அங்கே தியாவைத் தூக்கிக் கொண்டு சென்ற குமரனைப் பற்றி சொல்லவே வேண்டாம். மகளின் அருகாமையிலும், அணைப்பிலும் மீண்டும் ஜனனம் எடுத்திருந்தான்.
“சார் அப்போ நிஜமாவே பாப்பா உங்க பொண்ணா?” என்ற குருவிற்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை.
“இதையே எத்தனை தடவை கேட்ப குரு?” என்றவன் மகளை இன்னமும் ஜீப்பில் தான் வைத்து சுற்றிக் கொண்டிருந்தான்.
கங்காரு தன் குட்டியைத் விடாமல் தூக்கிக் கொண்டு சுற்றுவதைப் போல, சுற்றிக் கொண்டிருந்தான். தியாவும் திடீரென்று கிடைத்த தந்தை பாசத்தில் நன்றாக அவனுடன் ஒட்டிக் கொண்டாள்.
வீட்டில் இருந்து கிளம்பிய நிமிடத்தில் இருந்து இப்போது வரை மூச்சுக்கு மூச்சு அவள் அழைக்கும் ‘டாடி’ தான் அவனுக்கு உயிர் வாழும் மூச்சைக் கொடுத்துக் கொண்டிருந்தது.
வரும் வழியெல்லாம் அவள் கேள்விகள் கேட்பதும், குமரன் அதற்கு அழகாய், பொறுமையாய் பதில் சொல்வதும் பார்க்கவே அவ்வளவு நிறைவாய் இருந்தது குருவிற்கு.
“தியா பாப்பா அப்படியே உங்களை மாதிரியே சார். கொஞ்சம் கூட மாற்றமில்லை” என்றான் குரு.
முகத்தில் பெருமிதத்துடன் “என் பொண்ணு என்னை மாதிரித் தானே இருப்பா! இல்லையா தியா குட்டி” என்றவன் மகளுக்கு முத்தமிட,
“எஸ் டாடி” என்றவள் கிளுக்கி சிரித்த சிரிப்பில் அவனுக்கு உலகமே மறந்து போனது. அவனின் அத்தனை நாள் மனக் காயத்திற்கும் அவளே மருந்தாகிப் போனாள்.
“கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காதிங்க சார், அப்போ தாசில்தார் மேடம் தான் உங்க மேடமா?” என்றான் குரு சிரிப்புடன்.
அவனின் கேள்வியில் சாலையை வெறித்தவன்,”ம்ம், தியாவோட அம்மா அவங்க தான்” என்றான் குமரன். மறந்தும் அவன் வாயில் இருந்து “என் மனைவி” என்ற வார்த்தை வரவில்லை. அது குருவிற்கும் புரிந்திருந்தது.
“அன்னைக்கு, அவனை எதுக்கு அந்த அடி அடிச்சிங்கன்னு எனக்கு இப்பத்தான் சார் புரியுது. உங்க மேடம்மை பார்த்ததால தான் அப்படி அடிச்சிங்களா?” என்றான் குரு வேண்டுமென்றே.
அவனை முறைத்த குமரன்,”அந்த இடத்துல எந்த மேடமா இருந்தாலும் அப்படித்தான் அடிச்சிருப்பேன்” என்றான்.
“சாரி சார்” என்றான் குரு.
மகளை கடை கடையாய் தூக்கிக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தான் குமரன். அவள் கை நீட்டியது, நீட்டாதது என்று அனைத்தையும் வாங்கிக் குவித்தவனுக்கு, அப்போதும் கூட மனதில் இருந்த ஏக்கம் துளியும் குறையவில்லை. சாதாரண பொம்மைகளிலும், துணிகளிலும் அடைக்கக் கூடிய பாசமா பெற்ற தந்தையின் பாசம்? மகளுடனான நிமிடங்களும் நேரங்களும் போதவே இல்லை அவனுக்கு. இத்தனை வருட ஏக்கத்தையும் ஒரு சில மணி நேரங்களில் எப்படி அவனால் தீர்த்துக் கொள்ள முடியும்.
அதற்கடுத்து கழிந்த நிமிடங்கள் எல்லாம் அவனுக்கு பொன்னான நிமிடங்கள். மகளுக்கு உணவை அவனே ஊட்டிவிட, சமத்தாய் சாப்பிட்டுக் கொண்டாள் தியா. அதை நினைத்து அவனுக்கே ஆச்சர்யம் தான். அவன் இதுவரை பார்த்தவரையில் அவள் எதற்கும் பிடிவாதம் பிடிக்கவில்லை. தன்னுடன் வர வேண்டும் என்று கூறியதைத் தவிர்த்து. அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்டு அவனைத் தொல்லைப் படுத்தவில்லை. அவனாகத்தான் மகளுக்காக அனைத்தையும் ஆசையாக வாங்கினான்.
“நீயும் சாப்பிடு குரு” என்றான்.
“சாரி இங்க சாப்பிட்டா பில் எல்லாம் கட்டுபடி ஆகாது. நாம எப்பவும் போல அங்கயே சாப்பிட்டுக்குவோம்” என்றான்.
“சாப்பிடு மேன். நான் பே பண்ணிக்கிறேன்” என்றவனை இரண்டாவது முறையாக வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான் குரு.
தியாவிற்கு ஊட்டி முடித்து வாயைத் துடைத்து விட்டவன்,
“குட்டிமாக்கு வேற என்னடா வேணும்?” என்றான்.
“போதும் டாடி” என்றவள்,
“நீங்க சாப்பிதுங்க டாடி” என்றாள் மழலைக் குரலில்.
மகளின் வார்த்தைகளில் சட்டென்று கண் கலங்கியவன்,
“டாடியும் சாப்பிடறேன்டா” என்றான்.
“நான் ஊட்தி விடவா?” என்றவள், கொஞ்சம் பிட்டு அவனுக்கு ஊட்யும் விட, கண்ணீரே வந்துவிட்டது அவனுக்கு.
“டோன்ட் க்ரை டாடி, சாப்பிதுங்க” என்று மேலும் ஊட்ட, அதைப் பார்த்த குருவிற்கும் கண்கள் கலங்க, திரும்பிக் கொண்டான். ஏனோ அவர்கள் உலகத்தில் அவர்களை தொந்தரவு செய்ய மனமில்லை அவனுக்கு.
சாப்பிட்டு முடித்து, இதோ இன்னமும் ஜீப்பில் தான் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். தியாவிற்கு தந்தையிடம் பேச அத்தனை கதைகள் இருந்தது. அனைத்தையும் அன்றே பேசி முடிப்பவள் பேசி கொண்டே இருந்தாள். மழலைக் குரலில் அவள் யோசித்து யோசித்து ஒவ்வொரு வார்த்தையாக பேச, அதைப் பொறுமையுடன் கேட்டபடி, அவளுக்கு ஏற்றார் போல் பதில் சொல்லிக் கொண்டு வந்த குமரன், குருவின் பார்வையில் புதிதாய் தெரிந்தான்.
இந்த குமரன் அவனுக்கு புதிது தான். ஆறு மாதமாக குமரனின் நிழலாய் அவன் உடனேயே இருப்பவனுக்குத் தெரியாதா? அவனின் குண நலன்களும், தனிமை நிலையும்.
ஏனோ இன்று அவன் முகத்தில் அசதியையும் தான்டி ஒரு நிறைவு, முகம் முழுவதும் மகிழ்ச்சியில் இருக்க, அதைப் பார்க்க பார்க்க தெவிட்டவில்லை குருவிற்கு. எப்போதும் இறுக்கமாக இருக்கும் குமரனின் முகம் இன்று தளர்ந்து, மகிழ்ந்து எதார்த்தமாய் இருந்ததில் அழகு கூடித் தெரிந்தான்.
“என்ன குரு, அப்ப இருந்து என்னை சைட் அடிச்சுட்டு வர்ற?” என்றான் சன்ன சிரிப்புடன்.
“ஹி..ஹி..! அதெல்லாம் ஒண்ணுமில்ல சார்” என்றவன்,
“நிஜமாவே நல்லா இருக்கீங்க சார்? இத்தனை நாள் எங்க சார் ஒளிச்சு வச்சிருந்திங்க இந்த மேனரிசத்தை எல்லாம்?” என்றான்.
“நீ வேற ஏன்யா காமெடி பண்ணிக்கிட்டு இருக்க?” என்றவனின் முகத்தில் அப்படி ஒரு அமைதி. பேசிப் பேசி ஒரு வழியாக தந்தையின் நெஞ்சில் சாய்ந்து ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விட்டாள் தியா.
தூங்கிக் கொண்டிருக்கும் மகளின் அழகில் லயித்தவன், மகளின் கன்னங்களை வருடியபடி அவள் முகத்தையே பார்த்தபடி வர,
“சார் தூங்குற குழந்தையை இப்படி ரசிக்கக் கூடாதுன்னு எங்கம்மா சொல்லுவாங்க சார்” என்றான் குரு.
“அது என்னவோ தெரியலை குரு, என் பொண்ணை பார்த்துட்டே இருக்கணும் போல இருக்கு. குழந்தையா இருந்தப்போ இன்னும் பொசுபொசுன்னு இருந்திருப்பா போல, இன்னும் இந்த கை கால் எல்லாம் குட்டி குட்டியா இருந்திருக்கும்” என்றவன் அதற்கு மேல் கலங்கிய கண்ணை குரு அறியாமல் துடைத்துக் கொண்டான்.
“வேண்டாம் குரு. நீங்க நான் சொன்ன இடத்துக்கே போங்க” என்றான் முகம் இறுக.
இரவு பத்தரை மணிக்கு வீட்டின் காலிங் பெல் அடிக்க, வரதன் வந்து கதவைத் திறந்திருந்தார். தூங்காமல் டிவி பார்த்துக் கொண்டிருந்த மகதியும் வர, அந்த நேரத்தில் குழந்தையை விட வந்தவனைப் பார்த்து அவர்களுக்கும் ஆச்சர்யம் தான். எப்படியும் குழந்தையை தன்னுடன் அழைத்துச் சென்று விடுவான் என்று தான் வரதன் நினைத்திருந்தார்.
குழந்தைக்கு அவன் வாங்கிய அனைத்து பொருட்களையும் குரு ஜீப்பில் இருந்து எடுத்து வந்து கொடுக்க, அதை வாங்கி மகதியிடம் கொடுத்திருந்தான் குமரன்.
“தியா குட்டிக்கு வாங்கினது எல்லாம் இதுல இருக்கு மகதிமா” என்றான்.
“என்ன மாமா கடையையே காலி பண்ணிட்டிங்க போல?” என்று மகதி எதுவும் நடவாதவள் போல் எதார்த்தமாய் பேசி வைக்க, குமரனால் தான் சட்டென்று பேச முடியவில்லை.
“குழந்தை தூங்கிட்டாம்மா. வாங்கி அப்படியே போய் படுக்க வச்சிடு” என்றவன், தியாவை அவளிடம் கொடுக்க முற்பட, தியாவோ தூக்கத்திலும் அவன் சட்டையை விடமால் இறுகப் பிடித்துக் கொண்டிருந்தாள். அவனுக்கு அவள் விரல்களை பிரித்து எடுக்கவும் முடியவில்லை. கட்டாயமாய் பிரித்தெடுக்க மனமும் வரவில்லை. அவன் தடுமாறி நிற்க,
“அந்த ரூம் தான் மாமா. நீங்களே அவளை படுக்க வச்சிடுங்க” என்றாள் மகதி.
உள்ளே செல்ல வேண்டாம் என்று நினைத்தாலும் மகளுக்காக தடுமாற்றத்தை மறைத்தபடி தியாவுடன் அறைக்குள் சென்றான்.
அங்கு நதியோ அழுது சிவந்து அப்படியே உறங்கியதில் கண்ணீர் தடங்கள் அவள் கன்னங்களில் இருக்க, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அவளுக்கு அருகில் தியாவை மெதுவாய் கிடத்தியவன், அவள் கைகளை சட்டையில் இருந்து எடுத்து விட, அடுத்த நிமிடம் அருகில் இருந்த தாயின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள். நதியும் தூக்கத்தில் இயல்பு போல் தியாவை அணைத்துக் கொள்ள, மனைவியையும் மகளையும் அப்படி பார்த்தவனுக்கு கண்களின் ஓரத்தில் சிறிது ஏக்கம் கூட எட்டிப் பார்த்தது.
மகளின் நெற்றியில் முத்தமிட்டவனுக்கு அருகில் மனைவியின் முகமும் தெரிய, சில வினாடிகள் அவளை மனதிற்குள் நிரப்பிக் கொண்டவன், தன் உணர்வுகளை அடக்கி நிமிர்ந்து கொண்டான். அவளின் முகத்தில் இருந்த கண்ணீர் தடங்களைக் கண்டு துனுக்குற்றவன்,
“தான் குழந்தையை தூக்கிச் சென்றதில் தான் அழுதிருக்கிறாள் போல” என்று எண்ணிக் கொண்டான். சில நிமிடங்கள் பார்வை அவளையே வெறித்துக் கொண்டிருக்க, சட்டென்று வெளியே வந்துவிட்டான்.
“தியா சாப்பிட்டாம்மா! சாரி இன்னைக்கு அவுட் சைட் புட் குடுக்குற மாதிரி ஆகிடுச்சு. ப்ராப்ளம் எதுவும் இல்லையே?” என்றான் பரிதவிப்பாய்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லை மாமா. எங்க சாப்பிட்டாலும் அவ நைட் இட்லி தான் சாப்பிடுவா. ஒன்னும் பிரச்சனையில்லை. ஆனா, உங்க வீட்டம்மா தான் சாப்பிடாமையே தூங்கிட்டாங்க. மதியமும் சாப்பிடலை” என்றவள் குமரனின் முகம் பார்க்க, சட்டென்று முகத்தைத் திருப்பிக் கொண்டவன்,
“மாப்பிள்ளை, நாங்க பண்ணது தப்புத்தான். அதுக்கு எத்தனை தடவை வேணும்னாலும் நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன். தியாவுக்காகவாது ரெண்டு பேரும் யோசிங்க” என்றார்.
“உங்க பொண்ணுக்கு எப்படி அவளோட பொண்ணு மட்டும் போதும், பொண்ணோட அப்பா வேண்டாம்னு நினைச்சாளோ, அதே மாதிரி எனக்கும் என் பொண்ணு மட்டும் போதும். பொண்ணோட அம்மா வேண்டாம்” என்றான் ஆழ்ந்த குரலில்.
“நீங்க என்ன லூசா மாமா? அவதான் லூசுத் தனமா பண்றான்னு பார்த்தா நீங்களும் அதையே பண்றிங்க? ரெண்டு பேரும் இப்படி மாத்தி மாத்தி பேசிட்டு இருங்க, நீங்க ரெண்டு பேருமே வேண்டாம்னு தியா நினைக்கப் போறா. அப்பறம் என் பொண்ணை நான் கோயம்புத்தூருக்கே தூக்கிட்டு போய்டுவேன் பார்த்துக்கோங்க” என்றாள் மிரட்டலாய்.
மகதியை பார்த்து சன்னமாய் சிரித்தவன், “ஆரம்பத்துல இருந்து இப்போ வரைக்கும் என்கிட்ட
இயல்பு மாறாம இருக்குறது நீ ஒருத்தி தான் மகதிமா. என் பெரிய பொண்ணு, சின்னப் பொண்ணை தூக்கிட்டு போறதுல எனக்கு ஒன்னும் வருத்தம் கிடையாது” என்றவன், அவள் தலையை தட்டிவிட்டு செல்ல,
‘நீயும் எனக்கு பொண்ணு மாதிரி தான்” என்று சொல்லாமல் சொல்லிவிட்டு சென்றவனைக் கண் கலங்க பார்த்திருந்தாள் மகதி. அவனின் வார்த்தைகளைக் கேட்டிருந்த வரதனுக்கும் சொல்ல முடியாத உணர்வு.