கோவிலில் வைத்து அவன் புதுத் தாலிச் செயினை அவளுக்குப் போட்டுவிட,

“உதய் நான் தாலியை வேண்டாம்னு போடாம இல்லை. அது செயின் அறுந்துட்டது, அதான்” என்றாள்.

“அத்தை சொன்னாங்க நதி. அதான் புதுசு வாங்கினேன். அது இருந்தாலும் இல்லைன்னாலும் நான் உன் புருஷன்கிறது மாறப் போறது இல்லையில்ல” என்றான்.

“அப்பறம் எதுக்கு அன்னைக்கு கோபப்பட்டிங்க?” என்றாள்.

“என்னை மொத்தமா வேண்டாம்னு நினைச்சு தாலியை கழட்டியிருப்பன்னு நினைச்சேன்” என்றான் அவனும்.

“முடியலைடா சாமி, சண்டை கட்டினாலும் ஓவரா கட்றது. லவ் பண்ணாலும் ஓவரா பண்றது” என்ற மகதி அவர்களை போட்டோ எடுத்துத் தள்ள, பல செல்பிக்களும் எடுக்கப்பட்டது.

“உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா மாமா, பாப்பா பர்ஸ்ட் பர்த்டே அப்போ, உங்க பொண்டாட்டி ஒரே அழுகை. கடைசியில செலிபரேட் பண்ணவே இல்லை” என்றாள் மகதி.

“வாயை மூடுடி” என்றாள் நதி.

“அப்படியா?” என்பதைப் போல் குமரன் அவளைப் பார்க்க அவளோ தலையை குனிந்து கொண்டாள்.

கோவிலில் இருந்து வீடு வந்தவர்களுக்கு சாரதா ஒரு விருந்தையே தயார் செய்து வைத்திருந்தார். அனைவருடனும் குடும்பமாய் அமர்ந்து சாப்பிட்டதில் பரம சந்தோசம் அவனுக்கு. ஆனால் மனதின் ஓரத்தில் தந்தையின் நினைவும், தீபாவின் நினைவும் வந்து போனது குமரனுக்கு.

“என்னாச்சு? என்றாள் நதி.

“ஒன்னுமில்லையே?” என்றான்.

“மாமாவையும் தீபா அண்ணியையும் நீங்க கூப்பிட்டிருக்கலாமே?” என்றாள்.

“நதி” என்றவனின் பார்வை ஆச்சர்யத்தில் விரிய,

“உங்க முகம் எப்ப எப்படி இருக்கும்னு எனக்கு நல்லாத் தெரியும் உதய்” என்றாள் அவன் கண் நோக்கி.

“பாப்பாக்கு மொட்டை போட ஊருக்கு போய் தான ஆகணும். அதான் அப்ப பார்த்துக்கலாம்னு சொல்லலை. எதுக்கு உடம்புக்கு முடியாததோட அப்பாவை அலைய வைச்சுகிட்டு?” என்றான்.

“நான் கூப்பிட்டேன் உதய். மாமாவும் இதே பதிலைத்தான் சொன்னார்” என்றாள்.

“நீ கூப்பிட்டியா?” என்றான் இப்போதும் ஆச்சர்யம் தாங்க முடியாமல்.

“ஏன்? நான் கூப்பிட்டா என்ன?” என்றவள், அவனின் எண்ணம் புரிந்து,

“அப்பா சொன்னார் உதய், மாப்பிள்ளைன்னா அவர் மட்டுமில்லை. அவரைச் சார்ந்தவங்களும் இருப்பாங்க. எல்லாம் இருக்கிறது தான் குடும்பம். எப்படி இருந்துக்கனும் அப்படின்றது நம்ம கைல தான் இருக்குன்னு சொன்னார்” என்றாள்.

“வேண்டாம் நதி, நம்ம கொஞ்சம் தூரமாவே இருந்துப்போம். அது தான் எல்லாத்துக்கும் நல்லது” என்றவனுக்கு வரதனை நினைத்து கூட ஆச்சர்யம் தான்.

நதியின் குடும்பம் அன்றே கிளம்ப,

“இருந்துட்டு நாளைக்கு போகலாமே” என்றான் குமரன்.

“இன்னைக்கு ஒரு நாள் தான் காலேஜ்க்கு லீவ் போட்டோம் மாமா” என்றனர் மகதியுன் நரேனும். அதற்கு மேல் அவர்களை வற்புறுத்த முடியவில்லை. அவர்களையும் காரைப் பிடித்து தான் அனுப்பி வைத்தான்.

காலையில் இருந்து மகதி நரேனுடன் ஆட்டம் போட்டதில் தியா களைத்திருந்தாள். நதியோ அறையில் கோபமாய் அமர்ந்திருந்தாள். தியாவை தூக்கிக் கொண்டு சென்றவன்,

“என்னாச்சு?” என்றான்.

“எனக்கு நீங்க கிப்ட் குடுக்கவே இல்லை” என்றாள் முறைப்பாய்.

“நான் கேட்டேன், நீதான் வேண்டாம்னு சொன்ன?” என்றாள்.

“சொல்லாம குடுக்குறதுக்கு பேர் தான் கிப்ட்” என்றாள்.

“அப்படியா?” என்றவன் அவனைப் பார்த்து சிரிக்க,

“உதய் இப்படி சிரிச்சே மயக்காதிங்க பிளீஸ்” என்றாள்.

“உன்னை யாருடி மயங்க சொன்னது?” என்றவன், அவள் இரு கால்களையும் தூக்கி மடிமேல் போட்டுக் கொள்ள, அவளோ அவனைத்தான் காதலுடன் பார்த்திருந்தாள்.

மீண்டும் அவன் அவள் கால்களில் ஒரு தங்க கொலுசை மாட்டிக் கொண்டிருக்க, அவன்மேல் சாய்ந்து அவனைக் கழுத்தோடு கட்டிக் கொண்டு ஆடிக் கொண்டிருந்த தியா, அவன் செய்வதைப் பார்த்து, நதிக்கு போட்டியாக தன் காலையும் தந்தையின் மடி மீது போட்டிருந்தாள்.

“டாடி தியா பாப்பாக்கு” என்றாள் தலை சாய்த்து.

“என் செல்லத்துக்கு வாங்காமையா?” என்றவன் மகளின் காலில் இருந்த வெள்ளி கொலுசை கழற்றிவிட்டு தங்கக் கொலுசை மாட்டியிருந்தான். தியாவிற்கோ மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. ஒரு புதுப் பொருளை பார்த்த ஆர்வம். அதையே திருப்பித் திருப்பி பார்த்துக் கொண்டிருக்க,

“தியாக்கு போட முடியாது உதய். சேப் இல்லை” என்றாள்.

“கழட்டி வச்சுக்கலாம் நதி. இப்போதைக்கு போட்டிருக்கட்டும்” என்றான்.

“சார் ரொம்ப செழும்பா இருக்கீங்க போல?” என்றாள் புருவத்தை உயர்த்தி.

“பொண்டாட்டி பிள்ளை தேவையை நிறைவேத்துற அளவுக்கு இருக்கேன்” என்றான் சிரிப்புடன்.

“ஒரு லவ் யு சொல்லுங்களேன்” என்றாள்.

“அதுல எல்லாம் பெருசா நம்பிக்கை இல்லை நதி” என்றவனின் விரல்கள் மகளின் தலை கோதிக் கொண்டிருக்க, தியாவோஆழ்ந்த சயனத்திற்கு சென்று விட்டாள்.

“தியா தூங்கிட்டா உதய். அவளை நேரா படுக்க வைங்க. எனக்கும் தூக்கம் வருது” என்றாள்.

“தூக்கம் வருதா?” என்று முறைத்தவனைக் கண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள்.

“நல்லா தூங்குங்க ரெண்டு பேரும்” என்றவன், எழுந்து சென்று விட்டான்.

“கோபம் மட்டும் முனி மூக்குல வந்துடும்” என்று சலித்துக் கொண்டவள், தியாவிற்கு அணைவாய் தலையணையை வைத்துவிட்டு அவன் பின்னேயே சென்றாள்.

வெளியே வந்தவளைப் பார்த்து சிரித்தவன்,

“ஏன்? மேடம்க்கு தூக்கம் வரலையா?” என்றான்.

அவளோ அவனை முறைத்துவிட்டு உள்ளே மீண்டும் அறைக்குள் செல்ல முறபட, “ஹேய் வாடி” என்று அவளை பக்கத்து அறைக்கு கடத்தியிருந்தான் குமரன்.

“இதெல்லாம் அராஜகம்” என்றாள்.

“எதுடி அராஜகம்? கல்யாணம் பண்ணியும் பிரம்மாச்சாரியா வாழ்ந்துகிட்டு இருக்கேன்டி நானு. இதுக்கு நான் சன்யாசமே வாங்கிட்டு போயிருந்திருக்கலாம்” என்றான் குமரன்.

“இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை” என்றவளை அடுத்து அவன் பேசவே விடவில்லை. அவன் அன்பில், காதலில் கொஞ்சம் மோகமும் சேர்ந்து கொண்டது.  அவள் இதழ்களிடமும் இதயத்திடமும் காதல் மொழி பேசிக் கொண்டிருந்தான்.

அவள் அழகையும் அவளையும் அவளுக்கே பிடிக்கும் படி வர்ணித்துக் கொண்டிருந்தவன், அவன் இதயத்தின் காதலை அவள் இதழ்களில் ரசனையுடன் பகிர்ந்திருந்தான். அவளின் ரகசியங்களை ரசித்துக் கொண்டிருந்தவனின் பிதற்றல்கள் எல்லாம் அவளுக்கு மறக்க முடியா காதல் மொழிகள் ஆகிப் போயிருந்தன.

மறுப்பே இல்லாத அவள் சம்மதங்களில் அவன் அணுக்களில் ஆசை கூடிப் போய், உடைகள் உடைந்து, தடைகள் தகர்ந்து தன்னவளின் இதயக் கூட்டில் தஞ்சம் அடைந்திருந்தான் உதய குமரன்.

தூரிகை இல்லாமல் அவள் மனதில் வண்ணங்கள் பூசியிருந்தான் குமரன். அவன் மூச்சுக் காற்றின் வெப்பத்தில் அவள் அவளாகவே இல்லை. அவன் காதல் மொழிகளில் உறைந்திருந்த நதி, அவனுள் உடைந்து பாய்ந்திருந்தாள்.

அவனின் சண்டைக்காரி, அவனின் பாசக்காரி, அவனின் பைத்தியக்காரி இப்போது அவனின் மகாராணியாகவும் மாறியிருந்தாள்.காதல் அவர்களை கடந்து போகவில்லை. காலத்தோடு கடத்திக் கொண்டு சென்றிருந்தது.

அவன் கரங்களின் அழுத்தத்தில் அடங்கிப்போயிருந்தவளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டவன்,”தேங்க்ஸ்டி” என்றான் ஆழ்ந்த குரலில்.

பேரன்பின், பெருங்காதலின் முன் தோற்றுப் போன அவர்களின் பிடிவாதங்களும், வைராக்கியங்களும் பேரழகாய் மாறியிருந்தது.

மீண்டும் அவனிடம் பார்வை மாற்றத்தை கண்டவள்,”உதய் நோ” என்றாள்.

அவளை தலை முதல் பாதம் வரை ஆராய்ந்த அவன் பார்வையில் சிவந்தவள், முகத்தை மூடிக் கொள்ள,

“வளைவு நெளிவுகல்ல நீ அங்கங்க எச்சரிக்கைப் பலகை வைக்காதது உன் தப்பு. பாரு நான் வேற, பாதை தெரியாம வளைவு நெளிவுல எல்லாம் வழுக்கி விழுந்து வைக்கிறேன்”  என்றான் இதழ் மடக்கிய சிரிப்புடன்.

“யோவ் காக்கி, இருந்தாலும் உங்களுக்கு கூடி போய்டுச்சு” என்றாள்.

“உனக்கும் தான்டி” என்று அவன் ஏதோ சொல் வர,

“நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்” என்றாள்.

“உனக்கு சொன்னாத்தானடி புரியும்னு சொன்ன?” என்றான்.

“நீங்க சொல்லலைன்னாலும் எனக்குப் புரியும்” என்றாள்.

“சரி சொல்லு என்ன புரிஞ்சது?” என்றான் உல்லாசமாய்.

“உங்களைப் புரிஞ்சது” என்றாள்.

“என்கிட்டே என்ன புரிஞ்சது?” என்றவனை,

“உங்க அன்பும் காதலும் புரிஞ்சது. ஏக்கமும் தவிப்பும் புரிஞ்சது. உங்க ஆசையும் நேசமும் புரிஞ்சது. மொத்ததுல இந்த  உதய குமரனுக்குள்ள இந்த நதி, தீரா நதியா நிறைசிருக்கான்னு புரிஞ்சது” என்றவளின் பேச்சில் கரைந்திருந்தவன், மீண்டும் அவளுள் கரையத் தொடங்கினான் காதலினால்.

பத்து நாட்களுக்குப் பிறகு  தியாவின் மொட்டை போடும் விழாவிற்காக கோயம்புத்தூர் வந்திருந்தனர்.

நதியைப் பார்த்த தீபாவின் கண்களின் கண்ணீரும் மகிழ்ச்சியும். அதை விட தம்பியின் புதல்வியை தீபா இடுப்பை விட்டு இறக்கவேயில்லை.

“அப்பா வந்து சொன்னப்பவே உடனே பார்க்க வரணும்னு தோணுச்சு நதி. உங்களுக்குள்ள எல்லாம் சரியான பிறகு வரலாம்னு நினைச்சேன்” என்றாள் தீபா.

“இதுல என்ன அண்ணி இருக்கு?” என்றவள் தீபாவிடம் எப்போதும் போல் இயல்பாகத்தான் இருந்தாள்.

ஏன்? கல்யாண் அவன் மனைவி ராணி என்று அனைவரிடத்திலும் இயல்பாகத் தான் இருந்தாள், கோதாவரியைத் தவிர.

கோதாவரிக்கு குணம் மாறும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது. பிறவி குணத்தை யாரும் எப்போதும் மாற்றிக் கொள்வதில்லை. மாற்றிக் கொள்வதைப் போல் சில காலம் வேண்டுமானால் நடிக்கலாம். அப்போதும் அவர் அப்படித்தான் நடித்துக் கொண்டிருந்தார்.

அவர்கள் எவ்வளவு அழைத்தும் குமரன் அந்த வீட்டிற்கு செல்ல மறுத்துவிட்டான். நதி கூட அவனை சமாதானப்படுத்த,

“வேண்டாம் நதி, அங்க போனா எனக்கு தேவையில்லாதது எல்லாம் ஞாபகத்துக்கு வரும். என் குழந்தையை என் கையால அழிச்ச வீட்டுக்கு நான் வரலை” என்று விட்டான்.

“குழந்தை உருவானது கூட அங்கதான் உதய்” என்றாள்.

“நதி வேண்டாம்னா வேண்டாம். உனக்கு போகணும்னா போய்ட்டு வா” என்றவன் தீபாவின் வீட்டிலேயே இருந்து விட்டான். அதற்குமேல் அவளும் வற்புறுத்தவில்லை.

சங்கரனிடம் நலம் விசாரித்தவளின் கையைப் பிடித்துக் கொண்டவர், கண்ணீரே விட்டுவிட்டார்.

“மாமா” என்றவளுக்குத் தான் வார்த்தைகள் வரவில்லை.

“ரொம்ப நன்றிமா, அவனை பழையபடி மாத்தினதுக்கு” என்றவருக்கு அப்போது தான் மனம் நிம்மதியாய் இருந்தது.