குமரனுக்கும் நதிக்கும் திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் முழுமையாக முடிந்திருந்தது. அந்த இரண்டு மாத திருமண வாழ்க்கையில் நதியின் மேல் அன்பைத் திகட்ட திகட்ட புகுத்தியிருந்தான் குமரன். கணவனின் அன்பிலும், திருமண வாழ்க்கையிலும் மகிழ்ச்சியாகவே இருந்தாள் நதி.
திடீரென்று அவனுக்கு வரும் முன்கோபம் தவிர்த்துப் பார்த்தால், அவன் ஒரு ஆகச் சிறந்த கணவன், காதலனும் கூட. மென்மைக்கான விளக்கமே அவன் அகராதியில் வன்மையாய்த்தான் இருந்தது. ஆனால் அதையும் ஏற்றுக் கொண்டிருந்தாள் நதி.
எவ்வளவு தான் அவன் மென்மையாக பேசவோ, நடந்து கொள்ளவோ முயற்சி செய்தாலும், இறுதியில் முடிப்பது என்னவோ வன்மை கலந்து தான். குமரன் எந்த அளவிற்கு அவள் மேல் அன்பைக் கொட்டினானோ அதை விட இருமடங்கு வன்மத்தை கோதாவரி அவளிடம் காட்டிக் கொண்டிருந்தார். இதையெல்லாம் குமரன் அறியாமல் மறைத்து விடுவாள் நதி.
அவனுடைய வேலை சூழலும் ஒரு வகையில் காரணம். பல நாட்கள் நடு இரவிற்கு மேல் தான் வீட்டிற்கே வருவான். வந்தவனிடம் வீட்டில் நடக்கும் விஷயங்களைச் சொல்லி மேலும் அவனை டென்ஷன் படுத்த வேண்டாம் என்று எண்ணி விட்டு விடுவாள்.
கோதாவரியிடம் வார்த்தைக்கு வார்த்தை பதிலும் பேசி விடுவாள். சில சமயங்களில் அமைதியாக கடந்து விடுவாள். சங்கரன் பல முறை கோதாவரியை அதட்டியும் அதற்கு பலன் என்னவோ பூஜ்ஜியம் தான்.
நேரத்திற்கு சாப்பிடாமல், நேரத்திற்கு தூங்காமல் வேலையில் அவன் அலையும் அலைச்சலைக் கண்டவளுக்கு வீட்டுப் பிரச்சனைகளை எடுத்து செல்வதில் விருப்பமில்லை.
அதுவே கோதாவரிக்கு வசதியாக போய்விட, மகன் இருக்கும் போது ஒரு மாதிரி நடந்து கொள்பவர், அவன் சென்றவுடன் ஒரு முகத்தை காண்பிப்பார். தீபா அங்கு வரும் போதெல்லாம் கோதாவரியை அடக்கிக் கொண்டே தான் இருப்பாள்.
“இவ சரிப்பட்டு வர மாட்டாம்மா? பேசாம நீங்க தனிக்குடித்தனம் போய்டுங்கம்மா நதி” என்று சங்கரன் கூட ஒரு முறை சொல்லிவிட்டார்.
குமரன் அவளைத் தாங்குவதே கோதாவரியின் அத்தனை காண்டுக்கும் காரணம். கல்யாண் தனிக்குடித்தனம் சென்றாலும், யுவராணியை பொருட்டாய் கூட மதிக்க மாட்டான். அவன் சொல்வதே சட்டம் என்பதைப் போல் நடந்து கொள்வான். அதில் கோதாவரிக்கு ஒரு சந்தோசம். ஆனால் குமரன் அதற்கு எதிர்மறையாக இருக்க, தன் மகன் முழுக்க பொண்டாட்டி தாசன் ஆகிவிட்டான் என்ற எண்ணத்தை தனக்குள் நன்றாக பதிய வைத்துக் கொண்டார்.
காலையில் எழும் நதி, வீட்டு வேலை, சமையல் வேலை என அனைத்தையும் முடித்துவிட்டு அரக்க பறக்க ஆபீஸ் சென்று விடுவாள். மாலையில் திரும்பி வந்து மீண்டும் அதே சமையல்,வீட்டு வேலை என்று அவள் நாட்கள் ரெக்கை கட்டிக் கொண்டு சென்றது.
குமரன் வீட்டில் இருக்கும் போதெல்லாம் பாதிவேலையை பகிர்ந்து கொள்வான். எந்த வேலையை செய்வதற்கும் அவன் ஈகோ பார்த்ததில்லை.
“இதென்ன குமரா கூத்தா இருக்கு? காலையில நீ டீ போட்டுட்டு இருக்க? மகாராணி இன்னமும் தூங்கிட்டு இருக்கா?” என்று ஒரு ஞாயிற்றுக் கிழமை பொழுதில் அவர் கேட்டு வைக்க,
“சொன்னாலும் சொல்லாட்டியும் அவ எனக்கு மகா ராணி தான். இதுக்கு முன்ன உங்களுக்கு கூடத்தான் டீ போட்டு குடுத்திருக்கேன். அப்போ நீங்க மகாராணியா?” என்று அவன் வெடுக்கென்று கேட்டதில் இருந்து அவனிடம் நேரிடியாக எதையும் பேசுவதில்லை கோதாவரி. அவன் சென்ற பிறகு அவளைப் பிடித்துக் கொள்வார்.
“இதென்னா? இப்படித்தான் உங்க வீட்ல வளர்த்தாங்களா? ஆம்பளை அவன் எந்திருச்சு டீ போடுறான், துணி காயப் போடுறான். நீ என்னவோ மகாராணி கணக்கா தூங்கி எந்திருச்சு, ஆற அமர வர்ற” என்று அவளைப் பிடித்துக் கொள்வார்.
“மத்த நாள் எல்லாம் நான்தானே செய்றேன் அத்தை. அதுவுமில்லாம உங்க பிள்ளையை நான் செய்ய சொல்லலை. அவரா விருப்பப்பட்டு செஞ்சா அதுக்கு நான் என்ன செய்ய முடியும்? இதை உங்க பையன்கிட்டவே சொல்ல வேண்டியது தான?” என்று அவளும் பதிலுக்கு பதில் கேட்டுவிடுவாள்.
என்னதான் பதில் பேசினாலும், ஒரு சில நேரங்களில் துவண்டு விடுவாள் நதி. அதிலும் அவன் வெளியூர் டியூட்டி சென்று இதோடு பத்து நாட்கள் ஆகியிருக்க, தனிமையில் மிகவும் சோர்ந்து போனாள் நதி.
எப்போதும் தம்பி, தங்கை என்று குடும்பமாக இருந்தவளுக்கு அந்த தனிமை கொடுமையாய் இருந்தது. வேலைக்கு செல்வதும் வருவதும் வீட்டில் வேலை செய்வதும் என்று ஏதோ வாழ்க்கை பம்பரமாய் மாறிப் போனதைப் போல் உணர்ந்தாள். அலுப்பும் சலிப்பும் அவளுடன் ஒட்டிக் கொண்டது.
எவ்வளவு தாமதமாக வந்தாலும் குமரனின் முகம் பார்த்தால் அன்றைய அலுப்பும், தனிமையும் சட்டென்று தணிந்து விடும் அவளுக்கு. திருமணத்திற்கு பிறகான முதல் நீண்ட பிரிவு அவளை மிகவும் பாதித்திருந்தது.
இருவரும் போனில் பேசிக் கொண்டாலும் அதெல்லாம் அவளுக்கு போதவில்லை. கணவனின் அருகாமையும் அணைப்பும் வேண்டுமென்று உடலும், உள்ளமும் துடிப்பதை அவளால் அவனிடம் சொல்லவும் முடியவில்லை. தனக்குத் தானே தாங்கிக் கொள்ளவும் முடியவில்லை.
அவனில்லாத நாட்களும், அவனில்லாத அறையும் அவளுக்கு வெறுமையாகவே இருந்தது. இந்த இரண்டு மாத கால வாழ்க்கையில், காலம் காலமாய் வாழ்ந்ததைப் போன்ற உணர்வை அவளுக்குள் ஏற்படுத்தியிருந்தான் குமரன்.
அவள் அலுவலக நேரத்தில் அவனுடன் அதிக நேரம் பேச முடியவில்லை. அவளுக்கு நேரம் இருக்கும் போது அவனால் பேச முடியவில்லை. இப்படியே நாட்கள் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தது. அப்படியும் வீட்டில் இருக்கும் நேரங்களில் அவன் பேசினாலும், கோதாவரி வீம்புக்கென்று அவள் அருகிலேயே இருப்பார்.
நதியால் அவனிடம் தனிப்பட்டு எதுவும் பேச முடியாது. அவளுடைய ஏக்கமும், தவிப்பும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டு போனதே தவிர குறைந்தபாடில்லை.
“காக்கிச்சட்டை ஊரில் இருந்தாத்தானே கவனிக்கிறதுக்கு. சி.எம் ட்யூட்டிக்கு போய் பத்து நாள் ஆகுது. இன்னும் ஆள் வீடு வரலை” என்றாள் நதி. குரலில் ஏதோ ஒரு உணர்வின்மை.
“ஹோ..! பிரிவுத் துயரோ?” என்ற பிரியா, அவள் வாடிய முகம் கண்டு,
“அவங்க வேலையில இதெல்லாம் சகஜம் தான நதி. இதுக்கே இப்படி அப்செட் ஆனா எப்படி? இதெல்லாம் உனக்குத் தெரியாதா? நாளைக்கு நீயும் கவர்மென்ட் வேலைக்கு போனா இதெல்லாம் சகஜம் தான?” என்றாள் பிரியா.
“எனக்கும் புரியுது பிரியா. ஆனா, என்னவோ தெரியலை நான் உதயை ரொம்ப மிஸ் பண்றேன். அவர் இல்லாம வீட்டுக்குப் போக பிடிக்கலை. எதையோ இழந்த மாதிரியே இருக்கு. பத்தாதுக்கு அவர் அம்மா வேற, அவங்க பங்குக்கு ஒரு பக்கம் படுத்தி எடுக்குறாங்க. ஐ கான்ட் பிரியா” என்றாள் கலங்கிய கண்களுடன்.
“மேரேஜ் ஆனா புதுசுல இதெல்லாம் சகஜம் தான் நதி. டேக் இட் ஈசி. காக்கிச்சட்டை வந்த உடனே உன்னை கூல் பண்ணிடுவார். அப்பறம் மேடம் எப்படியும் முகம் சிவந்து போய் தான் ஆபீஸ் வருவிங்க” என்றாள் பிரியா.
அவள் கூறியதை யோசித்துப் பார்த்தவளுக்கு அது உண்மை என்றே தோன்றியது. எவ்வளவு மன சஞ்சலங்கள் இருந்தாலும் அவன் ஒரு பார்வையே அதை போக்கி விடும். மொத்தத்தில் குமரனை விட, நதி தான் அவன் மேல் பித்தாகிப் போனாள். குமரன் இன்றி அவள் வாழ்வில் அணுவும் அசையாது என்ற நிலையிலிருந்தாள்.
சரியாக அதே நேரத்தில் அவனுடைய அழைப்பும் வர, சட்டென்று முகம் பிரகாசமாகியது நதிக்கு. டிஸ்பிளேயில் அவனைக் கண்ட பிரியா,
“பார்த்தாலும் பார்த்தேன் இப்படி புருஷன் பைத்தியத்தை பார்க்கலைடி. இவ்வளவு நேரம் உன் முகம் இருந்த இருப்பென்ன? ஆனா, இப்ப பாரு? அப்படியே மினுமினுக்குற? நீ நடத்துடா ராசாத்தி” என்றாள் பிரியா சிரிப்புடன்.
“சும்மா இருடி” என்றவள் போனை எடுக்க,
“என்னாச்சு நதி? ஏன் கால் அட்டெர்ன் பண்ண இவ்வளவு நேரம்?” என்றான்.
“உங்க பேரைக் கூட டிஸ்ப்ளேயில் சைட் அடிச்சா எடுக்க லேட் தான் ஆகும் அண்ணா” என்று பிரியா பின்னால் இருந்து கத்த, எதிர்புறம் குமரனுக்கு களைப்பு நீங்கி சிரிப்பு வந்திருந்தது.