அந்த இரவு நேரத்தில் மனைவி மகளுடன் பயணித்துக் கொண்டிருந்தவனின் மனதிலும் ஆயிரம் எண்ணங்கள் பயணம் செய்து கொண்டிருந்தது. எல்லாம் சரியாகி விட்டது என்று அவனுக்கு தோன்றினாலும் மனதின் ஏதோ ஒரு மூலையில் இருந்த வெறுமையும், கோபமும் அப்படியே இருப்பதைப் போன்று தான் இருந்தது.
நதியும் அவனைப் பற்றி தான் யோசித்துக் கொண்டிருந்தாள். அவள் அணைத்த போது கூட அவன் திருப்பி அவளை அணைக்கவில்லை. அதுவே அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. அவன் முகத்தில் இருந்து அவன் என்ன நினைக்கிறான் என்று தெரிந்து கொள்ளவும் முடியவில்லை. அவளுக்கோ மனதின் ஏதோ ஒரு மூலையில் இருந்த வெறுமையும், கோபமும் முழுதாய் நீங்கிவிட்ட உணர்வு.
இரு வேறு உணர்வுகளும் ஒரே பாதையில் பயணம் செய்து கொண்டிருந்தது. வரும் வழியிலேயே தியா உறங்கியிருக்க, தன் வீட்டின் முன் வண்டியை நிறுத்தியவன், தியாவைத் தூக்கிக் கொண்டான். வீட்டைத் திறந்து அவன் உள்ளே செல்ல, நதியோ தயக்கத்துடன் நின்றிருந்தாள்.
குமரன் யோசனையுடன் திரும்பிப் பார்க்க, அவளின் பார்வையும் அவனைத்தான் நோக்கியது. அவளின் யோசனையைக் கண்டவனுக்கு மட்டுப் பட்டிருந்த கோபம் மீண்டும் தலை தூக்க,
“உள்ள வரணுமான்னு யோசிக்கிறியா? இல்ல, இங்க வந்திருக்கவே கூடாதுன்னு யோசிக்கிறியா?” என்றான். முகம் என்னவோ சாதரணமாகத் தான் இருந்தது. குரல் தான் இறுகிப் போயிருந்தது.
“நீங்க உள்ள கூப்பிடவே இல்லை” என்றாள் மெதுவான குரலில். அவளை யோசனையுடன் பார்த்தவன்,
கணவன் மனைவிக்கு இடையில அன்பையும் காதலையும் நம்பிக்கையையும் தான் எதிர்பார்க்கனும். இப்படி சம்பிரதாயத்தை எல்லாம் எதிர்பார்க்கக் கூடாது. உனக்கு என்கிட்ட வரணும்ன்னு எண்ணம் இருந்திருந்தா நீயே வந்திருப்ப நதி. இதோ இப்ப வாசல் வரைக்கும் வந்துட்டு உள்ள வரனுமான்னு யோசிச்சு நிக்கிற மாதிரி நிக்க மாட்ட. உரிமையா நீ உள்ள வரணும்னு நான் நினைக்கிறேன். உபசரிப்பா தான் உள்ள வருவேன்னு நீ சொல்ற? என்ன ஒரு பொருத்தம்ல என்றவனின் குரலில் இருந்த உணர்விற்கு என்ன பெயர்?
“உபசரிக்க சொல்லலை உதய். நீங்களும் உரிமையா என்னை வரச் சொல்லியும் கூப்பிடலை” என்றாள்.
“உன்னைப் போகச் சொல்லியும் நான் சொல்லலை” என்றான் அவனும்.
அவளோ அப்படியே நிற்க, அவனுக்கோ ‘என்னடா இது?’ என்பதைப் போல் தான் இருந்தது. தியாவை அறைக்குள் சென்று படுக்க வைத்துவிட்டு வந்தவனுக்கு இன்னமும் அவள் வெளியவே நிற்பது கண்டு எரிச்சல் தான் வந்தது.
“காலையில இருந்து ஹெவி வொர்க். ரொம்ப டயர்டா பீல் பண்றேன்.தயவு செய்து உள்ள வாங்க மேடம். வெளிய நின்னு விளையாடுறதுக்கு இது பகல் நேரமில்லை” என்றான். நதி அவனை முறைத்திருக்க,
“உள்ள வர இஷ்ட்டம்னா வா. இல்லைன்னா போடி” என்று உள்ளே செல்ல முற்பட்டான். அப்படியும் மனசுக் கேட்காமல்,
“இவளை” என்று ஒரு பெரு மூச்சுடன்,கோபமாய் திரும்பி வெளியே வந்தவன், அவளை அசால்ட்டாய் தூக்கியிருந்தான்.
“கையைப் பிடிச்சு கூட்டிட்டு போவார் போல” என்று யோசித்திருக்க, அவனோ சட்டென்று தூக்கிக் கொண்டு சென்றவன், ஹாலில் கிடந்த சோபாவில் பொத்தென்று போட்டு விட்டுச் சென்றான்.
“இந்த காக்கி என்ன இப்படி அசால்ட்டா தூக்கிப் போட்டுட்டு போறான்?” என்று எண்ணியவள்,
“நல்ல வேலை தரையில் போடாம, சோபாவுல போட்டான். இல்லைன்னா உன் கதி அதோ கதி தான் நதி” என்று புலம்பிக் கொண்டாள்.
“நீ செய்றது மட்டும் சரியா? வாசல்ல நின்னுகிட்டு அப்படி என்ன பிடிவாதம்?” என்றது ஒரு மனம்.
‘அவர் கூட சேர்ந்து ஒண்ணா உள்ள வரணும்னு ஆசைப்பட்டது ஒரு குத்தமா?’ என்றாள்.
“அதை வாயைத் திறந்து சொல்லியிருக்க வேண்டியது தான?” என்றது மனம்.
“ஏன் சொல்லலைன்னா துரைக்கு தெரியாதாம்மா?” என்று முறுக்கிக் கொண்டாள்.
அப்போது தான் வீட்டைச் சுற்றி கவனித்தாள். அன்று தியாவுடன் வந்த போது பார்த்த வீட்டிற்கும் இப்போது இருக்கும் வீட்டிற்கும் அத்தனை வித்தியாசம் இருந்தது. வீட்டை அவ்வளவு அழகாக நேர்த்தியாக செட் செய்திருந்தான்.
“என்ன இருந்தாலும் இந்த பெர்பெக்ஷன்ல உங்களை அடிச்சுக்க ஆளே இல்லை உதய்” என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, முகத்தைத் துடைத்தபடி வெளியே வந்தான்.
“ஆபீஸ் போயிட்டு வந்து குளிக்கிற பழக்கம் எல்லாம் இல்லையா?” என்றான்.
“அது இன்னைக்குத் தான் ஏதோ யோசனையில இருந்துட்டேன்” என்றாள்.
“குளிக்கணும்னா குளிச்சுட்டு வா” என்றான்.
“நான் டிரஸ் எதையும் எடுத்துட்டு வரலையே?” என்றாள்.
“விட்டுட்டு போகும் போதும், நீ எதையும் எடுத்துட்டுப் போகலையே. எல்லாம் அப்படியே தான் இருக்கு” என்றான்.
“கோயம்புத்தூர்ல இருந்து வரும் போது என்னோட திங்க்ஸ் எல்லாத்தையும் எடுத்துட்டு வந்திங்களா?” என்றாள் ஆச்சர்யமாய்.
அவளை முறைத்தவன்,”என் சம்பந்தப்பட்ட எந்த பொருளும் அந்த வீட்ல இல்லை, நான் உட்பட” என்றவன் சமையலறைக்குள் புகுந்து கொண்டான்.
அறைக்குள் சென்றவள் கண்ணை விரித்தாள் ஆச்சர்யத்தில். அந்த அறையே அவ்வளவு பிளசன்ட்டாக இருந்தது. மகளுக்காக அனைத்து வசதியையும் செய்திருந்தான்.
‘பாருங்கப்பா! யோவ் காக்கி, மகளுக்குன்ன உடனே பார்த்து பார்த்து பண்ணியிருக்க நீ. எனக்கு இப்படி எதையாவது பண்ணியிருக்கியா நீ? நான்னா உனக்கு எப்பவும் தக்காளித் தொக்கு தான்” என்றவள் அங்கிருந்த கபோர்டைத் திறக்க, தியாவின் துணிகளும், அவளுடையதும் அழகாய் மடித்து வைக்கப்பட்டிருந்தது.
‘இதெல்லாம் இப்ப பத்தும்மானு தெரியலையே’ என்று யோசித்தபடியே ஒரு சல்வாரை எடுத்துக் கொண்டு சென்று, குளித்துவிட்டு வந்தவளைக் கண்டவனுக்கு ஒரு நிமிடம் மூச்சடைத்தது.
“முன்ன விட ரொம்ப கும்முன்னு தெரியறா? குமரா ஸ்டெடி” என்று தலையை உலுக்கிக் கொண்டவன்,
“உன் முகத்தைப் பார்த்தாலே தெரியுது, நீ சாப்பிட்ட லட்சனம்” என்றவன்,
“ஆர்கியு பண்ணாம சாப்பிடு நதி” என்றான்.
“நீங்க”
“நானும் தியாவும் சாப்பிட்டு தான் உன்னைப் பார்க்கவே வந்தோம்” என்றான்.
சாப்பிட ஆரம்பிக்கவும் தான் அவளின் பசி அவளுக்கே தெரிந்தது. அவள் சாப்பிடுவதைப் பார்த்தவன், மேலும் இரண்டு தோசை போட்டு எடுத்து வந்திருந்தான். அதையும் சாப்பிட்டு முடித்திருந்தாள். ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலையும் கொண்டு வந்த தர,
“வேண்டாம் உதய், ஏற்கனவே புல்லா இருக்கு” என்றவள், அவன் முறைத்த முறைப்பில் அதையும் வாங்கிக் குடித்திருந்தாள்.
“தியா கூட போய் படுத்துக்கோ” என்றான். அவளும் தியாவின் அருகில் சென்று படுத்துக் கொண்டாள். அவனிடம் பேச வேண்டும் என்று அவள் தூங்காமல் முழித்திருக்க, அவன் வருவான் என்று அவள் நினைத்திருந்தாள். வெகு நேரமாகியும் அவனைக் காணவில்லை.
“இன்னும் என்ன பண்றார்?” என்றவள் வெளியே வந்து பார்க்க, லைட் எல்லாம் ஆப் செய்யப்பட்டு, மெல்லிய வெளிச்சம் மட்டுமே இருந்தது.
யோசனையுடன் பக்கத்து அறையை திறந்து பார்க்க, அவனோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். பார்த்தவளுக்கு மனம் கனமாகிப் போனது. மீண்டும் வந்து மகள் அருகில் படுத்துக் கொண்டவளுக்கு காரணமே இல்லாமல் கண்கள் கலங்கியது. அவன் தன்னிடம் ஒதுக்கம் காட்டுவது அவளுக்கு நன்றாகவே புரிந்தது.
“அப்போ என்னை எதுக்கு இங்க கூட்டிட்டு வரணும்?” என்று எண்ணியவள்,
“இருக்கட்டும், இதை இப்படியே விடக் கூடாது. காக்கி உனக்கு இருக்கு” என்று கறுவிக் கொண்டவள், மகளை கட்டிக் கொண்டு சில நிமிடங்களில் உறங்கியும் போனாள்.
காலையில் நதி கண் விழித்தது என்னவோ, குமரன்-தியா சிரிப்பு சத்தத்தில் தான். அவள் நேரத்தைப் பார்க்க, அது எட்டு மணியைக் காட்டியது.
“ஹோ, காட் இவ்வளவு நேரமா தூங்கியிருக்கேன்” என்று பதறியபடி அவள் எழ, குளித்து முடித்து பிரஷ்ஷாக வெளியே வந்த தியா, நதி எழுந்துவிட்டதைக் கண்டதும்,
“குட்மார்னிங் மம்மி” என்று வந்து கட்டிக் கொண்டாள்.
“ம்ம்” என்று தலையை ஆட்டியவளை இழுத்து தலையை துவட்டி விட்டுக் கொண்டிருந்தான் குமரன். அவளைக் குளிக்க வைத்ததில் அவனும் பாதி நனைந்திருக்க,
“என்னை எழுப்பியிருக்கலாமே உதய்” என்றாள்.
“இன்னைக்கு சண்டே, உனக்கு ஆப் தான. வாரத்துல ஒரு நாள் தானே ரெஸ்ட். தூங்குறதுன்னா தூங்கு நதி” என்றவன், தியாவைத் தூக்கிக் கொண்டு ஹாலிற்கு சென்று விட்டான்.
ஆக, அவள் மீதான அவனுடைய கரிசனை எல்லாம் அப்படியே தான் இருந்தது. ஒன்றாய் வாழ்ந்த நாட்களிலும் இப்படி அவள் மீது அக்கறையாகத்தானே இருந்தான். ஆனால் அதில் அன்பும் காதலும் இருந்தது. இப்போது அவனுடைய அக்கறையில் கடமை மட்டுமே இருப்பதைப் போன்று தோன்றியது நதிக்கு.