அந்த அறையை தியாவிற்கு காட்டியவள்,

“டாடி அங்க தான் இருக்காங்க தியா. நீ போய் பார்த்துட்டு வா. மம்மிக்கு டைம் ஆச்சு. மம்மி ஆபீஸ் போகணும்ல” என்றாள் பொறுமையாய்.

“நீங்களும் ஆங்க(வாங்க) மம்மி” என்று அவளையும் கைப்பிடித்து இழுத்துக் கொண்டு சென்றாள் தியா. கோதாவரி அவர்களையே ‘ஆ ‘வென்று பார்த்திருக்க, அவரைப் பார்த்த சங்கரன்,

“இன்னைக்கு கட்டாயம் நாம ஊருக்குக் கிளம்புறோம்” என்றார் தீர்மானமாய்.

“ஏங்க? நான் ஒன்னும் பேச மாட்டேன்” என்று கோதாவரி எதையோ சொல்ல வர,

“இத்தனை வருஷம் உன் கூட குடும்பம் நடத்தியிருக்கேன்.உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா கோதாவரி? உனக்கு காரியம் ஆகணும்னா நீ எப்படி நடிப்பன்னு எனக்கு நல்லாவே தெரியும். இத்தனை நாளுக்கு அப்பறம் இப்பத்தான் அவன் வாழ்க்கையில ஏதோ கொஞ்சம் வெளிச்சம் தெரியுது. நீ இங்க இருந்தா அதுவும் தெரியாமப் போய்டும். மரியாதையா கிளம்புற வழியைப் பாரு. காலையில சாப்பாட்டை முடிச்ச உடனே கிளம்புறோம்” என்றார் உறுதியாக.

வீடு வரை வந்தவளுக்கு, ஏனோ அவனின் அறைக் கதவைத் திறக்க அத்தனை தயக்கம். தியாவோ அவளை அவசரப்படுத்த,

“இருடா அம்மு” என்றவளுக்கு படபடவென்று வந்தது. ஏற்கனவே கோபத்தில் இருக்கிறான். இப்போது இவளை அங்கு பார்த்தால் என்ன செய்வானோ என்ற பயம் வேறு அவளுக்கு. தியாவின் முன்பு எதையும் காட்ட மாட்டான் என்று அவளுக்குத் தெரிந்திருந்தாலும், அவளையும் மீறிய ஒரு குற்ற உணர்வும் பயமும்  அவளுக்கு இருக்கத்தான் செய்தது.

அவள் கதவைத் திறக்காமல் யோசிப்பது கண்டு, தியா அவளே திறக்க முற்பட, அந்த பிஞ்சு கரங்களைக் கொண்டு திறக்க முடியவில்லை அவளால்.

“மம்மி” என்று அழத் தயாராக,

“அழாதடா” என்றவள், ஒரு வழியாகக் கதவைத் திறந்திருந்தாள். திறந்தவள் கதவின் ஓரத்திலேயே நின்று கொள்ள, தந்தையைப் பார்த்த சந்தோஷத்தில் நதியின் கையை விட்டு ஓடியிருந்தாள் தியா.

ட்ராக் பேண்ட், உள் பனியன் அணிந்து குப்புறப் படுத்திருந்தவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவனை அப்படி பார்த்ததில் அவளுக்குத் தான் மூச்சடைத்தது. அவனையே பார்த்துக் கொண்டிருக்கும் கண்களை கட்டுப்படுத்தி பார்வையை மாற்ற முயல, அதோ பரிதாபம்.. அவளால் அது மட்டும் முடியவே இல்லை.

தியாவிற்கு அந்த தயக்கம் எல்லாம் எதுவுமில்லை. வேகமாய் சென்று, தந்தையின் முதுகில் ஏறி படுத்துக் கொண்டவள், ஒரு புறம் தெரிந்த அவன் முகத்தில் முத்தமிட்டபடி,

“குட்மார்னிங் டாடி” என்றாள். குமரனோ எதையும் உணரும் நிலையில் இல்லாமல் தூங்கிக் கொண்டிருக்க, தியாவோ மீண்டும் மீண்டும் அவள் செய்ததையே செய்து கொண்டிருந்தாள்.

“கனவோ?” என்று எண்ணியவன், திரும்பிப் படுக்க முயல, அப்போது தான் நிஜம் உணர்ந்தான். நெருப்பாய் எறிந்த கண்களைத் திறக்க முடியாமல் திறந்தவன், தன் மேல் படுத்துக் கொண்டிருந்த தியாவை அப்போது தான் கவனித்தான்.

“தியா குட்டி” என்றான் வேகமாய்.

“குட்மார்னிங் டாடி” என்றாள் அவன் முழுவதும் முத்தமிட்டு.

காலையில் தன் வீட்டில், அதுவும் தன் மேல் படுத்து கழுத்தைக் கட்டிக் கொண்டிருக்கும் மகளை அவன் நிச்சயம் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதை அவன் திகைப்படைந்த முகமே சொல்லியது. அது அவர்களையே ஏக்கமாய் பார்த்துக் கொண்டிருந்த நதிக்கும் நன்றாக விளங்கியது.

“தியாம்மா” என்று மகளை முத்தமிட்டுக் கொஞ்சி நெஞ்சோடு அணைத்துக் கொண்டவனுக்கு, அப்போதும் அது கனவு போலவே தோன்றியது.

“இங்க எப்படிடா வந்த?” என்றான் புரியாமல்.

“மம்மி கூட டாடி” என்றவள் திரும்பி நதியைப் பார்க்க, அப்போது தான் கதவோரத்தில் நின்று அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த நதியைப் பார்த்தான். அவன் பார்க்கவும் அவள் சட்டென்று பார்வையை மாற்றிக் கொள்ள, நிச்சயம் அவள் அங்கு வருவாள் என்று அவன் நினைக்கவில்லை.

எழுந்ததும் முகத்தை மட்டும் கழுவிக் கொண்டு வந்திருக்கிறாள் என்று அவளைப் பார்த்த மாத்திரத்தில் உணர்ந்து கொண்டான்.

ஒரு நிமிடம் வியப்பில் விரிந்த முகம் மறு நிமிடம் இறுகிப் போனது. அவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, அதுவே அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது.

“நா..நான் வெளிய வெயிட் பண்றேன் தியா. நீ சீக்கிரம் வா. அம்மாவுக்கு ஆபீஸ்க்கு டைம் ஆச்சு,போய் கிளம்பனும்” என்றவள் சட்டென்று வெளியே கிளம்பிட்டாள்.

“தியா குட்டி டாடிகிட்ட வரணும்னு அழுதிங்களா?” என்றான் சரியாகக் கணித்து.

“ஆமா டாடி. மம்மியும் அழுத்தாங்க” என்றாள் கூடுதல் இணைப்பாய்.

“தியா குட்டி இப்படி எல்லாம் பிடிவாதம் பிடிக்க மாட்டிங்களே?” என்றவனுக்கு நதி ஏன் அழுதாள் என்று புரியவில்லை.

“டாடி வேணுல. அதான் தியா பாப்பா அழுத்தா” என்றாள் அழுத்தமாய்.

“உனக்காவது நான் வேணும்னு தோணுதாடா?” என்றவனின் குரல் கரகரத்திருந்தது.

ஹாலில் நின்றிருந்தாலும் அவர்கள் பேசுவது நதியின் காதிலும் விழுந்தது. அங்கே அமர்ந்திருந்த சங்கரனின் காதிலும் விழுந்தது. அவரோ கண்களைத் துடைத்துக் கொள்ள, நதியோ எங்கோ வெறித்துக் கொண்டிருந்தாள்.

அதிசயத்திலும் அதிசயமாக கோதாவரி வாயைத் திறக்காமல் இருக்க, நதிக்குத் தான் முள் மீது நிற்பது போன்ற உணர்வு. கோதாவரி இருக்கும் இடத்தில் அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை. குமரனும் அவளை ‘வா’ என்று அழைக்காததும் ஒரு காரணம்.

“எத்தனை தடவை கூப்பிட்டான். அப்பல்லாம் நீ வந்தியா என்ன?” என்று மனம் கிண்டல் செய்ய, தனக்குத் தானே நொந்து கொண்டாள்.

எழுந்து பிரஷ் செய்து, முகம் கழுவி, தியாவைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்த குமரன் கண்டது என்னவோ ஓரிடத்தில் வெறித்திருந்த அவளின் பார்வையைத் தான்.

“தியா குட்டி என்ன குடிக்கிறிங்க?” என்றான் குழந்தையிடம்.

“பூஸ்ட்” என்றாள் வேகமாய்.

“ஓகே” என்றவன் மகளைத் தூக்கிக் கொண்டு கிட்சனிற்குள் நுழைய முயல,

“நான் கலக்கித் தர்றேன் குமரா” என்று வந்தார் கோதாவரி.

“ஒன்னும் தேவையில்லை. என் பொண்ணுக்கு எனக்கு செய்யத் தெரியும்மா” என்றவன்,

“உட்காருங்க மேடம், வராதவங்க எங்க வீட்டுக்கு வந்திருக்கிங்க. ஏன் நிக்கிறிங்க?” என்றான் அவளைப் பார்க்காமல்.

“டாடி.. மேதம் இல்ல, மம்மி” என்றாள் தியா.

“ஹோ அப்படியா தியாக் குட்டி” என்றவன்,

“உட்காருங்க மம்மி” என்றான் கிண்டலாய்.

“பரவாயில்லை சார்” என்றாள் நதி அழுத்தமாய்.

மகனின் பேச்சையும், நடவடிக்கையையும் கவனித்த சங்கரன்,

“எப்ப இருந்து இப்படி மாறுன குமரா?” என்றார் ஆதங்கமாய். இத்தனை வருடம் கழித்து வந்த மருமகளை பேசியே அனுப்பி விடுவானோ என்ற பயம் அவருக்கு.

“நான் எங்க மாறுனேன் ப்பா. எல்லாருமா சேர்ந்து என்னை மாத்திட்டிங்க” என்றவன், தியாவைத் தூக்கிக் கொண்டு சமையல் அறைக்குள் சென்று விட்டான். அவளை சமையல் மேடையில் அமர வைத்தவன், மகளுடன் பேசிக் கொண்டே அவளுக்கு பால் ஆற்ற, அவர்களின் நெருக்கத்தை தன்னையும் மறந்து சற்று பொறாமையுடன் பார்த்திருந்தாள் நதி. அது அவளின் ஏக்கம். ஆனால் பொறாமை என்று அவளே நினைத்துக் கொண்டாள்.

மகள் பூஸ்ட்டை குடிக்கும் வரை பொறுமையாய் இருந்தவன், குடித்து முடித்த பிறகு, வாயைத் துடைத்துவிட, அவனின் செயல்களைப் பார்த்த சங்கரனுக்குக் கூட ஆச்சர்யம். கோதாவரியோ வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தார்.

மகளைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தவனின் கையில் ஆவி பறக்க காபி இருக்க, அதை நதியிடம் நீட்டியிருந்தான்.

“இல்ல, வேண்டாம்” என்று மறுத்தவள் அவன் முகம் காண, அவன் முகத்தில் இருந்த கோபத்திலும், முறைப்பிலும் சட்டென்று வாங்கிக் கொண்டாள்.

“மாமா உங்களுக்கு” என்றாள் தயக்கத்துடன்.

“நீ குடிம்மா, ரொம்ப அசதியா தெரியற?” என்றார் வாஞ்சையுடன்.

இத்தனை நாட்களுக்குப் பிறகு குமரனின் கையால் காபி என்பதே அவளுக்கு தித்திப்பாகத் தான் இருந்தது. ஆனால் அதை ரசித்துக் குடிக்கும் மனநிலையில் அப்போதைக்கு அவள் இல்லை என்பதே உண்மை. கோதாவரியை பார்த்துக் கொண்டு எங்கிருந்து காபியை ரசித்துக் குடிப்பது?

“தியா கிளம்பலாமா?” என்றாள் நதி.

“வாங்க டாடி” என்றாள் தியா. அவளின் அழைப்பில் திகைத்தவன்,

“அம்மா கூட போங்கடா. டாடி அப்பறம் வர்றேன்” என்றான்.

“அப்போ நானும் டாடி கூட இதுக்கேன் (இருக்கேன்)” என்றாள் வேகமாய்.

“அப்போ நான் கிளம்புறேன். நீங்க அப்பறம் வந்து விட்டுருங்க. வரேன் மாமா” என்றவள் சட்டென்று கிளம்பிவிட்டாள். அவளுக்கு நேரமாகிவிட்டது என்று அவனுக்கும் புரிந்திருந்தது.

“தியா எதுலடா வந்திங்க?” என்றான்.

“ஆத்தோல(ஆட்டோல) டாடி” என்றாள்.

அவள் வேகமாய் நடந்து சென்று கொண்டிருந்தாள். வரதனையோ நரேனையோ  தான் தியாவை அழைத்து வர சொன்னாள். ஆனால் இருவருமே சொல்லி வைத்தார் போல் மாட்டேன் என்று சொல்ல, வேறு வழியின்றி அவளே  அழைத்துக் கொண்டு வந்திருந்தாள்.

“முதல்ல ஒரு ஸ்கூட்டி வாங்கணும்” என்று எண்ணிக் கொண்டே குவாட்ரஸ் காம்பவுண்டை தாண்டி ஆட்டோவிற்காக வெளியே வர, அவளை ஒட்டியபடி வந்து நின்றது குமரனின் புல்லட். அவனுக்கு முன்னால் அமர்ந்திருந்த தியாவின் முகத்தில் ஏகத்திற்கும் மகிழ்ச்சி. தந்தையுடனான முதல் டூவீலர் பயணம்.

அவளோ அவனைத் திகைத்தபடி பார்க்க, அவனோ அவளை திரும்பியும் பார்க்கவில்லை. ஆக்சிலேட்டரை முறுக்கியபடி முன்னால் தான் பார்த்திருந்தான்.

அவளோ சட்டை செய்யாமல் மீண்டும் எட்டு வைக்கப் போக, இப்போது அவன் ஆக்சிலேட்டரை முறுக்கிய சத்தத்தில் சட்டென்று திரும்பியிருந்தாள் நதி.

“ஏறு” என்று அவன் சொல்லாமல் சொல்ல,

“மாட்டேன்” என்பதைப் போல் அவள் நின்றிருந்தாள்.