ஹெல்மெட்டை கழற்றியவன்,  தன் சிகையை கோதி சரி செய்து கொண்டு, அவளைப் பார்த்தவன்,

“வந்து வண்டியில ஏறுங்க தீராநதி உதயகுமரன்” என்றான் குறுஞ்சிரிப்புடன்.

தன் பெயருக்கு பின்னால் அவனின் பெயரை சேர்த்து சொன்னதே அவளுக்கு அவ்வளவு இனித்தது.

“நல்லா இருக்குங்க” என்றாள் சிரிப்புடன்.

“எது நானா?” என்றான்.

“நீங்களும், தீராநதி உதயகுமரனும்” என்றவள் அவன் பின்னால் அமர்ந்து கொள்ள, அவள் வார்த்தைகளில் பறந்து கொண்டிருந்த மனதின் சிறகுகளை அடக்கியவன், ஹெல்மெட்டை மீண்டும் அணிந்தபடி வண்டியை ஸ்டார்ட் செய்திருந்தான்.

அவனுக்கும் அவளுக்கும் இடைவெளி விட்டு அவள் அமர்ந்திருந்த விதத்தைப் பார்த்தவனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

“காபி ஷாப்பை தாண்டி வந்துட்டோம்” என்றாள் நதி.

“அது நான் கூப்பிட்டப்பவே வந்திருந்தா காபி ஷாப்போட முடிஞ்சிருக்கும். கொஞ்சம் யோசிச்சதால பிளான் மாறிடுச்சு” என்றான்.

“எங்க போறோம்?” என்றாள்.

“போன உடனே தெரிஞ்சுட போகுது” என்றான்.

“ஏங்க மெதுவா போங்க, எனக்கு பயமா இருக்கு” என்றாள்.

“மெதுவா தான் போறேங்க. உங்களுக்கு பயமா இருந்தா என்னை பிடிச்சுக்கோங்க” என்றான் அவளை மாதிரியே.

“நீங்க யூனிபார்ம்ல இருக்கீங்க? எப்படி பிடிக்க முடியும். யாராவது பார்த்தா தப்பா நினைக்க மாட்டாங்களா?” என்றாள் வேகமாய்.

“அக்யூஸ்ட் தான் யூனிபார்மை பிடிக்கக் கூடாது. பொண்டாட்டி எல்லாம் பிடிக்கலாம் தப்பில்லை” என்றவனின் வார்த்தைகளில் அவளுக்குத் தான் கன்னம் சிவந்து போனது.

பிரசித்தி பெற்ற அந்த அம்மன் கோவில் முன்பு வண்டியை நிறுத்தியிருந்தான்.

“கோவிலுக்கு வந்திருக்கோமா?” என்றாள் மலர்ந்த முகத்துடன்.

“பார்த்தா எப்படி தெரியுது?” என்றவன், அருகில் இருந்த பூ விற்கும் பெண்ணிடம்,

“இரண்டு முழம் மலராத மல்லி குடுங்க” என்றான். நதி அவனையே பார்த்திருக்க, பூவை வாங்கி அவளிடம் நீட்டினான் குமரன்.

“சாமிக்கா?” என்றாள்.

“என் நதிக்கு” என்றான். அவன் வார்த்தைகள் அவள் மனதின் ஆழம் வரை சென்று தித்திக்க,

“இவ்வளவுமா?” என்றாள்.

“இப்போ இது கொஞ்சம் தான். கல்யாணத்துக்கு அப்பறம் நிறைய வாங்கித் தர்றேன், தேவைப்படும்” என்று கண் சிமிட்டியபடி சொன்னவனைப் பார்க்க முடியாமல் தலையை குனிந்து கொண்டாள்.

“பூவை வச்சுக்கோ நதி. இல்லைன்னா நான் வச்சு விடவா?” என்று அவன் கேட்டு முடிப்பதற்குள் பூவை தலையில் வைத்திருந்தாள். அர்ச்சனை தட்டையும் வாங்கி அவள் கையில் கொடுத்திருந்தான்.

உள்ளே சென்று அர்ச்சனை செய்து  அம்மனை தரிசித்து, பிரகாரம் சுற்றி வந்து ஓரிடத்தில் அமர்ந்தவர்களுக்கு மேற்கொண்டு என்ன பேசுவதென்று புரியவில்லை.

“என்னாச்சு? ஏன் என் முகத்தையே பார்த்துட்டு இருக்கீங்க?” என்றாள் நதி.

“நேத்து உங்க வீட்ல என்கிட்டே எதையோ பேசணும்னு நீ ட்ரை பண்ணது உன் முகத்துலையே தெரிஞ்சது. அது என்னன்னு இப்ப சொல்லேன்” என்றான் அவளையே பார்த்தபடி.

‘அந்த அளவுக்கு கவனிச்சாரா?’ என்று எண்ணியவள்,

“அதெல்லாம் ஒன்னுமில்லையே?” என்றாள்.

“இல்ல ஏதோ இருக்கு” என்றான் மீண்டும்.

“அது இப்போதைக்கு மேரேஜ் வேணாம்னு சொல்லலாம்னு இருந்தேன்” என்றாள் முகத்தை சுருக்கியபடி.

“இப்பவும் அதே ஐடியா தானா?” என்றான் குமரன்.

“இப்பவும் எப்படி அதே ஐடியால இருக்க முடியும்?” என்றாள் வேகமாய்.

“ஏன்?” என்றான் குமரன்.

“பைக்ல கூட்டிட்டு வந்து, பூ வாங்கி குடுத்து, ஆளை மயக்குற பார்வை எல்லாம் பார்த்து,  இப்படி எல்லாம் பண்ணினா எப்படி அதே ஐடியா இருக்கும்? அதெல்லாம் வந்த வழி தெரியாம ஓடிருச்சு” என்றாள் சிரிப்புடன்.

“மேடம் ஒரு வழியா குமரனை அக்சப்ட் பண்ணிகிட்டிங்க” என்றவன்,

“அடுத்த மாசம் நமக்கு கல்யாணம்” என்றான்.

“இவ்வளவு சீக்கிரமாவா?” என்று அவள் வாயைப் பிளக்க,

“எனக்கு இதுவே அதிகம்னு தோணுது. இன்னும் தேர்ட்டி டேய்ஸ் தான் இருக்கு. நாளெல்லாம் குறிச்சு, அத்தை மாமாகிட்டவும் சொல்லியாச்சு” என்றான் குமரன்.

“எனக்கு தெரியாது” என்றாள் குறையாய்.

“நீ இன்னும் வீட்டுக்கு போகலையே. போன உடனே சொல்லுவாங்க” என்றான்.

“ஹோ, அதை சொல்லத்தான் சார் என்னை பார்க்க வந்திங்களா?” என்றாள்.

“உன்னைப் பார்க்கனும்னு தோணுச்சு, வந்தேன்” என்றான்.

“ஏதோ டியூட்டிக்கு அந்த பக்கம் வந்த மாதிரி கதை சொன்னிங்க?” என்றாள் சிரிப்புடன்.

“அதான் நீயே சொல்லிட்டியே கதைன்னு” என்றவனும் புன்னகைக்க,

“நல்லா பேசிட்டு இருக்கீங்க, ஆனா கோபமும் சட்டுன்னு வந்துடுது உங்களுக்கு. கோபத்தை குறைச்சுக்கோங்க” என்றாள்.

“இந்த யூனிபார்ம் போட்டு, நானும் அப்படி ஆகிட்டேன். பார்க்குற வேலை தான நம்ம மனநிலையை தீர்மானிக்குது” என்றான் குமரன்.

“டைம் ஆச்சு, கிளம்பலாமா?” என்றாள்.

“போகனுமா?” என்றான் குமரன். அவள் முறைக்கவும்,

“சரிசரி.. கிளம்பலாம்” என்று எழுந்தவன் அவளுக்கும் கை கொடுக்க,

“நம்பி பிடிக்கலாமா?” என்றாள்.

“ஒரு தடவை பிடிச்சு தான் பாரேன்” என்றவனின் கைகளுக்குள் அவள் கை பொதிந்திருக்க, ஒரு ஏகாந்த மனநிலையுடனே அவனுடன் இணைந்து கொண்டாள்.

அதே மனநிலையுடன் அவன் புல்லட்டின் பின்னால் அமர்ந்தவள்,

“உங்க ஷோல்டரை பிடிச்சுக்கவா?” என்றாள்.

“அதென்ன ஷோல்டர்? மொத்தமுமே உனக்குத் தான். உனக்கு எங்க பிடிக்க விருப்பமோ அங்க பிடிச்சிக்கலாம். இடுப்போட பிடிச்சிக்கிறதுனா கூட பிடிச்சிக்கலாம். நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்” என்று மந்தகாசமாய் சொல்லி சிரித்தவனை பார்க்க முடியாமல் சிவந்திருந்தாள் தீராநதி.

“அய்யோ..! நான் எங்கயும் பிடிக்கலை, ஆளை விடுங்க” என்றவளின் கரத்தைப் பற்றியவன், தன் தோளில் பதிய வைத்துக் கொண்டான்.

“முப்பது வருஷத்துல மனசு முழுக்க காதலோட ஒருத்தி கையைப் பிடிச்சிருக்கேன்னா, அது உன்னோட கை தான் நதி” என்று மிரர் வழியாக அவளைப் பார்த்துக் கொண்டே சொல்ல, அவன் பார்வையின் வீச்சை தாங்க முடியாமல் வேறு பக்கம் பார்வையை திருப்பிக் கொண்டாள்.

“இருந்தாலும் நீ அநியாயத்துக்கு வெட்கப் படுற நதி” என்றவன் வண்டியை கிளப்ப,

“நீங்க அப்படி பேசுறிங்க” என்றவளுக்கு அவனை அவ்வளவு பிடித்திருந்தது.

“ஒரு காபி குடிச்சுட்டு போகலாமா?” என்றான் குமரன்.

“டைம் ஆகிடும். அம்மா டென்ஷன் ஆகிடுவாங்க” என்றாள்.

“நான் அவங்ககிட்ட சொல்லிட்டு தான் உன்னைப் பார்க்கவே வந்தேன். இன்பேக்ட் நானே வந்து டிராப் பண்ணிடுறேன்னு சொல்லிட்டு தான் வந்திருக்கேன்” என்றான் குமரன்.

“வெல் ப்ரிபேர்டா வந்திருக்கிங்க” என்றாள்.

“எனக்கு இன்னைக்குத்தான் டைம் இருக்கு நதி. நாளைக்கு இருந்து டியூட்டி எப்படி இருக்கும்னு தெரியாது. அதான் கிடைச்ச நேரத்துல வந்துட்டேன்” என்றவனை ஏனோ காரணமே இல்லாமல் பிடித்துத் தொலைத்தது.

“உங்க வாய்ஸ்ல ஏதோ வசியம் இருக்கு. ரொம்ப அட்ராக்ட் பண்ணுது” என்றாள் நதி.

“வாய்ஸ் அட்ராக்ட் பண்ணுதா? இல்லை என்னோட வார்த்தைகள் அட்ராக்ட் பண்ணுதா மேடம்?” என்றான் சிரிப்புடன்.

“நீங்க மொத்தமும் தான், போதுமா?” என்றவளைப் பார்த்தவனின் முகம் தானாக புன்னகையில் விரிந்தது.