வாசல் 24:

யூனிபார்மில் கிளம்பி வெளியே வந்தவனை ‘ஆ’ வென்று பார்த்திருந்தாள் நதி. அவளின் பார்வையைக் கண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன்,

“என்னங்க மேடம் பார்வை எல்லாம் பலமா இருக்கு?” என்றான்.

“அது” என்று தடுமாறியவள்,”சும்மா பார்த்தேன். ஏன் பார்க்கக் கூட கூடாதா?” என்றாள் வேண்டுமென்றே.

“பார்க்கலாமே தப்பில்லை” என்றவன்,”ஆனா சும்மா பார்த்தன்னு நீ சொல்றது நம்புற மாதிரியா இருக்கு?” என்றான் சிரிப்பை அடக்கியபடி.

“நம்புறதும் நம்பாததும் உங்க இஷ்ட்டம்” என்று சிலுப்பிக் கொண்டாள்.

“அதான் பார்த்தேனே, அன்னைக்கு முதல் தடவை மேடம் என்னை ஸ்டேஷன்ல வச்சு ஆளை முழுங்குற மாதிரி பார்த்த பார்வையை” என்றான் குமரன்.

“நான் அப்படி எல்லாம் ஒன்னும் பார்க்கக் கிடையாது” என்றாள் வீம்பாய்.

“அடிப்பாவி, பக்கத்துல இருந்து ஏட்டு கூட சொன்னார், சார் இந்த மேடம் உங்களைப் பார்க்கிற பார்வையே சரியில்லைன்னு” என்றவனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

அவனின் சிரிப்பில் வெகுண்டவள்,”இப்ப என்ன? என் புருஷன்,என் கண்ணு, நான் அப்படித்தான் பார்ப்பேன்” என்றாள் கடுப்புடன்.

அவளை இடுப்பில் கைக்கொடுத்து தன்னருகில் இழுத்து நிறுத்தியவன், ”இதை முதல்லயே  சொல்றதுக்கு என்னடி? இதைக் கூட மேடம் சுத்தி வளைச்சு தான் சொல்லுவிங்களோ” என்றான்.

“அது அன்னைக்கு ரொம்ப நாள் கழிச்சு பார்த்ததுல, அப்படி பார்த்து வச்சுட்டேன்” என்றவள்,

“ரொம்ப தெரிஞ்சிடுச்சோ” என்றாள் தன் தலையைத் தட்டி.

“ரொம்ப” என்றான் சிரிப்புடன்.

“உங்களுக்கு உள்ளுக்குள்ள குளுகுளுன்னு இருந்திருக்குமே” என்றாள்.

“இருக்காதா பின்ன?” என்று அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே, குருவும் வந்துவிட்டான்.

“இப்ப பாரு உனக்கு போட்டியா அவன் வந்து என்னை எப்படி சைட் அடிக்கிறான்னு” என்றவனை நதி முறைக்க, குமரன் சொன்னதைப் போல் தான் பார்த்து வைத்தான் குரு. அதைப் பார்த்த நதிக்கும் கூட சிரிப்பு வந்திருந்தது.

“சார் வழக்கத்துக்கு மாறா இன்னைக்கு ரொம்ப அழகா தெரியறிங்க?” என்று சொல்லவும் குமரன் வாய்விட்டு சிரித்திருந்தான். அப்போது தான் நதியை கவனித்தான் குரு.

“மேடம் நீங்களா?” என்றவன் அதிர்ச்சியுடன் பார்க்க,

“ஷாக்கை குறை குரு” என்றான் குமரன்.

“இன்னைக்கு உங்க முகத்தோட பொலிவுக்கு காரணம் என்னன்னு இப்போ புரியுது சார்” என்ற குருவின் முகத்தில் உண்மையான சந்தோசம்.

“கிளம்பலாமா?” என்றவன் “பாய்டா தியா குட்டி” என்று மகளை கொஞ்சி விட்டுக் கிளம்ப போக,

“மதியம் சாப்பிட வீட்டுக்கு வந்திடுங்க உதய்” என்றவளின் குரலில்  ஒரு நிமிடம் தேங்கியவன், திரும்பி அவளைப் பார்க்க,

“என்ன?” என்றாள் கண்களால்.

“ஒண்ணுமில்லை” என்று தலையை ஆட்டியபடி சென்று விட்டான். மனைவியும் மகளுமாய் நின்று வழியனுப்பியதில் நீண்ட நாட்களுக்குப் பிறகு அப்படி ஒரு சந்தோசம் அவனுக்கு.

குமரனின் பார்வைக்கான அர்த்தம் குருவிற்கும் புரிந்திருந்தது.

“எப்படியோ சார் இனி கையேந்தி பவன்ல சாப்பிட வேண்டியது இல்லை” என்றான் குரு சூசகமாய்.

தியாவை அழைத்து வந்ததில் இருந்து அவன், வீட்டில் தான் சமைத்துக் கொள்கிறான். என்ன இருந்தாலும் தனக்காக சமைத்து வீட்டில் மனைவி காத்திருப்பதெல்லாம் ஒரு தனி சுகம் தானே.

குமரன் கிளம்பியவுடன், வரதனுக்கும் சாரதாவிற்கும் போன் செய்து விஷயத்தைக் கூறியிருந்தாள் நதி. அதைக் கேட்டவர்களுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை.

“நிஜமாவா நதி?” என்று சாரதா திரும்பத் திரும்ப கேட்டதில் நதிக்கு கூட சிரிப்பு வந்திருந்தது.

“நாங்க வேணும்னா கிளம்பி வரட்டுமா நதி? ரெண்டு பேரும் ஆபீஸ் போயிட்டா பாப்பாவை பார்த்துக்கணும்ல” என்றார் சாரதா கவலையாய்.

“ஏற்கனவே பாப்பாவை பார்க்க ஆள் பேசியிருந்தோம் தானம்மா. அவங்ககிட்டயே பேசிப் பார்க்குறேன்” என்றவளுக்கும் அந்த யோசனை இருந்தது. குருவின் அம்மாவிடம் தொடர்ந்து உதவியை எதிர்பார்க்க முடியாது என்று அவளுக்குப் புரிந்திருந்தது.

அதைக்கேட்ட மகதி தான் குதித்தாள்.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். தியா பாப்பாவை அப்படி எல்லாம் யார்கிட்டவும் விட வேண்டாம். நான் தான் ஆரம்பத்துல இருந்து சொல்றேன்ல, நானும் நரேனும் ஹாஸ்ட்டல்ல இருந்துக்குறோம். அம்மாவும் அப்பாவும் கொஞ்ச நாள் அங்க இருக்கட்டும். அது தான் எல்லாருக்கும் நல்லது. இல்லைன்னா பாப்பாவை கொண்டு வந்து இங்க விட்டுட்டு போங்க. நாங்க பார்த்துக்கிறோம்” என்றாள் விடாப்பிடியாய். சரி, என்ன செய்வதென்று குமரனிடம் பேசிவிட்டு முடிவு செய்து கொள்ளலாம் என்று விட்டுவிட்டாள் நதி.

நதி குமரன் வீட்டிற்கு வந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. அவனின் நேரமோ என்னமோ அவனுடைய ஸ்டேஷன் லிமிட்டில் கொலை ஒன்று நடந்திருக்க, அந்த கேஸ் விஷயமாக அலைந்து கொண்டிருந்தான். குற்றவாளியை பிடித்தே ஆக வேண்டிய கட்டாயம் அவனுக்கு. ஜான் ஏறினால் முழம் சறுக்கும் என்ற கதையாக சென்று கொண்டிருந்தது அந்த வழக்கு. ஒரு வழியாக குற்றவாளியை கண்டு பிடித்து, கேசை முடிக்க அவனுக்கு ஒரு வாரம் ஆகியிருந்தது.

இந்த நாட்களில் நதிக்கு தான் அவஸ்தையாக இருந்தது. எப்போது வருகிறான், எப்போது செல்கிறான் என்று நேரம் காலம் தெரியாமல் தவித்திருந்தாள். இரண்டு நாட்கள் வீட்டிற்கு கூட வரவில்லை.

இந்த ஒரு வாரமும் வேறு வழியின்றி குரு அம்மாவின் உதவியைத் தான் நாடவேண்டியிருந்தது.

அன்றும் அப்படித்தான் ‘கிளம்பிவிட்டேன், அரைமணி நேரத்தில் வந்துவிடுவேன்’ என்றவன் இன்னமும் வந்தபாடில்லை. தியாவோ தந்தையைக் கேட்டு அலுத்துப் போய் தூங்கிவிட்டாள்.