“ஆமா இந்த கல்யாண செலவெல்லாம் யாரோடது?” என்றாள்.

“ஏன்? எல்லாம் குமரனோடது தான். அவன் தான் அப்பாகிட்ட பணத்தை கொடுத்து விட்ருக்கான்” என்றான் கல்யாண்.

“அப்போ சரி” என்றாள் ராணி.

“எதுக்கு கேட்ட?” என்றான்.

“எடுக்குற புடவையை நல்லா எடுக்கலாமேன்னு தான்” என்றவள் தீவிரமாய் புடவை அலசலில் இறங்கினாள்.

கல்யாணும், கண்ணனும் ஆண்களுக்கான உடையை பார்க்க சென்றிருந்தனர்.

“புடவை என்ன பிரைஸ்க்கு பார்க்கட்டும் அங்கிள்?” என்றாள் நதி.

“உனக்கு என்ன பிடிக்குதோ அதை எடுத்துக்க சொன்னான்மா” என்றார் சங்கரன்.

“கொஞ்ச நேரம் வாயை மூடுங்க” என்று அவரை அதட்டிய கோதாவரி,

“ஒரு முப்பதாயிரம், அதுக்குள்ளே வர்ற மாதிரி பார்த்து எடும்மா” என்றார்.

“சரிங்க ஆன்ட்டி”  என்றவள் அவனுக்கு என்ன நிறம் பிடிக்கும் என்று தீபாவிடம் கேட்டு விட்டு, அதே நிறத்திலேயே புடவையை எடுத்திருந்தாள்.

“என்ன நதி இவ்வளவு சீக்கிரம் செலக்ட் பண்ணிட்ட. ஆனா புடவை ரொம்ப அழகா இருக்கு” என்றாள் தீபா.

“ஆமா நதி புடவை ரொம்ப அழகா இருக்கு” என்றார் சாரதாவும்.

“நதி ஆனா இந்த புடவை இருபதாயிரம் தான் போட்ருக்கு. வேற பாருமா. குமரனுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான்” என்றாள் தீபா.

“ஒரு தடவை கட்றதுக்கு எதுக்கு அண்ணி அவ்வளவு பணம் செலவழிக்கனும்? இதுவே போதும்” என்றவள்,அடுத்தடுத்த புடவைகளைப் பார்க்க, அனைவருக்கும் எடுத்திருந்தனர். கோதாவரியும், யுவராணியும் நதியின் சேலை விலையை ஒட்டியே பட்டுப் புடவை எடுத்திருக்க, பல்லைக் கடித்தார் சங்கரன்.

“வயசான காலத்துல இவ்வளவு விலை போட்டு பட்டுப் புடவை அவசியமா? கோதாவரி” என்று சங்கரன் கடுப்பைக் காட்ட,

“நீங்களா எடுத்து தர்றீங்க? குமரனோட அம்மான்னு தெரிய வேண்டாமா?” என்றவர்,

“ஆமா, எவ்வளவு பணம் குடுத்து விட்டான்?” என்றார்.

“அஞ்சு லட்சம் குடுத்து விட்டான். இப்போ அதுக்கு என்ன?” என்றார்.

“ரெண்டு லட்சதுக்குள்ளயே முடிஞ்சுடும் போல இருக்கே. மிச்ச பணத்தை அப்படியே என்கிட்டே குடுங்க” என்றார் கோதாவரி.

“கடைன்னு பார்க்குறேன். இல்லைன்னா நடக்குறதே வேற? பெத்த பையன்கிட்ட பொய் சொல்ல சொல்றியாடி? சின்ன பொண்ணா இருந்தாலும், எவ்வளவு பக்குவமா யோசிச்சு சிக்கனமா செலவு பண்ணது அந்த பொண்ணு. நீயும் உன் பெரிய மருமகளும் எதுக்கு இந்த ஆட்டம் ஆடுறிங்க?” என்று அதட்டினார் சங்கரன்.

“உங்களுக்கு என்னைப் பேசலைன்னா தூக்கமே வராதே..! நாளைக்கு வரப் போறவளுக்கு இவ்வளவு செலவு பண்றவன், பெத்த தாய்க்கு பண்ணக் கூடாதா?” என்று ஆரம்பிக்க,

“உன்கிட்ட மனுஷன் பேசுவானா?” என்ற சங்கரன்,

“அம்மாடி நதி, அப்படியே மகதி, நரேன்க்கும் எடுத்துடும்மா” என்றார்.

“எதுக்கு அங்கிள் இதெல்லாம்?” என்றாள் நதி.

“முறைன்னு ஒன்னு இருக்குள்ள. அப்பா சொல்ற மாதிரி எல்லாருக்கும் எடுத்துடு நதி” என்றாள் தீபாவும்.

 அதற்குள் கல்யாணும், கண்ணனும் குமரனுக்கான ஜவுளியை எடுத்து வந்திருந்தனர்.

“அதுக்குள்ள அவனுக்கு எடுத்துட்டிங்களா?” என்றாள் தீபா.

“ஒரு பட்டு வேட்டி சட்டை, ஒரு பேண்ட் சட்டை இதை எடுக்க எவ்வளவு நேரம் ஆகும்?” என்றான் கல்யாண்.

அவன் எடுத்ததை தீபா பார்க்க, அதைப் பார்த்த நதிக்கு எதுவுமே பிடிக்கவில்லை.

“அண்ணா குமரனுக்கு இன்னும் கொஞ்சம் நல்லா எடுத்திருக்கலாம். இதை மாத்திடலாமா?” என்றாள் தீபா.

“எப்பவும் காக்கி சட்டையோட திரிவான். இதுவே நல்லா இருக்கும் தீபா” என்று பேச்சை முடித்திருந்தான் கல்யாண்.

“என்னம்மா அவருக்கு இப்படி எடுத்திருக்காங்க? மாப்பிள்ளையோட டிரஸ் மாதிரியே இல்லை” என்று சாரதாவிடம் முனுமுனுத்தாள் நதி.

“பேசாம இரு நதி. நாம ஏதாவது சொல்லப் போய் அதுக்கும் ஏதாவது பேசிட போறாங்க உன் மாமியார்” என்று சாரதா மகளின் வாயை அடக்கினார்.

கல்யாண் தனக்கு எடுத்ததை மனைவியிடம் காட்ட அதைப் பார்த்த நதிக்கு உள்ளுக்குள் எறிந்தது.

“அம்மா, மாப்பிள்ளைக்கு நார்மலா எடுத்துட்டு, இவர் என்னமோ புது மாப்பிள்ளை மாதிரி புல்லா ப்ராண்டேட்ல எடுத்திருக்கார். அவரோட டிரஸ் எனக்குப் பிடிக்கவே இல்லை” என்றாள் நதி மீண்டும்.

“தம்பி கல்யாணத்துல அண்ணன் நல்ல விதமா போடக் கூடாதா நதி, கொஞ்ச நேரம் அமைதியா இரு” என்றார் சாரதா.

“நான் எப்போ அப்படி சொன்னேன். அவர் நல்ல விதமாவே போடட்டும். அவர் தம்பிக்கும் அதே மாதிரி நல்ல விதமா எடுத்திருக்கலாம்ல. அதைத் தான் சொல்றேன்” என்றாள் நதி.

“என்னாச்சு நதி? என்ன பிரச்சனை?” என்றாள் தீபா.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை தீபா” என்ற சாரதா மகளின் கையைப் பிடித்து அடக்கினார்.

அன்னையை முறைத்தவள்,

“அப்பா வாங்க போய் நரேனுக்கு பார்க்கலாம்” என்று அவரைத் தள்ளிக் கொண்டு போனவள்,

“அப்பா அவருக்கு நான் ஒரு டிரஸ் எடுக்கட்டுமா?” என்றாள்.

“இதென்னடா கேள்வி. எடுக்கனும்னு ஆசைப்பட்டா எடுடா நதி” என்றார் வரதன்.

அவனுக்காக பார்த்து பார்த்து எடுத்தவள், நரேனுக்கும், வரதனுக்கும் எடுத்துவிட்டு பில் போட்டு வாங்கிக் கொண்டு வந்தாள்.

ஏனோ தீபாவைத் தவிர அங்கிருந்த யாருடனும் ஒன்ற முடியவில்லை அவளால். ஓரமாய் சென்று அமர்ந்துவிட்டாள்.

எப்படி இருந்திருக்க வேண்டிய தினம். ஏன்டா வந்தோம் என்று தோன்றியது அவளுக்கு.

‘நாமளும் அம்மாவையே எடுக்க சொல்லிட்டு பேசாம வீட்லயே இருந்திருக்கலாம்’ என்று கோடி முறை யோசித்துவிட்டாள்.

ஏனோ குமரனைப் பார்க்க வேண்டும் போல் தோன்றியது. சங்கரனையும், தீபாவையும் தவிர்த்து அங்கிருந்த யாரும் அவன் இல்லை என்று வருத்தப்பட்டதாய் தெரியவில்லை.

‘என்னைச் சுத்தி எல்லாரும் இருக்காங்க.ஆனா எனக்கு யாரும் இல்லாத மாதிரி தோணுது நதி’ என்றவனின் குரல் இப்போதும் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.

ஏதோ யோசனையில் தரையை வெறித்தபடி இருந்தவளுக்கு அருகில் வந்து அமர்ந்தான் உதய குமரன்.

“மேடம் என்ன டீப் திங்க்கிங்ல இருக்கீங்க?” என்ற குமரனின் குரலில் நிமிர்ந்தவள், அசுவாரஸ்யமாய் அவனைப் பார்க்க,

“என்ன?” என்றான் புருவத்தை உயர்த்தியபடி.

“நீங்க எப்படி இங்க? எப்போ வந்திங்க?” என்று அவனின் கைகளை பிடித்துக் கொண்டவளுக்கு  கண்கள் சட்டென்று கலங்கிப் போனது.

“பார்த்தா தெரியலை, ஆன் டியூட்டில ஒன் ஹவர் பெர்மிஷன்ல வந்திருக்கேன்” என்றவன் வேர்த்து விருவிறுத்திருந்தான்.

“ரொம்ப வேலையா?” என்றாள் அக்கறையாய்.

“காலையில இருந்து இப்போ தான் உட்காரேன் நதி” என்றான். ஆனால் அவன் முகத்தில் களைப்பை கொஞ்சம் கூட காட்டிக் கொள்ளவில்லை.

“எதுக்கு இவ்வளவு தூரம் அலையணும் உதய். எல்லாம் எடுத்தாச்சு” என்றாள்.

“ம்ம் அக்கா சொன்னா நீ புடவை எடுத்த லட்சணத்தை” என்று முறைத்தவன்,

“வா” என்று கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போக,

“ஏங்க எங்க கூட்டிட்டு போறீங்க?” என்றவள் தவிப்புடன் அவன் பின்னால் சென்றாள். நதியுடன் வந்த குமரனை அவன் வீட்டினர் ஆவென்று பார்த்திருக்க, தீபா சிரித்துக் கொண்டாள்.

“முகூர்த்த புடவை பார்க்கணும்” என்றான். அவனை யூனிபார்மில் பார்த்தவர்கள், கடகடவென்று அனைத்தையும் எடுத்துக் காட்ட துவங்கினர்.

“கல்யாண புடவை எடுத்தாச்சு குமரா” என்றார் கோதாவரி.

“அதை நிச்சயத்துக்கு கட்டிக்கட்டும். முகூர்த்த புடவை இப்ப நான் செலக்ட் பண்ணிக்கிறேன்” என்றான் பட்டுக் கத்தரித்தார் போன்று.

நதி தான் அவனை அழைத்திருக்கிறாள் என்று நினைத்த கோதாவரி அவளை முறைத்தார்.

“இந்த ஆன்ட்டி வேற என்னை தீவிரவாதியை பார்த்த மாதிரி பார்த்து வைக்கிறாங்க” என்று மனதிற்குள் நொந்து கொண்டாள்.

அழகிய மெரூன் வண்ண புடவையை எடுத்தவன்,

“பிடிச்சிருக்கா?” என்றான் நதியிடம்.

“உதய் இந்த புடவை அறுபதாயிரம் போட்டிருக்கு. என்னோட ஒரு மாச சம்பளம். இவ்வளவு காஸ்ட்லியா வேண்டாம்” என்றாள்.

“ஆனா எனக்கு இது ரொம்ப பிடிச்சிருக்கு நதி. உனக்கு பிடிக்கலையா?” என்றான்.

“புடவை நல்லா இருக்கு, விலைதான்” என்று இழுத்தாள்.

“ஒரு தடவை தான எடுக்கப் போறோம். ப்ளீஸ் இதை எடுத்துக்கோ” என்றவனின் குரலில் அதற்கு மேல் மறுக்க முடியவில்லை அவளால்.

“அறுபதாயிரமா? பணம் என்ன மரத்துலையா காய்க்குது குமரா? உங்க அண்ணிக்கே நாற்பதாயிரம் புடவை தான் எடுத்தோம்” என்றார் கோதாவரி.

“அப்பவும் அவன் தான் பணம் குடுத்தான்ம்மா” என்றாள் தீபா பட்டென்று.

“யாருக்கு எவ்வளவுக்கு எடுத்தாங்கன்ற பேச்சுக்கே நான் வரலை. எனக்கு மனைவியா வரப் போறவளுக்கு நான் எடுக்குறேன். இதுல உங்களுக்கு என்ன பிரச்சனைம்மா?” என்றான் நேர் பார்வையாய்.

அதற்கு மேல் கோதாவரி வாயாடாமல் நதியை முறைத்தபடி அமைதியாகிவிட்டார்.

சாரதாவிற்கு கோதாவரியை நினைத்து ஒரு பக்கம் பயமாக இருந்தாலும், குமரன் அனைத்தையும் பார்த்துக் கொள்வான் என்று நம்பினார். அவனின் இன்றைய செயலே அவருக்கு அப்படி ஒரு நிம்மதியைத் தந்திருந்தது.

தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவளைப் பார்த்தவன்,

“என்னாச்சு நதி?” என்றான் கேள்வியாய்.

“எனக்கு உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும்” என்றாள்.

“தனியா தான இருக்கோம்” என்றான்.

அவள் அவனை முறைக்க, சிரித்துக் கொண்டவன்,

“ஜென்ட்ஸ் செக்சன் போயிட்டு வந்திடுறோம்” என்று அவளையும் இழுத்துக் கொண்டு சென்றான்.

“என்ன மச்சான்? சின்ன மச்சான் ஒரு மாதிரி வேகமா இருக்குற மாதிரி தெரியுது?” என்றான் கண்ணன்.

“எல்லாம் கொஞ்ச நாளைக்கு அப்படித்தான் இருக்கும் மாப்பிள்ளை” என்றான் கல்யாண்.

ட்ரையல் ரூமிற்குள் அவனை அழைத்துக் கொண்டு சென்றவள், கதவை சாத்த,

“இப்போ இங்க எதுக்கு வந்திருக்கோம்?” என்றவனை முறைத்தாள்.

“என்ன நதி?” என்றான் புரியாமல்.

“இதைப் பிடிங்க” என்று கையில் இருந்த பைகளை அவனிடம் கொடுத்தவள், அவனே எதிர்பார்க்கா வண்ணம் அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

“அவள் என்னவோ பேசப் போகிறாள்” என்று நினைத்து வந்தவன் இப்படி சட்டென்று தன்னை அணைத்துக் கொள்வாள் என்று சுத்தமாய் நினைக்கவில்லை

“நதி” என்றவனின் குரலில்,

“டூ மினிட்ஸ்” என்றாள்.

“யூனிபார்ம் எல்லாம் ஒரே ஸ்வெட்டிங்கா இருக்குமா” என்றான் கரகரப்பான குரலில்.

“பரவாயில்லை” என்றவள் தலையை நிமிரவே இல்லை.

“என்ன பண்றிங்க மேடம்?” என்றான்.

“பார்த்தா தெரியலை, கட்டிப்பிடிச்சிருக்கேன்” என்றாள்.

“இது தான் உங்க ஊர்ல கட்டிப் பிடிக்கிறதா?” என்றான் குறும்பு புன்னகையுடன்.

“இல்லையா பின்ன?” என்றவளைப் பார்த்து சிரித்தவன்,

“நாங்க இதை சாய்ஞ்சுகிறதுன்னு சொல்லுவோம்” என்றான்.

அவள் சட்டென்று விலக, கையில் இருந்த பைகளை அங்கே வைத்தவன், அவளை சட்டென்று இழுத்து அணைத்திருந்தான்.

“இதுக்குப் பேரு தான் கட்டிப் பிடிக்கிறது” என்று அவள் காதோரத்தில் சொல்ல, அவள் தேகம் மொத்தமும் சிவந்திருந்தது.

“என்னாச்சு? மேடம் என்மேல திடீர் கரிசனை எல்லாம் காட்றிங்க?” என்றான் அணைத்தபடி.

“இதுக்கு பேர் கரிசனை இல்லை காதல்” என்றாள்.

“எதுவா இருந்தாலும் நீ  இப்படி இருக்கிறது எனக்கும் பிடிச்சிருக்கு நதி. இங்க வரும் போது கூட நான் நினைக்கலை இப்படி ஒரு சான்ஸ் கிடைக்கும்னு” என்றான் அவளை அணைத்தபடி.

“உதய் கிளம்பலாம்” என்றாள்.

“கிளம்பனுமா?” என்றான்.

“யாராவது பார்த்தா,பொண்ணை ட்ரயல் ரூமிற்குள்  தள்ளிச் சென்ற போலிஸ்ன்னு நாளைக்கு மீடியால வந்துடும்” என்றாள் சிரிப்புடன்.

“வரட்டுமே,  தள்ளிட்டு போனது பொண்ணு இல்லைடா என் பொண்டாட்டின்னு சொல்லிட மாட்டேன்” என்றான் அவனும் அதே சிரிப்புடன்.

“அப்பறம் இதுல இருக்க டிரஸ்சை தான் மேரேஜ்க்கு நீங்க போடணும். இப்பவே சொல்லிட்டேன்” என்றவள் அவனுக்கு எடுத்ததை அவனிடம் நீட்ட, சிரித்துக் கொண்டான்.

“அவங்க எடுத்தது உனக்கு பிடிக்கலையாக்கும்?” என்றான்.

“அது எப்படி உங்களுக்குத் தெரியும்?” என்றாள் கேள்வியாய்.

“இத்தனை வருஷமா பார்க்குறேன். அவங்க எப்படி எடுப்பாங்கன்னு எனக்குத் தெரியாதா?” என்றவனை ஆச்சர்யமாய் பார்த்தாள்.

“எப்படி இப்படி இருக்கீங்க?” என்றாள்.

“பழகிடுச்சு நதி”  என்றவனின் குரலில் இருந்த உணர்வைத் தான் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

“மேடம் இப்போ ஹேப்பியா?” என்றான்.

“ரொம்ப”

“அப்போ நான் கிளம்பட்டுமா? பர்மிஷன் டைம் ஓவர்” என்றான்.

“ம்ம்” என்றவளுக்கு அந்த நாளே அப்போது தான் முழுமை அடைந்திருந்தது.