இரண்டரை வருடங்களுக்குப் பிறகான நதியின் அருகாமையில் அவன் தான் வெந்து தணிந்து கொண்டிருந்தான். அவள் அவனிடமிருந்து விலகி அமர்ந்திருக்க, சற்று பின்னால் தள்ளி அமர்ந்தான் குமரன். அவன் நகர்ந்து கொண்டே நெருங்கி அமர்வது நதிக்கும் தெரிந்து தான் இருந்தது.
“இந்த வேலையெல்லாம் வேற யார் கிட்டயும் வச்சுக்க முடியாது தாசில்தார் மேடம்” என்றான் அவனும் அவளைப் போலவே.
‘இவன்கிட்ட வாயைக் குடுத்தா இப்படித்தான் பேசுவான்னு தெரிஞ்சும் நீயேன் நதி வாயைக் குடுக்கிற?’ என்று தனக்குத் தானே நொந்து கொண்டவள், மீண்டும் அமைதியாக, மிரர் வியூ வழியாக அவளைப் பார்த்தவனின் முகம் சட்டென்று கனிந்திருந்தது.
“எப்படி இருக்க நதி?” என்றவனின் திடீர்குரலில் அவள் கண்ணை விரித்துப் பார்க்க, அதையும் மிரர் வியூவில் பார்த்திருந்தான் குமரன்.
அவள் பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருக்க,
“எனக்குத்தான் உன்னைப் பார்த்த உடனே இப்படி பேசணும்னு தோணுதா? என்னைப் பார்த்து உனக்கு எதுவுமே தோணலையா நதி?என் கூட பேசத் தோணலையா? இல்லை நடிக்கிறியா? இந்த ரெண்டு வருஷத்துல ஒரு தடவை கூட என்னோட ஞாபகம் உனக்கு வரவே இல்லையா?” என்றவனின் குரல் கரகரத்திருந்ததோ?
அவனின் அந்த குரல் அவள் உயிர்வரை சென்று ஊடுருவ, பின்னால் கைபிடியை பிடித்திருந்தவளின் விரல்கள் மேலும் இறுக்கத்தைக் கூட்டி அதைப் பிடித்துக் கொள்ள, கலங்கிய கண்களை அவன் அறியாமல் மறைக்க அரும்பாடு பட்டுப் போனாள் தீராநதி.
அவள் அப்போதும் அமைதியாகவே இருக்க,
“அட்ரஸ் சொல்லு” என்றான்.
“நான் இங்கயே இறங்கிக்கிறேன்” என்றாள்.
“உன் வீட்டு அட்ரஸ் தெரிஞ்ச உடனே தினமும் உன்னை பாலோ பண்ணி டார்ச்சர் பண்ற அளவுக்கு கேடு கெட்டவன் கிடையாது இந்த குமரன். வீடு எங்க இருக்கு?” என்றான் மீண்டும் அழுத்தம் திருத்தமாய். அவன் வார்த்தைகளில் அழுத்தம் இருந்தால் கோபத்தின் கொதிநிலையில் இருக்கிறான் என்று அர்த்தம்.
“இந்த ஏரியால ரெண்ட் அதிகம் இருக்குமே. உனக்கு குவாட்ரஸ் குடுத்திருப்பாங்களே?” என்றான் யோசனையுடன்.
“இது புது தாலுகான்னால இப்போதைக்கு குவாட்ரஸ் இல்லை. ரெண்டல் அலொவன்ஸ் இந்த வீட்டுக்கு குடுத்துடுவாங்க” என்றாள்.
அவள் சொன்ன வீட்டின் முன் அவன் புல்லட்டை நிறுத்த, சோர்வுடன் இறங்கியவளை அமர்ந்தபடியே அவளின் கையைப் பிடித்து இறங்க வைத்தான்.
“பார்த்து” என்றவனை பார்த்தவள் முறைத்தாள்.
“அப்போ நான் கிளம்புறேன். நல்லா ரெஸ்ட் எடு. உடம்பைப் பார்த்துக்கோ” என்றபடி அவன் மீண்டும் வண்டியை உதைக்க, சத்தம் கேட்டு வெளியே வந்த சாரதா அங்கே குமரனைப் பார்த்து அதிர்ந்தார்.
“என்னாச்சு நதி?” என்று பதறியபடி வந்து மகளின் கையைப் பிடிக்க,
“இவ்ளோ பீவரோட வேலைக்கு அனுப்பி வச்சிருக்கிங்க? இது தான் நீங்க பார்த்துக்கிற லட்சணமா?” என்றான் கோபமாய்.
“அய்யோ, நான் இன்னைக்கு போக வேண்டாம்னு தான் சொன்னேன். இவ எங்க கேட்குறா?” என்றவர்,
“நீங்க எப்படி இங்க?” என்றார் சந்தேகமாய்.
“சார் இந்த ஊர் இன்ஸ்பெக்டர்மா. ஒரு கேஸ் விஷயமா இன்னைக்கு பார்த்தேன். அப்பறம் ஹாஸ்பிட்டல்ல பார்க்கவும், ஒரு ஹெல்ப்பா என்னை டிராப் பண்ண வந்தார்” என்றாள்.
உனக்கும் எனக்கும் அதைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று சொல்லாமல் சொல்லியதைப் போல் இருந்தது அவள் வார்த்தைகளும், உடல் மொழியும்.
“நதி” என்ற சாரதா கையைப் பிசைந்து கொண்டு நிற்க,
“ம்மா உள்ள போங்க” என்றாள்.
“தம்பி” என்று குமரனை பரிதவிப்பாய் பார்த்தவரை யோசனையுடன் நோக்கினான் குமரன்.
“உதவி பன்னவவரை உள்ள கூப்பிடனும்னு தோணலையா நதி?” என்று சாரதா வாய் விட்டு கேட்டுவிட,
“சார் ரொம்ப பிசி ம்மா. சும்மா அவரை வீட்டுக்குள்ள கூப்பிட்டு வச்சு காபி குடுக்க முடியுமா? அதுவுமில்லாம சாருக்கு காபியே பிடிக்காதுன்னு சொன்னார்” என்றாள் நதி நக்கலாக.
“உன் திமிர் மட்டும் குறையாதுடி” என்று பல்லைக்கடித்தவன்,
“இருக்கட்டும் பரவாயில்லைங்க. நான் வீட்டுக்கு கிளம்புறேன்” என்றவன் விருட்டென்று வண்டியைக் கிளப்பிக் கொண்டு சென்றிருந்தான்.
சாரதாவிற்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.
“என்னடி கிளம்பி போறார்? நீயும் பார்த்துட்டு அமைதியா இருக்க? உள்ள கூப்பிட்டா குறைஞ்சா போய்டுவ?” என்று மகளைப் பிடித்து உலுக்க,
“ஏற்கனவே எனக்கு முடியலைம்மா. நீங்களும் உங்க பங்குக்கு படுத்தாதிங்க” என்றவள் அப்படியே அமர்ந்து கொள்ள,
“சரி நீ போய் கொஞ்ச நேரம் தூங்கு நதி” என்றார் சாரதா.
“காய்ச்சல் குழந்தைக்கும் ஒட்டிக்கும் நதி. மகதியும், நரேனும் பக்கத்துல இருக்குற பார்க்குக்கு கூட்டிட்டு போயிருக்காங்க. ஏதாவது சாப்பிடுறியா?” என்றார்.
“இல்ல வேண்டாம்மா” என்றவள் அசதியில் சேரில் அப்படியே சாய்ந்து கொண்டாள்.
“நதி, குமரன் தம்பி” என்று அவர் ஏதோ சொல்ல வர,
“அப்பா, அங்க சாப்பாட்டுக்கு என்ன பன்னுவாரும்மா? நீங்க நாளைக்கே கிளம்புங்க. இங்க நான் பார்த்துக்கிறேன்” என்றாள் வேகமாய்.
“நீ இப்படி இருக்கும் போது எப்படி நதி தனியா விட்டுட்டு போக முடியும். அப்பறம் தியாவை எப்படி பார்த்துப்ப?” என்றார்.
“நீங்க தியாவை கூட்டிட்டே கிளம்புங்கம்மா. அவளை பார்த்துக்க ஏற்பாடு பண்ணியிருந்த ஆளை வேண்டாம்னு சொல்லிடுறேன்” என்றாள் நதி.
“என்ன பேசிட்டு இருக்க நதி? ரெண்டு வயசு கூட முழுசா இன்னும் ஆகாத குழந்தை அவ. உன்னை விட்டுட்டு எப்படி இருப்பா? ஏங்கிப் போய்ட மாட்டாளா?ஒன்னு தியா உன்கூட இருக்கணும். இல்லையா மகதியையும், நரேனையும் காலேஜ் ஹாஸ்ட்டல்ல விட்டுட்டு நானும் அப்பாவும் இங்க வந்திடுறோம்” என்றார் சாரதா உறுதியாய்.
“எனக்கு மட்டும் என்ன ஆசையாம்மா? அவர் இங்க இருப்பார்ன்னு நான் என்ன கனவா கண்டேன். கொஞ்ச நாளைக்கும்மா, நான் ட்ரான்ஸ்பர் எதுவும் கிடைக்குமான்னு கேட்டுப் பார்க்குறேன்” என்றாள்.
“சொன்னா கேளு நதி? எத்தனை நாளைக்கு இந்த பிடிவாதம்? நீ பண்றது பெரிய தப்பு? எதை மறைக்கிறதுன்னு ஒரு விவஸ்தை வேண்டாம்? தியாவை விஷயத்தை தயவு செஞ்சு நீயே மாப்பிள்ளைகிட்ட சொல்லிடு நதி” என்றார் மன்றாடும் குரலில்.
“எனக்கும் என் குழந்தைக்கும் யாரும் தேவையில்லை. முக்கியமா அவர் தேவையே இல்லை. எங்களைப் பார்த்துக்க எனக்குத் தெரியும்மா. உங்களுக்கு கஷ்ட்டமா இருந்தா நீங்க கிளம்புங்க. தியாவை நானே பார்த்துக்கிறேன்” என்றவளுக்கு கண்கள் கலங்க,
“நதி நான் அந்த அர்த்ததுல சொல்லலை. ஏற்கனவே அப்பா பாசம் இல்லாம வளர்ற குழந்தை. இப்போ அம்மாவையும் விட்டு பிரிச்சு கூட்டிட்டு போனா குழந்தையோட மன நிலைமையை கொஞ்சம் யோசிச்சு பார்த்தியா நதி?” என்றார் சாரதா.
அதற்குள் மகதியும், நரேனும் குழந்தையுடன் வந்து விட்டிருந்தனர்.
“மம்மி” என்று மகதி ஓடி வர, மகளைக் கண்டவுடன் அவள் சோர்வெல்லாம் நீங்கியது.
தியா அவள் அப்பாவை அப்படியே உரித்து வைத்து பிறந்திருந்தாள்.
பால் நிறத்தில் கொழுக் மொழுக் கன்னங்களுடன் சப்பியாய் இருந்த குழந்தையைப் பார்ப்பதற்கு அவ்வளவு கியூட்டாக இருந்தாள்.
“தியா குட்டி மம்மிக்கு பீவர்” என்று நதி முகத்தை சுனக்கி சொல்ல,
“அச்சோ” என்று தியா உதடுகளைக் குவிக்க, அவளின் செய்கையில் தன்னை மறந்தாள் நதி.
“மம்மிக்கு ஊசி” என்று ஊசி போடுவதைப் போல் செய்து காட்ட,
“டாக்டர் அங்கிளை அடிச்சிறலாம்” என்று திக்கிக் திணறி மழலைக் குரலில் கூறி முடித்தாள் தியா.
“தியா பாப்பா பார்க் போயிட்டு நல்லா விளையாடுனிங்களா? நைட் அம்மாவைப் பார்க்காமயே தூங்கிட்டாளே என் செல்லக் குட்டி?” என்று மகளை கொஞ்ச,
“சித்தி கதை சொன்னா, பாப்பா தூங்கினா” என்றாள் கொஞ்சும் குரலில்.
“பார்க்குல ஒரே ஆட்டம் க்கா.. இங்க பார் ட்ரஸ் எல்லாம் எப்படி அழுக்கு பண்ணி வச்சிருக்கான்னு” என்ற மகதி,
“நாம போய் குளிச்சுட்டு வேற டிரஸ் போடலாமா?” என்றாள் தியாவிடம்.
“ஓகே சித்தி” என்றவள் அவளுடன் இணைந்து கொண்டாள்.
“நான் போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்குறேன்மா” என்று சொல்லிச் சென்றவளுக்கு தலையெல்லாம் பாரமாய் இருந்தது. அதுவரை அடக்கி வைத்திருந்த அழகான நினைவுகளும், அழியாத காயங்களும் மீண்டும் கண் முன் வர, தலை சாய்த்து படுத்தவளுக்கு ஆயாசமாய் வந்தது.
இன்று குமரனைப் பார்த்ததும், அவன் பேச்சும், செய்கையும் அவனை பழைய குமரனாகவே அவளிடம் காட்டியது.
தனது மொபைலின் கேலரிக்குள் சென்று சேமித்து வைத்திருந்த தங்கள் திருமணப் புகைப்படத்தைப் பார்த்தவளுக்கு, அதைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமென்று தோன்றியது.
பட்டு வேஷ்ட்டி சட்டையில், முகம் மலர்ந்த சிரிப்புடன், அழகனாய், கம்பீரமாய் நின்றிருந்தவனின் தோற்றத்தில் எப்போதும் போல் இப்போதும் மனதைத் தொலைத்திருந்தாள் தீராநதி. அவனின் முகத்தையே ஜூம் செய்து பார்த்தவளுக்கு அவன் கண்களில் நிறைந்திருந்த காதலைப் பார்த்தவுடன், கண்ணீர் மடை திறந்த வெள்ளமாய் வெளியே வர, வேகமாய் துடைத்துக் கொண்டாள்.
புகைப்படத்தில் இருக்கும் குமரனுக்கும், இப்போது பார்த்த குமரனுக்கும் எத்தனை வித்யாசங்கள். சிரிப்பும் காதலும் தெரிந்த கண்களில் இன்று அயர்ச்சியும் வெறுமையும் தான் குடியேறியிருந்தது. ஆனால் அழுத்தமும் கோபமும் கொஞ்சம் கூட மாறவில்லை.
அவனைப் பார்க்காதவரை தன்னைக் கட்டுபடுத்திக் கொண்டிருந்தவளால், இன்று அவனைப் பார்த்த பிறகு தன்னைக் கட்டுப்படுத்த வெறுமையான ஒரு முக மூடியை போட்டுக் கொண்டவள், வார்த்தைகளால் அவனை ரணப்படுத்திவிட்டு வந்திருந்தாள்.