்.
மாலை ஆறு மணிக்கு முழிப்பு வந்தவனுக்கு இன்னமும் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் நதியைப் பார்த்து ஆச்சர்யம்.
‘எப்பவும் இப்படி தூங்க மாட்டாளே?” என்று யோசனையாய் பார்த்தவனுக்கு அவளை எழுப்ப மனம் வரவில்லை.
எழுந்து ஒரு குளியலைப் போட்டுவிட்டு வெளியே வந்தவன்,
“அம்மா காபி” என்றான்.
அவனைப் பார்த்து முறைத்த கோதாவரி,
“ஏன் மகாராணிக்கு இன்னமும் தூக்கம் விடலையா குமரா? இதென்ன புதுப் பழக்கம், பொழுது சாயுற நேரம் தூங்குறது?” என்றார்.
“காபி குடுக்க இஷ்ட்டம்னா குடுங்க. இல்லைன்னா நானே போட்டுக்கிறேன்” என்றவன், தானே சமையலறை சென்று காபியும் போட்டுக் கொண்டு வந்தான்.
“இந்த வீட்ல நான் எதுவுமே சொல்லக் கூடாதா குமரா?” என்றார் ஆதங்கமாய்.
“நான் எப்போ அப்படி சொன்னேன்மா?” என்றவன்,
“வாரம் புல்லா வீடு, ஆபீஸ்ன்னு பம்பரமா வேலை செய்றா. ஏதோ இன்னைக்குத் தான் இப்படி அடிச்சுப் போட்ட மாதிரி தூங்குறா. தூங்கிட்டு போகட்டுமே? இதை ஒரு பிரச்சனைன்னு ஆரம்பிக்கிறிங்க?” என்றவனுக்கு காபி குடிக்கும் ஆசையே போயிருந்தது.
“இவ சரியில்லை குமரா. எதுக்கெடுத்தாலும் ஒரு குத்தம் குறை பேசிட்டே இருக்கா. அந்த பொண்ணும் அமைதியா போய்டுது. அது இவளுக்கு இன்னமும் வசதியா போய்டுச்சு. பேசாம நீ நதியை கூப்பிட்டு தனிக் குடித்தனம் போய்டு குமரா” என்றார் சங்கரன்.
“விட்டா நீங்களே அவனை அனுப்பி வச்சிடுவிங்க போலயே? ரெண்டு பையனைப் பெத்து நான் அநாதை மாதிரி தனியா இருக்கனுமா? இதுக்கா அருமை பெருமையா பிள்ளைகளை பெத்து வளர்த்தேன்” என்று ஆரம்பித்துவிட்டார்.
“அம்மா நான் இப்போ தனியா போறேன்னு சொன்னேனா? தயவு செஞ்சு ஆரம்பிக்காதிங்க. ஏற்கனவே தலை ரொம்ப வலிக்குது” என்றவனை அவன் கையில் இருந்த ஆறிப் போன காபி பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது.
கோதாவரியின் பேச்சு சத்தத்தில் ஏற்கனவே எழுந்திருந்தாள் நதி. நேற்று குமரன் ஊரில் இருந்து வந்ததில் இருந்து நடந்தவைகளை அசை போட்டுக் கொண்டிருந்தவளுக்கு, அவளறியாமல் முகம் மென்னகை பூத்திருந்தது.
கோதாவரியின் பேச்சு காதில் விழுந்தாலும், கண்டுகொள்ளாமல் குளித்து விட்டு வந்தவள், வெளியே வர, அவளை முறைப்புடன் பார்த்தார் கோதாவரி.
குமரனின் கையில் இருந்த ஆறிப் போன காபியை வாங்கிக் கொண்டு போனவள், வரும் போது ஆவி பறக்க ஸ்ட்ராங்கான காபியுடன் வர, அந்த காபியின் மணத்திலேயே பாதி தலைவலி குறைந்திருந்தது குமரனுக்கு.
“எனக்கும் சேர்த்தே போட்டுட்டியாமா?” என்றவர் சந்தோஷத்துடன் எடுத்துக் கொண்டார். சங்கரன் ஒரு காபி பைத்தியம்.
“நீங்களும் எடுத்துக்கோங்க அத்தை” என்றவளிடம் மறுப்பு சொல்லாது ஒரு முறைப்புடன்,கோதாவரி காபியை வாங்கிக் கொள்ள, உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவள், தனக்கும் ஒரு டம்ளர் காபியை எடுத்துக் கொண்டு வெளியே இருந்த அந்த சிறிய முற்றத்தில் சென்று அமர்ந்து கொண்டாள்.
“மேடம் ஒரு காபி குடுத்து எங்கம்மா வாயை அடக்கிட்டிங்களே” என்றபடி அவளுக்கு பின்னல் வந்து அமர்ந்திருந்தான். அவள் கீழ் படியிலும், அவன் மேல் படியிலும் அமர்ந்திருக்க,
பதில் ஏதும் சொல்லாமல் சிரித்தவள்,ஏனோ அந்த நிமிடத்தை மிகவும் ரசித்திருந்தாள்.