“பொய் சொல்லாதிங்க? உங்களுக்கு என் நினைப்பே இல்லை. நான் தான் உங்களை நினைச்சு இங்க பைத்தியம் மாதிரி சுத்திட்டு இருக்கேன். நீங்க ஜாலியா டியூட்டி பார்த்துட்டு இருக்கீங்க. என் கிட்ட பேசக் கூட நேரமில்லை உங்களுக்கு” என்றாள் வரவழைத்துக் கொண்ட கோபத்துடன்.

“நீ சொல்றது பொய்ன்னு உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும். அப்பறம் ஏன்? எனக்கென்ன ஆசையாடி? இப்படி பிரிஞ்சு இருக்கணும்னு. என் வேலை அப்படி. நான் என்ன பண்ணுவேன்? எனக்குக் கூடத்தான் இப்பவே உன்னைப் பார்க்கணும்,உனக்குள்ள அப்படியே கரையணும், இப்பவே நீ வேணும்னு தோணுது. ஆனா முடியலையே என்ன பண்றது?” என்றான் தவிப்புடன்.

“உதய்” என்றவள் சிவக்க,

“இப்போ உன்னோட முகம் சிவந்திருக்கும். ஆனா அதை என்னால பார்க்க முடியலைன்னு நினைக்கும் போது ரொம்ப தவிப்பா இருக்கு நதி” என்றான் குமரன்.

அவனுடைய தவிப்பு அவன் குரலில் தெரிய,

“எப்போ வருவிங்க?” என்றாள் பேச்சை மாற்றும் பொருட்டு.

“இன்னும் பைவ் டேய்ஸ் ஆகும்னு நினைக்கிறேன்” என்றான்.

“இன்னமும் பைவ் டேய்ஸா” என்றவள் விட்டால் அழுது விடுவேன் என்பதைப் போல் கேட்டு வைத்தாள்.

“சாரிமா” என்றான்.

“ஏன்?” என்றவளுக்கு குரலே எழும்பவில்லை.

“இவ்வளவு நாள் ஆகும்னு தெரியாம போய்டுச்சு. எனக்கும் சீக்கிரம் வரணும்னு தான் ஆசை” என்றான்.

“விடுங்க உதய், நீங்க பீல் பண்ணாதிங்க. உங்க டியூட்டி அப்படின்னா நீங்க என்ன பண்ண முடியும். நீங்க என்னை நினைச்சு பீல் பண்ணாதிங்க. ஐ கேன் மேனேஜ்” என்றாள்.

“ஆர் யு ஷ்யர்” என்றான்.

“அதெல்லாம் ஹன்ட்ரெட் பெர்சன்ட்” என்றாள்.

“லவ் யு டி பொண்டாட்டி” என்று ஒரு முத்தத்தையும் அனுப்ப,

“நான் ஆபீஸ்ல இருக்கேன் உதய்” என்றவளுக்கு முகம் முழுவதும் புன்னகை.

“இப்போ நான் குடுக்குறேன் வாங்கிக்கோ, அப்பறம் நேர்ல பார்க்கும் போது திருப்பிக் குடுத்துடு” என்றான் உல்லாசமாய்.

“வீட்டுக்கு வாங்க வச்சிக்கிறேன்” என்றாள் சிரிப்புடன்.

“ஐ ஆம் வெயிட்டிங் மேடம்” என்றவன்,

“சரிடாம்மா பாய், ஆபீஸ் முடிஞ்ச உடனே கால் பண்ணு” என்றபடி வைத்துவிட்டான்.

போனை அவன் வைத்துவிட்டாலும், அவள் முகம் முழுவது புன்னகையுடன் போனையே பார்த்திருக்க,

“அண்ணா கால் கட் பண்ணி அஞ்சு நிமிஷம் ஆகிடுச்சு. மேடம் எப்போ ட்ரீம்ல இருந்து வெளிய வருவீங்க” என்ற பிரியாவின் குரலில் மீண்டவள்,

“போடி” என்றபடி வேலையை கவனிக்கத் துவங்கினாள்.

ஏனோ அத்துணை நேரம் இருந்த தவிப்பும், தனிமையும் நொடிப் பொழுதில் மறைந்திருந்தது. குமரனின் சிரிக்கும் முகமே அவள் கண் முன்னால் வந்து போக, தானாக சிரித்துக் கொண்டவள்,

“நதி உனக்கு குமரன் பைத்தியம் முத்திடுச்சு” என்று தலையைத் தட்டிக் கொண்டாள். அவன் பேசியதில் சோர்வு நீங்கி சுறுசுறுப்பானவள், வேலையில் மூழ்கினாள்.

“மேடம்க்கு கிளம்புற ஐடியா இருக்கா? இல்லையா? ஆபீஸ் டைம் முடிஞ்சு பத்து நிமிஷம் ஆகிடுச்சு நதி” என்றாள் பிரியா.

“இதோ முடிஞ்சது பிரியா! கிளம்பலாம்” என்றவள் தன் கணினியை ஷட் டவுன் செய்துவிட்டு, பேக்கை எடுத்துக் கொண்டு கிளம்பியிருந்தாள்.

“ஒரு போன் கால்க்கு இவ்வளவு பவர் இருக்கும்னு எனக்குத் தெரியாம போய்டுச்சு நதி” என்று அவளைக் கிண்டல் செய்து கொண்டு வந்தவள்,

“ஆமா, காக்கிச் சட்டை எங்க இருக்குறதா சொன்னா?” என்றாள் சந்தேகமாய்.

“சென்னை போயிருக்கார் பிரியா” தனது பேக்கில் இருந்து போனை எடுத்துக் கொண்டே சொல்ல,

“அப்போ அங்க நிக்கிறது யாரு?”  என்று பிரியா சொல்ல, வேகமாய் நிமிர்ந்து பார்த்தாள்.

ஜீன்ஸ், டிஷேர்ட் சகிதம், புல்லட்டில் சாய்ந்து  ஸ்டைலாக குமரன் நின்றிருக்க, முதலில் பார்த்தவள் நம்பவில்லை. மீண்டும் கண்களை கசக்கிக் கொண்டு பார்க்க, அவள் செய்கையில் அவன் சிரித்திருக்க,

“உதய்” என்றவள், சுற்றுப்புறம் மறந்து ஓடிச் சென்று அவனை அணைத்திருந்தாள்.

அவள் தன்னைக் கண்டு சந்தோஷப்படுவாள் என்று அவன் நினைத்திருக்க, அவன் நினைப்பை எல்லாம் தாண்டி ஓடி வந்து இப்படி அணைத்துக் கொள்வாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. தானும் அணைத்துக் கொண்டவன்,

“நதி” என்று அவள் முகத்தை நிமிர்த்த,

“பேசாதிங்க! எதுக்கு என்கிட்டே பொய் சொன்னிங்க? பிராடு பிராடு” என்று கண்ணீர் விட,

“ஹேய் நாம ரோட்ல நிக்கிறோம்டி” என்றான்.

“பரவாயில்லை” என்றவள் அவனில் இருந்து நிமிரவே இல்லை. அவர்களைப் பார்த்த பிரியா நமட்டு சிரிப்புடன்,

“நான் எதையும் பார்க்கலைப்பா” என்றாள்.

பிரியாவின் கிண்டலில் சட்டென்று விலகியவலை, தன்னுடனே நிறுத்திக் கொண்டான்.

“அண்ணா முடியலை என்னால. இந்த பத்து நாளும் மேடம் ஒரே சோக கீதம் தான். பிரிவுத் துயர்ல ரொம்ப தவிச்சுப் போய்ட்டாங்க. நீங்க கொஞ்சம் ஆத்தி விடுங்க” என்றவள்,

“நான் கிளம்புறேன்டி, என்ஜாய்” என்று கண்ணடித்துவிட்டு செல்ல, குமரனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“இப்ப எதுக்கு இப்படி சிரிக்கிறிங்க?” என்றாள் முறைப்புடன்.

“பின்ன என்னடி? இப்படி எல்லாரும் கிண்டல் பண்ற அளவுக்கா இருந்த? நான் மிஸ் பண்ணிட்டேனே?” என்றான் அவள் தலையோடு முட்டி.

“இன்னும் பைவ் டேய்ஸ் ஆகும்னு சொன்னிங்க?” என்றாள் அவன் முகம் பார்த்தபடி.

“பத்து நாளைக்கே முடியலைடி. ஐ கான்ட், நீ என்னமோ என்னை பண்ணிட்ட” என்றான் புகாராய்.

“இங்க மட்டும் என்னவாம்? என்னை மொத்தமா என்னமோ பண்ணிட்டிங்க. நான் ரொம்ப தவிச்சுப் போயிட்டேன். அதுலயும் இந்த ரெண்டு நாள் என்னால் சுத்தமா முடியலை உதய். உங்களைப் பார்க்கனும்னு ரொம்ப தவிப்பா இருந்தது” என்றவளை,

“அது இப்போ நீ நடந்துகிட்டதுலையே தெரிஞ்சது” என்றான்.

“புரியலை?”

“மேரேஜ்க்கு முன்னாடி இதே மாதிரி ஒரு நாள் வெயிட் பண்ணேன். ஆனா அப்பவும் இப்பவும் எத்தனை வித்யாசம். அன்னைக்கு பேசவே தயங்குன பொண்ணு, இன்னைக்கு பப்ளிக்ல ஓடி வந்து கட்டிப் பிடிக்கிற அளவுக்கு முன்னேறியிருக்கா?” என்றான் ஏகாந்த குரலில்.

“அன்னைக்கு என் அப்பாவோட பொண்ணு” என்றாள்.

“இன்னைக்கு” என்றான் புருவத்தை உயர்த்தியபடி.

“இன்னைக்கு குமரனோட பொண்டாட்டி” என்றாள் தலைசாய்த்து.

“குமரனோட பொண்டாட்டின்னு நீ சொல்லும் போதெல்லாம் கேட்கவே ஒரு மாதிரி கிக்கா இருக்கு நதி” என்றான் குமரன்.

“இருக்கும் இருக்கும்..!” என்றவள்,

“இனி இப்படி போக மாட்டிங்கல்ல” என்றாள் தவிப்புடன்.

“இந்த வேலையில அப்படி சொல்ல முடியாதுடா. பொய் சொல்லி உன்னை ஏமாத்த எனக்கு விருப்பம் இல்லை நதி” என்றான்.

அவனைப் புரிந்து கொண்ட பார்வை பார்த்தவள், “நான் உங்களை ரொம்ப படுத்துறேனா?” என்றாள்.

“இந்த கேள்விக்கு  பதிலை வீட்டுல போய் சொல்லட்டுமா?” என்றவன் வண்டியை ஸ்டார்ட் செய்ய, ஒரு பக்கமாக அமரப் போனவளை,

“சல்வார் தான, டபிள் சைட் உட்காரு நதி” என்று சொல்ல, அப்படியே அமர்ந்தவளை, அவள் கைகளை எடுத்து அவன் இடுப்போடு படர விட,

“ஏங்க, பப்ளிக்” என்றாள்.

“இல்லையே? இது பர்சனல் ஸ்பேஸ் தான். எனக்கே எனக்கான பர்சனல் ஸ்பேஸ்” என்றவனை முறைக்க முயன்று தோற்றாள்.

பத்து நாட்களுக்குப் பிறகான மனைவியின் நெருக்கத்தில்  அவன் வண்டி சிட்டாய் பறந்தது. முதலில் அவளுக்கு ஒரு மாதிரி இருந்தாலும், அவளுக்கும் அவன் அருகாமை தேவைப்பட்டது போல. அவனுடன் நன்றாக ஒன்றிக் கொண்டாள்.