வாசல் 4:

நடந்த விஷயங்களை நதி சொல்லிக் கொண்டிருக்க பிரியாவோ கதை கேட்பதை போல் கேட்டுக் கொண்டு வந்தாள்.

“அவ்வளவு தான்டி, பூ வச்சு கன்பார்ம் பண்ணிட்டு போய்ட்டாங்க” என்று முடித்திருந்தாள் தீராநதி.

“அடிப்பாவி” என்று வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தாள் பிரியா.

“இப்போ எதுக்கு இப்படி ஷாக் ஆகுற?” என்றாள் நதி.

“பின்ன என்னடி? போட்டோவை பார்க்கவே மாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சவ, இப்படி நேர்ல பார்த்த உடனே டக்குன்னு சரின்னு சொல்லிட்டியே? இந்த அதிசயம் எல்லாம் எப்படி நடந்தது? நேத்து வரைக்கும் கல்யாணம் பண்ணனுமான்னு யோசிச்சுட்டு இருந்தவ, இன்னைக்கு இப்படி தலை குப்புற விழுந்து கிடக்குறியே அதை நினைச்சேன். அதனால வந்த அதிர்ச்சி தான் இது” என்றாள் பிரியா.

“அம்மா அப்பாவுக்கு பிடிச்சிருக்கு பிரியா, அதான்” என்றாள் நதி.

“ஹோ, அப்போ மேடம்க்கு பிடிக்காம, அம்மா- அப்பாவுக்குக்காகத் தான் சரின்னு சொன்னிங்களா?” என்றாள் கிண்டலாய்.

பிரியாவின் கேள்வியில், முன் தினம் தன் முன்னால் நெடுநெடுவென்ற உயரத்துடன், குறும்பு புன்னகையுடன் வந்து நின்ற குமரன் நதியின் கண் முன்னால் வந்து சென்றான்.

“அப்படி இல்லைடி, எனக்கும் அவரை பிடிச்சிருக்கு” என்றவளின் முகம் இயல்பாய் சிவக்க,

“பொண்ணு பார்த்து, பூ வச்சுட்டு போனதுக்கே முகம் என்னடி இப்படி சிவக்குது?” என்று அதிசயித்தவள்,

“சரி சொல்லு ஆள் பார்க்க எப்படி இருந்தார்?” என்றாள் பிரியா.

“ஸ்மார்ட்டா செம்மையா இருந்தார். கோபம் தான் கொஞ்சம் அதிகம் வரும் போலத் தெரியுது. அப்பறம் அவங்க பேமிலில ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மைன்ட் செட்ல இருப்பாங்க போல” என்றாள் நதி இயல்பாய்.

“எப்படித்தான் மனுஷங்களை இப்படி பார்த்த உடனே எடை போடுறியோ தெரியலைடி” என்றாள் பிரியா.

“உள்ளுணர்வு நமக்கு ஒன்னு சொல்லும்ல. அது மேக்சிமம் சரியா தான் இருக்கும்” என்றாள்.

“மாப்பிள்ளையைப் பத்து என்ன சொல்லுது உன் உள்ளுணர்வு?” என்றாள்.

“பெர்பெக்ட் ஜென்டில்மேன்” என்றாள் நதி.

“பாருங்கப்பா, நதி வாய்ல இருந்து ஒருத்தரை ஜென்டில்மேன்னு சொல்றது எல்லாம் அதிசயத்திலும் அதியசமா தான் நடக்கும்” என்ற பிரியா சிரிக்க,

“சும்மா கிண்டல் பண்ணாதடி. ஆபீஸ் டைம் ஓவர், கிளம்பலாமா?” என்று  பேக்கை எடுத்துக் கொண்டாள் நதி. இருவரும் பேசிக் கொண்டே வெளியே வந்திருந்தனர்.

“எப்படியோ ஒரு போலீஸ்காரருக்கு பொண்டாட்டியா ஆகப் போற? மேடம் நீங்களும் சீக்கிரம் எக்ஸாம் எழுதி கவர்மென்ட் ஆபீசர் ஆகிடுவிங்க. பொருத்தம் பிரம்மாதமா இருக்கும்” என்றாள்.

“அதுக்கு முதல்ல படிக்கணும். இந்த அட்டம்ட் எப்படியாவது பாஸ் பண்ணிடனும் பிரியா” என்று பேசிக் கொண்டே வர,

“உன் ஆளு ஒரு ஆறடி இருப்பாரா?” என்றாள் பிரியா சந்தேகமாய்.

“ம்ம் இருப்பாரு” என்றாள் புரியாமல்.

“கொஞ்சம் ரப் அன்ட் டப் தான் போலயே?” என்றாள் பிரியா.

“இப்ப என்னடி பிரச்சனை உனக்கு?” என்றாள் கடுப்புடன்.

“இன்னுமாடி புரியலை. அப்படியே ஆப்போசிட்ல இருக்குற காபி ஷாப்பை பாரு” என்றாள் பிரியா.

‘அங்க என்ன?’ என்று புரியாமல் நதி அந்த காபி ஷாப்பை பார்க்க, புல்லட்டில் ஒய்யாரமாய் சாய்ந்து நின்றபடி அவளைத்தான் பார்த்திருந்தான் குமரன்.

“எப்படி கரெக்ட்டா சொன்னேனா?” என்றாள் பிரியா சிரித்தபடி.

“இப்போ இவர் எதுக்குடி இங்க வந்திருக்கார்? அதுவும் யூனிபார்மோட” என்றாள் நதி படபடப்புடன்.

“வேறெதுக்கு மேடமை சைட் அடிக்கத்தான்” என்றாள் பிரியா கண்ணை சிமிட்டி.

“அப்படி எல்லாம் இருக்காது. ஏதாவது டியூட்டி விஷயமா வந்திருப்பார்” என்றாள்.

“இத்தனை நாள் இங்க இல்லாத டியூட்டி இன்னைக்கு என்ன திடீர்ன்னு?” என்றாள் பிரியா.

“உனக்கு எல்லாத்துலையும், எப்பவும் சந்தேகம்” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே, நதியின் போன் அடித்தது. எடுத்துப் பார்த்தவள் அவனை நிமிர்ந்து பார்த்துக் கொண்டே போனை காதில் வைத்தாள்.

“ஆபீஸ் டைம் ஓவரா” என்றான்.

“ம்ம். நீங்க எங்க இங்க?“ என்றாள்.

“ஒரு பந்தோபஸ்து இருந்தது. டியூட்டி முடிச்சு இந்த வழியா வந்தேன். சரி அப்படியே உன்னையும்  பார்த்துட்டு போகலாம்னு வெயிட் பண்றேன்” என்றான்.

அவள் அமைதியாக இருக்கவும்,

“ஒரு கப் காபி” என்றான்.

“அது” என்று அவள் தயங்க,

“ஹேய் பஸ் வந்திடுச்சு நதி. நான் கிளம்புறேன். நீ மெதுவா காபி குடிச்சுட்டு, உன்னை மாப்பிள்ளை சாரை வீட்ல டிராப் பண்ண சொல்லிடு, பாய்டி” என்று கிளம்பிவிட்டாள் பிரியா. அவள் பேசியது லைனில் இருந்த குமரனுக்கும் கேட்க சிரித்துக் கொண்டான்.

“ஹேய் லூசே நில்லுடி” என்று நதி கத்திக் கொண்டிருக்கும் போதே காதில் வாங்காதவள் போல் பேருந்தில் ஏறியிருந்தாள் பிரியா.

“இவளை” என்று பல்லைக் கடித்தவள் நிமிர்ந்து பார்க்க, அங்கே நின்றிருந்த குமரனையும் காணவில்லை. போனிலும் லைன் கட்டாகியிருக்க, யோசனையுடன்  நின்றவளின் முன் வந்து புல்லட்டை நிறுத்திருந்தான் குமரன்.

தன்னை உரசியபடி வந்து நின்றவனை படபடப்புடன் பார்த்தாள்.

“நானே ரோட் கிராஸ் பண்ணி வந்திருப்பேனே?” என்றாள்.

“புல் ட்ராபிக், இது நீ ரோட் கிராஸ் பண்ணி வர்றதுக்குள்ள நாளைக்கு இந்நேரம் ஆகிடும்” என்றான் சிரிப்புடன்.

‘நம்ம ரோட் கிராஸ் பண்ற லட்சணம் இவருக்கு எப்படி தெரியும்’ என்று யோசித்துக் கொண்டிருக்க,

“மேடம் யோசிச்சு முடிச்சுட்டிங்கன்னா போகலாமா?” என்றான்.

“அது” என்று அப்போதும் தயங்கினாள் தீராநதி. அவளின் தயக்கத்தைப் பார்த்தவனுக்கு சட்டென்று கோபம் வந்தது. கோபத்தை அடக்கி அவளைப் பார்த்திருக்க, அவளோ இன்னமும் யோசித்துக் கொண்டு தான் இருந்தாள்.

அவனுக்கோ பொறுமை பறந்து கொண்டிருந்தது.

“நான் வேணும்னா பைக்கை நிறுத்திட்டு ஆட்டோவைக் கூப்பிடவா?” என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு.

“இல்லை, ஆனா நான் இது வரைக்கும் யார் கூடவும் பைக்ல இப்படி போனதில்லை” என்றாள் தயங்கியபடி.

“நான் மட்டும் தினமும் ஒரு பொண்ணை புல்லட் பின்னாடி வச்சு சுத்திட்டு இருக்கேனாக்கும்” என்றவன்,

“என் அக்காவைத் தவிர ஒரு பொண்ணைக் கூட நானும் என் புல்லட்டும் அலோவ் பண்ணதில்லை” என்றான் கொஞ்சம் தணிந்த குரலில்.

“உங்களுக்கென்ன இப்பவே இவ்வளவு கோபம் வருது. நேத்தெல்லாம் நல்லா சிரிச்ச முகம்மா தான இருந்திங்க” என்றாள் வேகமாய்.

“என்னை நம்பலைன்னா எனக்கு கோபம் வரும் நதி. ட்ரஸ்ட் ரொம்ப முக்கியம்” என்றான்.

“நேத்து தான் உங்களை பர்ஸ்ட் டைம் பார்த்திருக்கேன். இன்னைக்கு வந்து  பைக்ல கூப்பிட்டா யோசிக்காம எப்படி வர முடியும்?” என்றாள் வரவழைத்துக் கொண்ட தைரியத்துடன்.

“நான் ஒன்னும் யாரோ, எவரையோ கூப்பிடலை. நான் கட்டிக்க போற பொண்ணைத் தான் கூப்பிட்டேன். இஷ்ட்டம் இல்லைன்னா வர வேண்டாம்” என்றான் இயந்திரக் குரலில்.

“இஷ்ட்டம் இல்லைன்னு நான் சொன்னேனா?” என்றாள் முனுமுனுப்பாய்.

“இருக்குற மாதிரியும் தெரியலை” என்றான் அவனும்.

“நீங்க சிரிச்சா தான் நான் வருவேன்” என்றாள் நதி.