காபியுடன் சேர்த்து டின்னரையும் முடித்துவிட்டே அவளை வீட்டிற்கு கொண்டு சேர்த்திருந்தான் குமரன்.

“உள்ள வாங்க தம்பி” என்று வரதன் அழைக்க,

“டைம் ஆச்சு மாமா, இன்னொரு நாள் வரேன்”  என்றவன்,

“இது மகதி,நரேன்க்கு” என்று நதியிடம் ஒரு பார்சலை நீட்ட,

“இதை எப்போ வாங்கினார்?’ என்று நினைத்தவள், அதையே முகத்தில் காட்ட,

“கிடைச்ச கேப்ல தான்” என்று கண்ணை சிமிட்டியவன்,

“வீட்டுக்கு போயிட்டு கால் பண்றேன்” என்றபடி கிளம்பிவிட்டான்.  அவன் சென்ற பிறகும் சில நிமிடங்கள் அவனையே பார்த்திருந்தாள் தீரா நதி.

“என்னம்மா அப்படி பார்க்குற?” என்றார் வரதன்.

“ஒண்ணுமில்லைப்பா” என்றவள் கையில் இருந்த கோவில் பிரசாதத்தையும், குமரன் கொடுத்த கவரையும் சாரதாவிடம் கொடுத்துவிட்டு சென்றாள்.

வீட்டிற்குள் நுழைந்த குமரனை கேள்வியாய் பார்த்தார் கோதாவரி.

“என்னப்பா இவ்வளவு நேரம்? டியூட்டி அப்பவே முடிஞ்சிருச்சுன்னு சொன்னியே?” என்றார் கேள்வியாய்.

“டியூட்டி அப்பவே முடிஞ்சிருச்சும்மா. நதியை போய் பார்த்துட்டு, அப்படியே கோவிலுக்கு போயிட்டு, வீட்ல டிராப் பண்ணிட்டு வந்தேன்” என்றான் குமரன்.

“என்ன பழக்கம் குமரா இதெல்லாம். கல்யாணத்துக்கு முன்னாடி ஒன்னா வெளிய சுத்துறது?” என்றார் கோபமாய்.

அவரை அழுத்தமாய் பார்த்தவன்,

“இதுவரைக்கும் கூட்டிட்டு சுத்துற ஐடியா எனக்கு இல்லை. எனக்கு அதுக்கு நேரமும் இருக்குமான்னு தெரியாது. ஆனா இப்படியே பேசிட்டு இருந்திங்கன்னா, அதையும் செய்வேன்” என்று பட்டென்று சொன்னவன் அறைக்குள் சென்று விட்டான்.

“பார்த்திங்களா எப்படி பேசிட்டு போறான்னு?” என்று சங்கரனிடம் குறைபட, மனைவியை முறைத்தார் அவர்.

“இப்ப எதுக்கு என்னை முறைக்கிறிங்க?” என்றார் கோதாவரி.

“மனுஷியாடி நீயெல்லாம்? உனக்கு கொஞ்சமாவது மனசாட்சின்னு ஒன்னு இருக்கா இல்லையா? உன் மூத்த மகன் கூடத்தான் பொண்ணு பார்த்துட்டு வந்த உடனே, அந்த பொண்ணைக் கூட்டிகிட்டு சினிமா, பார்க்குன்னு சுத்துனான். அப்பவெல்லாம் ஒரு கேள்வியும் கேட்கலை நீ. இன்னைக்கு குமரனை பேசுற?” என்றார் சங்கரன்.

“கல்யாணும் குமரனும் ஒன்னாங்க? கல்யாண் நான் எது சொன்னாலும் கேட்க மாட்டான். ஆனா, குமரனை அப்படியா வளர்த்திருக்கேன். நான் கண்ணு கலங்குனாலே என் பிள்ளைத் தாங்க மாட்டான். நான் சொன்ன சொல்லை மீற மாட்டான். இன்னைக்கு என்கிட்டையே இப்படி பேசிட்டு போறான்? அப்படி என்னத்தை கண்டு மயங்குனானேன்னு தெரியலையே?” என்று ஆரம்பித்திருந்தார்.

“இதெல்லாம் உனக்கு ஓவரா தெரியலை. அவனுக்குன்னு ஒரு பொண்ணு வரப் போகுது. இனியாவது அவன் வாழ்க்கையை அவனை வாழ விடு. இந்த குடும்பத்துக்கு அவன் செஞ்சது எல்லாம் போதும். அவன் வாழ்க்கையை பார்க்க வேண்டாமா?” என்றார் சங்கரன்.

“நானே என் பிள்ளை வாழ்க்கையை கெடுக்குறேன்னு சொல்றிங்களா?” என்று கண்ணீரை சிந்த,

“இதுல சந்தேகம் வேறையா உனக்கு? இருபத்தியோரு வயசு முடிஞ்சது தான் மாயம் வேலைக்கு போயிட்டான்டி குமரன். இந்த ஒன்பது வருஷமும் அவன் சம்பாத்தியத்துல தான் குடும்பம் நடக்குது. உன் பெரிய பையன் கல்யாணத்துக்கு வாங்குன கடன், உன் பொண்ணு கல்யாணத்துக்கு வாங்குன கடன் அது இதுன்னு எல்லாத்தையும் அவன் தான் அடைச்சான். அவனுக்குன்னு ஒரு சேவிங்க்ஸ் இல்லை. இதோ இந்த வீடு ஒன்னு தான் அவனுக்குன்னு இருக்கு. அதுல நாமளும் இருக்கோம். உன்னோட சுயநலத்துக்காக முப்பது வயசு வரைக்கும் அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னே தோணலை உனக்கு. ஒரு வழியா இப்பத்தான் எல்லாம் கூடி வந்திருக்கு. அவனுக்குன்னு அவன் செஞ்சுகிட்ட முதல் விஷயம். ஒரு கோவிலுக்கு போயிட்டு வந்ததை இஷ்ட்டத்துக்கு பேசிட்டு இருக்க? இந்த கல்யாணம் முடியற வரைக்கும் நீ வாயைத் திறக்கக் கூடாது. ஏதாவது திகிடுதத்தம் பண்ணலாம்னு நினைச்ச, என்னை மனுஷனா பார்க்க மாட்ட” என்று கோபத்துடன் கூறியிருந்தார் சங்கரன்.

“ஏங்க கல்யாணும் தான் வேலைக்கு போய் சம்பாதிச்சு குடுத்தான். என்னமோ அவன் எதுவுமே செய்யாத மாதிரி சொல்றிங்க?” என்று மீண்டும் வம்புக்கு நின்றார் கோதாவரி.

“நல்லா சம்பாரிச்சு குடுத்தான்? வேலைக்கு போக ஆரம்பிச்சது தான் மாயம். சம்பாத்தியத்தை அப்படியே ஒதுக்கிக்கிட்டவன்டி அவன். யாரை யார் கூட இணை போடுற? கல்யாணம் ஆனா அடுத்த மாசமே தனிக் குடித்தனம் போனவனும் குமரனும் ஒன்னா?” என்றார்.

“இந்தா இருக்கான் ரெண்டு வீடு தள்ளி. என்னமோ ஊரை விட்டே போன மாதிரி. குமரனுக்கு நூறு பவுன் போட்டு கூட பொண்ணுத் தர ரெடியா இருக்காங்க. நீங்க தான் அவசரப்பட்டு இந்த பொண்ணையே முடிக்கணும்னு முடிச்சுட்டிங்க” என்று தன் ஆதங்கத்தை வார்த்தைகளில் கொட்ட,

“இது மட்டும் இப்போ குமரன் காதுல விழனும். வீட்ல ஒரு பொருள் வச்ச இடத்துல இருக்காது, எல்லாத்தையும் நொறுக்கிடுவான். அது தான் வேணுமா உனக்கு? அவனுக்கு அந்த பொண்ணைத் தான் பிடிச்சிருக்கு. அவனுக்கு பிடிச்ச பொண்ணை கட்டிக்கணும்னு நினைக்கிறான். இதுல நகையும் பணமும் எங்க இருந்து வந்தது. அப்படியே கொட்டிக் குடுக்குறதுக்கு நீ என்ன ஏலக்காய் எஸ்டேட்டா வச்சிருக்க?” என்றார் நக்கலாய்.

“என் பையன் இன்ஸ்பெக்டர் ஆகப் போறான். அவன் தகுதிக்கு பொண்ணு பார்க்கனும்னு நினைச்சது தப்பா?” என்றார் கோதாவரி.

“அந்த பொண்ணும் மாசம் அறுபதாயிரம் சம்பாதிக்குது. அவங்க வாழ்க்கையை அவங்க பார்த்துப்பாங்க. நீ வாயை வச்சுகிட்டு சும்மா இருந்தா போதும்” என்று அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே வெளியே வந்திருந்தான் குமரன்.

“இப்ப என்னம்மா பிரச்சனை உங்களுக்கு?” என்றவனின் கேள்வியில் கப்சிப் என்று வாயை மூடிக் கொண்டார் கோதாவரி.

“ட்யூட்டிக்கு போயிட்டு வந்து ஒரு மனுஷன் வீட்ல நிம்மதியா தூங்க முடியுதா? எப்பப் பாரு எதையாவது இழுத்து பேசிட்டே இருக்கீங்க? என்னை இருக்க சொல்றிங்களா? இல்லை கிளம்ப சொல்றிங்களா?” என்றான் கோபமாய்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை குமரா..! நீ போய் ரெஸ்ட் எடுப்பா” என்று சங்கரன் அவனை சமாதானப்படுத்த, அவரின் முகத்திற்காக சென்று விட்டான்.

“இன்னும் கட்டிட்டே வரலை, அதுக்குள்ள நான் வேண்டாதவளாகிட்டேன் இந்த வீட்ல” என்று மூக்கை உறிஞ்ச,

“அடுத்த நாடகத்தை ஆரம்பிக்காம போய் வேலை இருந்தா பாரு. இல்லைன்னா எப்பவும் போல சீரியலை பாரு” என்ற சங்கரனும் எழுந்து உள்ளே சென்று விட்டார்.

அறையில் விட்டத்தைப் பார்த்து படுத்திருந்த குமரனுக்கு எல்லாமே வெறுமையாய் தெரிந்தது. சற்று முன் இருந்த இலகு மனநிலை சுத்தமாய் இப்போது அவனிடம் இல்லை.

தன் பின்னால் அமர்ந்து வெட்கப்பட்டு சிவந்தவளின் முகம் கண்ணுக்குள் வந்து போக,

நதியை உடனே பார்க்க வேண்டும், உடனே பேச வேண்டும் என்று உடலின் ஒவ்வொரு அணுவும் துடிக்க, சட்டென்று அவளுக்கு அழைத்து விட்டான்.

“வீட்டுக்கு போயிட்டிங்களா?” என்றாள் எடுத்தவுடன்.

“என்ன பண்ற நதி?” என்றான் அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல்.

“படிச்சுட்டு இருக்கேன்” என்றாள்.

“ஹோ” என்றவனின் குரல் உள்ளே சென்றிருந்தது.

“ஓகே நீ படி. நான் அப்பறம் கால் பண்றேன்” என்றான்.

“பரவாயில்லை சொல்லுங்க” என்றாள்.

“நத்திங் சீரியஸ், சும்மா உன் குரலை கேட்கணும் போல இருந்தது. அதான் கூப்பிட்டேன்” என்றான்.

“இவ்வளவு நேரம் பேசிட்டு தான போனிங்க?” என்றாள்.

“எனக்கு அதெல்லாம் பத்தாது நதி. என்னவோ தெரியலை, என்னை சுத்தி எல்லாருமே இருக்காங்க. ஆனா எனக்குன்னு யாருமே இல்லாத பீல். சீக்கிரம் என்கிட்ட வந்துடேன்” என்றவன் குரல் கரகரப்பாய் வெளிவந்திருந்தது. அவன் குரலில் அவளுக்கு உள்ளுக்குள் ஏதோ ஒன்று உடைய,

“உதய்” என்றவளின் குரல் தவிப்புடன் வெளி வந்திருந்தது.

“குட்நைட் நதி” என்றவன் அவளின் பதிலை எதிர்பார்க்காமல் வைத்திருந்தான். அவளுக்குத் தான் தூக்கம் தொலைந்திருந்தது.