“என்ன சார்? திடீர்ன்னு ஒரு மாசம் மெடிக்கல் லீவ் எடுத்திருக்கிங்க?” என்றான் குரு ஆச்சர்யமாய்.

“என்னோட லீவ் எல்லாம் அப்படியே தான் இருக்கு குரு. சரி கிடைக்கிறப்பவே எடுத்துக்குவோம். நமக்கும் ரெஸ்ட் வேணும்ல. இந்த லீவ் எல்லாம் என்ன பண்றது?” என்றான்.

“நீங்க இல்லாம எனக்கு எப்படி சார் வேலை ஓடும்?” என்றான் குறையாய்.

“இன்சார்ஜ் இன்ஸ்பெக்டர் வருவாங்கல்ல. அவங்களுக்கு நீதான் மேன் டிரைவர்” என்றான் சிரிப்புடன்.

“இருந்தாலும் நீங்க இப்படி பண்ணியிருக்க வேண்டாம். அப்போ நானும் ஒரு மாசம் எம்எல் போடுறேன் சார்” என்றான்.

“இங்க பார் குரு, உனக்கு இன்னும் மேரேஜ் ஆகலை. எப்படியும் உன் மேரேஜ்க்கு லீவ் தேவைப்படும். அப்பறம் குழந்தை, டெலிவரி டைம்ன்னு லீவ் தேவைப்படும். சோ தேவையில்லாம லீவ வேஸ்ட் பண்ணாத. தேவையான டைம்ல எடுக்க முடியாம போகும்” என்றான் குமரன்.

“இருந்தாலும் உங்களைப் பார்க்காம எப்படி சார் இருப்பேன்?” என்றவனைப் பார்த்து சிரித்திருந்தான்.

“யோவ் குரு, நீ என்னப்பா என்னோட லவ்வர் மாதிரி பேசிட்டு இருக்க?” என்றவன் சிரிக்க,

“கிண்டல் பண்ணாதிங்க சார்” என்றவனுக்கு நிஜமாகவே வருத்தமாகத்தான் இருந்தது.

“இப்பத்தான் எழுதியே குடுத்திருக்கேன். இன்னும் லீவ் சேங்ஷன் ஆகலை. ஆகும் போது பார்த்துக்கலாம்” என்றவன் வீட்டில் இறங்கிக் கொள்ள, குருவின் தாய் வெளியே வந்தார்.

அவரிடம் இருந்த தியா குட்டி குமரனிடம் தாவ,

“அப்போ நான் கிளம்புறேன் தம்பி” என்றவர் குருவுடன் சென்று விட்டார். இந்த ஒரு வாரமும் குருவின் தாய் தான் தியாவைப் பார்த்துக் கொள்கிறார். அவரை குமரனின் வீட்டில் விட்டுவிட்டு, குமரனை அழைத்துக் கொண்டு செல்லும் குரு, டியூட்டி முடிந்து வரும் போது, அவரை அழைத்துச் சென்று விடுவான்.

“டாடி மம்மி வேணும்” என்றாள் தியா. அவளும் ஒரு வாரமாக விடாமல் நதியைக் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறாள். இவன் தான் நாளை நாளை என்று நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறான்.

இதற்கு மேல் குழந்தையை ஏங்க வைப்பதில் அவனுக்கு உடன்பாடு இல்லை. தங்கள் சண்டையில் குழந்தை என்ன செய்வாள்? என்று யோசித்திருந்தான்.

‘இப்போ அவளைத் தேடி போகப் போறியா குமரா?’ என்று மனசாட்சி கேட்க,

“வேற வழி, ஏக்கத்துல குழந்தைக்கு ஏதாவது ஒண்ணுன்னா என்ன பண்றது?” என்று முடிவெடுத்தவன்,

“தியா குட்டியை டாடி இன்னைக்கு மம்மி கிட்ட கூட்டிட்டு போறேன். டாடி குளிச்சுட்டு வந்த உடனே போகலாம் சரியா?” என்றான்.

“ஓகே டாடி” என்றவளின் முகத்தில் அளவிற்கு மீறிய மகிழ்ச்சி.

அவன் வரும் போதே இரவு ஒன்பது மணியை நெருங்கியிருந்தது. குளித்து முடித்து அவன் தியாவைக் கூட்டி கொண்டு செல்லும் போது பத்து மணியாகியிருந்தது.

அங்கு நதியின் பாடு தியாவை விட மோசம். கைக்குள் வைத்து வளர்த்த குழந்தையைப் பார்க்காமல் அவளும் தவித்திருக்க, அந்த வீட்டில் தனியாக இருக்கவும், பல சிந்தனைகளும் அவள் சிந்தைக்குள் நுழைந்து அவளை ஆட்டுவித்துக் கொண்டிருந்தது.

அதிலும் அன்று குமரனைப் பார்த்த பிறகு, அவளால் சுத்தமாக முடியவில்லை. வீம்பாவது ஒன்றாவது பேசாமல் அவனிடத்திற்கு சென்று விடலாமா என்று கூட யோசித்திருந்தாள்.

இப்போதெல்லாம் அவனைப் பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டிருக்கிறாள். எதைத் தொட்டாலும் குமரன் தான் முன் வந்து நிற்கிறான். அதுவே அவளுக்கு அழுத்தமாக மாறிக் கொண்டிருந்தது. அலுவலகத் தலைவலி ஒரு புறம், தியா நினைப்பு, குமரன் நினைப்பு, குடுபத்தின் நினைப்பு, தனிமை என்று அவளைப் பாடாய் படுத்த, அவளுக்கு கண்ணீரே வந்திருந்தது.

“பேசாம அம்மாவை இருக்க சொல்லியிருக்கலாமோ?” என்று கூட யோசித்துவிட்டாள்.

“நீங்களும் இப்படித்தான் கஷ்ட்டப்பட்டிங்களா உதய்” என்று எண்ணியவள் அவனுக்கும் சேர்த்து அழுதாள்.

“அப்போ கூட உனக்கு ஈகோ போகுதா நதி. ஏன் நீ அவனைத் தேடி போனாத்தான் என்ன?” என்றது மனம்.

“அவர் கூப்பிடாம நான் போகவே மாட்டேன்.அதான் சார் ஆள் வச்சு பார்த்துக்கிறாரே அப்படியே பார்த்துட்டும். எத்தனை நாளைக்குன்னு நானும் பார்க்கிறேன்” என்றாள் மனதிடம் உறுதியாய்.  உறுதியெல்லாம் ஒரு நிமிடம் தான் மீண்டும் அழுகை வந்தது.

“நதி உனக்கு என்னமோ ஆகிடுச்சுடி” என்று தனக்குத் தானே தலையில் அடித்துக் கொண்டவள்,

‘வாழ்க்கையில ஒரே ஒரு கல்யாணம் பண்ணிட்டு நான் படுற பாடு இருக்கே” என்று நொந்து கொண்டாள்.

செல்போன் திரையில் அவர்களின் திருமணப் புகைப்படத்தை பார்த்திருந்தவளுக்கு மீண்டும் அழுகை வர,

“நீ மட்டும் தான் இவரை நினைச்சு தவிச்சு போய் இருக்க. அதான் உன்னை வேண்டாம்னு சொல்லிட்டார்ல. இன்னும் ஏன் அவர் முகத்தையே பார்த்துட்டு இருக்க?” என்று ஒரு மனம் கிண்டல் செய்ய,

“எனக்கு நீ வேண்டாம் நதி” என்றவனின் வார்த்தைகளே மீண்டும் மீண்டும் கேட்டது அவளுக்கு.

“இதுக்குத்தான் இவரை பார்க்காமயே இருந்தேன். சீக்கிரம் என்னை முழுப்பைத்தியம் ஆக்கிடுவார்” என்று அதற்கும் ஒரு அழுகை அழ,

“அடப் போமா நீ” என்று அந்த மனதிற்கே எரிச்சல் வந்திருந்தது. சாப்பிடவும் பிடிக்காமல் சமைக்கவும் பிடிக்காமல் தரையில் படுத்திருந்தவளுக்கு, காலிங் பெல் சத்தம் கூட முதலில் கேட்கவில்லை. சத்தம் மீண்டும் மீண்டும் கேட்க, அப்போது தான் அவளுக்கு உரைத்தது.

“இந்த நேரத்துக்கு யாரா இருக்கும்?” என்றவளுக்கு படபடப்பு.

ஜன்னல் வழியாக பார்க்க, சரியாகத் தெரியவில்லை.மீண்டும் பெல் அடிக்க, பயத்துடன் தான் கதவைத் திறந்தாள். அங்கு குழந்தையுடன் குமரனைப் பார்க்கவும் தான் உயிரே வந்தது அவளுக்கு.

ஒரு வாரத்திற்கு பிறகு மகளைப் பார்க்கிறாள். “மம்மி” என்ற  தியா சட்டென்று அவனிடம் இருந்து அவளிடம் தாவ,

“தியாம்மா மம்மியை மறந்துட்டல்ல”என்றவள் மகளைக் கட்டிக் கொண்டு அழுது தீர்த்தாள்.

தியாவும் வழக்கம் போல் அவள் முகம் முழுவதும் முத்தமிட்டு கொஞ்சிக் கொண்டிருக்க,  அவர்களை அப்படி பார்த்த பிறகு தான் குமரனுக்கு மனம் நிம்மதியடைந்தது.

நிம்மதி பெருமூச்சுடன் அப்போது தான் நதியை கூர்ந்து கவனித்தான். வீட்டிற்கு வந்தவள் புடவையைக் கூட மாற்றால் அப்படியே இருந்தாள். அதுவும் நலுங்கிப் போயிருக்க, அழுததில் முகமெல்லாம் வீங்கிப் போய் இருந்தது.

“தியா உன்னை மறக்கவெல்லாம் இல்லை. இந்த ஒரு வாரமும் உன்னைக் கேட்டுகிட்டே தான் இருந்தா” என்றான் அவளை கூர்ந்து நோக்கியபடி.

“அப்பறம் ஏன் நீங்க என்கிட்ட கூட்டிட்டு வரலை?” என்றாள் கோபமாய்.

“நீதான சொன்ன ரெண்டு வருஷத்துக்கு பார்க்க மாட்டேன்னு. ஏன் இன்னைக்கு என்னைப் பார்த்தப்ப கூட தியாவைப் பத்தி கேட்கலையே? இதுல நீ குழந்தையை குறை சொல்ற?” என்றான் குமரன்.

“உங்களால பார்த்துக்க முடியாதுன்னு நினைச்சு சொன்னேன். நீங்க ஆள் வச்சு பார்த்துப்பிங்கன்னு நான் என்ன கண்டேன்?” என்றாள்.

“சோ என்னால முடியலைன்னு உன்னையே தேடி வரணும்னு நினைச்சிருக்க?” என்றான்.

“நான் நினைச்சதுல தப்பொன்னும் இல்லை” என்றாள்.

“நீ நினைச்சது, நினைக்கிறது எல்லாமே சரி தான். எப்பவுமே நான் மட்டும் தான் தப்பு” என்றான்.

“நான் எப்போ அப்படி சொன்னேன்? நீங்க மட்டும் பொண்ணு போதும் பொண்ணோட அம்மா வேண்டாம்னு சொல்லலாமா?” என்றாள் நதி.

“நீ சொன்னதை நான் திருப்பி சொன்னா உனக்கு கோபம் வருது. ஆனா அதே கோபம் எனக்கு வந்தா தப்பு, இல்லையா?” என்றவன் கண்களை மூடி தன் உணர்வுகளை அடக்கிக் கொண்டான்.

“குழந்தை இருக்கட்டும். மார்னிங் வரேன்” என்றவன் கிளம்பிவிட்டான்.

“டாடி நானு” என்றாள் தியா.

“அம்மா கூட இருடா” என்றவன் கிளம்பிவிட்டான். அவன் கிளம்பவும் சட்டென்று அவள் மீது அவளுக்கே கழிவிரக்கம் தோன்ற கண்ணீர் வடிக்க, தியாவோ இறங்கி ஓடி விட்டாள். அவர்களையே ஏக்கமாய் பார்த்திருந்தவள்,

“போங்க எல்லாரும். எனக்கு யாரும் வேண்டாம்” என்று அழுது கொண்டே சென்றவள் சட்டென்று திரும்பிப் பார்க்க, குழந்தையுடன் நின்றிருந்தான் குமரன்.

அவனுக்கு அவளைத் தனியே விட்டு விட்டுச் செல்லவும் தயக்கமாய் இருந்தது. அவள் பிடிச்ச பிடியில் தொங்கிக் கொண்டிருப்பவளைப் பார்த்து ஆயாசமாய் வந்தது.

“எப்படி தனியா இருப்ப?” என்றான்.

“எப்படியோ இருக்கேன். அதான் வேண்டாம்னு சொல்லிட்டிங்கல்ல, போங்க” என்றாள் கண்ணீரை உள்ளடக்கி.

“நான் என் பொண்ணோட அம்மா வேண்டாம்னு தான் சொன்னேன். என் பொண்டாட்டி வேணாம்னு சொல்லலையே?” என்றான் அவளையே பார்த்தபடி.

“உங்களுக்கு” என்று ஆரம்பிக்கப் போனவளுக்கு அப்போது தான் அவன் சொன்னது உரைத்தது.

“என்ன சொன்னிங்க?” என்றாள் திரும்பவும்.

“என் பொண்டாட்டி வேண்டாம்னு நான் சொல்லையே?” என்றான். அவனின் வார்த்தைகளில் அவளுக்கு கண்ணீர் வர,அவள் அவனையே வெறித்திருந்தாள்.

அவள் ஏதாவது பேசுவாள் என்று எண்ணி அவன் நிற்க, அவளோ அமைதியாய் வெறிக்க, ஒரு பெருமூச்சுடன் கிளம்பிவிட்டான். அவன் வெளியேறவும் தான் அவன் செல்வதையே உணர்ந்தாள்.

மகளை பைக்கில் உட்கார வைத்துக் கொண்டிருக்க, வேகமாய் வந்த நதியோ அவனை பின்னிருந்து கட்டிக் கொண்டாள். சட்டென்று வந்து அணைப்பாள் என்று எதிர்பார்த்திராதவன் திகைத்தான். இரண்டரை வருடங்களுக்குப் பிறகான மனைவியின் அணைப்பில் அவன் உடல் சிலிர்த்து அடங்கியது.

“என்னையும் கூட்டிட்டு போங்க உதய்” என்றவளின் கண்ணீர் அவனின் முதுகு சட்டையை நனைக்க,

“நதி”என்றவனின் குரல் கரகரத்திருந்தது.

“எனக்கும் என் புருஷன் வேணும்” என்றவளின் வார்த்தைகளில் மீண்டும் அவன் சிலிர்த்தடங்கினான்.