வாசல் 7:

தன் அலங்காரங்களைக் கலைத்து, அந்த அறையிலேயே குளித்து முடித்து, ஒரு சிம்பிளான ஜார்ஜெட் புடவையில் வெளியே வந்தவளைப் பார்த்து ஆச்சர்யப்பட்டாள் தீபா.

“கூப்பிட்டிருந்தா நான் வந்து ஹெல்ப் பண்ணியிருப்பேனே நதி” என்றாள் தீபா.

“இருக்கட்டும் அண்ணி, நீங்க கிட்சன்ல வேலையா இருந்திங்க. நானே மெதுவா எல்லாத்தையும் ரிமூவ் பண்ணிட்டேன். இந்த ஜடை அலங்காரம் ரிமூவ் பண்ணத்தான் கொஞ்சம் கஷ்ட்டமா இருந்தது. மத்தபடி ஓகே தான்” என்றாள் இயல்பாய்.

அவளின் குணம் தீபாவையும் ஈர்த்தது.

“வீட்டுக்கு வர்றவங்களுக்கு டீ, காபி போட்டுட்டு இருந்தேன் நதி. நீயும் சூடா குடிக்கிறியா?” என்றாள் தீபா.

“அவர் வந்துடட்டும் அண்ணி. அப்பறமா குடிச்சுக்கிறேன்” என்றாள்.

“கொழுந்தனார் வந்ததுக்கு அப்பறமும் ஒன்னு குடிக்கலாம். இப்போ எங்க கூட சேர்ந்தும் குடிக்கலாம், தப்பில்லை நதி” என்ற யுவ ராணி அவளிடம் ஒரு டம்ளரை நீட்ட,

“தேங்க்ஸ் க்கா” என்றபடி வாங்கிக் கொண்டாள்.

“நகையை எல்லாம் போட்டுக்கோ நதி. எப்படியும் கல்யாணத்துக்கு வர முடியாத சொந்தக்காரங்க எல்லாம் வரப் போக இருப்பாங்க” என்றாள் தீபா.

“இதுவே போதும் அண்ணி. இதுவே ஒரு மாதிரி இருக்கு” என்றாள்.

“இதெல்லாம் இப்பத்தான் போட முடியும் நதி. அப்பறம் என்னை மாதிரி ரெண்டு பிள்ளைங்களை பெத்துட்டா, இவ்வளவு நகையை போட்டுட்டு எங்க மினுக்கிட்டு போறன்னு கேட்பாங்க” என்ற ராணி,

“நான் வீடு வரைக்கும் போன உடனே வந்துடுறேன் அண்ணி” என்று கிளம்பிவிட்டாள்.

“ராணி எப்பவும் இப்படித்தான் நதி. விவரமா இல்லை வெகுளியான்னு கண்டே பிடிக்க முடியாது. ஆனா, அம்மாவுக்கும் ராணிக்கும் எப்பவும் ஆகுறதில்லை. எங்க அம்மா கூட எனக்கே சில சமயம் ஆகாது. நீயும் எதுவா இருந்தாலும் ஆரம்பத்துலையே கட் அன்ட் ரைட்டா பேசிடு நதி. இல்லைன்னா தலையில ஏறி உட்கார்ந்துக்குவாங்க” என்றாள் தீபா.

அவள் கூறியதைக் கேட்டு நதி சிரிக்க,

“எதுக்கு சிரிக்கிற?” என்றாள் தீபா.

“இல்ல, எல்லார் வீட்லயும் நாத்தனாரும், மாமியாரும் ஒன்னு சேர்ந்து மருமகளை பேசுவாங்கன்னு கேள்வி பட்டிருக்கேன். இங்க என்னடான்னா எல்லாம் தலைகீழா இருக்கு அண்ணி. அதை நினைச்சு தான் சிரிச்சேன்” என்றாள் நதி.

“உண்மைன்னு ஒன்னு இருக்குல்ல நதி. தங்க ஊசின்றதுக்காக கண்ல குத்திக்க முடியுமா? எங்கம்மா தான், ஆனா பாரு குணம் கொஞ்சம் பத்தாது. என்கிட்டையே அப்படித்தான் நடந்துப்பாங்க. அதுலயும் குமரன் விஷயத்துல எங்க அம்மா ரொம்ப சுயநலம். அவனை சார்ந்தே இருந்து பழகிட்டாங்க. சின்னப் பையன்ல இருந்தே, அம்மாக்கு வீட்டு வேலையில இருந்து எல்லாத்துலையும் ஹெல்ப் பண்றது அவன் தான்.

எங்க அம்மாவும் நல்லவங்களா தான் இருந்தாங்க நதி. எங்க மூணு பேரையும் கஷ்ட்டப்பட்டு தான் வளர்த்தாங்க. என்னைக்கு கல்யாண் அண்ணாவுக்கு கல்யாணம் ஆச்சோ அன்னைக்கு ஆரம்பிச்சது பஞ்சாயத்து. அம்மாவா இருக்குற வரைக்கும் நல்லா இருந்தவங்க மாமியார் ஆனதுக்கு அப்பறம் அப்படியே தலைகீழா மாறிட்டாங்க” என்றாள் தீபா.

“என்னாச்சு அண்ணி?” என்றாள் நதி.

“வேற ஒண்ணுமில்லை நதி. எங்க பசங்க எல்லாம் பொண்டாட்டி பேச்சை கேட்டு தனியா விட்ருவாங்களோன்னு ஒரு பயம். அப்பறம் பணம், சேவிங்க்ஸ்னு எதுவும் இல்லை. பசங்களை கைப்பிடியில இருந்து விட்டுட்டா, அதுவும் இல்லாம போய்டும்னு ஒரு பயம். அப்பாவோட சம்பாத்தியம் எங்க மூணு பேரையும் வளர்க்கத் தான் சரியா இருந்தது.

குமரன் தான், குடும்ப கஷ்ட்டம் தெரிஞ்சு படிச்சான். நல்லா படிப்பான், இன்ஜினியரிங் படிக்கணும்னு அவனுக்கு ரொம்ப ஆசை. பணமில்லை, டிகிரீ தான் படிச்சான். படிச்சு முடிக்கும் போதே, எஸ்ஐ எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணி சின்ன வயசுலையே கவர்மென்ட் வேலைக்கும் போய்ட்டான்.

அவன் தலையெடுத்த பிறகு தான் எங்க குடும்பமே ஒரு நிலைக்கு வந்தது. சொன்னா நம்ப மாட்ட நதி, வேலைக்கு போன புதுசுல எல்லாம், அவனோட செலவுக்கு ரெண்டாயிரம் மட்டும் வச்சுகிட்டு, மொத்த சம்பளத்தையும் வீட்டுக்கு அனுப்பிடுவான். எனக்கு என் அப்பா செஞ்சதை விட அவன் செஞ்சது தான் அதிகம். என் தம்பி தான் எனக்கு தகப்பன் மாதிரி” என்ற தீபா கலங்கிய கண்களைத் துடைத்துக் கொள்ள,

“நான் ஒருத்தி, போன கதை வந்த கதை எல்லாம் பேசிட்டு” என்று தன்னைத் தானே நொந்தவள்,

“இதெல்லாம் ஏன் உன்கிட்ட இப்போ சொல்றேன்னா? அவனை பணம் காய்க்கிற மரமாவே எங்கம்மா பார்த்துப் பழகிட்டாங்க. அவங்க தேவையை அவன் மட்டும் தான் நிறைவேத்தனும், நிறைவேத்த முடியும்னு ஆழமா நம்பி, அதுக்குள்ள இருந்து வெளிய வரவே மாட்டாங்க. பிடிவாதம் அதிகம். பெத்த கொடுமைக்கு நாங்க எங்கம்மாவை பொறுத்துட்டு போகலாம். ஆனா, நீ எந்த விதத்துலயும் பொறுத்துப் போகணும்னு அவசியம் இல்லை நதி. இல்லைன்னா உன் தலையிலையும் மிளகாயை  வச்சு நல்லா அறைச்சிடுவாங்க. சுதாரிப்பா இருந்துக்கோ நதி” என்றாள் தீபா.

“பீல் பண்ணாதிங்க அண்ணி. உங்க தம்பி பார்த்துப்பார்” என்று நதி ஆறுதல் சொல்ல,

“இப்போ வரைக்கும் அவன் தான் பார்த்துக்குறான் நதி. இனி அவனுக்காகன்னு பார்க்கத்தான் நீ வந்திருக்க. கொஞ்சம் இல்லை ரொம்ப கோபக்காரன் தான். ஆனா ரொம்ப பாசக்காரனும் கூட. நீ தான் அவனைப் பார்த்துக்கணும்” என்றாள் தீபா.

“இவ்வளவு நேரமா அப்படி என்னத்த ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கீங்க? அப்பாவுக்கு குடிக்க எதுவும் குடுத்தியா தீபா?” என்றபடி வந்தார் கோதாவரி.

“அதெல்லாம் குடுத்தாச்சும்மா” என்றாள்.

“சரிசரி, நைட்டு சாங்கியத்துக்கு என்னென்ன பண்ணனும்னு பார்த்து பண்ணிடு தீபா. நீதான பண்ணனும்” என்றார் கோதாவரி.

“அதெல்லாம் எங்களுக்கும் தெரியும்” என்றாள்.

“ஒரு பெரிய மனுஷி இதைக் கூட சொல்லக் கூடாதா? இப்படி வெடுக்கு வெடுக்குன்னு பேசுற தீபா” என்றார் கோதாவரி.

“பேசாம போம்மா..! ஏதாவது சொல்லிடப் போறேன். ஒரு மைக் வாங்கித் தரேன். இன்னும் கொஞ்சம் சத்தமா சொல்லுங்க” என்றாள் தீபா கடுப்புடன்.

“நான் என்ன பண்ண? என் குரலே அப்படித்தான்?” என்று முறைத்துவிட்டு சென்றார்.

“அய்யோ பாவம் அண்ணி. எதார்த்தமா தானே சொன்னாங்க” என்றாள் நதி.

“இவ்வளவு நேரம் உனக்கு என்ன கதையா சொன்னேன் நதி. எங்கம்மாவை நம்பாத, எல்லாம் நடிப்பு. ஒண்ணுமே தெரியாத மாதிரி இருப்பாங்க. ஒரு நாள் நிஜ சந்திரமுகியா மாறுவாங்க. அப்ப நீயே சொல்லுவ பாரு” என்றவளின் குரலில் சிரிப்பு வந்துவிட்டது நதிக்கு.

“என்ன பண்றிங்க ரெண்டு பேரும்?” என்றபடி வந்தான் குமரன்.

“சும்மா பேசிட்டு இருந்தோம் குமரா. எல்லாம் முடிஞ்சதா?” என்றாள் தீபா.

“எல்லாம் முடிஞ்சதுக்கா. இந்த கேட்டரிங் பண்ணவங்களுக்கு மட்டும் மிச்ச அமௌன்ட் செட்டில் பண்ணனும். அவங்க நாளைக்கு வந்து வாங்கிக்கிறதா சொல்லிட்டாங்க” என்றான்.

“சரி நீ போய் குளிச்சுட்டு வா குமரா. ரெண்டு பேரும் சாப்பிடுவிங்க” என்றாள்.

“சரிக்கா” என்றவன்,

“வா நதி” என்று அவளின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போக முற்பட,

அவளைத் தன் புறம் இழுத்த தீபா,” என்னடா பண்ற குமரா?” என்றாள் முறைப்புடன்.

“என்ன பண்ணேன்?” என்றான் புரியாமல்.

“இப்போ நதியை எதுக்கு கூட்டிட்டு போற?  நான் உன்னைத்தான் குளிச்சுட்டு வரச் சொன்னேன்” என்றாள்.

“அக்கா அதுவரைக்கும் நதி ரூம்ல இருக்கட்டும்.  அவளுக்கு இங்க போரடிக்கும்ல” என்றான்.

“அதெல்லாம் நாங்க பார்த்துக்குறோம். சார் நான் சொன்னதை மட்டும் செஞ்சா போதும், போடா” என்றாள் தீபா சிரிப்புடன்.

அவன் நதியை பார்த்துக் கொண்டே செல்ல,அவள் நமட்டுச் சிரிப்புடன் தலையைக் குனிந்து கொண்டாள்.

அதற்கடுத்த வேலைகள் பம்பரமாய் சுழல, அவர்களின் அறையை தயார் செய்த தீபா, ராணியையும் அழைத்துக் கொண்டு தாயிடம் சென்றாள்.

“ம்மா, இன்னைக்கு ஒரு நாள் அண்ணன் வீட்ல  இல்லைன்னா எங்க வீட்ல வந்து தூங்குங்க” என்றாள் தீபா.

“இதென்ன கூத்தா இருக்கு? நான் எதுக்கு அங்க வரணும்? நான் எப்பவும் போல இங்கயே தூங்கிக்கிறேன்” என்றார் கோதாவரி.

“ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்கிறதுல உங்களை மிஞ்ச ஆளில்லை. அம்மாவாச்சேன்னு பார்க்குறேன்” என்றாள் தீபா பல்லைக் கடித்துக் கொண்டு.

“எனக்கு தூக்கம் வராது தீபா. எனக்கு எப்பவும் இங்க ஹால்ல தூங்கித்தான பழக்கம். சீரியல் பார்த்துட்டே நான் தூங்கிடுவேன். கிளம்புறதுன்னா நீங்க கிளம்புங்க” என்றார்.

“பக்கத்து ஊருக்கா கூப்பிடுறேன். ரெண்டு வீடு தள்ளி இருக்குற வீட்டுக்குத் தான் கூப்பிடுறேன். இல்லைன்னா அந்த சின்ன ரூம்லயாவது போய் தூங்குங்க” என்றாள் மீண்டும்.

“இப்ப எதுக்கு நசநசன்னு பேசிட்டே இருக்க தீபா. உனக்கு அவன் தம்பின்னா, எனக்கு மகன். எப்படி இங்கிதமா நடந்துக்கணும்னு எனக்கும் தெரியும். நீ போயிட்டு காலையில சீக்கிரம் வந்துடு. நதிகிட்டையும் காலையில அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்து வர சொல்லிடு” என்றார்.

“உங்கம்மாவோட இங்கிதம் எல்லாம் எனக்கும் தெரியும்” என்று முணுமுணுத்தாள் யுவராணி.

“எல்லாம் என் நேரம்” என்று தலையில் அடித்துக் கொண்ட தீபா, எதையோ சொல்லப் போக, அங்கே வந்த சங்கரன்,

“கோதாவரி  பெரியவன் உன்னை அங்க கூட்டிட்டு வர சொன்னான்” என்று விடாமல் அழைத்துக் கொண்டு போனார்.

“ரொம்ப சிரமம் தீபா அண்ணி உங்கம்மாவை மெயின்டெயின் பண்றது. எங்களுக்கு கல்யாணம் ஆனா புதுசுல அந்த ரூம் தலமேட்டுலயே தான் தலகாணியை போட்டு படுத்திருந்தாங்க. கொஞ்சம் கூட இங்கிதமே இல்லாம. இன்னைக்கு இங்கிதம் தெரியும்னு பேசுறதைக் கேட்டாலே கடுப்பாகுது” என்றாள் ராணி.

“அவங்க குணம் அப்படித்தான். கேட்டா, நாங்கல்லாம் அந்த காலத்துல ஒத்த ரூம்க்குள்ள குடும்பம் நடத்தி பிள்ளைப் பெக்கலையான்னு கேட்பாங்க. வாய் குடுத்து மீள முடியாது” என்றாள் தீபா.