“தியா குட்டியை உங்ககிட்டு இருந்து மறைச்சுட்டேன்னு தான உங்க கோபம்” என்றவள்,
“ரெண்டு வருஷம் உங்ககிட்டு இருந்து மறைச்சது தப்புத்தான். அதான் நான் ரெண்டு வருஷம் வளர்த்தேன்ல. இப்போ நீங்க ரெண்டு வருஷம் வளருங்க. சரியா போய்டும். நான் பார்க்க வர மாட்டேன். ரெண்டு வருஷம் கழிச்சு வந்து குழந்தையை வாங்கிக்கிறேன், இந்தாங்க” என்று அவன் கையில் தியாவைத் திணித்தவள் உள்ளே சென்று விட்டாள். குமரனோ அதிர்ச்சியில் நின்றுவிட்டான்.
“எப்படி எப்படி? குழந்தை வேணும், குழந்தையோட அம்மா வேண்டாமா? வச்சு வளர்த்துப் பாருடா அப்பத் தெரியும்” என்று கறுவிக் கொண்டவள், அவசர அவசரமாக அலுவலகம் கிளம்பினாள்.
சாரதா வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருக்க, வரதனோ உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார்.
வேகமாய் வெளியே வந்த மகதி,
“மாமா இருந்தாலும் இப்படி டக்குன்னு முடிவெடுத்து உங்ககிட்ட தியாவைக் கொடுப்பான்னு நான் நினைக்கவே இல்லை. உங்க காட்ல மழை தான்” என்றாள் சிரிப்புடன்.
தியாவை வைத்துக் கொண்டு யோசனையுடன் நின்றிருந்தவன்,
“மகதிமா, நீயும் நரேனும் இன்னைக்கு ஒரு நாள் என்கூட வர்றீங்களா? எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு” என்றான்.
“டேய் நரேன், வாடா மாமாகூட போவோம்” என்று அவள் நரேனை அழைக்க, மூவரையும் அழைத்துக் கொண்டு சென்றான் குமரன்.
அவர்கள் சென்றவுடன் நதி வேகமாய் வந்து எட்டிப் பார்க்க,
“எதுக்கும்மா இவங்களை கூட்டிட்டு போயிருக்கார்?” என்றார்.
“எனக்கென்னடி தெரியும்? நீ என்னடி சட்டுன்னு தியாவைத் தூக்கி குடுத்துட்ட?” என்றார் புரியாமல்.
“இப்படியே விட்டா எப்படி அவரை வழிக்கு கொண்டு வர்றது. நான் பார்த்துக்கிறேன்மா” என்றவள், அலுவலக கார் வரவும் கிளம்பிவிட்டாள்.
கிளம்பி சென்று கொண்டிருந்தவளுக்கு மனம் எல்லாம் குமரன் தான்.
‘உங்களோட வெறுப்பையும், ஒதுக்கத்தையும் ஒரு நாளே என்னால தாங்க முடியலை உதய். எப்படி இத்தனை நாள் தாங்குனிங்க? சாரி உதய்’ என்று ஆயிரம் முறை மனதிற்குள் அவனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள்.
அங்கே மகதி, நரேன், தியா என்று மூவருடனும் வந்த குமரனைப் பார்த்து கோதாவரிக்கு திகைப்பு. அவர்களைக் கண்ட சங்கரனோ,
“ஒளிச்சு மறைச்சு பேசவெல்லாம் ஒண்ணுமில்லை குமரா. இவளை உன் கூட வச்சுட்டு இருந்தா உன் வாழ்க்கை எப்பவும் சரியாகாது. கல்யாணுக்கு போன் பண்ணி சொல்லிட்டேன். நாங்க கிளம்புறோம். அப்பா அடிக்கடி வரேன்ப்பா” என்றார்.
“ஏதவாது ஒண்ணுன்னா உடனே கால் பண்ணுங்கப்பா” என்றவனுக்கு சங்கரனை நினைத்து மனதிற்குள் கவலை இல்லாமல் இல்லை. அதற்காக கோதாவரியுடன் அவனால் சகஜமாக இருக்க முடியவில்லை.
“குமரா” என்று கோதாவரி எதையோ சொல்ல வர, அவனோ தலையைத் திருப்பிக் கொண்டான்.
“தாத்தா ஊருக்கு கிளம்புறேன். பாய் சொல்லுங்கடா தங்கம்” என்று சங்கரன் தியாவைக் கொஞ்ச, கோதாவரிக்கு அவளைத் தூக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கத்தான் செய்தது. குமரனை நினைத்து அமைதியாய் இருந்துவிட்டார்.
“பாய் தாத்தா” என்று அவருக்கு முத்தமிட்டவள், “பாய் பாத்தி(பாட்டி)” என்று கோதாவரிக்கும் போகிற போக்கில் ஒரு முத்தத்தை வைத்து விட்டு சென்றிருந்தாள்.
கோதாவரிக்கு சற்று ஆனந்த திகைப்பு. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பதைப் போல்.
“இந்த குழந்தையைத் தான் வயித்துல இருக்குறப்போ கரிச்சுக் கொட்டுன? இப்போ என்ன கரிசனை?” என்றார் சங்கரன் வெடுக்கென்று.
அவர்கள் செல்வதற்காக காரை வரவழைத்திருந்தான் குமரன்.
“இருக்கட்டும்ப்பா..! உடம்புக்கு முடியாம இருக்கும் போது, ஏன் அலைஞ்சுகிட்டு. கார்லன்னா எனக்கும் கொஞ்சம் நிம்மதியா இருக்கும்” என்றவனைப் பார்த்தவருக்கு கண்கள் கலங்கியது.
“என்னப்பா ஏன் கண் கலங்குறிங்க?” என்றான்.
“நானும் ஏதோ கொஞ்சம் புண்ணியம் பண்ணியிருக்கேன் குமரா. அதான் கடவுள் எனக்கு உன்னை மாதிரி ஒரு மகனைக் குடுத்திருக்கார்” என்றவர்,
“உனக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை குமரா. பிடிவாதம் எல்லாம் வாழ்க்கைக்கு உதவாதுப்பா. நதியும் நீயும் சேர்ந்து வாழ்ற வழியைப் பாருங்க. முழு தப்பையும் அந்த பொண்ணு மேல நாம சுமத்திட முடியாதில்லை. மறக்க முடியாத வலியை நாமளும் அந்த பொண்ணுக்கு கொடுத்திருக்கோம் தானப்பா” என்றார்.
அவர்கள் கிளம்பவும் அவனுக்கும் ஒரு மாதிரி தான் இருந்தது. சங்கரனை இங்கயே இருக்க சொல்லியிருக்க வேண்டுமோ? என்று பலமுறை நினைத்துவிட்டான். யோசித்துப் பார்த்தால் கண்டிப்பாய் அவரும் இருந்திருக்க மாட்டார் என்றே தோன்றியது.
“மாமா” என்ற மகதியின் குரலில் தான் மீண்டிருந்தான்.
“ங்கான்! சொல்லுமா” என்றான்.
“உங்களுக்கு ஏதோ வேலை இருக்குன்னு சொன்னிங்களே. நீங்க கிளம்புறதுன்னா கிளம்புங்க, நானும் நரேனும் பாப்பாவைப் பார்த்துக்கிறோம்” என்றாள்.
“பகல்ல இன்னைக்கு ரெஸ்ட் தான்மா. இன்னைக்கும் நைட் டியூட்டி தான். ஆனா வெளிய வேலை இருக்கு” என்றவன்,
“தியா குட்டிக்கு என்னென்ன வேணும்னு ஒரு லிஸ்ட் எழுதிக் குடுமா” என்றான்.
அவள் எழுதிக் கொண்டிருக்கும் போதே, ஆட்கள் சிலர் பெயின்ட் அடிக்க வந்திருந்தனர்.
“என்ன மாமா இத்தனை பேர் வந்திருக்காங்க?” என்றாள் மகதி.
அதற்கடுத்து வேலைகள் துரிதமாய் நடக்க, வீட்டில் பொருட்கள் என்று சொல்லும் அளவிற்கு எதுவும் இல்லாததால், ஆளுக்கொரு அறை என்று வந்தவர்கள் இரண்டு மணி நேரத்தில் வேலையை முடித்திருந்தனர். அவர்களே வீட்டையும் துடைத்து சுத்தம் செய்து கொடுத்து விட, வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தனர், மகதியும் நரேனும்.
அடுத்த சில மணி நேரங்களில் அவன் வாங்கியிருந்த வீட்டிற்கு தேவையான பொருட்களும், குழந்தைக்கு தேவையான அனைத்தும் வந்து இறங்கியிருந்தது. அன்று மாலைக்குள் அனைத்து பொருட்களும் அந்தந்த இடத்தில் வைக்கப்பட்டு, அந்த வீட்டை அழகாய் செட் செய்திருந்தான் குமரன்.
மகதிக்கும் நரேனுக்கும் தியாவைப் பார்த்துக் கொள்வதும் மட்டும் தான் வேலையாக இருந்தது.
“ஏன்டா நரேன்? நாம அந்த வீட்டுக்கு வாடகைக்கு வந்து பத்து நாள் ஆகப் போகுது. இன்னும் வீட்டை செட் பண்ணலை. இவர் என்னடா ஒரே நாள்ல, இல்லையில்ல ஒரே பகல்ல எல்லாத்தையும் அழகா செட் பண்ணி முடிச்சுட்டார்” என்றாள் ஆச்சர்யமாய்.
“இருங்க ஆட்டோவை வரச் சொல்றேன்” என்றவன் யாருக்கோ போன் அடிக்க, அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ஆட்டோ வந்திருந்தது.
“இன்னைக்கு ஒரு நைட் மட்டும் தியாவை கொண்டு வந்து விடுறேன்மா. அவளைப் பார்த்துக்கறதுக்கு நாளைக்கு ஆள் ஏற்பாடு பண்ணிக்கிறேன். ரெண்டு வருஷ கணக்கை நாளையில இருந்து கணக்கு வச்சுக்க சொல்லு உங்க அக்காவை” என்றான் அழுத்தமாய்.
குமரன் சொன்னதை மகதி அப்படியே நதியிடம் கூறியிருக்க, பல்லைக் கடித்தாள் நதி.
“ஆள் வைக்கிறாராம்மா ஆளு. இருக்கட்டும் வச்சிக்கிறேன்” என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டாள் நதி.