இதோ குமரனின் குல தெய்வக் கோவிலில், இப்போது நரேனின் மடியில் ஒய்யாரமாய் அமர்ந்திருந்தாள் தியா. அவளைச் சுற்றி தீபாவின் மகன்களும், கல்யாணின் குழந்தைகளும் நிற்க, மொட்டை போடும் போது அழவில்லை. ஆனால் காது குத்தும் போது, அவள் சத்தம் ஊரையே கூட்ட, நதியோ அவளுக்கு மேல் அழுதிருந்தாள்.

“உன்னை மாதிரியே ஊசி எடுத்தாலே பயப்படுவா போலயே?” என்றான் குமரன்.

“எங்க பயம் உங்களுக்கு சிரிப்பா இருக்கா?” என்றாள்.

“இருக்காதா பின்ன? தியா அழறதில் ஒரு நியாயம் இருக்கு. நீயேன்டி அழற?” என்றான்.

அவள் உதட்டை சுளிக்க,

“ரொம்ப சுளிக்காதடி, அப்பறம் நடக்குறதுக்கு நான் பொறுப்பில்லை” என்றான்.

“இது கோவில்” என்றாள்.

“அதனால தான் பேசிட்டு மட்டும் இருக்கேன்” என்றான்.

“மாமா இங்க பாருங்க! உங்க லவ்ஸ் எல்லாம் வீட்ல போய் வச்சுக்கங்க” என்றாள் மகதி.

“பாப்பாவை பிடிச்சுகிட்டு தான் இருக்கேன் மகதிமா” என்றான் குமரன்.

“நீங்க பிடிச்சுகிட்டு இருக்கிறது பீப்பாவை” என்றாள் அவள் சிரிப்புடன்.

குமரன் முகம் லேசாக வெட்கத்தில் சிவக்க,

“ரொம்பக் கஷ்ட்டம்” என்றாள் மகதி சிரிப்புடன்.

“என் தம்பி வெட்கமெல்லாம் படுறான்?” என்ற தீபாவிடம்,

“அது மட்டுமா அண்ணி” என்று ஆரம்பித்த நதியின் வாயை மூடியவன்,

“மானத்தை வாங்காதடி” என்றான்.

அவர்கள் அனைவரும் சிரித்துப் பேசிக் கொண்டிருக்க, அதைப் பார்த்த வரதனுக்கும் சாரதாவிற்கும் மனம் நிறைந்த உணர்வு.

நரேன், வரதன் கொடுத்த செயினை தியாவின் கழுத்தில் அணிவிக்க,

“எதுக்குப்பா இதெல்லாம்?” என்றாள் தியா.

“செய்றது எங்க கடமைம்மா” என்றார் வரதன்.

“ஆமா என்னமோ அஞ்சு பவுனை அள்ளிப் போட்ட மாதிரி” என்று கோதாவரி முனுமுனுக்க, அதைக் கேட்ட குமரனுக்கு கோபம் வர, அவன் கையைப் பிடித்து அமைதிப்படுத்தினாள் நதி.

“அவங்க அள்ளிப் போடலை சரி, உங்க பேத்திக்கு நீங்க கிள்ளி கூட போடலையே” என்றாள் நதி பட்டென்று. கப்சிப் என்று வாயை அடக்கிக் கொண்டார் கோதாவரி.

“நதிம்மா” என்று வரதன் அடக்க,

“விடுங்க சம்பந்தி, இவளுக்கு யாராவது ஒருத்தர் சரியா பதில் குடுத்தா தான் இவளும் கம்முன்னு இருப்பா” என்றார் சங்கரன்.

“திருந்தவே மாட்டிங்களா?” என்றான் குமரன் அடக்க முடியாமல்.

“அமைதியா தான் இருங்களேன்மா” என்றான் கல்யாணும்.

“உங்கம்மா அமைதியா இருந்தா அன்னைக்கு உலகம் அழிஞ்சிடும்” என்றான் தீபாவின் கணவன் கண்ணன்.

“யாரையும் திருத்துறது நம்ம வேலை இல்லை குமரா. இப்ப இருக்குற மாதிரியே நீ உன் குடும்பத்தை மட்டும் பாரு” என்றாள் தீபா.

அதற்குமேல் பேசி அந்த தருணத்தை பாழடிக்க அவர்களுக்கு விருப்பமில்லை.

நதியின் வீட்டில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தவர்கள் மீண்டும் கரூர் கிளம்பி விட்டனர்.

அன்றைய இரவின் பனியில், அந்த சிறு வராண்டாவின்  படியில் அமர்ந்திருந்தான் உதய். நதி அவன் முன் ஆவி பறக்கும் காபியை நீட்ட, வாங்கிக் கொண்டவன், அவளையும் இழுத்து அருகில் அமர்த்திக் கொண்டான் அணைத்தபடி. அவனின் அமைதியைக் கண்டவள்,

“எப்படி பீல் பண்றிங்க?” என்றாள்.

“முழுமையா பீல் பண்றேன்” என்றான்.

“நான் காபியை கேட்டேன்” என்றாள்.

“நான் நதியோட காதலை சொன்னேன்” என்றான் அவன்.

அவள் அவனை ஆச்சர்யமாய் பார்க்க,

“என்னடி பார்வை எல்லாம் பலமா இருக்கு?” என்றான் குமரன்.

“நான் ஏன் அன்னைக்கு அப்படி உங்ககிட்ட பேசுனேன்ன்னு நீங்க இதுவரைக்கும் கேட்கவே இல்லையே? ஏன்?” என்றாள்.

“அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல வச்சு நீ உங்கம்மா அப்பாகிட்ட பேசுனதை கேட்டுட்டு தான்  இருந்தேன் நதி” என்றான் தூரத்து நட்சத்திரத்தை வெறித்தபடி.

அவள் அவனையே பார்த்திருக்க,

“நான் அன்னைக்கு உன்னை அப்படி அடிச்சிருக்கக் கூடாது நதி. ஆனா, உன்னைத் தூக்கிட்டு ஹாஸ்பிட்டல் போகுறதுக்குள்ள நான் செத்துட்டேன்டி. அன்னைக்குத்தான் புரிஞ்சது, ஒரு நிமிஷ கோபத்தோட வெளிப்பாடு எத்தனை பெரிய இழப்பைக் கொடுக்கும்னு” என்றான்.

“உதய் விடுங்க” என்றாள்.

“இல்ல நதி, ஒருவேளை அன்னைக்கு ரெண்டு குழந்தைக்கும் ஏதாவது ஆகியிருந்தா? இப்ப நினைச்சாலே ஒரு மாதிரி மனசு அழுத்தமாகுது” என்றான்.

“அதான் ஆகலைல,விடுங்க” என்றாள்.

“இந்த கிட்டினஸ் மட்டும் லைப் லாங் என் கூடவே ட்ராவல் பண்ணும்னு நினைக்கிறேன்” என்றான்.

“அதுக்கு ஒரு வழி இருக்கு” என்றாள்.

“அவன் புரியாமல் பார்க்க, அவன் கன்னத்தில் முத்தமிட்டபடி

“இன்னொரு குழந்தையை உருவாக்குறது தான்” என்றவளின் பேச்சில் சிரித்திருந்தான்.

“ஆங்..! இது நல்லா இருக்கு” என்றவனை அவள் முறைக்க, அவனோ வாய்விட்டு சிரித்திருந்தான்.

அவளின் தோள் வளைவில் முகம் புதைத்திருந்தான் குமரன்.

“எப்பவுமே உதயம் நதிக்குள்ள தான் நிகழனும்” என்றாள் நதி அவன் கண் நோக்கி.

“அப்பவும் தீரா நதி தான் வேணும் இந்த தீராத காதலோடு” என்றான் அவன்.

அவள் அவனின் அன்பில் திளைத்திருக்க, குமரனோ அவன் நதியில் கலந்திருந்தான்.

விட்டுக்குடுத்து  போனா உறவு அழகா இருக்கும். ஆனா, காதலோட புரிதலும் இருந்துட்டா வாழ்க்கையே அழகா இருக்கும் இல்லையா?

குமரனின் நதியாக, உதயகுமரனின் தீரா நதியாக அவர்கள் வாழ்க்கை அதே தீராத அன்புடன் இணைந்திருக்கட்டும்.