‘நல்லா பார்த்தாரு. ஆளைப் பார்த்தே பத்து நாள் ஆச்சு’ என்று முனங்கிக் கொண்டாள்.

சரியாக அதே நேரத்திற்கு அவனிடமிருந்து போன் வர சிரித்துக் கொண்டாள்.

“அவர் தான் கூப்பிடுறார்ப்பா. நான் பேசிட்டு வர்றேன்” என்றவள் எழுந்து அறைக்குள் சென்று விட்டாள்.

“நதி” என்றான் எடுத்த எடுப்பில்.

“சார்க்கு எங்க ஞாபகம் எல்லாம் இருக்கா?” என்றாள் முறைப்பாய்.

“மறந்தாத்தானே நினைக்கிறதுக்கு. என் நினைப்பெல்லாம் நீ தான” என்றான் சிரிப்புடன்.

“இந்த கரகாட்டக்காரன் டயலாக் எல்லாம் வேண்டாம்” என்றாள்.

“சரி சரி சரண்டர். மேடம் என்ன பண்றிங்க?” என்றான்.

“மேரேஜ் பட்ஜெட் போட்டுட்டு இருந்தோம். இப்பத்தான் உங்களை நினைச்சேன். கரெக்ட்டா நீங்களும் கால் பண்ணிட்டிங்க” என்றாள்.

“என்னைய நினைச்சியா? பரவாயில்லையே? மேடம்க்கு எங்க ஞாபகம் எல்லாம் இருக்கு” என்றான்.

“உங்க ஞாபகம் மட்டும் தான் இருக்கு” என்றாள் பட்டென்று.

“இது தப்பாச்சே? பொண்டாட்டியை இப்படி எல்லாம் ஏங்க விடக் கூடாதே. என்ன பண்ணலாம்?” என்றான் யோசிப்பவன் போல்.

“சார் இப்போ என்ன பண்ண போறீங்க?” என்றாள் சிரிப்புடன்.

“பேசாம கிளம்பி அங்க வந்துடவா?” என்றான்.

“இங்க வந்து”

“அன்னைக்கு ட்ரையல் ரூம்ல பண்ணதை ட்ரை பண்ணி பார்ப்போம்” என்றான் கிண்டலுடன்.

“இந்த வேலையெல்லாம் ஆகாது. அன்னைக்கு ஏதோ பாவமேன்னு கட்டிப் பிடிச்சேன்” என்றாள்.

“இன்னைக்கும் நான் பாவம் தான்டி” என்றான்.

“அய்யா சாமி, ஆளை விடுங்க. பேசுறதே இல்லை, அப்படியும் பேசினா விவகாரமா பேச வேண்டியது” என்றவளுக்கு போனை வைக்கவே மனமில்லை.

“இன்னும் பத்து நாள் தான். அப்பறம் இந்த நதி குமரன் கிட்ட தான் வந்தாகனும். அப்போ வச்சுக்கிறேன்” என்றவன்,

“நதி நான் அப்பறம் கால் பண்றேன்” என்றபடி வைத்துவிட்டான். எப்போது அழைத்தாலும் அப்படித்தான் திடீரென்று வைத்து விடுவான். முதலில் ஒரு மாதிரி உணர்ந்தவளுக்கு இப்போது அதுவே பழகி விட்டிருந்தது.

“என்னம்மா மாப்பிள்ளை என்ன சொன்னார்?” என்றார் வரதன்.

“சும்மா பேசிட்டு இருந்தோம்ப்பா” என்றவளிடம்,

“அவருக்கு செயின் எடுக்குறதா இல்லை பிரேஸ்லெட் எடுக்குறதான்னு கேட்கச் சொன்னேனே நதி. கேட்டியாமா?” என்றார்.

“அதை மறந்துட்டேன்ப்பா. செயினே எடுத்துடுவோம்” என்றவள்,

“என்னோட லாஸ்ட் பைவ் மன்த் சேலரி அப்படியே தான்ப்பா இருக்கு. செலவுக்கு அதையும் எடுத்துக்கோங்க” என்றாள்.

“அதெல்லாம் வேண்டாம் நதி. உனக்குன்னு வச்சுக்கோமா” என்றார்.

“அதென்ன எனக்குன்னு? இப்பவும் எனக்குத் தான செய்றிங்க? அதுக்குத் தான் யூஸ் பண்ணிக்க சொல்றேன். அப்பறம் எனக்கு இருபத்தஞ்சு சவரன் நகையே போதுமப்பா. அடுத்து மகதி வேற இருக்கா. அதனால் எல்லாத்தையும் யோசிச்சு பண்ணுங்க” என்றாள் பொறுப்பாய்.

“ஒரு முப்பது சவரனாவது போட்டாத்தானமா உனக்கும் மதிப்பா இருக்கும்” என்றார் சாரதா.

“மதிப்புக்காக கடன் வாங்கி அல்லல் பட வேண்டாம்னு சொல்றேன்ம்மா. நம்மகிட்ட இருக்குறதுல கடன் வாங்காம என்ன பண்ண முடியுமோ அதைப் பண்ணுங்க போதும்” என்று முடித்துவிட்டாள்.

“தம்பி தங்கச்சிங்கன்னு பார்த்து உங்களை இப்படி விட்டுட்டேன்லமா”என்று வரதன் புலம்ப,

“போனதை நினைச்சு வருத்தப்பட்டு என்ன ஆகப் போகுதுப்பா? எது எப்படி இருந்தாலும் என்னை நல்லா படிக்க வச்சிருக்கிங்க. மகதியும், நரேனும் அதே மாதிரி படிச்சு முடிச்சுட்டா அவங்க வாழ்க்கையை அவங்க பார்த்துப்பாங்கப்பா. வேற என்ன வேணும்? அளவா இருந்தாலும் நிறைவா இருந்தா அதுவே போதும்ப்பா” என்றாள் நதி.

“நானும் கொஞ்சம் சுதாரிச்சு பிழைச்சிருந்தா இப்போ உங்களுக்கு இப்படி கணக்குப் பார்த்து செலவழிக்கனும்னு அவசியம் இருந்திருக்காது. காலம் கடந்து புத்தி வந்து என்ன பண்றது?” என்றார் வரதன்.

“ஒரு ஒற்றுமையைப் பார்த்திங்களாப்பா?” என்றாள்.

“என்னம்மா?”

“என் அப்பாவை மாதிரியே வர்ற புருஷனும் இருக்கணும்னு நினைச்சேன். கடவுளுக்கு அது நேரா கேட்டிருச்சு போல. உங்களை மாதிரியே குடும்பத்துக்காகவே செய்ற மனுஷனை அனுப்பி வச்சிருக்கார் பாருங்க. நீங்க இப்ப புலம்புறிங்க? உங்க மாப்பிள்ளை எப்ப புலம்ப போறாரோ? காமெடி என்னன்னா? உங்க ரெண்டு பேர் புலம்பலையும் கேட்குற ஒரே ஆள் நான்தான்” என்று சொல்லி சிரித்தாள்.

அவள் சிரித்துக் கொண்டே சொன்னாலும், அதன் பின்னிருந்த வலியும், பயமும் அவருக்கு நன்றாகப் புரிந்தது.

“நதி, நீ எப்படி நம்ம குடும்ப கஷ்ட்ட நஷ்ட்டம் தெரிஞ்சு, ஒரு நிலைமைக்கு வரணும்னு நினைச்சியோ, அதே மாதிரி மாப்பிள்ளையும் அவர் வீட்டை நினைச்சிருக்கலாம். இதை தப்பு சொல்ல முடியாதுல்லடா” என்றார் சாரதா.

“நான் தப்பு சொல்லவே இல்லம்மா. ஆனா அப்பா மாதிரி ஒரு நாள் அவரும் பீல் பண்ணிடக் கூடாதுன்னு நினைக்கிறேன். வாழ்க்கையில கொஞ்சமாவது சுயநலம் அவசியம் இருக்கனும்மா” என்றாள் தீராநதி.

“நதி நீ ரொம்ப பொறுப்பா இருக்குறது பல நேரம் பெருமையா இருந்தாலும் சில நேரம் பயமாவும் இருக்குமா. அங்க போய் இப்படி எல்லாம் பேசி வச்சுடாத” என்றார் சாரதா.

“நான் யார் விஷயத்துலயும் தலையிட மாட்டேன். யாரும் என்னோட விஷயத்துல தலையிடாத வரை” என்றாள்.

“நதி எதா இருந்தாலும் மேனேஜ் பண்ணிக்குவா சாரதா. ஏன் கண்டதை யோசிச்சு கவலைப்படுற. விடு பார்த்துக்கலாம்” என்ற வரதனின் வார்த்தைகள் தான் சாரதாவை கொஞ்சம் ஆறுதல் படுத்தியிருந்தது.

மீதம் இருந்த நாட்களும் உருண்டோடியிருக்க, குறித்த நாளில், குறித்த முகூர்த்தத்தில் மூன்று முடிச்சிட்டு அவளை தன்னில் சரி பாதியாக்கிக் கொண்டான் குமரன்.

கல்யாணமே ஒரு கலவரத்தில் நடந்து முடிந்ததைப் போல் முடிந்திருந்தது.

கண்ணன், தான் இல்லாமல் அந்த வீட்டில் ஒன்றுமே நடக்காது என்ற பிம்பத்தைக் காட்டிக் கொண்டு மண்டபம் முழுவதும் சுற்றிக் கொண்டிருக்க, கல்யாண் வந்தவர்களை கவனிப்பதில் பிசியாய் இருந்தான். தீபா, குமரனுக்கும் நதிக்கும் என்ன வேண்டுமென்று பார்த்து பார்த்து செய்து கொண்டிருந்தாள்.