வாசல் 22:

அலுவலகத்தில் வேலையில் மும்பாரமாய் இருந்தாள் நதி. இந்த சோலார் பிரச்சனை இன்னும் எத்தனை நாட்களுக்கு இழுக்கும் என்று தெரியவில்லை. ஒரு பக்கம் சரியானால் ஒரு பக்கம் இழுபறி என்று போய்க் கொண்டிருந்தது. இதில் அடுத்தடுத்து பிரச்சனைகள், அரசியல் தலையீடு என்று எந்த நேரமும் தலைவலியோடு தான் சுற்றிக் கொண்டிருந்தாள்.

தியாவை குமரன் அழைத்துச் சென்று ஒரு வாரம் ஆகியிருந்தது. அன்று இரவு வந்து விடுவதாய் கூறியிருந்தவன் வரவே இல்லை. எப்படி பார்த்துக் கொண்டான் என்று யோசித்துப் பார்த்தவளுக்கு தலைவலி வந்தது தான் மிச்சம்.

ஒரு வேகத்தில் அவனிடம் குழந்தையை தூக்கிக் கொடுத்திருந்தாலும், இரண்டு நாட்களுக்கு மேல் அவளால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஒவ்வொரு நாளாய் எண்ணி ஒரு வாரத்தை கடத்தியிருந்தாள். முதல் மூன்று நாட்கள் குடும்பமே உடன்  இருந்ததில் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. அவர்களும் கிளம்பி மூன்று நாட்கள் ஆகியிருந்தது.நரேன் மகதியால் அதற்கு மேல் கல்லூரிக்கு விடுப்பு எடுக்க முடியாது என்பதால், நதியும் வேறு வழியின்றி அவர்களை அனுப்பி வைத்தாள்.

சாரதா மகளைத் தனியே விட்டுச் செல்ல கொஞ்சம் தயக்கம் காட்ட, வரதன் தான் விடாப்பிடியாய் அழைத்துக் கொண்டு சென்றிருந்தார்.

“தியாவும் இல்லை, நதி மட்டும் எப்படி இருப்பா?” என்று சாரதா கவலையுடன் கேட்டு வைக்க,

“அதெல்லாம் அவங்க பாடு. நம்ம இருந்தா நதி கடைசி வரைக்கும் நம்ம கூடத்தான் இருப்பா. அவளும் தனியா இருந்து பார்க்கட்டும். அப்பத்தான் மாப்பிள்ளையோட நியாயமும் நதிக்குப் புரியும்” என்ற வரதன் சாரதாவை கையோடு அழைத்துச் சென்றிருந்தார்.

அத்தனை நாட்கள் ஆளும் பேருமாய் இருந்த வீட்டில் அவள் மட்டும் தனியாக இருக்கிறாள். எப்போதும் அம்மா, அப்பா, தம்பி, தங்கை என்று இருந்தவளுக்கு இப்போது யாருமில்லாத வீட்டிற்கு செல்லக் கூட தோணவில்லை.

இந்த ஒரு வாரத்தில் அவள் குமரனையும் பார்க்கவில்லை. அதுவே அவளின் அத்தனை மனக் குறைக்கும் காரணம்.

இவற்றை எல்லாம் எண்ணி தலையில் கைவைத்தபடி அலுவலக அறையில் அமர்ந்திருந்தவளுக்கு, காரணமே இல்லாமல் அழுகை வந்தது.

“இந்த ஒரு வாரத்துல தியா குட்டி கூட என்னைக் கேட்கவே இல்லையா? அவங்க டாடியை மட்டும் அத்தனை தடவை கேட்டாளே? அப்போ நிஜமாவே குழந்தை என்னை மறந்துட்டாளா?” என்று கேள்வியும் அவளே பதிலும் அவளே என்பதைப் போல் யோசித்திருந்தாள்.

“குழந்தையைப் பார்த்துக்க ஆள் வைக்கப் போறதா சொன்னாரே? வச்சுட்டாரா? அதான் தியா என்னைத் தேடலையா?” என்று மீண்டும் அதைப் பற்றியே யோசிக்க, அவளுக்குப் பைத்தியமே பிடிப்பதைப் போன்று இருந்தது.

இரண்டு நாட்களாக சரியாக சாப்பிடவும் இல்லை. அவள் ஒருத்திக்கு மட்டும் சமைக்க அவளுக்கு விருப்பமே இல்லை. ஏனோ தானோவென்று சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

“மேடம் இன்ஸ்பெக்டர் உங்களை பார்க்க வந்திருக்கார்” என்று உதவியாளர் வந்து சொல்ல, குமரன் தான் வந்திருக்கிறான் என்று ஒரு நிமிடம் மனம் சந்தோஷப் பட்டது.

“வரச் சொல்லுங்க” என்றவளுக்கு அப்படி ஒரு படபடப்பு. ஆனால் வந்தது என்னவோ வேறு ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர். அவரைப் பார்த்ததும் அவளுக்கு முகமே விழுந்துவிட்டது.

“வாங்க இன்ஸ்பெக்டர், உட்காருங்க” என்றாள்.

“மேடம், அந்த கவர்மென்ட் இடம் ஆக்கிரப்பு அகற்றுவது சம்பந்தமா பார்க்கணும்னு  சொல்லியிருந்திங்க. ஆனா அதுல ஒரு சிக்கல் இருக்கு. சம்பந்தப்பட்ட கடைக்காரங்க எல்லாம் கலெக்ட்டரை பார்க்கனும்னு சொல்றாங்க” என்றார் இன்ஸ்பெக்டர்.

“ஓகே இன்ஸ்பெக்டர், அவங்க பார்த்து பேசுறதா இருந்தா பேசட்டும். இன்னும் ரெண்டு நாள் வேணும்னா டைம் குடுக்கலாம்” என்றாள்.

“ஓகே மேடம். நீங்க இன்பார்ம் பண்ணிட்டிங்கன்னா, நாங்களும் அப்பவே வந்துடுவோம் மேடம்” என்றார்.

“ஷ்யர் சார்” என்றாள்.

அவளைப் பார்த்து சிறிது யோசித்தவர்,

“நீங்க கோயம்புத்தூர்ல எஸ்ஐயா வேலை பார்த்த குமரன் அவரோட வொயிப் தான மேடம்?” என்றார் சற்று தயங்கியபடி.

“ஆமா சார்” என்றாள்.

“குமரன் எஸ்.ஐ யா இருந்த ஸ்டேஷன்ல நான் இன்ஸ்பெக்ட்டரா இருந்தேன். உங்க மேரேஜ்க்கு கூட வந்திருந்தேன்” என்றார்.

“சாரி சார், உங்களை மேரேஜ் டைம் பார்த்தது, அதான் சட்டுன்னு அடையாளம் தெரியலை” என்றாள் மன்னிப்பாய்.

“இட்ஸ் ஓகே மேடம். உங்களை இப்படி ஒரு பொறுப்பான வேலையில பார்த்தில் ரொம்ப சந்தோஷம் மேடம்” என்றவர் வெளியே வர,

சரியாக அதே நேரத்திற்கு உள்ளே வந்தான் குமரன்.

“ஹெலோ குமரன்? எப்படி இருக்கீங்க?” என்றவருக்கு சந்தோசம்.

“நல்லா இருக்கேன் சார். நீங்க எப்படி இருக்கீங்க? நீங்க எங்க சார் இங்க?” என்றான் புரியாமல்.

“வேற என்னப்பா ட்ரான்ஸ்பர் தான். இப்பத்தான் உங்க மிஸ்ஸைப் பார்த்தேன். நீங்களும் சரியா வந்து நிக்குறிங்க?” என்றார். அவரைப் பார்த்து ஆமோதிப்பாய் தலையாட்டியவன்,

“அந்த ப்ராப்ளம் என்னாச்சு சார்?” என்றான் குமரன்.

“அது ஒரு வழியா சரியாகிடுச்சு குமரன். ஆதாரம் எல்லாம் கலெக்ட் பண்ணி குடுத்து, ஸ்டேஷன்ல இருந்த பப்ளிக் நடந்ததை சொன்னாங்க குமரன். சோ சால்வ்ட் ஆகிடுச்சு. என்ன ப்ரோமோஷன் தான் ஒரு வருஷம் தள்ளிப் போய்டுச்சு. இல்லைன்னா டிஎஸ்பி ஆகியிருப்பேன்” என்றார்.

“வருத்தமான விஷயம் தான் சார்” என்றான்.

“ஆனா நீங்க கிரேட் குமரன், விடாம பைட் பண்ணி, அப்பவே உங்க மேல தப்பில்லைன்னு புரூவ் பண்ணிட்டிங்க. நீங்க சொன்னப்பவே நானும் கேட்டிருந்திருக்கணும். கொஞ்சம் அசால்ட்டா இருந்துட்டேன்.மூணு வருஷம் ஆகப் போகுது. இருந்தாலும் அந்த இம்பேக்ட் அப்படியே தான் இருக்கு” என்றார்.

“ஏன் சார் நீங்க வேற? அந்த மன உளைச்சலை இப்ப நினைச்சாலும் அய்யோன்னு இருக்கும். அன்னைக்கு எஸ்பி என்னோட சஸ்பென்ஷன் ஆர்டரை கேன்சல் பண்ற வரைக்கும் நான் பட்ட பாடு எனக்குத் தானே தெரியும்”  என்றான் குமரன்.

“இன்ஸ்பெக்டர் ஆகிட்டிங்கன்னு கேள்விப்பட்டேன். வாழ்த்துக்கள் குமரன்” என்றார்.

“தேங்க்யு சார்” என்ற குமரன் மேலும் அவரிடம் பேசிக் கொண்டிருக்க, குமரன் என்ற பெயரைக் கேட்டவுடனே எழுந்து வந்தவளுக்கு அவர்கள் பேசியதும் காதில் விழத்தான் செய்திருந்தது.

“குமரன் சஸ்பென்ட் ஆனாரா? எப்போ நடந்திருக்கும்?” என்று யோசித்தவளுக்கு ஒன்றும் புரிபடவில்லை. யோசனையைத் தள்ளி வைத்தவள் அவனைத் தான் பார்த்திருந்தாள். ஒரு வாரத்திற்கு பிறகு பார்க்கிறாள். எப்போதும் போல் அவன் தோற்றத்திலும் மேனரிசத்திலும் அவள் ஈர்க்கப்பட, அவனைத்தான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவன் கையில் இருந்த கோப்பே சொல்லியது, முக்கியமான வேலையாய் வந்திருக்கிறான் என்று. அவரிடம் பேசி முடித்தவன் முன்னோக்கி நடந்து வர, சட்டென்று அவளிடத்தில் சென்று அமர்ந்து கொண்டாள்.

“எக்ஸ்கியூஸ்மி மேடம்” என்ற குரலில், “வாங்க” என்றாள்.

“உட்காருங்க இன்ஸ்பெக்டர்” என்றவள் வேலை இருப்பதைப் போல் காட்டிக் கொள்ள,

“கலெக்ட்ரேட்ல இருந்து கேட்டிருந்த பைல் மேடம். அந்த பிராஜெக்ட் சம்பந்தமான கேஸ் பைல்” என்றவன் அவளிடம் நீட்ட, அதை வாங்கிக் கொண்டவள்,

“இதை நீங்க கொண்டு வரணும்னு இல்லையே சார்?” என்றாள் கேள்வியாய்.

“உண்மை தான் மேடம். பட், எனக்கு இங்க வேற வேலை இருந்தது. அதான் நானே கொண்டு வந்தேன். இதுல உங்களுக்கு ஏதாவது இஷூயூஸ் இருக்கா மேடம்?” என்றான்.

“எனக்கென்ன இருக்கப் போகுது?” என்றவள்,

‘தியா எப்படி இருக்கா?’ என்று கேட்க வாய் வரை வந்த வார்த்தைகளை அடக்கிக் கொண்டாள்.

அவனும் அவளைத்தான் பார்த்திருந்தான். நிஜமாகவே அவனுக்கு வேலை இருக்கப் போய் தான் அங்கு வந்திருந்தான். எப்படியும் தியாவைப் பற்றி கேட்பாள் என்று நினைத்தான். அவளோ வாயைத் திறக்காமல் இருக்கவும்,

“உனக்கு கொழுப்பு குறைவே குறையாதுடி” என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டவன், அங்கிருந்து கிளம்ப முற்பட,

“ஒரு நிமிஷம்” என்றவள்,

“நீங்க எப்போ சஸ்பென்ட் ஆனிங்க?” என்றாள்.

அவளையே ஆழ்ந்து பார்த்தவன்,”உங்களுக்கு அபார்ஷன் ஆன அன்னைக்குத்தான் மேடம்” என்றவன் உடனே கிளம்பிவிட்டான்.

“அன்னைக்கா?” என்று அதிர்ந்தவளுக்கு,

“நதி ஸ்டேஷன்ல கொஞ்சம் பிரச்சனைமா. எதுவா இருந்தாலும் காலையில பேசிக்கலாம்” என்ற குமரனின் குரல் இப்போது அவள் காதுகளில் ஒலிப்பதைப் போன்ற பிரம்மை அவளுக்கு.

“நிஜமாவே அன்னைக்கு அவர் பிரச்சனையில தான் இருந்திருக்கார் போல. நானும் கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கனுமோ?” என்று யோசித்தாள் நதி.

‘அப்ப கூட அவனை வேற கல்யாணம் பண்ணிக்கச் சொல்லவும் தான் அடிச்சான். அதுக்கு முன்னாடி வரைக்கும் பொறுமையா தான் இருந்தான்’ என்று ஒரு மனம் அவனுக்காக பேச, எது எப்படியோ இனி போனதைப் பத்தி நினைக்கக் கூடாது என்று முடிவெடுத்துக் கொண்டாள்.

வெளியே சென்ற குமரனும் அவளைப் பற்றி தான் யோசித்துக் கொண்டு சென்றான்.

“இவ சாப்பிடுறாளா இல்லையா? ஆள் என்னவோ போல இருக்கா?” என்று யோசித்தவன், ஒரு தயக்கத்துடன் மகதிக்கு அழைப்பெடுத்தான். வரதன் தான் எடுத்திருந்தார்.

“சொல்லுங்க மாப்பிள்ளை”

“மகதி இல்லையா?”

“காலேஜ் போயிருக்கா மாப்பிள்ளை. எதுவும் முக்கியமான விஷயமா?” என்றார்.

“நீங்க எங்க இருக்கீங்க?” என்றான் யோசனையாய்.

“நாங்க கோயம்புத்தூர் வந்துட்டோம் மாப்பிள்ளை” என்றார்.

“அப்போ நதி கூட யார் இருக்கிறது?” என்றான்.

“அவ தனியா தான் இருக்குறா” என்றார் வரதன்.

“தனியாவா? ஏங்க உங்களுக்கு கொஞ்சமாச்சும் இருக்கா? அவளை மட்டும் தனியா விட்டுட்டு போயிருக்கிங்க? இந்த ஊர் வேற அவளுக்குப் புதுசு. கூட யாராவது இருக்க வேண்டாமா?” என்றான் கோபத்தில்.

“அதான் நீங்க இருக்கிங்களே” என்றார் வரதன் பட்டென்று.

பல்லைக் கடித்த குமரன் எதுவும் பேசாமல் வைத்து விட்டான்.

‘கொஞ்சம் கூட பொறுப்பில்லாம பேசிட்டு இருக்காரு. இவ தனியா வேற இருக்கா. யாரும் ஒரு வார்த்தை சொல்லலை’ என்று யோசித்தவன், பெருமூச்சுடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.