குமரன் அவளை நேராக அவளது வீட்டிற்கு தான் அழைத்து சென்றான். தனது குடும்பத்தினரை பார்க்க வேண்டும் என்று அவள் மனதில் நினைத்திருந்தாள் தான். ஆனால் அதை அவனிடம் சொல்லாமலேயே புரிந்து கொண்டு அவளை அழைத்து வந்திருந்தவனின் மேல் காதல் பொங்கியது தீராநதிக்கு.
“அக்கா நீங்க சென்னை போயிருக்கிங்கன்னு சொன்னா மாமா?” என்றாள் மகதி.
“அப்படியா நதி?” என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் கேட்டவனைக் கண்டு முறைத்தவளின் முகம் சிவந்திருந்தது.
“இப்பல்லாம் நீ அடிக்கடி இப்படி முகம் சிவக்குற.பார்க்குற என்னால தான் கண்ட்ரோல் பண்ண முடியலை” என்றான் மெதுவாக.
“ஷ்! உதய், அமைதியா இருங்க” என்றாள்.
“இன்னைக்கு ஒரு நாள் இங்க தங்கிட்டு போகலாமே மாமா.அக்கா கல்யாணம் முடிஞ்சு மறுவீட்டுக்கு வந்தப்போ ஒரு நாள் தங்கினது. அதுக்கு அப்பறம் அவ இங்க வந்து தங்கவே இல்லை. நாளைக்கு சண்டே தான, பிளீஸ் மாமா” என்றான் நரேன்.
வரதன் -சாரதாவிற்கும் கூட அந்த ஆசை இருந்தது. ஆனால் குமரனுக்கு வேலை இருக்கும் என்று அமைதியாய் இருந்தனர்.
“ஹோ, தங்கலாமே” என்றான் குமரன்.
“நிஜமாவாங்க” என்ற நதியின் முகத்தில் அப்படி ஒரு சந்தோசம். அந்த சந்தோஷத்திற்காக எதுவும் செய்யலாம் என்று தோன்றியது அவனுக்கு.
இரவு உணவை முடித்து, தம்பி தங்கையுடன் வெகு நேரம் வரை அரட்டையடித்துக் கொண்டிருந்தவளைத் தான் ரசித்திருந்தான் குமரன். சல்வாரில் இருந்து நைட்டிக்கு மாறியிருந்தவளின் தலையில் குமரன் வாங்கிக் கொடுத்திருந்த மலராத மல்லிகைச் சரத்தை அழகாய் வைத்து விட்டிருந்தார் சாரதா.
குமரனின் பார்வை அவளையே சுற்றி சுற்றி வர, அதைக் கண்ட வரதனுக்கும், சாரதாவிற்கும் மனம் நிறைந்து போனது.
“மகதி, நரேன் நேரமாச்சு ரெண்டு பேரும் போய் தூங்குங்க” என்றார் சாரதா.
“ம்மா! நாளைக்கு சண்டே தானம்மா!. அக்கா நாளைக்கு அவ வீட்டுக்கு போய்டுவா. நாங்க இன்னும் கொஞ்ச நேரம் பேசிட்டு போறோம்” என்றாள் மகதி.
‘இவ ஒருத்தி’ என்று எண்ணிய சாரதா, “காலையில பேசிக்கோங்க. இன்னேரம் வரைக்கும் பேசினது பத்தாதா? போய் தூங்குங்க” என்றார் அதட்டலாய்.
இருவரும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு செல்ல,
“ஏன்ம்மா?” என்றாள் நதி கோபமாய்.
“அவங்க தான் சின்ன பிள்ளைங்க, நீயுமா? அங்க குமரன் தம்பி தனியா இருக்காரு. ஏதாவது நினைக்க மாட்டாரா? நீ அவரைக் கண்டுக்காம இவங்களோட அரட்டை அடிச்சுட்டு இருந்தா என்ன அர்த்தம்?” என்றார் சாரதா.
“அவர் தான்ம்மா இவங்களோட இருக்க சொல்லி அனுப்பி வச்சார்” என்றாள் முறைப்பாய்.
“நதி” என்று பல்லைக் கடித்தவர், “உன் ரூம்க்கு போ” என்றார்.
“சரி போறேன்” என்று முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு சென்றவளிடம்,
“பால் காய்ச்சி வச்சிருக்கேன். நீ குடிச்சுட்டு தம்பிக்கும் எடுத்துட்டு போ. நான் தூங்கப் போறேன்” என்றவர் உள்ளே சென்று விட, முகத்தை தூக்கி வைத்துக் கொண்டே அறைக்குள் வந்தவளைப் பார்த்து,
“என்னாச்சு மேடம்? ஏன் முகம் இப்படி இருக்கு?” என்றான்.
“நீ வேணும்னா போய் இன்னைக்கு அவங்க கூட தூங்குறியா?” என்றான் சீரியசாய்.
“ஆங்..! இது எனக்குத் தோணாம போச்சே.நல்லா ஐடியா, நான் அவங்க கூட போய் தூங்குறேன்” என்று வெளியே செல்ல முயன்றவளை, இடுப்போடு இழுத்து அணைத்தவன், கதவை அடைத்திருந்தான்.
“என்ன பண்றிங்க?” என்றவளுக்கு பேச்சே வரவில்லை.
“புருஷன் பத்து நாளா ஏங்கி வீங்கிப் போய் வந்திருக்கானே? அவனை சிறப்பா கவனிக்கனும்ன்ற எண்ணம் இருக்காடி உனக்கு. தம்பி தங்கச்சியோட தூங்கப் போறேன்னு சொல்லிட்டு போற?” என்றவன் அவள் கூந்தலில் இருந்த மல்லிகையின் வாசம் பிடிக்க,
“நீங்க தான சொன்னிங்க? இப்போ அப்படியே மாத்தி பேசுறிங்க?” என்றாள் சிவந்த முகத்துடன்.
“நதி, வரும் போது ஒரு கேள்வி கேட்டியே? இப்போ அதைக் கேளு?” என்றான்.
“நான் என்ன கேட்டேன்?” என்று யோசித்தவள்,”ஆங், நான் உங்களை ரொம்பப் படுத்துறேனோ?” என்றாள்.
அவளின் கைகளை எடுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டவன்,”இங்க இருந்துகிட்டு ரொம்ப பாடாப் படுத்துற. நான் எது கேட்டாலும் சிவந்து போற இந்த முகத்தை வச்சு என்னை பாடாப் படுத்துற. இமைக்காம என்னையே பார்க்குற இந்த பார்வை, நான் பார்த்த உடனே வர்ற இந்த வெட்கம், இந்த கோழி முட்டை சைஸ் கண்ணு, இந்த ஸ்ட்ராபெரி உதடு இப்படி மொத்தமும் சேர்ந்து என்னை பித்தனாக்கி பாடாப் படுத்துறேடி” என்றான்.
“உதய் பிளீஸ்..! தெரியாம கேட்டுட்டேன், விடுங்களேன்” என்றவளின் வெட்கம் கண்டு அவன் சிரிக்க,
“நான் சொன்னதை எனக்கே திருப்பி சொல்றிங்களா?” என்றவளை,
“குடுத்ததை திருப்பிக் குடுக்குறதுல தான கிக்கே இருக்கு. நீதான் திருப்பித் தர மாட்டேன்னு அடம் புடிக்கிறியே? நான் போன்ல எத்தனை முத்தம் குடுத்தேன், ஒன்னையாவது திருப்பிக் குடுத்தியாடி” என்றான்.
“முத்தம் போதுமா?” என்றாள்.
“முத்தமா இருந்தாலும் சரி மொத்தமா இருந்தாலும் சரி, ஐ யாம் ஆல்வேய்ஸ் வெயிட்டிங் பார் யு” என்றவனின் இதழ்களை முதன் முறையாக பெண்மை களவாடியது.
அதன் பிறகு நடந்ததெல்லாம் அவ்விரு இதயங்களுக்கே வெளிச்சம். பத்து நாள் பிரிவுத் துயரையும் ஒற்றை இரவில் தேற்றிக் கொண்டிருந்தான் குமரன்.
மறுநாள் ஞாயிறு என்பதால், ஒரு அசைவ விருந்தையே தயார் செய்திருந்தார் சாரதா. மதியம் வரை அவர்களுடன் இருந்து பேசி சிரித்து, மதிய உணவையும் வயிறு முட்ட உண்ட பின்பு தான் அங்கிருந்து கிளம்பியிருந்தனர் குமரனும் நதியும்.
“என்ன சொல்லு நதி, ஒரு மருமகனுக்கு மாமியார் வீட்டு சாப்பாடு எப்பவும் விருந்து சாப்பாடு தான். கவனிப்பும் அதிகம் தான். நைட் மாமியார் மகளோட கவனிப்பும் கொஞ்சம் தூக்கல் தான்” என்றான் சிரிப்புடன்.
“உதய்” என்று முறைத்தவள், அவன் முதுகில் முகத்தை மறைத்துக் கொண்டாள். அவன் விசிலடித்தபடி புல்லட்டை ஓட்டிக் கொண்டிருக்க,
சாப்பிட்டவுடன் கிளம்பவும், நதிக்கு தூக்கமாய் வந்தது. அவன் மேலேயே சாய்ந்து தூங்கியும் விட்டாள். தன் இடுப்போடு அணைத்திருந்த அவள் கைகளை அவ்வப்போது மேலும் அழுத்திக் கொண்டவன், வாழ்வையே முழுமையாய் உணர்ந்தான்.
இத்தனை வருட தவிப்பையும், தனிமையையும் மனைவியின் நிழலில் இளைப்பாறிக் கொண்டிருந்தான் குமரன். தனக்காக ஒருத்தி, தன்னை நம்பி ஒருத்தி என்பதே அவனின் நிறைவிற்கு காரணம்.
பத்து நாட்களுக்குப் பிறகு தன்னைக் கண்டவளின் பார்வையில் இருந்த தவிப்பில் ஒரு கணவனாக கர்வமாக உணர்ந்தான். அதில் அவள் அன்பையும் உணர்ந்திருந்தான்.
இதையெல்லாம் அவளிடம் சொல்ல வேண்டும் சென்று நினைத்தாலும், வார்த்தைகளை கோர்த்து வாக்கியமாக்கி, வடிவமாக்கி கோர்வையாக கூற அவனுக்கு வரவில்லை.
மொத்தத்தில் இருவரும் இணையின் மேல் அளவுக்கு அதிகமான அன்பை வைத்திருந்தனர். அளவு கூடினால் அமிர்தமே நஞ்சாகும் இடத்தில் அன்பு மட்டும் எம்மாத்திரம்?