வாசல் 21:

நதியோ பிடிச்ச பிடியில் ஏறாமல் நிற்க, குமரனுக்கோ பொறுமை பறந்து கொண்டிருந்தது.

“நான் ஆட்டோவுலையே போயிக்கிறேன். எனக்காக யாரும் அவங்க நேரத்தை வேஸ்ட் பண்ண வேண்டாம்” என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டு.

அவனோ எதுவும் பேசாமல் வண்டியை மட்டும் முறுக்கிக் கொண்டு நின்றான். அவன் நின்ற பிடியில் அவள் ஏறியே ஆக வேண்டும்  என்று அவன் நினைக்க, அவன் வாயைத் திறந்து அழைக்க வேண்டும் என்று அவள் எதிர்பார்த்தாள்.

“மம்மி ஆ(வா)ங்க மம்மி” என்றாள் தியா.

“தியா உங்க டாடிக்குத்தான் பாப்பா போதுமே. பாப்பாவோட மம்மி எல்லாம் வேண்டாம்” என்றாள் வேண்டுமென்றே.

“என்ன மேடம் இப்படி சொல்லிட்டிங்க? தியாவோட மம்மின்றதால நான் உங்களை வரச் சொல்லலை. என்ன இருந்தாலும் நீங்க ஒரு தாசில்தார். வொர்க் ரீதியா தெரிஞ்சவங்களா போய்ட்டிங்க. இந்த ஹெல்ப் கூட பண்ணலைன்னா எப்படி? நீங்க டைம்க்கு ஆபீஸ் போகலைன்னா மக்கள் பணி பாதிக்கப்படும். அதுக்காகத் தான் ஒரு டைமிங் ஹெல்ப்” என்றான் வேண்டுமென்றே.

அவள் பல்லைக் கடித்துக் கொண்டு அவனை முறைக்க, அவன் திருப்பி முறைத்ததில் கப்சிப் என்று அடங்கினாள்.

‘ரொம்ப ஓவரா பண்ணாத நதி? அவன் உனக்கு ஹெல்ப் பண்ண வர்றதே பெரிசு? ஒரண்டையை இழுக்காம பேசாம போ” என்று மனசாட்சி கழுவி ஊத்த, வேறு வழியின்றி ஏறி அமர்ந்தாள். வண்டியைக் கிளப்பியவனிடத்தில் வழியெல்லாம் தியா வாய் மூடாமல் பேசிக் கொண்டே வர, மகளுக்கு தகுந்தார் போல் அவனும் பதில் சொல்லிக் கொண்டே வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான்.

பின்னால் அமர்ந்திருந்த நதிக்கோ எதையோ இழந்த உணர்வு முதன் முறையாக அடிமனம் வரை சென்று ஆழமாகத் தாக்கியது. எப்போதும் அவனுடன் செல்லும் போது, அவனின் பேச்சுக்கள்,அணைப்பு, சேட்டைகள் என அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக ஞாபக அடுக்குகளில் அணிவகுக்க,கலங்கிய கண்களை அவன் அறியாமல் மறைத்துக் கொண்டாள்.

அப்பாவும் மகளும் அவர்கள் உலகத்தில் தனித்து பேசிக் கொண்டிருக்க, அவளுக்கு தான் மட்டும் தனித்து நின்றுவிட்டதைப் போன்ற  ஒரு உணர்வு. அவள் சாலையையே வெறித்துக் கொண்டு வர, மிரரில் அப்போது தான் மனைவியின் முகம் பார்த்தான் குமரன். பார்த்தவனுக்கு அவளின் உணர்வுகளை துல்லியமாக புரிந்து கொள்ள முடிந்தது. அந்த தனிமை வேதனைகளை எல்லாம் அனுபவித்தவன் ஆயிற்றே.

இன்னொரு முறை ஏமாற்றத்தையோ, தனிமையையோ தாங்கிக் கொள்ளும் சக்தி அவனுக்கு இல்லை என்பதால், இறுகி இருந்த மனதை மீண்டும் இளக வைக்க அவன் முயலவில்லை.

நேராக அவள் வீட்டின் முன் சென்று வண்டியை நிறுத்த, வேகமாய் இறங்கியவள் “தேங்க்ஸ் இன்ஸ்பெக்டர்” என்றவள் அவனைத் திரும்பிக் கூட பார்க்காமல் சட்டென்று உள்ளே சென்று விட்டாள். அவள் குரல் கொஞ்சம் கலங்கி இருந்ததைப் போல் தோன்றியது குமரனுக்கு. தன்னை மறைப்பதற்காகத் தான் உள்ளே ஓடுகிறாள் என்பது வரை புரிந்து தான் இருந்தது.

“என்ன மாமா வெளியவே நிக்கிறிங்க? உள்ள வாங்க” என்றாள் மகதி.

“இருக்கட்டும்மா..!” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, சாரதாவும் வெளியே வந்துவிட்டார்.

“வாங்க தம்பி” என்றார் அவரும்.

“இல்ல இருக்கட்டும்” என்றவன் தியாவைத் தூக்கி மகதியின் கையில் கொடுக்க, அவளோ அவனை விட்டு வரவே மாட்டேன் என்று அழுக ஆரம்பித்தாள்.

“தியா குட்டி அழக் கூடாதுடா. டாடிக்கு கொஞ்சம் வேலை இருக்கு. முடிச்சுட்டு வந்து தியாக் குட்டியை டாடி கூட்டிட்டுப் போறேன்டா” என்றான் பொறுமையாய்.

“ஆ(நா)னும் வர்றன் டாடி” என்று என்று மீண்டும் அழ அராம்பித்தாள். குழந்தை தன்னுடன் ஒட்டிக் கொண்டதால் தான் நதி கவலைப்படுவதாக எண்ணித்தான் அவளை விட்டுச் செல்ல முயன்றான்.

“மாமா பாப்பா தான் அழறால்ல. நீங்க தூக்கிட்டு போங்க” என்றாள் மகதி.

உள்ளே சென்ற நதிக்கோ, தியா அழகை சத்தம் கூடக்கூட கோபமாய் வந்தது. நடந்த பிரச்சனை, குமரன் பேசியது, அவன் ஒதுக்கம், விலகல்,வெறுப்பு, இன்று தன்னை வீட்டிற்குள் வா என்று அழைக்காதது என்று அனைத்தும் ஒன்று சேர்ந்து அவளை வேறு ஒரு மன நிலைக்குத் தள்ளியிருக்க, வேகமாய் வெளியே வந்தவள், தியாவை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு உள்ளே சென்றாள்.

“மம்மி, டாடி வேணும், டாடிட்ட போதேன் (போறேன்) என்று மீண்டும் அழ ஆரம்பிக்க, ஆத்திரம் தாங்க முடியாமல் அவளை அடித்திருந்தாள் நதி.

“டாடி,டாடி, டாடி. நேத்து வந்த டாடி உனக்கு பெருசா போயிட்டாரா? பிடிவாதம் பிடிப்பியா தியா?” என்று மீண்டும் ஒரு அடி வைக்க, இத்தனை நாள் கடிந்து கூட பேசாத தன் அம்மா, இன்று அடிக்கவும் மிரண்டு போய் பார்த்த குழந்தை சத்தம் கூட்டி அழ ஆரம்பித்தாள்.

“அக்கா என்ன பண்ற? விடு பாப்பாவை” என்று நரேன் தூக்க வர,

“விடு நரேன். போ பேசாம. யாரும் இதுல தலையிடாதிங்க” என்று கத்தினாள். தியா மிரண்டு போய் பார்க்க, வேகமாய் உள்ளே வந்த குமரன் தியாவைக் கைகளில் அள்ளிக் கொண்டான்.

“டாடி” என்று அவள் தேம்ப,

“ஒன்னுமில்லடா..!” என்று அவள் அடித்த இடத்தை வருடி விட்டவன்,

“உனக்கென்னா பைத்தியமா? குழந்தைகிட்ட இப்படி ரூடா பிகேவ் பண்ற?” என்றான் கோபமாய்.

“ரூடா பிகேவ் பண்றதைப் பத்தி நீங்க பேசாதிங்க. அவ என் குழந்தை நான் அடிப்பேன், எண்ணமும் செய்வேன். அதுல உங்களுக்கு என்ன பிரச்சனை?” என்றாள் கோபமாய்.

“எனக்கென்ன பிரச்சனையா?என்ன சொன்ன, உன் குழந்தையா? அவ எனக்கும் தான் குழந்தை. நான் இல்லாம எப்படி டி வந்தது உனக்கு குழந்தை? குழந்தை விஷயத்தை என் கிட்ட மறைச்சதே தப்பு. இதுல குழந்தையை அடிக்க வேற செய்ற? ” என்றான் அவளுக்கு கொஞ்சமும் குறையாத கோபத்துடன்.

“மறைச்சேன், மறைச்சேன்” என்று கத்தியவள்,

“ஆமா மறைச்சேன். யார் இல்லைன்னு சொன்னா? நீங்க சரியா இருந்து, வயித்துல இருந்த குழந்தைங்களை சரியா கவனிச்சிருந்தா நான் ஏன் மறைச்சிருக்கப் போறேன். அதான் ஒரு கோபத்துல அப்படி பண்ணிட்டேன்னு சொல்றேன்ல. கோபத்துல விஷயத்தை மறைச்சாலும், உங்களைத்தான அப்பான்னு சொல்லி வளர்த்திருக்கேன். இல்லை வேற எவனையும் அப்பான்னு சொல்லி வளர்த்தேனா?” என்று அவள் கத்த, அவளின் வார்த்தைகளில் கோபம் அடைந்தவன்,

“ஏய்” என்று கையை ஓங்கப் போனவன், சட்டென்று கையை இறக்கிக் கொண்டான். பல்லைக் கடித்து கோபத்தை கட்டுப்படுத்தியவன்,

“என் பொறுமையை சோதிக்காத நதி” என்றான்.

“உங்ககிட்டு இருந்து குழந்தையை மறைச்ச எனக்கு, உங்களையே மறைச்சு அவளை வளர்த்திருக்க முடியாதுன்னா நினைக்கிறிங்க? அப்படி செய்யாம விட்டதுனால தான இப்ப இப்படியெல்லாம் பேசுறிங்க?” என்றவளுக்கு கண்ணீர் வர,

‘இப்ப எதுக்கு சம்பந்தம் இல்லாம கோபப்பட்டு, குழந்தையையும் அடிச்சுட்டு, இவளும் அழறா’ என்று யோசித்த குமரனுக்கு தலையை பிய்த்துக் கொள்ளாத குறைதான்.

ஆனால் வரதனுக்கு மகளின் எண்ணமும், கோபமும் நன்றாகப் புரிந்திருந்தது. நதியை குமரன் வேண்டாம் என்று சொன்னதை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை என்பதை அவர் உணர்ந்திருந்தார். அதை வெளிக் காட்டத் தெரியாமல் கத்திக் கொண்டிருக்கும் மகளைப் பார்த்து ஒரு தந்தையாய் அவள் மீது இறக்கம் தான் வந்தது. சாரதா  கணவரைப் பார்க்க,

“எதுவும் பேச வேண்டாம்” என்றவர்,

“நதிம்மா” என்று அவள் அருகில் சென்று அழைத்தது தான் மாயம், அவரைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

“தியாவுக்கு இப்போ நான் தேவையில்லைப்பா” என்றவள் மேலும் அழுக,

நதி அவள் தந்தையைக் கட்டிக் கொண்டு அழுவதை இரண்டாவது முறையாகப் பார்த்து உள்ளுக்குள் உடைந்து போனான் குமரன்.

“இப்ப என்ன தியா என்கிட்ட வர்றது தான் உனக்கு பிரச்சனையா?” என்றவன்,

“தியா குட்டி, நீங்க குட் கேர்ள் தான?” என்றான்.

“ம்ம்” என்று தேம்பிய முகத்துடன் தலையை ஆட்டினாள்.

“அப்போ டாடி வேண்டாம். மம்மிகிட்ட போங்கடா” என்றான்.

“மாத்தேன். டாடியும் வேணும் மம்மியும் வேணும்” என்றாள் தெளிவாய்.

“சரி இப்போ மம்மிகிட்ட போங்க, டாடி அப்பறமா கூட்டிட்டு போறேன், ஓகே வா” என்றான்.

“ம்ம்” என்று இறங்கு நதியிடம் ஓடியவள்,

“சாரி மம்மி, தியா பாப்பா அழமாத்தா” என்றாள்.

“சாரிடா அம்மு, என் தங்கத்தை அடிச்சுட்டேன்” என்றவள் குழந்தையை வாரி அணைத்துக் கொள்ள,

“கழுத வயசுல நீ மட்டும் உங்கப்பாவை கட்டிபிடிச்சு அழுது வடியலாம். குழந்தை அவ அப்பா கூட இருக்கணும்னு சொல்லக் கூடாதா?” என்றார் சாரதா பட்டென்று.

“இருக்கட்டும், இனி என்னால எந்த தொந்தரவும் இருக்காது, வரேன்” என்றவன் கிளம்ப, வரதனுக்கு மண்டை காய்ந்தது.

“என் பொண்ணுக்கு இவ்வளவு ஈகோ இருக்கும்னு எனக்குத் தெரியாம போய்டுச்சுமா. உங்க ரெண்டு பேருக்கும் குழந்தை மேல அக்கறை இல்லை. இருக்குற மாதிரி நடிக்கிறிங்க?” என்றார்.

“அப்பா” என்றாள்.

“நீ என்ன நினைக்கிறேன்னு எனக்கு புரியாம இல்லைம்மா. நீ என்னென்ன சொன்னாலும், நாம பண்ணது தான் தப்பு. கொஞ்சம் இறங்கிப் போகலாம் தப்பில்லை” என்றார்.

“அவருக்கு தான் நான் வேண்டாமே?” என்றாள் கலங்கிய குரலுடன்.

“அப்போ உனக்கு?” என்றார்.

அவள் திகைத்துப் பார்க்க,

“உனக்கு அவர் வேண்டாமா?” என்றார்.

“வேணும்ப்பா” என்றாள்.

“அப்போ போமா “ என்றார். ஒரு நிமிடம் யோசித்தவள்,

“நான் பார்த்துக்கிறேன்ப்பா. ஆனா, அவர் கூப்பிடாம நான் போக மாட்டேன்” என்றவள் வேகமாய் வெளியே சென்றாள்.