வரதன் கூறியதைக் கேட்டுக் கடுப்பான சாரதா, “ஆமா எல்லாத்தையும் இப்ப சொல்லுங்க, இதைத்தான நான் ஆரம்பத்துல இருந்து சொல்லிக்கிட்டு இருக்கேன். என் பேச்சை அப்பாவும் மகளும் காது குடுத்து கேட்டிங்களா?” என்று ஆதங்கத்தில் பேசினார்.
“என்ன பேசுற சாரதா? நான் நதிகிட்ட பேசலைன்னு நீ பார்த்தியா? எனக்கு நிம்மதி வேணும்னு அழுத பொண்ணுகிட்ட வேற என்ன சொல்லியிருக்கனும்னு எதிர்பார்க்குற? கொஞ்ச நாள் பிரிஞ்சு இருந்தா எல்லாம் சரியாகிடும்னு நினைச்சு தான் நானும் அமைதியா இருந்தேன். அதுக்காக பொண்ணு வாழ்க்கை எப்படி போனாலும் பரவாயில்லைன்னு நினைக்கலை. நான் செஞ்ச ஒரே தப்பு, நதி பேச்சை கேட்டுகிட்டு குழந்தை விஷயத்தை மறைச்சது தான். அவர் அன்னைக்கு என்னைப் பார்க்க வந்தப்பவே நான் உண்மையை சொல்லியிருக்கனும்” என்றவரை அதிர்ச்சியுடன் பார்த்தாள் நதி.
“என்னப்பா சொல்றிங்க? உதய் எப்போ உங்களைப் பார்க்க வந்தார்?” என்றாள் புரியாமல்.
“சென்னை கிளம்பும் போது, உங்களை முன்னாடி அனுப்பி வச்சுட்டு, பொருளை எல்லாம் வண்டியில ஏத்திட்டு இருக்கும் போது வீட்டுக்கு வந்தார்டா” என்றார்.
“அப்பவேவா?” என்றாள்.
“ம்ம் ஆமாம்மா..!” என்றார்.
“என்ன சொன்னார்?” என்றவளுக்கு வார்த்தையே வரவில்லை. அவன் தன்னைத் தேடி வரவில்லை என்ற கோபமும் அவளுக்கு மனதின் ஓரத்தில் இருக்கத்தான் செய்தது. வர வேண்டாம் என்று சொன்னது அவள் தான் என்பதெல்லாம் அவள் வசதிக்கு மறந்து மாற்றிக் கொண்டாள் போலும்.
அன்று தேவையான பொருட்களை மட்டும் வண்டியில் ஏற்றி முடித்துவிட்டு, வீட்டைப் பூட்ட போகும் சமயத்தில் வந்திருந்தான் குமரன். பத்து நாட்களுக்குப் பிறகு அவனைப் பார்க்கிறார் வரதன். எப்போதும் கிளீன் சேவ் செய்து முகத்தில் ஒரு ஆளுமையுடன் இருப்பவனின் முகத்தில் ஒரு வாரம் மழிக்கப்படாத தாடி இருந்தது.
அவனைப் பார்த்து அதிர்ந்த வரதன்,” என்னாச்சு மாப்பிள்ளை? ஏன் இப்படி இருக்கீங்க?” என்றார் பதட்டத்துடன்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லை மாமா. ஸ்டேஷன்ல ஒரு சின்ன பிரச்சனை. அதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லைன்னு ப்ரூவ் பண்ணி,அதுல இருந்து இன்னைக்குத் தான் வெளிய வந்தேன்” என்றவனின் பார்வை வீட்டினுள் செல்ல,
“வீட்ல யாரும் இல்லை மாப்பிள்ளை” என்றார் தயக்கத்துடன்.
“தெரியும் மாமா! தெரிஞ்சு தான் வந்தேன். சென்னை ட்ரான்ஸ்பர், பிரமோஷன் எல்லாம் பிரியா சொன்னாங்க. நதி ஆபீஸ் போயிட்டு தான் வர்றேன்” என்றான் விரக்தியாய்.
“நீங்க எதுவும் நினைச்சுக்காதிங்க மாப்பிள்ளை. கொஞ்ச நாள் போனா, நதி கோபம் எல்லாம் போய்டும்” என்றார்.
“அது எனக்கும் தெரியும் மாமா! அவளைப் பார்த்துக்கோங்க. எனக்கும் ப்ரோமோஷன் ட்ரெயினிங் போட்ருக்காங்க. எப்படியும் நான் ட்ரெயினிங் போனா அவ தனியா தான இருக்கணும். அதுக்கு உங்க கூட இருக்கான்னு நினைச்சுட்டு போறேன்” என்றவன்,
“நான் வந்ததையோ, உங்களைப் பார்த்ததையோ அவகிட்ட சொல்லாதிங்க. அதுக்கும் உங்க மேல தான் கோபப்படுவா. அவ இருக்குற இடம் எனக்குத் தெரியாதுன்னு அவ நினைக்குற வரைக்கும் தான் நிம்மதியா இருப்பா. நான் பண்ணினதும் சாதாரண விஷயம் இல்லையே” என்றவனின் முகத்தில் இருந்த உணர்வுகளைப் படிக்க முயன்று தோற்றார் வரதன்.
குழந்தை விஷயத்தைப் பற்றி வாய் திறக்க போனவர், ஏனோ அந்த நிமிடம் வாயை மூடிக் கொண்டார்.
“அப்போ நான் கிளம்புறேன் மாமா” என்றவன் கிளம்ப,
“மாப்பிள்ளை சென்னை அட்ரஸ்” என்று அவர் சொல்ல வர,
“எனக்கு எதுவும் தெரிய வேண்டாம் மாமா. மனசுக் கேட்காம திரும்பியும் அங்க வந்து நிப்பேன். வீணா உங்க பொண்ணுக்குத் தான் மன உளைச்சல். அவ வேணும்னா போன் நம்பரை மாத்தி இருக்கலாம். ஆனா என்கிட்ட அதே நம்பர் தான் எப்பவும் இருக்கும். எதுவா இருந்தாலும் கூப்பிடுங்க” என்றவன்,
“என்னைக்கா இருந்தாலும் நதி என்னைத் தேடி வருவா. அவளால என்னை விட்டுட்டு இருக்க முடியாது. ஏன்னா, அவளுக்குத் தெரியும் எனக்கு அவ மட்டும் தான் இருக்கான்றது” என்றவன் கலங்கிய கண்களை கட்டுப்படுத்தியபடி சென்று விட்டான்.
வரதன் கூறியதைக் கேட்டு, கால்களை கட்டிக் கொண்டு அழுது தீர்த்திருந்தாள் நதி.
“சொல்லி இருந்தா என்னம்மா பண்ணியிருப்ப? அப்பவும் கோபத்துல தப்புத்தப்பா தான் யோசிச்சிருப்ப. அவர் சொன்ன மாதிரி அவரை விட்டுட்டு உன்னால இருக்க முடியாதுன்னு நினைச்சேன் நதிம்மா. ஆனா, என் பொண்ணும் ஒன்னும் லேசுபட்டவ இல்லையே. ரெண்டு வருஷம் வைராக்கியமா இருந்துட்டம்மா. இந்த வைராக்கியத்தை சேர்ந்து வாழ்றதுல காட்டியிருந்தா நல்லா இருந்திருக்கும். மகளா, மருமகனா பேத்தியான்னு பார்த்து, இப்போ குற்றவாளிக் கூண்டுல நிக்கிறது என்னமோ நாங்கதான்” என்றார் வரதன்.
“அப்பா”
“இப்பவும் நல்லா யோசிச்சுக்கம்மா, குமரன் அந்த வீட்டுக்கு இன்னும் பிள்ளை தான். ஆகவே இல்லைன்னாலும் அவரைச் சுத்தி அவரோட உறவுகள் இருக்கத்தான் செய்வாங்க. எல்லாத்தையும் தாண்டி வாழ்றது தான் வாழ்க்கை. குடும்பம்னா எல்லாமே இருக்கும். அதே சமயம் எல்லாத்துக்கும் உன்னை பொறுத்து போக சொல்ற அப்பா நான் இல்லை. ஆனா, கஷ்ட்டமான சூழ்நிலையில விட்டுக் குடுத்து போறது தப்பில்லைம்மா.
ரெண்டு பேரும் கோபத்தை விட்டுட்டு தியாவுக்காக யோசிங்க. முக்கியமா நீ தான் யோசிக்கணும் நதி. என்னடா இத்தனை நாள் அமைதியா இருந்த அப்பன் இன்னைக்கு திடீர்ன்னு இப்படி அட்வைஸ் பன்றாருன்னு நினைக்கிறியா நதி?” என்றார் துவண்ட முகத்துடன்.
“அப்பா” என்றவளுக்கு பேச்சே வரவில்லை.
இத்தனை நாள் நான் அமைதியா இருந்ததுக்கு காரணம் இருந்தது. அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல வச்சுக் கேட்டியேம்மா, “நான் உங்களைக் கல்யாணம் கேட்டேனா? இப்படி ஒரு குடும்பத்துல தள்ளி என் வாழ்க்கையை நாசம் பண்ணிட்டிங்களேன்னு” அந்த வார்த்தையை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாதும்மா. நாங்க ஏதாவது சொல்லப் போய், மறுபடியும் உன் வாழ்க்கையை நாங்க நாசம் பண்றதா நீ நினைச்சுடக் கூடாது பாரு. அந்த ஒரு காரணத்துக்காகத் தான் அமைதியா இருந்தோம்.
எந்த பெத்தவங்களும், பொண்ணு வாழ்க்கையை நாசம் பண்ணனும்னு கல்யாணம் பண்ணிக் குடுக்க மாட்டாங்கம்மா” என்றவருக்கு அத்தனை நாள் அடக்கி வைத்திருந்த ஆதங்கம் வெளியே வந்து கண்ணீராய் மாறியிருந்தது.
“அப்பா, சாரிப்பா. அன்னைக்கு ஏதோ கோபத்துல அப்படி பேசிட்டேன்ப்பா. நீங்க அப்படி எல்லாம் இல்லைப்பா” என்றவள் வரதனை இறுகக் கட்டிக் கொண்டு அழ,
“நீ கோபத்துல பேசுறேன்னு எங்களுக்கும் புரிஞ்சதுமா. இருந்தாலும் மனசுக்குள்ள அப்படி ஒரு வலி. பிள்ளைங்க சந்தோஷத்தைத் தாண்டி பெருசா வேற என்னமா எங்களுக்கு இருந்திடப் போகுது?” என்றார்.
“சாரிப்பா”
“முடிஞ்ச அளவுக்கு உன்னை நல்லா படிக்க வச்சிருக்கேன். இப்போ ஒரு பொறுப்பான வேலையிலும் இருக்க. நல்லது கெட்டதை யோசிச்சு பண்ற மனப்பக்குவம் இப்போ உன்கிட்ட நிறைய இருக்கு நதிம்மா. இனி நீதான் முடிவெடுக்கணும்” என்றார்.
ஏற்கனவே அன்று முழுவதும் அலைந்தது, அதற்கடுத்து நடந்த பிரச்சனைகள் என்று முழுவதும் ஓய்ந்து விட்டாள் நதி. காரணமே இல்லாமல் அழுது கொண்டே இருந்தவள், ஒரு கட்டத்தில் அழுதபடியே உறங்கியும் போனாள்.