வாசல் 6:

திருமணத்திற்கு  பத்து நாட்கள் மட்டுமே இருக்க, குமரனுக்கு இன்னமும் டிப்பார்ட்மென்ட்டில் எழுதிக் கொடுத்திருந்த லீவும் கிடைத்தபாடில்லை. மொத்த குடும்பமும் அங்கு கூடியிருந்தனர். பத்திரிக்கை அடிப்பது, கொடுப்பது என்று நாட்கள் சக்கரம் கட்டிக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தது.

நதியுடன் அவ்வப்போது போனில் பேசிக் கொள்வதோடு சரி. அந்த இரண்டு சந்திப்புகளுக்குப் பிறகு அவளை நேரில் சென்று பார்க்க முடியாத அளவிற்கு அவனுக்கும் வேலை இருந்து கொண்டே இருந்தது.

“எத்தனை நாள் லீவ் எழுதி கொடுத்திருக்க குமரா?” என்றாள் தீபா.

“பதினஞ்சு நாள்க்கா” என்றான்.

“ஏன் குமரா ஒரு ஒரு மாசமாவது லீவ் போடலாம்ல?” என்றாள் தீபா.

“நான் என்ன மாட்டேன்னா சொல்றேன்? இதுக்கே இன்னும் அப்ரூவல் ஆகலை,பார்ப்போம்” என்றான் குமரன்.

“என்ன குமரா இப்படி சொல்ற? கல்யாண வேலை எவ்வளவு இருக்கு? அதெல்லாம் பார்க்க வேண்டாமா?” என்றான் கண்ணன்.

“அதுக்குத்தான் நீங்க எல்லாரும் இருக்கிங்களே மாமா. நீங்க பார்த்துக்கோங்க” என்றான்.

“அவரு தான நல்லா பார்த்துப்பாரு. அட ஏன்டா நீ வேற?” என்று சிரித்தான் கல்யாண்.

“பெரிய மச்சானுக்கு என்னைப் பேசலைன்னா தூக்கம் வராதே. ஏன் நாங்க எல்லாம் சரியா பார்க்க மாட்டோமா? மாப்பிள்ளை கல்யாணத்தை எப்படி நடத்துறோம்னு பாருங்க” என்றான் கண்ணன்.

“ரெண்டு பேரும் ஓவரா நடிக்காதிங்க” என்ற தீபா,

“அண்ணனையும், இவரையும் நம்பாத குமரா. சாயந்தரம் ஆறுமணிக்கு மேல ஆனா, ரெண்டு பேரும் கூட்டு சேர்ந்து இப்போ ஓவரா சரக்கு வேற அடிக்கிறாங்க” என்றாள் தீபா.

“என்ன மாமா இதெல்லாம்” என்று அவன் முறைத்த முறைப்பில் கப்சிப் என்று அடங்கினான் கண்ணன்.

“இப்போ எதுக்குடா அவரைத் திட்டுற? ரொம்பவெல்லாம் இல்லை. ஏதோ கொஞ்சம் உடம்பு வலிக்கு குடிக்கிறது தான்” என்றான் கல்யாண்.

“இன்னைக்கு கொஞ்சம்னு ஆரம்பிக்கிறது தான் நாளைக்கு பெருசா வந்து நிக்கும். உங்க பசங்க உங்களைப் பார்த்து தான் கத்துக்குவாங்க” என்ற குமரனுக்கு ஏகத்தும் எரிச்சல்.

கல்யாணும், கண்ணனும் வெளியே பார்ப்பதற்கு அடித்துக் கொள்பவர்களைப் போல் பேசிக் கொள்வார்கள். ஆனால் சரக்கு என்று வந்துவிட்டால் ஒரே அணியாக மாறி நகமும் சதையுமாய் தண்ணி அடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

கண்ணனுக்கு வேலை என்று உருப்படியாக எதுவும் இல்லை. தீபாவை கட்டிக் கொடுக்கும் போது நல்ல வசதி வாய்ப்புகளோடு இருந்தவன் தான். சேர்க்கை சரியில்லாமல் அனைத்தையும் இழந்திருந்தான். குமரனும் அவனுக்கு வைத்துக் கொடுக்காத தொழில்கள் இல்லை. எல்லாமே ஆறு மாதம் வரை மட்டுமே தாக்குப் பிடிக்கும். அனைத்தும் நட்டம். ஒவ்வொன்றிலும் ஒரு நொட்டமும் சொல்வான் கண்ணன்.

ஆனால் பொண்டாட்டி பிள்ளைகளின் மீது பாசம் அதிகம். மாமியார் வீட்டின் மீதும் தான். எது குறைந்தாலும் மாப்பிள்ளை மவுசு மட்டும் மாமியார் வீட்டில் அவனுக்கு குறைந்து விடக் கூடாது. அனைவரும் மருமகனுக்கு பயப்பட, அவன் பயந்து, பணிந்து செல்லும் ஒரே ஆள் குமரன் மட்டுமே.

குமரனுக்கு அக்கா தீபா என்றால் உயிர். அவள் படும் கஷ்ட்டங்களைப் பார்த்து ஒரு முறை கண்ணனை அடித்தே விட்டான். அன்றிலிருந்து அவனைக் கண்டாலே அமைதியாகி விடுவான் கண்ணன். இப்போதும் குமரன் ஒரு தொழிலை வைத்துக் கொடுத்திருக்கிறான். ஏதோ அதிகப்படியான வருமானம் இல்லை என்றாலும், கையைப் பிடிக்காமல் போய் கொண்டிருக்கிறது.

“இன்னும் கொஞ்சம் பெரிய மண்டபமா  பார்த்திருக்கலாம்?” என்று கல்யாண் தன் குறையை சொல்ல,

“இதுவே போதும்ணா. அவசரத்துக்கு வேற எதுவும் கிடைக்கலை” என்றான் குமரன்.

“இது சிம்ப்பிளா தெரியாதா குமரா?” என்றான்.

“ரொம்ப செலவு எல்லாம் வேண்டாம்ண்ணா. சிம்பிளாவே பண்ணிப்போம்” என்றான் குமரன் யோசனையுடன்.

“செலவைப் பத்தி யோசிக்கிறவனா நதிக்கு அறுபதாயிரத்துக்கு புடவை எடுத்த?” என்றார் கோதாவரி.

“உங்களுக்கு என்னம்மா பிரச்சனை? எனக்கு அது பிடிச்சிருந்தது எடுத்துக் கொடுத்தேன். நான் ஒரு நாள் செலவு பண்ணது மட்டும் தான் உங்க கண்ணுக்குத் தெரியுது. இந்த ஒன்பது வருஷமா சிக்கனமா இருந்தது எல்லாம் உங்க கண்ணுக்குத் தெரியலை. ஏன்? பத்து ரூபாயை பத்து தடவை என்ற நீங்க கூடத்தான் அன்னைக்கு பதினெட்டாயிரம் ரூபாய்க்கு புடைவை எடுத்திருந்திங்க. நான் ஏதாவது கேட்டேனா?” என்றான் பட்டென்று.

“நீ முன்ன மாதிரி இல்லை குமரா? இப்பல்லாம் அம்மான்னு கூட பார்க்காம எடுத்து எறிஞ்சு பேசுற? உங்க அண்ணன் தான் கல்யாணம் ஆகவும் தனியா போயிட்டான்னு பார்த்தா, நீ இன்னும் கல்யாணமே முடியலை , அதுக்குள்ள அவளைத் தாங்கிக்கிட்டு இருக்க? இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ?” என்று ஆரம்பிக்க,

“இவளுக்கு கொஞ்ச நாளா பேய் பிடிச்சு ஆட்டுது குமரா? இவ பேசுறதை எல்லாம் பெருசா எடுத்துக்காத” என்ற சங்கரன்,

“பெரியவனே, கல்யாண செலவுல கொஞ்சமாவது நீ குடுக்கலாம்ல. உன்னோட கல்யாணத்துக்கு மொத்த செலவையும் குமரன் தான பார்த்துக்கிட்டான். இப்போ அவனுக்கு என்ன செய்ய போற நீ?” என்றார் பெரிய மகனிடம்.

“என்கிட்டே என்னப்பா இருக்கு? நான் என்ன கவர்மென்ட் சம்பளமா வாங்குறேன்? மாசம் முப்பதாயிரம் வாங்குறேன். அதுவே தொட்டுக்கோ துடைச்சுக்கோன்னு பத்த மாட்டேங்குது.அவனுக்கு செய்யணும்னு எனக்கு மட்டும் ஆசையில்லையா?” என்றான் கல்யாண்.

“அதெல்லாம் வேண்டாம்ப்பா! நான் பார்த்துக்கிறேன்” என்றான் குமரன்.

“நீ இப்படியே இருக்காத குமரா. நீ இப்படி இருக்குறது தான் இவங்களுக்கு இன்னமும் வசதியா போய்டுது. இனி உனக்குன்னு ஒரு குடும்பம் ஆகிடும். போதும் நீ எல்லாருக்கும் செஞ்சது. இவங்களுக்கு என்ன செஞ்சாலும் நன்றியே இருக்காது.

தனக்குன்னா நல்லததை தேடுறவங்க, உனக்குன்னா உள்ளதே போதும்ற அளவுக்கு நினைச்சுக்கிறாங்க. அன்னைக்கு கடைல வச்சே எனக்கு அசிங்கமா போய்டுச்சு. பொண்ணு வீட்ல நம்மளை என்ன நினைச்சிருக்க மாட்டாங்க?” என்றார் குறையுடன்.

“என்னப்பா என்னவோ எங்களையே குத்தம் சொல்றிங்க? காஸ்ட்லியா எடுத்தா எப்பவும் இவனுக்குப் பிடிக்காது. நான் எங்க இதெல்லாம் போடப் போறேன்னு வாயை அடைச்சுடுவான். அதான் எப்பவும் எடுக்குற மாதிரி எடுத்துட்டேன்” என்றான் கல்யாண்.

“அதுக்காக கல்யாணத்துக்கும் அப்படியே எடுப்பியாண்ணா? ஏன் உனக்கு அப்படித்தான் எடுத்தியா?” என்றாள் தீபா.

“நீ கொஞ்ச நேரம் வாயை மூடு தீபா” என்றான் கல்யாண்.

“எல்லாரும் கொஞ்சம்  அமைதியா இருங்கிங்களா? யாரும் எதுவும் பேச வேண்டாம். நம்ம வீட்ல யார் எப்படி இருக்கீங்க? எப்படி நடந்துக்கிறிங்கன்னு தெரியாத அளவுக்கு நான் என்ன முட்டாளா?” என்ற குமரன்,

“எனக்கு டியூட்டிக்கு டைம் ஆச்சு. நான் கிளம்புறேன்ப்பா” என்று சங்கரனிடம் சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டான்.

நதியின் வீட்டில் அனைவரும் அமர்ந்து கல்யாண செலவுக்கான பட்ஜெட்டை போட்டுக் கொண்டிருந்தனர்.

கணக்கை எழுதிக் கொண்டிருந்தவளுக்கு ஏனோ குமரனின் ஞாபகமாவே இருந்தது. அதே சிந்தனையில் எழுதிக் கொண்டிருந்தவளை யோசனையுடன் பார்த்தார் வரதன்.

“என்ன நதி? கவனம் எல்லாம் இங்க இல்லையே?” என்றார்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா!” என்றவள்,

“அங்க போய் நான் சமாளிச்சுடுவேனாப்பா. எனக்கென்னவோ கொஞ்சம் பயமா இருக்கு” என்றாள் மனதை மறைக்காமல்.

“கல்யாணம் ஆகப் போற எல்லா பொண்ணுங்களுக்கும் இருக்குற பயம் தான் நதி. யார் எப்படி இருந்தாலும் கட்டுன புருஷன் சரியா இருந்தா போதும். குமரன் தம்பி பார்த்துக்குவாரு” என்றார் சாரதா.