வாசல் 20:

மகளை விட்டுவிட்டு சென்றவனின் மனமெல்லாம் அங்கேயே தான் இருந்தது. ஜீப்பில் தலை சாய்ந்து அமர்ந்திருவனின் முகத்தில் அலைப்புறுதலைப் பார்த்த குரு,

“உங்களுக்கு தூக்கமே வராத சார்? நேத்தும் ஒரு பொட்டுத் தூங்கலை. இன்னைக்கும் பகல் முழுக்க வேலை.  இப்போ இப்படி நைட் ரவுண்ட்ஸ். இப்படியே இருந்தா உடம்பு என்னத்துக்கு சார் ஆகும்?” என்றான் குரு.

“இன்னைக்குத் தூங்கிடுவேன்னு நினைக்கிறேன் குரு.ரெண்டு மணிக்கு ரவுண்ட்ஸ் முடிச்சுட்டு வீட்டுக்குப் போய்டலாம். நீயும் தூங்கணுமே?” என்றவன்,

“நீ வா, நான் டிரைவ் பண்றேன்” என்றான்.

“அய்யோ சார், அதெல்லாம் வேண்டாம்” என்று பதறினான் குரு.

“அட வா மேன். மைன்ட் கொஞ்சம் டிஸ்டர்பா இருக்கு. டிரைவ் பண்ணா சரியாகிடும்” என்றவனின் மனம், ஜீப்பில் டிரைவர் சீட்டில் அமரவும் தான்  சமநிலைப்பட்டது. அந்த இரவு நேரக் காற்றும், தன் சட்டையில் மணம் பரப்பிக் கொண்டிருந்த மகளின் வாசனையும், சிறிது நேரத்திலேயே அவனின் மனதை சாந்தப்படுத்தியிருந்தது.

காலையில் வெகு சீக்கிரத்திலேயே முழிப்பு வந்திருந்தது நதிக்கு. அப்போது தான் தன்னைக் கட்டிக் கொண்டு உறங்கும் மகளைப் பார்த்திருந்தாள். பார்த்தவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

அவளை ஒட்டி உறங்கிக் கொண்டிருந்த மகதியை எழுப்ப,

“என்னக்கா?” என்ற கொட்டாவியுடன் எழுந்தாள் மகதி.

“பாப்பா எப்போ வந்தா?” என்றாள்.

“அது ஒரு பத்து, பத்தரை இருக்கும். மாமா தான் வந்து விட்டுட்டு போனார்” என்றாள்.

“தியா அவரைப் போக விட்டுட்டாளா?” என்றாள் நதி.

“எங்க? பாப்பா தூங்கிட்டு இருந்தா. நான் வாங்குனேன் வரவேயில்லை. மாமா தான் வந்து படுக்க வச்சிட்டு போனார்” என்றாள் தூக்கக் கலக்கத்தில்.

“இங்க ரூம்குள்ள வந்தாரா?” என்றாள் மீண்டும்.

“அட ஆமாக்கா” என்றவள் மீண்டும் படுத்துக் கொள்ள, யோசனையுடன் எழுந்து கொண்டாள் நதி. வெளியே வந்தவள், ஹாலில் இருந்த பைகளைப் பார்த்து திகைத்து விட்டாள்.

“நைட்டு மாப்பிள்ளை வரும் போது, நானும் தூங்கிட்டேன் நதி. அப்பா தான் முழிச்சிருந்தார். இங்க பாரு குழந்தைக்கு எத்தனையை வாங்கிக் குமிச்சிருக்கார்னு” என்றார் சாரதா. அவர் குரலில் சந்தோசம் கலந்த சலிப்பே இருந்தது.

“என்னப்பா சொன்னார்?” என்றாள் நதி தயக்கத்துடன்.

“எப்படி உங்க பொண்ணுக்கு மகள் மட்டும் போதும், மகளோட அப்பா வேண்டாமோ, அதே மாதிரி எனக்கும் என் பொண்ணு மட்டும் போதும், பொண்ணோட அம்மா வேண்டாம்னு சொல்லிட்டு போயிட்டார்மா”  என்றார் பேப்பரைப் படித்துக் கொண்டே.

“ஹோ..!!” என்றவள் அமைதியாய் அறைக்குள் சென்று விட்டாள்.

“ஏங்க நிஜமாவே மாப்பிள்ளை அப்படி தான் சொன்னாரா?” என்ற சாரதாவிற்கு உள்ளுக்குள் பதைபதைப்பு. என்னதான் கோபமாக தியாவைத் தூக்கி சென்றிருந்தாலும், மகளுக்காக மனது மாறியிருப்பான் என்று நினைத்திருந்தார் சாரதா.

“அப்படித்தான் சொல்லிட்டு போனார் சாரதா. இனி எல்லாம் நதி கையில தான் இருக்கு. விஷயத்தை எப்படியோ உடைச்சுட்டோம். இனி ரெண்டு பேரும் சேர்ந்து என்ன முடிவு எடுப்பாங்களோ எடுக்கட்டும்” என்றார்.

ஏனோ நதிக்கு காலையிலே எரிச்சலும் கோபமுமாக வந்தது. அவன் தன்னை வேண்டாம் என்று சொன்னதை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவனுடைய வெறுப்பை ஒரு இரவே அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவளுடைய வெறுப்பை இரண்டரை வருடங்களாக அவன் எப்படி தாங்கியிருப்பான் என்று முதல் முறையாக யோசித்தாள் நதி.

அவனைப் பற்றிய நினைவில் மன உளைச்சலில் இருந்த நதிக்கு அடுத்த பிரச்சனை தியாவின் வடிவில் ஆரம்பித்தது.

எப்போதும் “குட்மார்னிங் மம்மி” என்று ஆரம்பித்து எழுபவள், அன்று எழும் போதே, “டாடி” என்று அழைத்துக் கொண்டே எழ, கண்களை விரித்தாள் நதி.

“குட்மார்னிங்டா தியா குட்டி” என்றாள் நதி, மகளைத் தூக்கியபடி.

“குத்மார்னிங் மம்மி. டாடி எங்க?” என்றாள் கண்களைக் கசக்கிக் கொண்டே.

“டாடி டியூட்டிக்கு போயிருக்காங்கடா தியா குட்டி” என்றாள் சமாளிப்பாக.

“டாடி பார்க்கணும் மம்மி” என்றாள்.

“இப்போ பார்க்க முடியாதுடா. மம்மி ஆபீஸ் கிளம்பனும். ஈவ்னிங் பார்க்கலாம்” என்றாள் பொறுமையாக.

“இப்பவே டாடி கிட்த(கிட்ட) போகணும்” என்றவள் அரைகுறை தூக்கத்துடனேயே அழ ஆரம்பிக்க, தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டாள் நதி.

“இத்தனை நாள் மம்மி, மம்மின்னு என்னை சுத்துனது என்ன? ஒரே நாள்ல இப்படி டாடி பைத்தியமாகி நிக்கிறது என்ன?” என்று மகளைத் தான் பார்த்திருந்தாள்.

தியா அழுவது சாரதாவிற்கும், வரதனுக்கும் கேட்டிருந்தாலும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. நதியே சமாளிக்கட்டும் என்று அமைதியாய் இருந்துவிட்டனர்.

தியாவின் அழுகை அதிகமாக, அவளை சமாதானப்படுத்தும் வழி தெரியாமல் நதியும் சேர்ந்து அழுதாள்.

“இதென்ன நதி கூத்தா இருக்கு? அவ தான் சின்னப் பிள்ளை அழறா? நீ எதுக்கு அவ கூட சேர்ந்து அழுதுகிட்டு இருக்க?” என்றார் சாரதா அதட்டலாய்.

“ஒரே நாள்ல இவளுக்கு நான் வேண்டாதவளாகிட்டேன் ம்மா” என்ற நதியின் முகம் வேதனையை பிரதிபலிக்க,

“இத்தனை நாள் அப்பாவையே பார்க்காமா ஏங்கிப் போயிருந்த குழந்தை. திடீர்ன்னு அப்பா பாசம் கிடைக்கவும் அப்படி பேசுறா. அதுக்காக உன்னைப் பிடிக்கலைன்னு அர்த்தமா நதி? என்று சாரதா அதட்ட, நதியின் கண்ணீரைப் பார்த்த தியா, தன் அழுகையை நிறுத்தினாள்.

தளிர் கரங்களால் அன்னையின் கண்ணீரைத் துடைத்துவிட்டவள்,

“டோன்ட் க்ரை மம்மி. தியா பாப்பா அழல” என்றாள் மழலை மொழியில். மகளின் செயலில் அவளை அப்படியே அள்ளி அணைத்துக் கொண்டாள் நதி.

இப்படி ஒவ்வொரு செயலிலும் குமரனையே பிரதிபலித்துக் கொண்டிருந்தாள் குமரனின் மகள்.

வீட்டின் காலிங் பெல் விடாமல் அடிக்க,

“யார் இது? இப்படி விடாம பெல் அடிக்கிறது?” என்று கோதாவரி எழுந்து வர, அவருக்கு முன் சங்கரன் கதவைத் திறந்திருந்தார். திறந்தவருக்கு அப்படி ஒரு அதிர்ச்சி. அதிகாலையில் தன் வீட்டின் முன்பு நிற்கும் மருமகளைப் பார்த்தவருக்கு  சட்டென்று பேச்சே வரவில்லை.

“யாருங்க?” என்றபடி வந்த கோதாவரிக்கு அவருக்கு மேல் அதிர்ச்சி. அதிலும் அவள் கையில் தியாவை வைத்திருக்க, அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. குமரனும் எதுவும் சொல்லியிருக்கவில்லை. சங்கரன் தான் முதலில் தெளிந்தார்.

“வாம்மா நதி” என்றார் வேகமாய்.

“அ..அவர் இல்லையா மாமா?” என்றாள் தயக்கமாய். கால்களும் அவளைப் போல் தயக்கத்துடன் தான் உள்ளே நுழைந்திருந்தது.

“இருக்கான்மா, தூங்குறான். நைட் டியூட்டி போயிட்டு மூணு மணிப் போல தான் வந்தான்” என்றார் வேகமாய்.

“மம்மி, டாடி எங்க?” என்றாள் தியா.

தியாவின் அழைப்பில் திகைத்தவர்,

“நதிமா இந்த குழந்தை” என்று அவர் ஏதோ கேட்கத் தயங்கியவராய் நிற்க,

“எங்க குழந்தை தான் மாமா” என்றாள் நதி. சங்கரன் அதிர்ந்தாரோ இல்லையோ கோதாவரிக்கு தான் அப்படி ஒரு அதிர்ச்சி.

“என்னம்மா நதி சொல்ற? அப்போ அன்னைக்கு?” என்றவர் புரியாமல் முழிக்க, வேறு வழியின்றி அவரிடம் நடந்ததை சுருக்கமாக விவரித்திருந்தாள். கேட்ட சங்கரனுக்கு சந்தோஷத்தில் பேச்சே வரவில்லை.

“எம் பேத்தி” என்றவர் தியாவின் கன்னங்களை ஆதுரமாய் தடவ, தியாவோ மிரண்ட பார்வை பார்த்திருந்தாள்.

“மம்மி, யார் இவங்க?” என்றாள்.

“தாத்தாடா தியா. உங்க டாடியோட டாடி” என்றாள் நதி.

“ஆமாடா கண்ணா, நான் தான் உன் தாத்தா” என்றவர் அவளை அழைக்க, சற்று யோசித்தவள் நதி கண் ஜாடையில் சம்மதம் சொல்லவும் அவரிடம் சென்றாள்.

குமரனின் வாழ்வே திரும்ப கிடைத்து விட்டதைப் போன்ற சந்தோசம் அவருக்கு. பேத்தியை பார்த்துப் பார்த்து மகிழ்ந்திருந்தார். மகனின் அச்சாகவே இருந்த பேத்தியைக் கண்டு கோதாவரிக்கு  அவளைத் தூக்க கை பரபரத்தாலும், நதியை எண்ணி அமைதியாய் இருந்து கொண்டார்.

“மம்மி இவங்க?” என்றாள் கோதாவரியைப் பார்த்து.

“அவங்க யாருன்னு எனக்குத் தெரியாதுடா அம்மு” என்றாள் பட்டென்று. சங்கரன் நதியைப் பார்க்க,

“சாரி மாமா” என்றாள்.

“நீ அவளைப் பாட்டின்னு சொல்லி இருந்தா தான் நான் கோபப்பட்டிருப்பேன் நதிம்மா” என்றார். கணவரின் பதிலில்  கோதாவரியின் மனம் ஏதோ ஒரு மூலையில் அடிவாங்கியிருந்தது.

நதியின் பார்வை தயக்கமாய் அந்த வீட்டை சுற்றிப் பார்க்க, மூன்று படுக்கை அறை, கிட்சன், ஹால், சிறு வராண்டா என்று விஸ்தானமாய் இருந்த வீட்டில் எந்த பொருட்களும் இல்லை. அவளின் பார்வையை உணர்ந்த சங்கரன்,

“அவன் இங்க ஒருத்தனா இருந்ததால எதையும் வாங்கிப் போடலை நதிமா. அவனைப் பத்தி தான் உனக்கு தெரியுமே?” என்றார்.

“மம்மி, டாடி எங்க?” என்று தியா மீண்டும் ஆரம்பிக்க, நதியோ சங்கரனைப் பார்த்தாள்.

“அந்த ரூம்ல இருக்கான்மா” என்றார்.