வீடு வந்தவன் கண்டது என்னவோ, சோபாவில் சாய்ந்தபடி உறங்கிக் கொண்டிருந்த நதியையும், அவள் மடியில் தலை வைத்துத் தூங்கிக் கொண்டிருந்த தியாவையும் தான். இரண்டு நிமிடம் மனைவியையும் மகளையும் கண்களில் நிரப்பிக் கொண்டவன், சத்தம் செய்யாமல் சென்று குளித்து விட்டு வந்தான். நதியின் தூக்கம் கலையாமல் தியாவை தூக்கி அறையில் படுக்க வைத்துவிட்டு வந்தவன், நதியையும் தூக்க முற்பட, சட்டென்று விழித்திருந்தாள் நதி.

“எப்போ வந்திங்க?” என்றாள் தூக்கக் கலக்கத்துடன்.

“இப்போதான்” என்றான். எப்போதும் அவனிடம் ஒரு சாவி இருக்கும். நேரம் கெட்ட நேரத்தில் வருவதால் அந்த ஏற்பாடு.

“அரைமணி நேரத்தில் வந்துடுவேன்னு சொன்னிங்க? ஆறுமணி நேரம் ஆச்சு” என்றாள் கோபமாய்.

“நதி பிளீஸ்” என்றவன் சோபாவில் ஆசுவாசமாய் அமர, அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

“என்னாச்சு உதய்?” என்றாள். அவள் மடியில் தலை வைத்து படுத்தவன்,”ஒரு பத்து நிமிஷம்” என்றான் கண்களை மூடியபடி.

கைகள் தானாக அவனின் தலையைக் கோத, “உதய் எனி பிராப்ளம்?” என்றாள் பரிதவிப்பாய்.

“ஸ்டேஷன் லிமிட்ல காரும் டூவீலரும் மோதி ஒரு ஆக்சிடென்ட். டூவீலர்ல வந்த ஹஸ்பண்ட் அன்ட் வொயிப் ரெண்டு பேரும் ஸ்பாட் டெத்” என்றவனுக்கு கண்கள் கலங்கியிருக்க,

“அச்சோ உதய்” என்று பதறினாள்.

“அந்த பொண்ணு பிரக்னன்ட். வயித்துல இருந்த எட்டுமாச குழந்தையும் இறந்திடுச்சு” என்றவன் பாரம் தாங்கமால் விழிகளை மூடிக் கொண்டான். அதான் ப்ரோசீஜர் எல்லாம் முடிச்சு வர லேட் ஆகிடுச்சு” என்றான். கேட்ட அவளுக்கும் மனம் பாரமாகிப் போனது.

“அவங்களுக்கு  வாழ்க்கையை பத்தி எவ்வளவு கனவு இருந்திருக்கும்? அந்த குழந்தை மேல எவ்வளவு எதிர்பார்ப்போட இருந்திருப்பாங்க? இப்படி சடனா எல்லாரும் ஒரே நேரத்துல இறந்துடுவோம்னு நினைச்சு கூட பார்த்திருக்க மாட்டாங்கல்ல உதய்” என்றவளுக்கும் கண்கள் கலங்கியது. அவர்கள் யாரென்று தெரியாவிட்டாலும்.

இந்த வேலையில் எத்தனையோ இறப்புகளைப் பார்த்திருக்கிறான். ஆனால் இன்று பார்த்தது அவன் மனதை மிகவும் பாதித்திருந்தது.

“எப்பவுமே அவங்கவங்க செய்ற தப்புக்கு பலியாகுறவங்களை விட, யாரோ செய்ற தப்புக்கு பலி ஆகுறவங்க தான் அதிகம் நதி”என்றான் சோர்ந்த குரலில்.

“உதய் ரிலாக்ஸ் ஆகுங்க” என்றாள்.

“தூங்கி எழுந்தா ரிலாக்ஸ் ஆகிடுவேன் நதி. நீ போய் தூங்கு, குட் நைட்” என்றவன் பக்கத்து அறைக்குள் சென்று விட்டான்.  அவளுக்குப் பேச ஆயிரம் விஷயம் இருந்தாலும் அவன் இப்போது இருக்கும் மனநிலையில் எதையும் பேச வேண்டாம் என்று எண்ணியவள் தியாவுடன் சென்று படுத்துக் கொண்டாள்.

மறுநாள் வழக்கம் போல் டியூட்டிக்கு கிளம்பிக் கொண்டிருந்தவனை முறைத்தபடி நின்றிருந்தாள் நதி. அவளை ஒட்டி நின்ற தியாவும் அவனை முறைத்தபடி இருக்க, அவர்கள் இருவரையும் யோசனையுடன் பார்த்தவன்,

“அம்மாவுக்கும், பொண்ணுக்கும் என்ன கோபம்?” என்றான் குழந்தையின் முன் மண்டியிட்டு.

“தியாவும் மம்மியும் டூ” என்றாள் தியா.

“ஏன்டா குட்டிமா, டாடி பாவம்ல” என்றான்.

“இல்ல” என்றாள் தியா.

“அப்போ தியா குட்டிக்கு டாடி வேண்டாமா?” என்றான்.

“நதி அவனை முறைக்க, தியாவோ “டாடி வேணும்” என்றாள்.

“இப்ப எதுக்குடி காலையிலேயே இப்படி இருக்க?” என்றான் பொறுக்க மாட்டாமல்.

“ஏன் உங்களுக்குத் தெரியாதா?” என்றாள் கடுப்பாக.

“நான் என்ன பண்ணேன்?” என்றான் புரியாமல்.

“இங்க வந்து தனியவே இருக்குறதுக்கு நாங்க அங்கயே தனியா இருந்திருப்போம்” என்றாள் கோபமாக.

‘இது தான் கோபமா?’ என்று எண்ணியவன்,

“வேலை அப்படி இருக்கு. நான் என்னமா பண்றது?” என்றான்.

“புரியுது உதய். பட் நாங்க எதிர்பார்க்கிறதும் தப்பில்லையே?” என்றாள்.

அவனுக்கும் அவளுடைய உணர்வுகள் புரியத்தான் செய்தது. அவனுக்கும் அப்படித்தானே இருக்கிறது. கேசம் கோதி தன்னை சமன் செய்தவன்,

“இன்னைக்கு ஒரு நாள், நாளையில இருந்து லீவ் வாங்கியிருக்கேன்” என்றவன், அவள் முகம் பிரகாசமானதைப் பார்த்து,

“இப்போ ஹேப்பியா?” என்றான் சிரிப்புடன்.

“நிஜமாவா?” என்றவளுக்கு முகம் சட்டென்று சோர்ந்து போனது.

“என்னாச்சு நதி?”

“எனக்கு ஆபீஸ் இருக்கே” என்றாள் பாவமாய்.

“அதுக்கு நான் என்னடி பண்ண முடியும்” என்று சிரித்தவன்,

“மேடம்க்கு ஆபீஸ் கிளம்புற எண்ணம் இல்லையா? இன்னைக்கு சோலார் பிராஜெக்ட் பிளேஸ்க்கு வேற நீங்க வரணும். இன்னைக்காவது பிரச்சனையை முடிச்சுவிடுங்க மேடம்” என்றான்.

“நானே மண்டை காஞ்சு போய் இருக்கேன். இதுல நீங்க வேற? என் பிரச்சனையை முடிக்கவே ஆளைக் காணோம். இதுல சோலார் பிரச்சனையை முடிக்கவாம்” என்று புலம்பியவள்,

“எப்படியோ போங்க” என்று புலம்பிக் கொண்டே சென்று கிளம்ப ஆயத்தமானாள். நதி உள்ளே செல்லவும், தியா அவளின் பார்பி பொம்மைகளுடன் விளையாட ஆரம்பிக்க,

“உனக்கு அப்படி என்ன பிரச்சனை?” என்று கேட்டுக் கொண்டே அறைக்குள் சென்றவனின் பார்வை, புடவை கட்டிக்  கொண்டிருந்த மனைவியைப் பார்த்ததும் அப்படியே நிலைத்தது. அவளும் அவன் சட்டென்று உள்ளே வருவான் என்று எண்ணியிராததால் திகைத்தவள் அப்படியே நின்றிருந்தாள். அவன் பார்வையில் விதிர்விதிர்த்தவள் சட்டென்று திரும்பி நின்று கொண்டாள்.

“நான் கிளம்பனும் உதய்” என்றவளுக்கு வார்த்தையே வரவில்லை.

“நான் கிளம்ப வேணாம்னு சொல்லவே இல்லையே?” என்றவன், அவள் அருகில் வர,

“உதய் ப்ளீஸ்” என்றாள் பாவமாய்.

அவள் பேசியதெல்லாம் எங்கே அவன் காதில் விழுந்தது. அவளைப் பின்னிருந்து அனைத்து அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தவன், ‘டியூட்டிக்கு கிளம்புறப்போ இப்படி ஒரு தரிசனத்தை எதிர்பார்க்கலைடி’ என்றவனின் பேச்சிலும், மூச்சுக்காற்றிலும் அவளுக்குத் தான் படபடப்புக் கூடியது.

“உதய் டைம் ஆச்சு” என்றாள் பாவமாய்.

“இருந்தாலும் செம்ம போஸ்டி” என்று கிறக்கமாய் கூறியவன்,”நதி திரும்பேன்” என்றான்.

“மாட்டேன்” என்றவளுக்கு முகம் சிவக்க,

“சரி பரவாயில்லை, இதுவே வசதியா தான் இருக்கு” என்று தன் கழுத்து வளைவில் இருந்து கொண்டு அவன் பார்வை போன திசையைப் பார்த்தவள்,

“உங்களை” என்று முகம் சிவக்க அவனை உதறியவள், புடைவையை மேலே போட்டுக் கொள்ள, அவள் விலகலில் பெருமூச்சு விட்டவனோ,’இன்னைக்கு ஸ்டேஷன் போய் நான் டியூட்டி பார்த்த மாதிரித்தான்’ என்று எண்ணி சிரித்துக் கொண்டான்.

அதற்குள் அவள் சேலையைக் பாதி கட்டி முடித்திருக்க,

“உதய் இந்த மடிப்பை மட்டும் சரி பண்ணி விடுங்களேன்” என்றாள்.

“ஹேய் நான் யூனிபார்ம் மாட்டிட்டேன்டி” என்றான்.

“இந்நேரம் வரைக்கும் பண்ண வேலைக்கு மட்டும் யூனிபார்ம் கண்ணுக்குத் தெரியலையா?” என்றாள் பல்லைக்கடித்தபடி.

“ஆங்..! அது வேறு இது வேறு” என்றவன், யூனிபார்ம் சட்டையை கழற்றியபிறகே அவளுக்கு மடிப்பை சரி செய்து விட்டான்.

“ஆர்ம்ஸ் காட்டி என்னை மயக்கப் பார்க்குறான். வீம்புக்கே சட்டையை கழட்டியிருப்பான்” என்றவளின் பார்வை என்னவோ தன் முன் மண்டியிட்டு அமர்ந்திருந்த கணவனின் மீது தான் இருந்தது.

“சரியா பிடி நதி” என்று நிமிர்ந்தவன் கண்டது என்னவோ, தன்னை ரசித்துக் கொண்டிருந்தவளின் பார்வையைத் தான்.

“ரைட்டு, டேய் குமரா இன்னைக்கு உன் பாடு திண்டாட்டம் தான். என்னையும் ஒழுங்கா இருக்க விட மாட்டா போலயே” என்று எண்ணியவன்,

“சொருகிக்கோ” என்றான். அவளோ வேறு உலகத்தில் இருக்க, நமட்டு சிரிப்புடன் அவனே சொருகிவிட, அதில் தான் உணர்விற்கு வந்தாள்.

“என்ன பண்றிங்க?” என்றாள் வேகமாய்.

“புடவையும் முடிஞ்சிக்கத் தெரியலை புருஷனையும் முடிஞ்சிக்கத் தெரியலைடி உனக்கு” என்றான் உல்லாசமாய். நதி அவனை முறைக்க முயன்று தோற்று அவன் நெஞ்சில் முகத்தை மறைத்துக் கொள்ள,

“நான் ஒன்னும் உன்ன மாதிரியெல்லாம் கிடையாது. எனக்கெல்லாம் தாராள மனசு. நீ எவ்வளவு நேரம் வேணும்னாலும் தாராளமா கட்டிப் பிடிக்கலாம்” என்றான்.

“உங்களை” என்று நெஞ்சில் கைவைத்துத் தள்ளியவள், தன் முகச்சிவப்பை மறைக்க,

“நான் போறேன்ப்பா” என்றவள் வெளியே ஓடிவிட்டாள். நிறைவான சிரிப்புடன், சட்டையைப் போட்டுக் கொண்டுவன் கிளம்பி வெளியே வர, அவளோ தியாவிற்கு தேவையான அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

அன்று குருவின் அம்மாவால் வர முடியாத சூழ்நிலை என்பதால் நதி அவளுடனேயே அழைத்து செல்ல எண்ணியிருந்தாள்.

“மேனேஜ் பண்ணிப்பியா நதி?” என்றான் கவலையாய்.

“ஒன்னும் பிரச்சனையில்லை உதய். ஆபீஸ்க்கு பக்கத்துல இருக்குற ப்ளே ஸ்கூல்ல பேசியிருக்கேன். இன்னைக்கு தியா எப்படி இருக்கான்னு பார்த்துட்டு, அங்கயே சேர்த்துடலாம். நானும் அடிக்கடி போய் பார்த்துப்பேன்” என்றாள்.

“டியூட்டி முடிஞ்சுட்டா, நான் வந்து தியா குட்டியை கூப்பிட்டுக்கிறேன்” என்றான்.

“என்னையும் சேர்த்தே கூப்பிட்டுக்கோங்க! கடைக்குப் போகணும்” என்றாள், வேலையை செய்து கொண்டே.

“என்ன திடீர்ன்னு?” என்றான்.

“தியா குட்டிக்கு செகேன்ட் பர்த்டே வருதுல்ல. பாப்பாக்கு டிரஸ் எடுக்கணும்” என்றாள். அவள் அவள் போக்கில் பேசிக் கொண்டிருக்க, அவன் எதுவும் பேசாமல் இருப்பது கண்டு சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள். அவன் பார்வையோ அத்தனை நேரம் இருந்த இதமான உணர்வை எல்லாம் தொலைத்து, சுவரை வெறித்துக் கொண்டிருந்தது.

‘என்னாச்சு?’ என்று நினைத்தவள்,

“உதய்” என்றாள் அழுத்தமாய்.

“பாப்பா பர்த்டே என்னைக்கு?” என்றவனின் குரல் கமரியிருந்தது. நதி அவனை திகைத்துப் பார்க்க,

“தியா பிறந்த தேதி கூட தெரியலை பாரேன் எனக்கு?” என்றவன்,

“குழந்தை இருந்ததே தெரியலை, பிறந்த தேதி மட்டும் எங்க இருந்து தெரிய போகுது” என்றவன், குரு வரவும் கிளம்பிவிட்டான். நதி தான் அப்படியே சமைந்து நின்றுவிட்டாள். தான் செய்த தவறின் வீரியம் அப்போது தான் அவளுக்கும் புரிந்திருந்தது.

அங்கே ஸ்டேஷன் சென்று கொண்டிருந்த குமரனுக்கும் அந்த எண்ணம் தான். கடைசி வரை இந்த குற்ற உணர்வு அவனைக் கொல்லும் என்றே நினைத்தான். அதுவரையில் இருந்த மனநிலை முற்றிலும் மாறி, மனதில் பாரமேறிய உணர்வு அவனுக்கு.

வேலை நிமித்தம் இருவரும் அன்றைக்கு இடையில் சந்தித்தபோது கூட அவன் அமைதியாக இருப்பதாகவே பட்டது நதிக்கு.