மகதியும், நரேனும் அக்காவை விடாமல் நதியுடனேயே இருந்தனர். ஒருவழியாக அனைத்தும் முடிந்து நதியின் வீடு வந்தவர்கள், அங்கிருந்து குமரனின் வீட்டிற்கு கிளம்ப, நரேனும், மகதியும் ஒரே அழுகை.
அவர்கள் அழுவதைப் பார்த்தவுடன் நதிக்கும் அழுகை வர,
“அவங்க தான் சின்னப் பிள்ளைங்க அழறாங்க. நீயும் கூட சேர்ந்து அழுதா, இன்னும் பீல் பண்ண மாட்டாங்களா?” என்று குமரன் கண்ணைத் துடைத்துவிட,
“நரேன் சொல்றது கரெக்ட் மாமா. உங்களை கண் கலங்காம வச்சு காப்பாத்துவா” என்றாள் அவள் பங்கிற்கும்.
“அப்படியா நதி? என்னை கண் கலங்க விட மாட்டல்ல” என்று மனைவியின் புறம் திரும்பி கேட்க, அழுது சிவந்த முகத்துடன் இருந்தவள் அவனை முறைத்தாள்.
“பாருங்க உங்க முன்னாடியே எப்படி முறைக்கிறான்னு?” என்று சொல்லி சிரித்தவனை மேலும் முறைக்க முயன்று தோற்று சிரித்திருந்தாள் நதி.
புதுப்பெண்ணாய் சர்வ அலங்காரங்களுடன், அழுது சிவந்த முகத்துடன், லேசாய் கலைந்த தலை முடியுடன் இருந்தவளின் முகம் அவனை அவ்வளவு ஈர்த்தது. இருக்கும் இடம் கருதி தன்னை அடக்கிக் கொண்டான்.
அவளை பெண் பார்க்க வரும் போது அவனை கலர் டிரஸ்ஸில் பார்த்தது. அதற்கு பிறகு யூனிபார்மிலேயே பார்த்திருந்தவனை, இந்த பட்டு வேஷ்ட்டி சட்டையில் பார்க்கத் தெவிட்டவில்லை அவளுக்கு. குமரனைப் போல் அவள் தன் மனதை கட்டுப்படுத்தவெல்லாம் இல்லை. கிடைத்த நேரத்தில் எல்லாம் அவனைத் தான் ரசித்துக் கொண்டிருந்தாள்.
அவனின் மேனரிசமும், பேச்சும், குணமும் அவளை மொத்தமாக அவன்பால் ஈர்த்திருந்தது.
அடுத்தடுத்து நடந்த சடங்குகளில் கூடவே ஆட்கள் இருந்ததால் அவர்களால் பேசிக் கொள்ள முடியவில்லை. பார்வை பரிமாற்றங்கள் மட்டுமே.
தீபா ஆரத்தி எடுக்க, குமரனின் வீட்டில் காலடி எடுத்து வைத்தவளுக்கு, அதுவரை இல்லாத பயமும், படபடப்பும் சேர்ந்து கொள்ள, தன்னையறியாமல் குமரனின் கையைப் பிடித்திருந்தாள். அவளின் செய்கையில் அவன் முகம் கனிந்திருந்தது.
அவளின் முகம் பார்த்தே மனதைப் படித்தவன், தோளோடு அணைத்துக் கொண்டான்.
“நான் இருக்கேன்ல? அப்பறம் என்ன பயம்?” என்றான் புருவத்தை உயர்த்தியபடி.
அவனின் வார்த்தைகளில், சஞ்சலம் மறைந்து மனம் நிம்மதியடைய, மெதுவாக வீட்டினை சுற்றி பார்வையை படரவிட்டாள்.
அளவான வீடுதான். ஒரு ஹால், ஒரு கிட்சன், ஒரு பெட்ரூம், அதைத் தாண்டி ஒரு சிறிய ரூம். மொத்த வீட்டின் அளவே அவ்வளவு தான் இருந்தது. நதியின் வீடும் அளவானது தான். ஆனால் அவர்கள் வீட்டை ஒப்பிடும் போது, இது அதை விட சிறியது என்றே தோன்றியது.
“விளக்கேத்து நதி” என்றாள் தீபா. விளக்கேற்றி சாமி கும்பிட்டவளின் மனம் காரணமே இல்லாமல் மீண்டும் சஞ்சலம் அடைந்தது. எல்லாம் கண் திறந்து குமரனை பார்க்கும் வரை தான்.
சம்பிரதாயங்கள் முடிந்து மாலையை கழற்றிய பிறகு தான் அவளுக்கு ஆசுவாசமாய் இருந்தது.
“உன்னோட பேஸ் ரொம்ப ட்ரான்ஸ்பரன்ட். நீ என்ன நினைக்கிறன்னு அப்படியே காட்டிக் குடுத்துடுது என்கிட்ட” என்றான் சிரிப்புடன்.
“நல்லது தான உதய்? நான் வாய் திறந்து எதுவும் சொல்ல வேண்டாம் பாருங்க?” என்றாள்.
“எஸ், நீ எதுவுமே சொல்ல வேண்டாம். உன் பேஸ் ரியாக்சனே போதும்” என்று மந்தகாசமாய் சொல்ல, வெட்கத்துடன் சிரித்துக் கொண்டாள் நதி.
அதுவரை எதுவும் பேசாமல் இருந்த கோதாவரியை அதிசயமாய் பார்த்து வைத்தாள் நதி.
“இப்போதைக்கு எங்க அம்மா எதுவும் பேச மாட்டாங்க நதி. ரெண்டு நாளைக்கு முன்னாடி குமரன் போட்ட போடு அப்படி” என்றாள் தீபா, அவளுக்கு மட்டும் கேட்கும் படியாக.
“என்ன அண்ணி சொல்றிங்க?” என்றாள் புரியாமல்.
“அது போகப் போக உனக்கே தெரியும்” என்றாள் தீபா.
அவனின் சொந்த பந்தம் கூட்டமெல்லாம் கொஞ்சம் குறைந்த பிறகு தான் நதிக்கு நிம்மதியாய் இருந்தது.
“நீ வேணும்னா போய் ரெஸ்ட் எடு நதி” என்றான் குமரன்.
“நீங்க” என்றாள்.
“எனக்கு கொஞ்சம் வேலை இருக்குமா. கணக்கு முடிக்கிறவங்களுக்கு எல்லாம் முடிச்சுட்டு வரேன்” என்றவன், அவளை அறைக்குள் அழைத்துச் சென்றான்.
“இது தான் நம்ம ரூம்” என்றவன் தானே சிரித்துக் கொண்டான்.
“எதுக்கு சிரிக்கிறிங்க?”
“நான் ஒருத்தன், இங்க என்னமோ நிறைய ரூம் இருக்கிற மாதிரி, இது தான் நம்ம ரூம்னு சொல்லிட்டு இருக்கேன் பாரு” என்று சிரித்தவனை அவ்வளவு பிடித்தது அவளுக்கு. முகத்தில் அவ்வளவு சோர்வு இருந்தாலும் எதையும் காட்டிக் கொள்ளாமல் இருந்தவனை ஆழ்ந்து பார்த்திருந்தாள்.
“நானும் காலையில இருந்து பார்க்குறேன், மேடம் பார்வை எல்லாம் பலமா இருக்கே” என்றான்.
“தெரியலை, ஆனா உங்களைப் பார்த்துட்டே இருக்கணும் போல இருக்கு உதய். என்னை ரொம்ப அட்ராக்ட் பண்றிங்க” என்றாள்.
“இதைவிட வேற என்னடி வேணும் ஒரு புருஷனுக்கு” என்று அவளின் இடையில் கையைக் கொடுத்து தன்னருகில் இழுத்துக் கொள்ள,
“உனக்கு பார்த்துகிட்டே இருக்கணும்னு தோணின மாதிரி எனக்கும் காலையில இருந்து ஒன்னு தோணிட்டே இருக்கு. உனக்கு தோணினதை நீ பண்ணிட்ட. அப்போ நானும் நினைச்சதை பண்ணணும்ல” என்றான் அவளின் இதழ்களை வருடியபடி.
“அதுக்கு நல்ல நேரம் காலம் பார்த்திங்க? என்ன நினைக்க மாட்டங்க. எல்லாரையும் நான் எப்படி பார்ப்பேன்? கதவைத் திறங்க உதய்” என்று பேசிக் கொண்டிருந்தவளின் இதழ்களை மேற்கொண்டு பேசவிடாமல் பூட்டியிருந்தான்.
தன் அணைப்பில் இருந்தவளின் வாசத்தில் கிறங்கி, அவளுள் கரைந்து, இதழ் முத்தமா யுத்தமா என்று தெரியாத அளவிற்கு ஒரு முத்த போரை நிகழ்த்திக் கொண்டிருந்தவன், வெளியே கேட்ட கோதாவரியின் குரலில் போரை முடிவிற்கு கொண்டு வந்திருந்தான்.
பிடிமானத்திற்கு அவன் சட்டையை இறுகப் பற்றியிருந்தவள், அவன் சட்டையை கசக்கி வைத்திருக்க,
“என்னடி பண்ணி வச்சிருக்க சட்டையை” என்றவனை முறைக்க முயன்று முடியாமல் வெட்கத்தில் அவனுக்குள்ளேயே தன் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.
“நதி”
“ம்ம்”
“இது மட்டுமில்லை, நான் இன்னும் நிறைய நினைச்சேன். அதெல்லாம் என்னன்னு வந்து உனக்கு சொல்றேன்” என்று அவள் காதோரத்தில் சொல்ல,
“அய்யோ உதய் போதும்” என்றவளுக்கு காதுமடல்கள் எல்லாம் சிவந்திருந்தது.
“இதெப்படி போதும்? நோ வே? வந்து வச்சுக்கிறேன்” என்று அவள் நெற்றியில் முத்தமிட்டவன்,
“நீ ரெஸ்ட் எடுமா” என்று அவளை மனமே இன்றி விடுவித்தவன், வெளியே செல்ல எத்தனிக்க,
“ஏங்க ஒரு நிமிஷம்” என்றவள், கசங்கிய அவன் சட்டையை நீவி விட்டாள்.
“ங்கான்..இப்போ போங்க” என்றாள்.
“பெர்பெக்ட்டா” என்றான் சிரிப்புடன்.
“ம்ம்” என்றவள்,
“இப்படி சிரிக்காதிங்க. உங்க முகத்தை விட்டு கண்ணை எடுக்கவே முடியலை” என்றாள்.
அவளின் கையை அப்படியே தன் நெஞ்சோடு வைத்து அணைத்துக் அழுத்திப் பிடித்துக் கொண்டவன்,
“சிரிச்சுட்டே இருக்கேனோ? எனக்கே இதெல்லாம் புதுசா இருக்கு” என்றவனுக்கும் வெட்கம் வந்து தொலைத்தது.
ஆணின் வெட்கம் கூட அந்த இடத்தில் அவ்வளவு அழகாய் இருந்தது.