‘அன்பும் காதலும் அவன் மட்டும் தான் காட்டணுமா? அதைக் கூட அவன் காட்டினா தான் காட்டுவியா?’ என்று அவள் மனமே அவளை கழுவி ஊற்றியது.
“ரொம்ப ஓவராத்தான் பண்றார். இந்தா வரேன்” என்று எழுந்து குளித்து முடித்து வந்தவள், கிட்சனிற்குள் செல்ல, அங்கு ஏற்கனவே அப்பாவும் மகளும் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருந்தனர்.
“என்ன பண்றிங்க ரெண்டு பேரும்?” என்றாள் சற்று குரலை உயர்த்தி.
பாலை அடுப்பில் ஏற்றிக் கொண்டிருந்தவன் அவளை யோசனையுடன் பார்க்க, அவன் கையிலிருந்த பாத்திரத்தை வெடுக்கென்று பிடுங்கியவள்,
“ரெண்டு பேரும் வெளிய போங்க” என்றாள்.
“உனக்கு எதுக்கு சிரமம்?” என்றான் குமரன்.
“அய்யா சாமி, எனக்கு ஒரு சிரமும் இல்லை” என்றாள்.
அவன் தியாவை தூக்க முற்பட,
“தியா இருக்கட்டும், நீங்க போய் குளிச்சுட்டு வாங்க” என்றாள். குரலில் அதிகாரம் தூள் பறந்தது. அவளையே ஒரு நிமிடம் பார்த்தவன் எதுவும் பேசாமல் சென்று விட்டான்.
‘ரொம்பத்தான் பண்றான். என்னமோ பிறந்ததுல இருந்து தியாவை கூடவே இருந்து வளர்த்த மாதிரி’ என்று முனங்க,
“பிறந்தது தெரிஞ்சிருந்தா, கூடவே இருந்து தான் வளர்த்திருப்பேன்” என்றவனின் குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்தாள். அவன் அவளை முறைத்திருக்க, அவளோ உதட்டை சுழித்துக் கொண்டாள்.
டிவியில் ரைம்ஸ் சேனலை போட்டு விட்டு தியாவை உட்கார வைத்துவிட்டு வந்தவன்,
“என்ன அதிகாரம் தூள் பறக்குது?” என்றான்.
“இப்படி அதிகாரம் பண்ணாததுனால தான உங்களுக்கு எல்லாம் கூடிப் போயிருக்கு” என்றாள் நக்கலாய்.
“என்ன கூடிப் போயிருக்கு?” என்றான் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு.
“ரெண்டரை வருஷத்துல உனக்குக் கூடத்தான் எல்லாம் கூடிப் போயிருக்கு. நான் ஏதாவது சொன்னேனா?” என்றவன் பார்த்த பார்வையில் அவளுக்குத் தான் முகம் முழுவதும் சிவந்து போனது.
வருடங்கள் கடந்த அவளின் முகச் சிவப்பைக் கண்டிருந்தவனுக்கு நினைவுகள் பழைய நாட்களுக்கு செல்ல, அதை எண்ணி கொஞ்சம் ஏக்கம் கூட வந்திருந்தது.
அவன் தன்னையே பார்த்துக் கொண்டிருந்ததில் அவளுக்குத் தான் கூச்சமாய் இருந்தது.
“இப்ப எதுக்கு இப்படி பார்த்துட்டு இருக்கீங்க?” என்றாள்.
“எனக்கு தீராநதின்னு ஒரு பொண்டாட்டி இருந்தா. எப்பவும் இப்படித்தான் நான் பார்த்தாலே முகம் சிவந்திடும் அவளுக்கு. அவளை அப்படியே பார்த்துட்டே இருக்கலாம்னு தோணும். அவ கூட இருந்தா மட்டும் போதும்னு தோணும். என்னை ரொம்ப அட்மையர் பண்ணுவா. உனக்கும் அவளுக்கும் எத்தனை வித்தியாசம்?” என்றவனின் குரலில் இருந்த உணர்வு அவளையும் சென்று தாக்கியிருக்க வேண்டும்.
“உதய்” என்றவள் அவனையே பார்க்க,
“இப்போ இருக்குற நதிக்கு எதுக்கெடுத்தாலும் ஈகோ இல்லையா? நான் பண்ணா தான் நீ பண்ணுவ? இதே ஈகோவை மனசுல வச்சுகிட்டு மறுபடியும் வாழ்க்கையை ஸ்டாட் பண்ணி, ஏதோ ஒரு பாயின்ட்ல மறுபடியும் சண்டை போட்டு பிரியற சூழ்நிலை வந்தா, அதைத் தாங்குற சக்தி எல்லாம் இனி எனக்குக் கிடையாது” என்றான் குமரன்.
அவளோ திகைப்பாய் பார்த்திருக்க,
“எஸ் நான் கோபக்காரன் தான். அதை எந்த இடத்துலையும் நான் மறுக்கவுமில்லை, உன்கிட்ட மறைக்கவுமில்லை. கல்யாணத்துக்கு முன்னமே உன்கிட்ட தெளிவா சொல்லிட்டேன் தான். அந்த கோபத்தால ஒரு பெரிய இழப்பையும் வலியையும் உனக்குக் குடுத்துட்டேன் தான். அதுக்கான தண்டனையும் நீ எனக்கு குடுத்துட்ட. ஆனா நானே வேணாம்னு நீ நினைக்கிற அளவுக்கு, நடந்த ஒரு விஷயத்தைத் தவிர்த்து, மத்த எந்த இடத்துல, எந்த விதத்துல நான் தவறிப் போனேன் நதி? இந்த ஒரு கேள்வி மனசை ரொம்ப உறுத்திகிட்டே இருக்கு” என்றவனின் நேர்பார்வையை பார்க்க முடியாமல் பார்வையை மாற்றிக் கொண்டாள்.
அவன் அப்போதும் அவளையே பார்த்திருக்க, அவளோ சூடான காபியை நீட்டியிருந்தாள். அவளையும் காபியையும் மாறி மாறி பார்த்தவன், வாங்கிக் கொண்டான்.
“கடைசியா உன் கையால குடிச்ச காபி தான். மறுபடியும் இப்பத்தான் குடிக்கப் போறேன்” என்றான்.
“சாரி” என்றாள் தன் நகத்தை ஆராய்ந்து கொண்டே. அவளின் தவிப்பையும் முகத்தையும் பார்த்தபடியே காபி குடித்து முடித்தவன், அவளிடம் ஏதோ சொல்ல வர,
நகத்தை ஆராய்ந்து கொண்டிருந்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்திருந்தது.
“எனக்கு ஈகோ எல்லாம் இல்லை உதய். உங்களை வேண்டாம்னு நான் எப்படி நினைப்பேன். அது ஒரு விதமான அழுத்தம். அது கூட உங்களால இல்லை, எனக்கு நானே ஏற்படுத்திகிட்ட அழுத்தம். வேண்டாம் வேண்டாம்னு சொல்லிட்டு எல்லா இடத்துலையும் நீங்க எனக்கு தேவைப்பட்டிங்க உதய். அப்போ நீங்க இல்லைன்னு அழுத்தம், தியா பிறக்கும் போது, எனக்கு ரொம்பத் தேவைப்பட்டிங்க. ஆனா அப்பவும் கூட நீங்க இல்லைன்ற அழுத்தம். எல்லாமே நானே உருவாக்கிக்கிட்டது தான். கோபத்துல சொன்னாலும் அப்படியே விட்டுட்டு இருந்திடுவிங்களான்ற அழுத்தம். இதெல்லாம் நீங்க வேணும்னு நினைச்சதால வந்த அழுத்தம். அத எப்படி காட்றதுன்னு தெரியாம, என்னென்னவோ பண்ணி, என்னென்னவோ பேசிட்டேன்” என்றவளின் தலை மட்டும் நிமிரவே இல்லை, கண்ணீர் மட்டும் வந்து கொண்டிருக்க,
அதற்கு மேல் அவளைத் தவிக்க விடாதவனாய், இழுத்து தனக்குள் இறுக அணைத்துக் கொண்டான் குமரன். அவளின் அத்தனை அழுத்தங்களுக்கும் அவனின் அந்த ஒற்றை இறுகிய அணைப்பு தான் மருந்தாய் மாறியிருந்தது. இது தான் சாக்கென்று அவளுக்குள் இருந்த அழுத்தமெல்லாம் அழுகையாய் மாற, அழுது தீர்த்திருந்தாள். அவனின் இதயத் துடிப்பை உணர்ந்தவளுக்கு, உடலெல்லாம் உணர்வுப் பேரலைகள் தாக்க, அந்த இடமே மிகப் பாதுகாப்பான இடமாய் தோன்றியது. அவனின் ஒரு அணைப்பிற்கு எவ்வளவு ஏங்கியிருக்கிறாள் என்று அப்போது தான் அவளே உணர்ந்து கொண்டாள்.
அவள் அவனை நிமிர்ந்து பார்க்க, அவனோ அவளை குனிந்து பார்த்திருந்தான்.
“என்ன?” என்றான்.
“எனக்கு உதய குமரன்னு ஒரு புருஷன் இருந்தாரு. அப்பல்லாம் என் பக்கத்துல வந்தாலே மெல்ட் ஆகிடுவார் மனுஷன். அவர் கண்ல அவ்வளவு காதல் தெரியும். இப்ப மாதிரியெல்லாம் விறைப்பா நிக்க மாட்டார்” என்றாள் முறைத்தபடி.
“உதய்” என்றவளின் முகம் சிவக்க, அவனோ அவள் இதழ்களை சுவைத்திருந்தான். உயிரின் உணர்வுகளை மொத்தமாய் குடிக்கும் அவனின் ஒன்றை முத்தத்தில் உருகிக் கரைந்து கொண்டிருந்தவளை
“மம்மி’ என்ற தியாவின் குரல் நிஜத்திற்கு அழைத்து வந்தது. அவனிடமிருந்து அவள் சட்டென்று விலக, தலையைக் கோதி, தன்னை சமன் செய்தவன், மூச்சு வாங்க நின்றிருந்தவளை பார்த்த பார்வையில் அவளுக்கு உடலும் உள்ளமும் சிலிர்க்க, அதை மறைக்க அவனை முறைத்திருந்தாள்.
“அப்போ தியாவுக்கு நீங்க தான் செஞ்சு குடுத்திங்களா?” என்றாள் ஆச்சர்யமாய்.
“அப்பறம் குழந்தைக்கு தினமும் ஹோட்டல்லயா வாங்க முடியும்?” என்றான்.
“ஏன் குழந்தையை பார்த்துக்க ஆள் வச்ச மாதிரி சமையலுக்கும் ஆள் வச்சிருக்க வேண்டியது தானே” என்றாள் கடுப்பாக.
“ஆள் எல்லாம் வைக்கலை. குருவோட அம்மா தான் பார்த்துகிட்டாங்க. அதுவும் ஒரு ஹெல்ப்பா தான்” என்றவன் ஹாலிற்கு சென்று தியாவைத் தூக்கிக் கொண்டான்.
“அழாம இருந்துகிட்டாளா?” என்றாள்.
“மகதியும் நரேனும் வந்து ஒரு ரெண்டு நாள் வந்து கூட இருந்தாங்க. அப்படியும் தினமும் உன்னைக் கேட்டு கொஞ்சம் படுத்திட்டா. முடியாத பட்சத்துக்கு தான் நேத்து தூக்கிட்டு வந்தேன்” என்றான்.
“அவங்களை கவனிக்கிறது இருக்கட்டும். எனக்கு டைம் ஆச்சு நதி, டியூட்டிக்கு கிளம்பனும்” என்றான்.
“இன்னைக்கு சண்டே கூட ஆப் இல்லையா?” என்றாள்.
“தாசில்தார் மேடம் இந்த வீக் ஆப் எல்லாம் உங்களுக்கு மட்டும் தான்.போலீஸ்ல நாமளா எடுத்தாத்தான் ஆப் எல்லாம்” என்றவன் கிளம்பச் செல்ல, அவன் பின்னோடு சென்றாள் நதி.
“என்னோட டிரஸ் எல்லாம் அந்த வீட்ல இருக்கு, எடுக்கணும்” என்றாள்.
“அது என்னவோ உண்மைதான். அப்ப விட இப்ப எல்லாமே கூடிப் போய்த்தான் இருக்கு” என்று அவன் மார்க்கமாய் சொல்லி வைக்க, அவள் கையில் கிடைத்ததை எடுத்து எறிந்திருந்தாள்.
“நானும் கொழுப்பை தான்டி சொன்னேன்” என்றவன் பாத்ரூமிற்குள் சென்று மறைய, அதுவரை முறைத்துக் கொண்டிருந்தவளுக்கு, அவன் சென்றவுடன் சிரிப்பு வந்திருந்தது.
“இவருக்கு வாயுமே கூடிப் போச்சு” என்று முனங்கியபடி சென்றாள்.