“சாரி நதி, ஒரு வாரமா ஒரு போன் கூட பண்ண முடியலை” என்றான் குமரன்.

“வேலை அப்படி இருக்கும் போது என்ன பண்ண முடியும்?” என்றாள் நதி.

“நான் பேசலைன்னு உனக்கு வருத்தம் எல்லாம் இல்லையா?” என்றவனின் குரலில் ஏதோ ஒரு ஏமாற்றம்.

“எதுக்கு வருத்தப்படனும்? இத்தனை நாள் உங்க கூட பேசிட்டேவா இருந்தேன்” என்றாள் நதி.

“ம்ம்”  என்றவன் அதற்குமேல் எதுவும் பேசவில்லை. நேராக அவள் அலுவலகத்தின் வாயிலில் இறக்கியவன்,

“நாளைக்கு என்னால கண்டிப்பா பர்சேஸ் வர முடியாது நதி. மினிஸ்டர் பந்தோபஸ்து இருக்கு. உனக்கு என்ன வேணுமோ, விலையைப் பத்தி எல்லாம் யோசிக்காம எடுத்துக்கோ” என்றவன் தன்னிடமிருந்த ஒரு கார்டை நீட்ட,

“இது எதுக்கு?” என்றாள் புரியாமல்.

“பர்சேஸ்க்கு அப்பா பணம் கொண்டு வருவார். ஆனா, உனக்கு தனிப்பட்டு ஏதாவது வாங்கணும்னா இந்த கார்ட்ல வாங்கிக்கோ” என்றான்.

“அதுக்கு ஏன் உங்க கார்ட்ல வாங்கணும்? எனக்கு அப்படி தேவையும் படாதுங்க” என்றாள்.

அவளை ஒரு நிமிடம் எதுவும் பேசாமல் அப்படியே பார்த்திருந்தவன்,

“வரேன்” என்றபடி விருட்டென்று சென்று விட்டான்.

அவன் சென்ற வழியையே பார்த்திருந்தவளுக்கு கண்கள் கலங்கியது. திருமணத்திற்கு முன் எதையும் அளவோடு வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவளின் உள் மனம் உணர்த்திக் கொண்டே இருந்தது. அது கோதாவரியின் பேச்சினால் விளைந்தது.

ஒருவாரம் கழித்து கண்களில் ஏக்கமும் தவிப்புமாய் வந்து நின்றவனின் பார்வையை நதி உணராமல் இல்லை. அவ்வளவு அசதியிலும் தன்னைப் பார்க்க வந்து நின்றவனைக் கண்டதும் கட்டிக் கொள்ள வேண்டும் என்று தோன்றாமல் இல்லை.

அவன் அருகாமையில் மருகும் தன் மனதை அறியாமலும் இல்லை அவள். அவன் கோபமாய் செல்வதைப் போல் தோன்றியது அவளுக்கு.

“மேடம் காலையிலையே கனவா?” என்று பிரியா உலுக்க, அப்போது தான் யோசனைகளில் இருந்து வெளியே வந்தாள் நதி.

“சார் காலையிலையே டிராப் பண்ணிட்டு போறார் போல” என்றாள் பிரியா.

“ம்ம்” என்றவள்,

“டைம் ஆச்சு, வா போகலாம்” என்று பிரியாவை மேற்கொண்டு எதுவும் பேச விடாமல் அழைத்துச் சென்றாள்.

 நதியை இறக்கிவிட்டு சென்று கொண்டிருந்தவனின் மனமும் அமைதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்தது.

‘இந்த ஒரு வாரமும் அவளை எப்போடா பார்ப்போன்னு தவிச்சுட்டு இருந்தேன். ஆனா, அவளுக்கு அப்படி எந்த தவிப்பும்  நினைப்புமே இல்லையா? டிராப் பண்றேன்னு சொல்றேன், வேகமா அவங்க அப்பாவை பார்க்கிறா? அவர் அனுமதி கொடுத்தாத்தான் என் கூட வருவாளாம்மா?’ என்று எண்ணியவனின் மனதிற்குள் ஏதோ ஒன்று கசந்தது.

‘இதெல்லாம் ரொம்ப ஓவர் குமரா? இது அரேன்ஜ்ட் மேரேஜ். என்னமோ உருகி உருகி லவ் பண்ணி லவ் மேரேஜ் பண்ற கணக்கா குதிக்கிற? உன்னை எத்தனை நாளா தெரியும் அவளுக்கு? நீ கூப்பிட்ட உடனே மறுபேச்சு பேசாம உன்கூட வந்துடனுமா? நதி இன்னும் அவங்க பொண்ணு தான். இன்னும் உனக்கு பொண்டாட்டி ஆகலை. அதனால அடக்கி வாசி’ என்று அவன் மனசாட்சி அவனை அதட்டி வைக்க, அதையும் ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தான் குமரன்.

மனம் அமைதியில்லாமல் வண்டியை ஒட்டிக் கொண்டிருக்க, அவனை அழைத்திருந்தாள் நதி.

‘எதுக்கு கால் பண்றா? இப்போதான டிராப் பண்ணிட்டு வந்தோம்?’ என்று யோசித்தபடியே அட்டெர்ன் செய்தான்.

“என்னாச்சு?” என்றான் ஒட்டாத குரலில்.

“ரொம்ப தூரம் போயிட்டிங்களா?” என்றாள்.

“இல்லை” என்றான் யோசனையுடன்.

“ஆபீஸ் வரைக்கும் வர முடியுமா?” என்றாள்.

“எனி ப்ராப்ளம்?” என்றவன் பேசிக் கொண்டே வண்டியை திருப்பியிருந்தான்.

“ப்ராப்ளம் தான்” என்றாள் அமைதியான குரலில்.

“என்னாச்சு நதி? பைவ் மினிட்ஸ், நான் வந்துடுவேன்” என்றவன் ஒரு நிமிடத்திற்கு முன்னதாகவே வந்திருந்தான். பார்க்கிங்கில் நின்றிருந்தவளைப் பார்த்து பதட்டத்துடன் வண்டியை நிறுத்திவிட்டு சென்றிருந்தான்.

“என்னாச்சு?என்ன ப்ராப்ளம்? இப்போதான டிராப் பண்ணிட்டு போனேன்?” என்றான் புரியாமல்.

“நீங்க தான் ப்ராப்ளம்” என்றாள் அவனை முறைத்துக் கொண்டே.

“நானா?” என்று புருவங்களை சுருக்கியவன்,

“புரியலை நதி” என்றான், அவளையே பார்த்தபடி.

“நீங்க முகத்தை இப்படி கோபமா வச்சுகிட்டு போனா எப்படி வேலை பார்க்கத் தோணும்?” என்றாள்.

“வேலை பார்க்கத் தோணாம வேற என்ன தோணும்?” என்றான் குமரன் புருவத்தை உயர்த்தியபடி.

“ம்ம், கட்டிக்கத் தோணும். கட்டிக்கோங்கன்னு சொல்லத் தோணும். முத்தம் குடுக்கத் தோணும். முத்தம் குடுங்கன்னு கேட்கத் தோணும்” என்று அவன் முகம் பார்த்தவள்,

“நீங்க பேசாத இந்த ஒரு வாரமும் அப்படித்தான் தோணுச்சு. இப்படி எனக்கு தோணுனதை எல்லாம் சொல்லத் தான் முடியும். எதையும் செய்ய முடியாது. ஏன்னா, இது பப்ளிக் பிளேஸ்” என்றாள்.

அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே, அவள் பேசிய வார்த்தைகளில் இறுக்கம் குறைந்து தளர்ந்தவன்,

“இது தான் உன் பிரச்சனையா?” என்றான் இதழ்களில் தோன்றிய சிரிப்புடன்.

“ம்ம்”

“பிரச்சனையை சரி பண்றது காவல்துறையோட கடமை இல்லையா?” என்றவன் அவளை நெருங்கி வர,

“பப்ளிக்” என்றாள்.

“அப்போ ப்ரைவேட் பிளேஸ்னா பிரச்சனை இல்லையா?”  என்றவனை முறைத்தாள்.

“இவ்வளவு நேரம் கூட வந்தப்ப எல்லாம் அமைதியா வந்துட்டு, இப்போ ஆபீஸ் பார்க்கிங்ல வச்சு எதுவும் பண்ண முடியாத நிலையில, இப்படி பேசுற பார்த்தியா, அங்க நிக்கிற நதி நீ” என்றான் சிரிப்புடன்.

“இப்படி சிரிச்சுட்டே கிளம்பியிருந்தா, நான் ஏன் உங்களை கூப்பிட்டு வச்சு பேசப் போறேன்” என்றாள்.

“என்னோட கோபம் உன்னை எதுக்கு பாதிக்கனும்?” என்றான் அவளைப் போலவே.

அவனை முறைத்தவள்,

“அதான? என்னை எதுக்கு பாதிக்கனும்? நீங்க எப்படியோ போங்க” என்று திரும்பிச் செல்ல முயன்றவளின் கையைப் பிடித்து இழுத்து தன்னருகே நிறுத்தியிருந்தான்.

“என்னோட கோபம் உன்னை மட்டும் தான்டி பாதிக்கனும். நான் கெஞ்சுனா நீ மிஞ்சனும். நீ மிஞ்சுனா நான் கொஞ்சனும். ப்ராப்ளம் சால்வ்ட்” என்றவன் அவள் நெற்றியில் இதழ்களைப் பதித்து எடுத்திருந்தான்.

“என்ன பண்றிங்க?” என்றவள் சட்டென்று விலக,

“பப்ளிக் பிளேஸ்ன்றதுனால தான் போர்ஹெட்ல கொடுத்தேன், இல்லையின்னா” என்றவன் அவள் இதழ்களைப் பார்க்க,

“உங்களை ஜென்டில்மேன்னு நினச்சேன்” என்றாள் நதி.

“அப்சலியூட்லி நான் ஜென்டில்மேன் தான். இல்லைன்னா, வீட்ல நீ காட்சி கொடுத்ததுக்கும், காலையிலேயே கிடைச்ச உன்னோட அந்த தரிசனத்துக்கும் மனசுக்குள்ள தோணுனதை எல்லாம் அடக்கிக்கிட்டு இப்படி நல்ல பையனா உன்னை டிராப் பண்ணியிருக்க மாட்டேன்” என்றான் குமரன்.

“நான் போறேன். இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாலும் பேச்சுலையே வசியம் பண்ணிடுவிங்க” என்றவள் ஓடியே விட்டாள்.

“நதி” என்று தலையை கோதியபடி நின்றவனுக்கு, தன்னை நினைத்துத் தனக்கே ஆச்சர்யமாய் இருந்தது.

“இந்த பீல் கூட நல்லா இருக்கே” என்று எண்ணியவன், சிரித்தபடி ஹெல்மெட்டை மாட்டிக் கொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்ய, ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருந்த நதியை கிண்டல் செய்தாள் பிரியா.

“சும்மா சொல்லக் கூடாது நதி. காக்கிச்சட்டை செம்ம ஹேண்ட்ஸம் தான்” என்றவளை வெட்கத்துடன் பார்த்திருந்தாள் தீரா நதி.

மறுநாள் குமரன் சொன்னதைப் போல், கல்யாண ஜவுளி எடுக்க அவன் வரவில்லை. வேறு வழியின்றி நதி மட்டும் பெற்றோருடன் சென்றிருந்தாள். குமரனின் குடும்பமே வந்து இறங்கியிருந்தது.

நதியைக் கண்டவுடன் குமரனின் அக்கா தீபா பாசத்துடன் வந்து பேச,

“என்ன அண்ணி? உங்க செல்லத் தம்பியோட பொண்டாட்டியை இப்பவே ஐஸ் வைக்கிறிங்களா?” என்றாள் யுவ ராணி.

“நதியை ஐஸ் வச்சு எனக்கு என்ன ஆகப் போகுது ராணி. நார்மலா பேசுறதுக்கு எல்லாம் அர்த்தம் சொல்லிட்டு இருக்க முடியாது” என்றாள் தீபா.

“அம்மா முதல்ல முகூர்த்த புடவையை பார்த்துடலாம்” என்ற தீபா, “வா நதி” என்று அவளையும் அழைத்துக் கொண்டு சென்றாள்.

“உங்க தங்கச்சி வேணும்னே என்னை கடுப்பேத்துறதுக்காகவே இப்படி பண்ற மாதிரி தோணுதுங்க” என்றாள் ராணி கணவனிடம்.

“கொஞ்ச நேரம் வாயை வச்சுகிட்டு சும்மா இரு ராணி. வந்த வேலையை பார்ப்போம்” என்றான் கல்யாண்.