வாசல் 25:

ஆபீஸ் வந்தவள் பொறுமையின்றி அவனுக்கு அழைப்பெடுத்தாள்.

“வந்துட்டு இருக்கேன் நதி” என்றவன் அழைப்பை துண்டித்திருக்க, தியாவையும் அழைத்துக் கொண்டு கிளம்பியிருந்தாள்.

இருவரும் ஒன்றாய் கடைக்குச் சென்று தியாவிற்கு தேவையானதை வாங்கிவிட்டு  வீடு திரும்பும் வரை அதிகம் பேசிக் கொள்ளவில்லை.

வீடு நுழைந்தது தான் மாயம் பிடித்துக் கொண்டாள் அவனை.

“இப்ப எதுக்கு இப்படி இருக்கீங்க?” என்றாள் ஆதங்கத்துடன்.

“என்னாச்சு? நல்லாத்தானே இருக்கேன்” என்றான்.

“நீங்க நல்லா இருக்குற லட்சணம் தான் தெரியுதே” என்றாள் கோபமாய்.

“மெதுவா பேசு நதி. தியா இருக்கா” என்றவனின் குரலில் தான், சத்தத்தை குறைத்தாள்.

“மம்மி தியாக்கு ஹங்கிரி” என்றாள் தியா.

“எனக்கும் தான்டி பசிக்குது” என்று எறிந்து விழுந்தாள் நதி.

“நதி அவ குழந்தை. இப்படி பிகேவ் பண்றதை நிறுத்து முதல்ல. நான் தான் வெளிய சாப்பிட்டு வரலாம்னு சொன்னேன்ல” என்றான்.

“நீங்க இப்படி முகத்தை தூக்கி வச்சுகிட்டு எங்களுக்கு ஒன்னும் பண்ண வேண்டாம்” என்றாள்.

ஆப்பிளை கட் செய்து தியாவிடம் கொடுத்தவன்,”டாடி தியாகுட்டிக்கு தோசை போட்டுத் தரட்டுமா?” என்றான்.

“டாடி இத்லி தான் வேணும்” என்றாள். அவள் இட்லி கேட்ட விதத்தில் அவன் முகம் சற்று இறுக்கம் குறைந்திருந்தது. அவன் சமையல் அறைக்குள் செல்ல, அவன் கையைப் பிடித்து தடுத்தவள்,

“நீங்க இருங்க நான் பண்றேன்”  என்றாள். அவனும் சரி என்று சொல்ல, அவளோ படபடவென்று சமையலை முடித்திருந்தாள். அதற்குள் அவன் தியாவை சுடு நீரில் குளிக்க வைத்து இலகுவான ஒரு உடையை அணிவித்தவன், அவனும் குளித்து முடித்து வந்திருந்தான். அவள் அனைத்தையும் செய்து முடித்திருக்க,

“நீ போய் பிரஷாகிட்டு வா. நான் பார்த்துக்கிறேன்” என்றவன், அனைத்தையும் ஒதுங்க வைத்துவிட்டு தியாவிற்கு இட்லியை ஊட்டிக் கொண்டிருந்தான். தியாவும் அவனுக்கு பிட்டு ஊட்ட, குளித்து முடித்து வந்த நதியோ இவர்களைப் பார்த்து அப்படியே நின்று விட்டாள்.

பார்த்தவளுக்கு அவ்வளவு நேரம் இருந்த மனநிலை அப்படியே மாறியிருந்தது.

‘உதய் இப்படி இருக்கும் போது, பதிலுக்கு நீயும் இப்படி இருக்காத நதி’ என்று தனக்குத் தானே கூறிக் கொண்டவள், அவனருகில் சென்று அவனை உரசிக் கொண்டு அமர்ந்தாள். அவளைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தவன், மீண்டும் மகளுக்கு ஊட்டுவதில் முனைப்புக் காட்ட, பல்லைக் கடித்த நதி,

“எனக்கும் பசிக்குது” என்றாள்.

“பசிச்சா சாப்பிடு” என்றான்.

“ஏன் அவளுக்கு மட்டும் தான் ஊட்டுவிங்களா?” என்று அவள் கேட்டு முடிப்பதற்குள் அவள் வாயில் இட்லியை திணித்திருந்தான்.

அவள் ஏதோ சொல்ல வர,

“பேசாம சாப்பிடுடி” என்றான் அதட்டலாய். அவ்வளவு தான் கப்சிப் என்று அடங்கிவிட்டாள். நதியிடம் ஆரம்பத்தில் இருந்தே ஒரு குணம், அவன் அமைதியாக இருக்கும் வரை தான் அவள் குரலை உயர்த்துவாள். அவன் குரல் உயர்ந்தால் அப்படியே அடங்கிவிடுவாள். தேவையில்லாமல் அவன் குரலை உயர்த்தியதில்லை. அது அவளுக்கும் தெரியும்.

தானும் சாப்பிட்டு முடித்தவன், தியாவைத் மடியில் வைத்து கதை பேசிக் கொண்டிருந்தான்.

நதி அவர்களை ஏக்கமாய் பார்க்க, கவனம் மகளிடம் இருந்தாலும், அவனின் ஒரு கை மனைவியை நோக்கி விரிய, அவனின் செய்கையில் விழி விரித்தவள் அவனிடம் வந்து தஞ்சம் அடைந்திருந்தாள். ஒரு பக்கம் மகளையும், மறுபக்கம் மனைவியையும் அவன் அணைத்திருக்க,

“மம்மி நோ, தியா டாடி” என்ற தியா நதியை அவனிடத்தில் இருந்து பிரிக்க, சிரித்துக் கொண்டான் குமரன்.

“பர்ஸ்ட் நான் தான்டி, அப்பறம் தான் நீயெல்லாம்” என்றாள்.

“அப்தியா டாடி” என்றாள்.

“அப்படியெல்லாம் இல்லைடா தியா குட்டி. டாடிக்கு எப்பவும் தியாகுட்டி தான் பர்ஸ்ட்” என்றவனை இடையில் கிள்ளி வைத்தாள் நதி.

“என்னடி பண்ற ராட்சசி” என்றான்.

“நான் ராட்சசி, உங்க பொண்ணு மட்டும் தேவதையா?” என்றாள்.

“இல்லையா பின்ன?” என்றான் சிரிப்புடன். அவள் சட்டென்று அவனை விட்டு விலக,

“ரொம்பப் பண்ணாதடி. என்ன இருந்தாலும் நீ என்னோட அழகான ராட்சஸிடி” என்றான்.

அதற்குள் குமரனுக்கு அழைப்பு வர,  பேசிக் கொண்டே வெளியே சென்றவன் பேசிவிட்டு வரும் போது தியா உறங்கியிருந்தாள். அவளை அறையில் விட்டுவிட்டு வெளியே வந்த நதி, யோசனையுடன் அமர்ந்திருந்த குமரனைப் பார்த்து,

“என்னாச்சு என்றாள்?”

“நத்திங்..! ஸ்டேஷன் கால்” என்றான்.

“ஹோ.. ஓகே உதய், குட்நைட்” என்றபடி சென்றவளை அவனின் ஆழ்ந்த குரல் நிறுத்தியது.

“நதி” அந்த ஒரு அழைப்பில் அத்தனை உணர்வுகளையும் கொட்டியிருந்தான். அந்த அழைப்பின் தாக்கத்தில் அவள் அவனைப் பார்க்க, அவனோ இரு கைகளையும் விரித்திருந்தான் அவளை நோக்கி. தன் கைகளுக்குள் புகுந்திருந்தவளை இறுக அணைத்துக் கொண்டான். விட்டால், அவள் எலும்புகளை அணைத்தே நொறுக்கி விடுவான் போல.

“உதய்” என்றவளுக்கு மூச்சு முட்டியது.

“மூச்சு முட்டுதா?” என்றான்.

“முட்டினாலும் பரவாயில்லை” என்றாள்.

“மனசு என்னவோ பண்ணுது நதி” என்றான்.

“கோபமா இருக்கிங்களா?” என்றாள்.

“கோபம் எல்லாம் இல்லை. வருத்தம் இருக்கு. என்னோட நதி எனக்கு இப்படி ஒரு பனிஷ்மென்ட் குடுத்திருக்க வேண்டாம்னு தோணுது. அன்பு எப்படி இருக்கும்னு காட்டுனவளும் நீதான். அந்த அன்பு எவ்வளவு வலியைத் தரும்னு காட்டுனவளும் நீதான்டி” என்றான்.

“சாரி உதய்” என்றாள்.

“நாம ரெண்டு பேர் செஞ்ச தப்பையும் ஒரு சாரிகுள்ள அடக்க முடியாது நதி. கடந்து போன கசப்பை நினைச்சுகிட்டே இருக்குறதுல யாருக்கு என்ன லாபம்? அன்பை வெளிப்படையா காட்டாதது தான் பல பிரச்சனைக்குக் காரணம்” என்றான்.

“அப்போ காக்கி அன்பைக் கொட்டப் போறிங்களோ?” என்றாள்.

“கொட்டியும், குடுத்தும் வாங்குறதுக்கு இதென்ன டீலிங்காடி. பீலிங்டி பீலிங்” என்றான். அவனை விட்டு விலகியவள்,

“இவ்வளவு பீலிங் இருக்குறவரு தான் இத்தனை நாள் தனி ரூம்ல தூங்குனிங்களா?” என்றாள் முறைப்பாய்.

“நைட் நேரத்துல அத்தனை போன் வரும் எனக்கு.  அந்த சத்தத்துல உங்க ரெண்டு பேர் தூக்கமும் கெடும்னு தான் இந்த ரூம்ல படுத்திருந்தேன்” என்றான்.

“நிஜமாவா?” என்றாள்.

“ம்ம், ஏன் நீ என்ன நினைச்ச?” என்றான் முறைப்பாய்.

“நான் கூட நீங்க கோபத்துல தான்” என்றவள் வாக்கியத்தை முடிக்கவில்லை.

“கடைசி வரைக்கும் மேடம் நல்ல விதமாவே யோசிக்க மாட்டிங்க ?” என்றான்.

“சொன்னாத்தான தெரியும்” என்றாள்.

“அப்போ சொன்னா மட்டும் தான் உனக்குத் தெரியும் இல்லையா?” என்றவனின் குரல் அவன் ஏதோ ஏடாகூடமாய் சொல்லப் போகிறான் என்று அவளுக்கு சொல்லாமல் சொல்ல,

“இல்ல வேண்டாம், நீங்க சொல்லாமலேயே தெரியும்” என்றவளைப் பார்த்து சிரித்திருந்தான்.

“சரி இப்போ சொல்லு, பாப்பா பர்த்டே என்னைக்கு?” என்றான் அழ்ந்த குரலில்.

“நீங்களே கண்டுபிடிங்க?” என்றாள்.

“எனக்கு மூளையும் மனசும் ஒரு நிலையில் இல்லை” என்றான்.

“உங்க தேவதைக்கும், ராட்சசிக்கும் ஒரே நாள் தான் பிறந்த நாள்” என்றாள். அவளின் வார்த்தையில் வியப்படைந்தவன்,

“நிஜமாவா” என்றான்.

“ம்ம்” என்றவளை முறைத்தவன்,

“ஏன்டி? இதை கடையில கேட்டப்பவே சொல்லியிருக்கலாம்ல. உனக்கும் சேர்த்து ட்ரெஸ் எடுத்திருக்கலாம்” என்றவன்,

“சரி சொல்லுங்க மேடம், பர்த்டேக்கு என்ன கிப்ட் வேணும்?” என்றான்.

“அதெல்லாம் சொல்ல முடியாது. உங்க சாமர்த்தியம்” என்றாள்.

“ரைட்” என்றவன், அவள் முகத்தை வருட, அந்த வருடலில் நெகிழ்ந்திருந்தவள்,

“இருந்தாலும் அந்த புடவையை மாத்தியிருக்க வேண்டாம்” என்றான் கிறக்கமாய்.

“எப்படி இருந்தாலும் மூணு நாளைக்குத் தள்ளித்தான் இருக்கனும் நீங்க” என்றாள் உதடு கடித்த சிரிப்புடன்.

“நிஜமாவே நீ ராட்சசி தான்டி” என்றவனின் முகத்தைப் பார்த்தவளுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

“நல்லா சிரிங்க மேடம்” என்று கேசம் கோதியவன்,

“நாளையில இருந்து நான் லீவ்டி. போட்ட லீவ்ல மூணு நாள் வேஸ்ட்டா போகப் போகுது” என்று புலம்பியவனின் இதழ்களை சிறை செய்திருந்தாள் அவனின் செல்ல சீமாட்டி.

மொத்தமும் இல்லாவிட்டால் என்ன? முத்தத்திலாவது வாழ்ந்துவிட்டு போகட்டும் என்று கரிசனை காட்டியிருந்தாள் அந்த சீமாட்டியின் சீராளனுக்கு.

நான்கு நாட்களுக்குப் பிறகு,

“இன்னும் என்ன பண்றிங்க? அம்மாவும் பொண்ணும்?” என்று அறைக்கு வெளியே நின்று குமரன் அவஸ்தையுடன் கத்திக் கொண்டிருக்க,

“வந்துட்டோம்” என்றபடி கதவைத் திறந்தவர்களை. வாய் பிளந்து பார்த்தவன் குமரன். நாவல் பழ கலரில் மெல்லிய ஜரியிட்ட புடவையில் மனைவி ஒரு பக்கம் ஜொலிக்க, அதே கலர் பட்டுப்பாவடையில் தியா ஒரு பக்கம் ஜொலித்துக் கொண்டிருந்தாள்.

“அச்சோ,என் குட்டிமா எவ்வளவு அழகு” என்று அள்ளிக் கொண்டவன்,

அவள் முகம் முழுவதும் முத்தமிட, தியாவும் சிரிப்புடன் மீண்டும் அதே மாதிரி தந்தைக்கு முத்தமிட, அவர்களை ரசித்துக் கொண்டிருந்த நதிக்கு இருவரும் இரண்டு கன்னங்களிலும் முத்தமிட்டிருந்தனர். அவர்கள் இருவருக்கும் பிறந்த நாள் என்பதால் தான் அவ்வளவு அலப்பறையும்.

“ஹேப்பி பர்த்டே மை டியர் ஏஞ்சல்ஸ்” என்றான் இருவரையும் அணைத்தபடி.

குமரன், மகள் பிறந்த நாளை நன்றாக கொண்டாட வேண்டுமென்று சொல்ல, நதியோ மறுத்துவிட்டாள்.

“ஏன்டி?” என்றான் ஏக்கமாய்.

“அவளுக்கு மொட்டை போட்டு காது குத்தனும் உதய். அதை எல்லாருக்கும் சொல்லி பண்ணிக்கலாம். நீங்க லீவ்ல இருக்கும் போதே பண்ணிடனும். இரண்டு வயசு முடியட்டும்னு தான் வெயிட்டிங்” என்றாள்.

“இல்லைன்னா, அதையும் எனக்குத் தெரியாமையே பண்ணியிருப்பிங்க?” என்றான்.

“அப்படி பண்ண மனசில்லாம தான் பண்ணலை” என்றாள் உள்ளே சென்ற குரலில்.

“நாங்களும் வந்துட்டோம்” என்ற மகதியின் குரலில் திரும்ப, அவளைக் கண்ட தியாவோ,

“சித்தி” என்று குமரனின் கையில் இருந்து இறங்கி ஓடிவிட்டாள்.

“என் செல்லத்துக்கு இருக்குற பாசம் கூட இங்க யாருக்கும் இல்லை” என்றாள் நதியை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே.

நதி தங்கையை முறைக்க,

“தியா குட்டி மாமாவை மறந்துட்டிங்க?” என்றான் நரேன். அவள் சித்தி மாமாவிடம் ஒட்டிக் கொண்டு திரிய, அவர்களைக் குடும்பமாகப் பார்த்த வரதனுக்கும் சாரதாவிற்கும் மனம் முழுவதும் மகிழ்ச்சி மட்டுமே.

அக்காவிற்கும் அக்கா மகளிற்கும் மகதியும் நரேனும் வாழ்த்துக்களை சொல்ல,

“நான் பேசும் போது கூட நீங்க வர்றேன்னு சொல்லலியேம்மா” என்றாள் குறையாய்.

“நான் தான் சொல்ல வேண்டாம்னு சொன்னேன்” என்றான் குமரன்.

“சரி சரி  கோவிலுக்கு போயிட்டு வாங்க. நான் சமையல் வேலையை பார்க்குறேன்” என்று சாரதா சொல்ல,

“நீங்களும் வாங்க அத்தை” என்றான் குமரன். அவனின் அத்தை என்ற அழைப்பிலேயே அவருக்கு நிறைந்துவிட்டது.

“இருக்கட்டும் தம்பி, நீங்க போயிட்டு வாங்க. நாங்க இருக்கோம்” என்று மறுத்துவிட்டார்.

அவன் பிடிவாதமாக நரேனையும் மகதியையும் அழைத்துக் கொண்டு தான் சென்றான்.