வாசல் 5:

அடுத்த ஒரு வாரமும் குமரன்  ஊன் உறக்கமின்றி வேலை  பார்த்துக் கொண்டிருந்தான். அடிதடி, ஆக்சிடென்ட்,கொலை, தற்கொலை என்று தினமும் எப்.ஐ.ஆர் விழுந்து கொண்டே இருக்க, வீட்டிற்கு கூட சரியாக செல்ல முடியாத நிலை அவனுக்கு.

நதியிடம் பேசியும் ஒரு வாரம் ஆகியிருந்தது. அவளும் அவனை தொந்தரவு செய்யவில்லை. அவளும் ஆபீஸ், ஆபீஸ் விட்டு வந்தால் படிப்பு என்று நாட்களை கடத்திக் கொண்டிருந்தாள். புல்லட்டில் சாய்ந்து நின்று அவளைப் பார்த்துக் கொண்டிருந்த அவனின் உருவம் மட்டும் அவ்வப்போது மனக்கண்ணில் வந்து போகும் அவளுக்கு.

அன்று தாமதமாய் எழுந்தவள், அவசர அவசரமாய் அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். குளித்து முடித்துவிட்டு வந்தவள்,

“நதி” என்ற சாரதாவின் குரலில், வேகமாய் வெளியே வந்தாள்.

“டைம் ஆச்சும்மா! நான்தான் தூங்கிட்டேன், நீங்களாவது என்னை எழுப்பி இருக்கலாம்ல” என்று தலையில் டவலை சுற்றிக் கொண்டே வந்தாள்.

“நதி” என்று சாரதாவின் அழுத்தமான குரல் கேட்க, அப்போது தான் அங்கே அமர்ந்திருந்த குமரனைப் பார்த்தாள். பரபரப்பான காலை நேரத்தில் அவனை தன் வீட்டில் எதிர்பார்க்கவில்லை.

அவன் இரவு முழுவதும் உறங்கவில்லை என்பதை சிவந்திருந்த அவன் கண்களே அவளுக்குக் காட்டிக் கொடுத்தது.

“வாங்க” என்றாள்.

அதற்குள் வாக்கிங் சென்றிருந்த வரதனும் வந்துவிட்டிருந்தார்.

“வாங்க மாப்பிள்ளை” என்றவர்,

“சாரதா” என்று மனைவியை பார்க்கும் முன், சூடான காபியுடன் வந்திருந்தார் சாரதா.

“தேங்க்ஸ் அத்தை” என்று எடுத்துக் கொண்டவனின் பார்வை என்னவோ நதி மீது தான் இருந்தது.

‘இப்ப எதுக்கு வச்ச கண்ணு வாங்காம பார்த்துட்டு இருக்கார்’ என்று யோசித்தவள், அப்போது தான் தன்னை கவனித்தாள். சாரதா கூப்பிட்ட அவசரத்தில் துப்பட்டாவை போடாமல் வந்திருந்தாள். குளித்து முடித்து சரியாக துவட்டாமல், துப்பட்டாவையும் போடாமல் வெளியே வந்த தன் மடத்தனத்தை எண்ணி தலையில் தட்டிக் கொண்டவள், சட்டென்று அறைக்குள் சென்றிருந்தாள்.

அவளைப் பார்த்துக் கொண்டே காபி குடித்துக் கொண்டிருந்தவனின் இதழ்கள் குறுஞ்சிரிப்பில் அழகாய் மடிந்து கொண்டது, அவளின் செய்கைகளைப் பார்த்து.

“நாளைக்கு நாள் நல்லா இருக்குறதால கல்யாண ஜவுளி எடுத்திடலாம்னு அப்பா உங்க கிட்ட சொல்ல சொன்னார் மாமா” என்றான் குமரன்.

“இதைச் சொல்ல நீங்க இவ்வளவு தூரம் அலையனுமா மாப்பிள்ளை?” என்றவர்,

“சம்மந்தி எனக்கு போன் பண்ணினார் மாப்பிள்ளை” என்றார் .

“நான் இதை சொல்றதுக்காக வரலை மாமா. நான் நதியை பார்க்கத் தான் வந்தேன். ஒரு வாரமா ரெஸ்ட் இல்லை. நதி கூட பேசவும் முடியலை. இப்பவும் நைட் டியூட்டி முடிச்சுட்டு நேரா இங்க தான் வரேன். நாளைக்கு பர்சேஸ் பண்ணவும் என்னால வர முடியாது. அதையும் நதிகிட்ட சொல்லணும்” என்றான்.

அவனுடைய வெளிப்படையான பேச்சில் வரதனும், சாரதாவும் விழுந்து விட்டனர்.

“பரவாயில்லையே மாமா? அக்காவைத் தான் பார்க்க வந்தேன்னு இப்படி தைரியமா சொல்றிங்க? இந்த இடத்துல நீங்க வேற ஏதாவது சாக்கு சொல்லணும், அப்பறம் சமாளிக்கணும். ஆனா அந்த சீன் எல்லாம் இங்க இல்லை போலயே?” என்றாள் மகதி.

“ஏய் மகதி, ஸ்கூலுக்கு கிளம்புற வழியைப் பாரு” என்று சாரதா அடக்க,

“அதான் நீயே சொல்லிட்டியே மகதி. அதெல்லாம் சீன் தான்னு. அதையேன் நாம போடணும். நமக்கு எப்பவும் பேஸ் டூ பேஸ் தான்” என்றான் சிரிப்புடன்.

“வேற லெவல்ல ஸ்கோர் பண்றிங்க மாமா. எங்க அக்கா மயங்குறாளோ இல்லையோ நாங்க எல்லாம் மயங்கிடுவோம் போல” என்றாள் மகதி சிரிப்புடன்.

“இவளுக்கு மொத்த உடம்புலையும் உருப்படியா வேலை செய்யுற ஒரே பார்ட் வாய் மட்டும் தான் மாமா. அதுவும் ரெண்டு வேலையை மட்டும் தான் சரியா பண்ணும். ஒன்னு சாப்பிடும், இல்லைன்னா வாயாடும்” என்றான் நரேன்.

“வந்துட்டாருப்பா புளியமரத்து போதி தர்மரு” என்று மகதி அவனைப் பேச, குமரனோ அவர்களை சுவாரஸ்யத்துடன் பார்த்திருந்தான்.

“ஆரம்பிச்சுட்டிங்களா ரெண்டு பேரும்! காலையிலையே வழக்காடாம போய் கிளம்புற வழியைப் பாருங்க” என்றார் சாரதா.

அதற்குள் கிளம்பி நதியும் வெளியே வந்திருந்தாள்.

“வா நதி. உன்னை அப்படியே ஆபீஸ்ல டிராப் பண்ணிட்டு நான் வீட்டுக்கு போறேன்” என்றான் குமரன்.

“உங்களுக்கு எதுக்கு அலைச்சல்? ஏற்கனவே தூங்கவே இல்ல போல. உங்க கண் எல்லாம் ரெட்டிஷா இருக்கு. நான் வழக்கம் போலவே போய்க்கிறேன்” என்றாள்.

“நான் டிராப் பண்றேன்னு சொன்னேன் நதி” என்றான் மீண்டும் அழுத்தமாக.

அவள் யோசனையுடன் வரதனைப் பார்க்க,

“சரி போமா” என்பதைப் போல் தலையை ஆட்டினார்.

“வாங்க தம்பி சாப்பிடலாம். நதியும் இன்னும் டிபன் சாப்பிடலை” என்றார் சாரதா.

“எனக்கு வேண்டாம். இப்போதான  காபி குடிச்சேன். நதி நீ சாப்பிட்டு வா. நான் வெயிட் பண்றேன்” என்றான்.

“பரவாயில்லை கொஞ்சமா சாப்பிடுங்களேன்” என்றாள்.

“நிஜமாவே இப்போ சாப்பிட முடியாது நதி. வீட்ல போய் குளிச்சுட்டு தான் சாப்பிடனும். சோ நீ சாப்பிட்டு வா” என்றவனை அதற்கு மேல் அவள் வற்புறுத்தவில்லை. அவசரமாய் மூன்று இட்லியை பிட்டு போட்டுக் கொண்டவள், தனக்கான லஞ்ச்சையும் எடுத்துக் கொண்டு வந்தாள்.

“கிளம்பலாமா?” என்றான் குமரன்.

“அதெல்லாம் அவ ரெடியா தான் இருக்கா மாமா” என்று மகதி வம்பிழுக்க,

“உன்னை வந்து வச்சுக்கிறேன்டி” என்று பல்லைக் கடித்தாள் நதி.

இப்போது அவன் வண்டியில் ஏற அவள் தயக்கம் காட்டவில்லை. ஏறி அமர்ந்தவள் இயல்பாய் அவன் தோள் மீது கையை வைத்திருக்க, அதையெல்லாம் கவனித்தவனின் முகமும் சிரிப்பில் லயித்திருந்தது.

“என்னங்க? மாப்பிள்ளை காலையிலேயே வந்து நதியை கூட்டிட்டு போறார். இது தெரிஞ்சா அவங்க அம்மா என்ன பேச காத்திருக்காங்களோ?” என்று கையைப் பிசைந்தார் சாரதா.

ஏற்கனவே அவளை அழைத்து வந்ததற்கே, அவனிடம் பேசி வேலைக்கு ஆகவில்லை  என்று இவர்களுக்கு போன் பண்ணி பேசியிருந்தார் கோதாவரி.

“கல்யாணத்துக்கு முன்னாடி இதெல்லாம் நல்லாவாங்க இருக்கு. அவன் தான் கூப்பிட்டான்னா நதி வேண்டாம்னு சொல்லியிருக்கனுமா வேண்டாமா?” என்று அவர் கேட்டது இன்னமும் அவர்கள் காதில் கேட்டுக் கொண்டிருந்தது. நதி தயங்கியதும் அதற்குத் தான்.

“சரி விடு சாரதா. நதியை பார்க்கனும்னு வந்து நிற்கிறவரை நாம என்ன செய்ய முடியும்? உங்கம்மா  எங்ககிட்ட இப்படி பேசினாங்கன்னா சொல்ல முடியும்? அப்படி சொன்னா அதுவே ஒரு பிரச்சனை ஆகும். இப்போதைக்கு இதை இப்படியே விட்ருவோம்” என்றார் வரதன்.

அங்கே நதியும் அவன் பின்னால் அமைதியாய் செல்ல, அவளின் முகத்தைப் பார்த்தவனுக்கு முகம் யோசனையில் சுருங்கியது.

“என்னாச்சு நதி?” என்றான் புரியாமல்.

“ங்கான்..! ஒன்னும் இல்லைங்க” என்றாள்.

“இல்லை, உன் முகம் ஏதோ யோசனையிலேயே இருக்கே?” என்றான்.

“அப்படியா? ஆபீஸ்க்கு டைம் ஆச்சு. அதான் கொஞ்சம் டென்ஷனா இருக்கு” என்று சமாளித்தாள்.

“அதெல்லாம் கரெக்ட் டைம்க்கு கொண்டு போய் இறக்கிடுவேன். தாராளமா என்னை நம்பலாம்” என்றான்.

“உங்களை நம்பப் போய் தான் கூடவே வரேன்” என்றாள் அவளும்.