“ஏன்னா குழந்தை அபார்ஷன் ஆனது உண்மை. ரெண்டு குழந்தையில ஒன்னு கருவுலையே அழிஞ்சு போனது உண்மை. அதுக்கு காரணம் நீங்க தான்றதும் உண்மை. போதுமா?” என்றாள் நதி அழுகையுடன்.

சட்டென்று தடுமாறி நின்றான் குமரன். தன் குழந்தையை தான் அழிக்கவில்லை என்று மனதின் ஏதோ ஒரு மூலையில் ஆசுவாசம் அடைந்திருந்தவனுக்கு, நதியின் வார்த்தைகள் மீண்டும் பாரத்தை ஏற்றி இருந்தது.

“நீ என்ன சொல்ற?” என்றான் அதிர்ச்சி மிகுந்த குரலில்

“ஆமா, உருவாயிகியிருந்தது ட்வின்ஸ். ஸ்கேன் பார்த்துட்டு டாக்டர் சொன்ன பிறகு தான் எங்களுக்கே தெரியும்.” என்றாள்.

“சோ, அதுக்கு தண்டனையா தான் என்னோட குழந்தையை எனக்கே தெரியாம பெத்து வளர்த்திருக்க இல்லையா?” என்றான் விட்டேத்தியான குரலில்.

“உதய் ப்ளீஸ்..அப்ப இருந்த கோபத்துல நான் அப்படி யோசிச்சுட்டேன்” என்றவள் அவன் கையைப் பிடிக்க வர,

“வேண்டாம் என்னைத் தொடாத? இந்த கொலைகாரனைத் தொடாத” என்றவன் சுற்றும் முற்றும் பார்க்க, டைனிங் டேபிளில் இருந்த கத்தியை எடுத்திருந்தான்.

“தம்பி” என்று வரதனும் சாரதாவும் பதற,

“உதய்” என்று கத்தியிருந்தாள் நதி.

“இந்தா இதைப் பிடி” என்றான் அவளிடம்.

“உதய்” என்றவள் அழ ஆரம்பிக்க,

“பிடி டி. உன் குழந்தையை நான் கொன்னுட்டேன். இது தான உன் கோபம். அப்படியே என்னைக் குத்தி கொன்னுடு. உன் கோபம் தீர்ந்திடும். நானும் குற்ற உணர்ச்சி இல்லாம ஒரேடியா போய் சேர்ந்துடுவேன். பிடி டி” என்றான் ஆத்திரத்தில் கத்தியபடி.

“உதய் கண்ட்ரோல் யுவர் செல்ப்” என்றாள் நதி.

“எதை கண்ட்ரோல் பண்ண சொல்ற? என் கோபத்தையா?” என்றவன்,

“நான் கோபக்காரன் தான், நான் செஞ்சது மன்னிக்க முடியாத தப்புத் தான். ஆனா பதிலுக்கு நீ என்னடி பண்ணி வச்சிருக்க? மொத்தமா சேர்த்து வச்சு பழி வாங்கிட்டல்ல நீ. இப்படி ஒரு துரோகத்தை எனக்கு நீ செஞ்சிருக்க வேண்டாம் நதி. இப்படி ஒரு தண்டனையையும் எனக்கு குடுத்திருக்க வேண்டாம். ஏற்கனவே நடைபிணமா சுத்திட்டு இருக்குறவனை மொத்தமா சாகடிச்சுட்ட நீ.

அன்னைக்கு என்ன சொன்ன? ரெண்டு வருஷம் தேடாம இருந்தவருக்கு இப்ப என்ன அக்கறைன்னு தான கேட்ட? நீ பார்த்தியா நான் தேடலைன்னு.

நீ சென்னை போனது, உனக்கு ப்ரமோஷன் கிடைச்சது எல்லாமே தெரிஞ்சுகிட்டேன் டி. என்னால உன்னோட கரியர் பாதிக்கக் கூடாதுன்னு தான் விலகிப் போனேன். எங்க உன் முன்னாடி வந்தா இன்னும் வெறுத்து விலகிப் போய்டுவியோன்னு  பயந்து தான் வரமா இருந்தேன். ஆனா, அதையே உனக்கு சாதகமா பயன்படுத்திகிட்ட இல்ல.

என் வீட்ல இருக்குறவங்க பண்ணது கூட எனக்கு பெருசா வலிக்கலை. ஏன்னா நான் தான் அவங்ககிட்ட எதையும் எதிர்பார்க்கலையே.

ஆனா, இது ரொம்ப வலிக்குது நதி. எனக்கு நீ மட்டும் தான் இருக்கன்னு நினைச்சு தான் இத்தனை நாள் வாழ்க்கையை ஓட்டிட்டு இருந்தேன். ஆனா, உனக்கு நானெல்லாம் தேவையே இல்லையே. கடைசில நீயும் சுயநலவாதி தான்னு காட்டிட்ட.

அன்னைக்கு ஆத்திரத்துல கையை நீட்டினது தப்புத்தான். நானும் சட்டுன்னு உன்னை அடிக்கலையே, நிதானமா பொறுமையா சொன்னேன் தான? அன்னைக்கு  நான் என்ன சூழ்நிலையில இருந்தேன்னு தெரியுமா உனக்கு? எதுவுமே தெரியாம என்னைய அப்படி ஒரு நிலைமைக்குத் தள்ளி, அதனால குழந்தையும் போய், நான் பட்ட பாடு உனக்குத் தெரியுமா? சொல்லுடி உனக்குத் தெரியுமா? என்னமோ என் குழந்தை, என் குழந்தைன்னு உருகுற. இல்லாம போனது உனக்கு மட்டுமா குழந்தை, ஏன் எனக்கு இல்லை.ஏன் உனக்கு மட்டும் தான் பாசம் இருக்குமா? எங்களுக்கெல்லாம் இருக்காதா?” என்றான்.

குரலில் கடுமையும், ஆத்திரமும் இருந்தாலும் கண்கள் ஏனோ கலங்கித் தான் இருந்தது அவனுக்கு. இழப்பின் வலியும் ஏமாற்றத்தின் வலியும் அவனை ஒரு சேரத் தாக்கியிருந்தது.

“உதய்” என்று அவள் ஏதோ சொல்ல வர,

தன் கண்களை கைகளால் தேய்த்துக் கட்டுபடுத்திக் கொண்டவன்,

“வேண்டாம் எதுவும் பேச வேண்டாம். வாழ்க்கையில் ஒரு சந்தர்ப்பத்துல கூட உன்னை வெறுப்பேன்னு நான் நினைச்சு கூட பார்க்கலைடி. ஆனா இப்போ வெறுக்குறேன்.

புரிஞ்சு நடக்குற லைப் பார்டனர் இருந்தா வாழ்க்கை சரிஞ்சுடாம இருக்கும்னு சொல்லுவாங்க. இங்க வாழ்க்கை மட்டுமில்ல, நானுமே சரிஞ்சுட்டேன். குழந்தை இல்லாம போனப்ப வலிச்சதை விட, இருந்தும் நமக்கானதா இல்லாம போய்டுச்சுன்னு நினைக்கிறப்போ ரொம்ப வலிக்குது. இப்போதைக்கு என்னைத் தவிர எனக்கு வேற யாருமில்லைன்றது தான் நிதர்சனமான உண்மை” என்றவனின் கண்களில் அப்படி ஒரு வலி.

“அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதிங்க தம்பி. எதுவா இருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம்” என்றார் சாரதா.

“பேசித் தீர்க்க எத்தனையோ சந்தர்ப்பம் கிடைச்சது. ஆனா அதுக்கு எல்லாம் உங்க பொண்ணு ஒத்துக்கலையே. இனி பேசி என்ன ஆகப் போகுது? உறவுக்கு அடிப்படையே நம்பிக்கை தான். எனக்கு ட்ரஸ்ட் ரொம்ப முக்கியம். அது உங்க பொண்ணுக்கு நல்லா தெரியும். அந்த நம்பிக்கையே இப்ப ஆட்டம் கண்டிருச்சு. இப்படி ஒரு கோபக்காரனும், கொலைகாரனும் உங்க பொண்ணுக்கு வேண்டாம் சரி. ஆனா, என் பொண்ணுக்கு நான் வேணும்ல. அதுக்காகத் தான் அத்தைனையையும் அடக்கிக்கிட்டு நிக்கிறேன்” என்றான்.

“உதய்” என்றாள் கண்ணீருடன்.

“உள்ளுக்குள்ள அவ்வளவு ஆத்திரம் இருந்தாலும் ஏன் அமைதியா இருக்கேன் தெரியுமா? தெரியாம வளர்த்தவ அப்பன் யாருன்றதை சொல்லியாவது வளர்த்திருக்கியேன்னு தான். என்னை போட்டோல காட்டி தான வளர்த்த? இனி என் போட்டோவுக்கு மாலை போட்டு, உன் அப்பன் செத்துட்டான்னு சொல்லி வளர்த்துக்க” என்றான் விரக்தியான குரலில்.

“அய்யோ உதய்! ஏன் இப்படி எல்லாம் பேசுறிங்க” என்றவள் காதைப் பொத்திக் கொள்ள,

“ரொம்ப வலிக்குதா நதி? உன் கழுத்துல நான் கட்டின தாலி இல்லைன்னு பார்த்தப்போ எனக்கும் இப்படித் தான் வலிச்சது. அப்போ நான் சொல்றதும் சரி தான?” என்றவன்,

“இப்ப கூட  இப்படி பண்ணிட்டோமேன்னு நீ வருத்தப்படலை. குழந்தை விஷயம் தெரிஞ்சிடுச்சே, எங்க இவன் குழந்தையை உரிமை கொண்டாடி தூக்கிட்டு போயிருவானோன்ற பயம் தான் உன் கண்ணுல தெரியுது” என்று விரக்தியாய் சிரித்தவன்,

“பயப்படதா, தாயையும் பிள்ளையையும் பிரிக்கிற அளவுக்கு நதி மாதிரி எனக்கு கல் நெஞ்செல்லாம் இல்லை. ஏமாற்றமும், வலியும், வேதனையும், தனிமையும் எனக்கொன்னும் புதுசில்லை. இதையெல்லாம் புதுசா பார்க்குற உனக்குத் தான் தாங்க முடியாது.கண்டிப்பா அப்படி ஒரு வலியை நான் உனக்குக் குடுக்க மாட்டேன். எனக்குத் தான் எந்த உறவும் சரியா அமையலை. என் குழந்தைக்காவது எல்லாம் சரியா இருக்கட்டும்” என்றவனின் கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீரும் வெளியே வந்திருந்தது.

“நான் அப்படியெல்லாம் நினைக்கலை உதய்” என்றவள் அவனருகில் வர,

“வராத..! நான் கோபத்துல ஏதாவது பண்ணி, அந்த பாவமும் என் கணக்குல சேர்ந்துடும். இந்த ரெண்டு வருஷமும் உனக்காக மட்டும் தான் வாழ்ந்துட்டு இருந்தேன். என்ன நடந்தாலும் என் நதி எனக்காக இருப்பா, என்கிட்ட ஒரு நாள் திரும்பி வருவான்னு நம்புனேன். ஆனா, இப்படி குழந்தையை மறைச்சு, என்னை குற்ற உணர்ச்சியில தவிக்க விட்டு உயிரோட கொல்லுவான்னு நான் நினைச்சு கூட பார்க்கலை. இத்தனை நாளா இந்த உறவை நீதான வேண்டாம்னு சொன்ன? இப்ப நான் சொல்றேன், எனக்கு இனி நீ வேண்டாம் நதி. உனக்கும் என்னை மாதிரி ஒருத்தன் வேண்டவே வேண்டாம். இதோட முடிச்சுக்கலாம்” என்றவனின் குரலில் அதிர்ந்து விழித்தாள் நதி.

“குமரனை பிரிவதா?” எந்த சொல்லே அவளின் நெஞ்சாங் கூட்டை வேரோடு அறுத்து எறிந்தது.

“என்னோட நிலைமையில இருந்து யோசிக்கவே மாட்டிங்களா?” என்றாள் கோபத்துடன்.

“உன்னோட நிலமையில இருந்து யோசிச்சதால மட்டும் தான் இந்த ரெண்டு வருஷமும் தள்ளி நிக்கிறேன்” என்றவன், கிளம்பிவிட்டான்.

“உதய்” என்று அவள் பின்னால் வர, திரும்பிப் பார்த்து வேதனையாய் சிரித்தவன்,

“நான் சொன்ன மாதிரி போட்டோவைக் காட்டி வளர்க்காத. என்னைக்காவது என்னைக் கேட்பா. போட்டோக்கு மாலை போட்டு அதைக் காட்டி வளர்த்துடு. பெரியவளாகி கேள்வி கேட்க வேண்டிய அவசியம் இருக்காது அவளுக்கு” என்றவன், அவளின் அதிர்ந்த முகத்தை பொருட்படுத்தாது வாசல் வரை சென்று விட்டான்.

“டாடி..டாடி” என்று தியா கத்திக் கொண்டே பின்னால் வர, குழந்தையின் குரலைக் கேட்டவனுக்கு அதற்குமேல் ஒரு எட்டு கூட வைக்க முடியவில்லை.

ஓடிச்சென்ற குழந்தை அவனைக் காலோடு கட்டிக் கொள்ள, அதற்குமேல் தன்னை அடக்க முடியாதவனாய்,குழந்தையைத் தூக்கிக் கொண்டவன்,

“தியாம்மா” என்று நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். அவள் முகம் முழுவதும் முத்தமிட்டுத் தீர்த்தவன்,

“டாடி போறேன்டா” என்றான் தவிக்கும் குரலில்.

“டாடி நானு” என்றாள் தியா அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு. அப்பாவையும் மகளையும் பார்த்த சாரதாவிற்கு கண் கலங்க, வரதனைப் பார்த்தார். அவரோ என்ன செய்வதென்று புரியாமல் திகைத்திருந்தார்.

“தியா பாப்பா மம்மி கூட இருங்க. மம்மி பாவம்ல” என்றான்.

“மாத்தேன், நானும் வரேன்” என்று அவனைக் கட்டிக் கொண்டு அழுகைக்கு தயாராக,

“மகதி” என்றான்.

“மாமா”

“குழந்தையை அப்பறம் கொண்டு வந்து விடுறேன்மா” என்றவன், தியாவை தூக்கிக் கொண்டு சென்றான்.

அவன் சென்றது தான் மாயம்.

“நான் அப்பவே தலைப்பாடா  அடிச்சுகிட்டேன், கேட்டியா நதி. மறைக்குற விஷயமாடி இது. இது எவ்வளவு பெரிய கொடுமை. எங்க வாயையும் அடைச்சு இப்ப இதெல்லாம் தேவையா? அய்யோ, அந்த தம்பி மனசுக்குள்ள எவ்வளவு வேதனை இருந்தா இப்படி பேசிட்டு போகும்? தாலிச் செயின் அறுந்து விழுந்தப்பவே நான் சொன்னேன், என்னமோ சரியில்லைன்னு. என் பேச்சை யார் கேட்டா? ஒரு மஞ்சக் கயித்தைக் கூட கட்டிருக்கக் கூடாது. போறவன் வர்றவன் எல்லாம் பொண்ணு கேட்டுட்டு போறான், அதுவும் புருஷன் முன்னாடி. என்னமோ செய்ங்க” என்றவர் உள்ளே சென்றுவிட்டார்.

அழுது கொண்டிருந்த மகளின் அருகில் சென்ற வரதனோ, மகளின் தலையைத் பாசத்துடன் தடவ,

“அப்பா” என்றவள் அவரைக் கட்டிக் கொண்டு அழுது தீர்த்தாள்.

“உனக்கு அப்பா எப்படி முக்கியமோ அதே மாதிரி தானம்மா தியா குட்டிக்கும் அப்பா முக்கியம்? எனக்கு நீ எப்படியோ, அது மாதிரி தானம்மா மாப்பிள்ளைக்கு அவர் பொண்ணும்” என்றார் வரதன் அமைதியான குரலில்.

அவள் கேள்வியாய் பார்க்க,

“தீர்க்க முடியாத பிரச்சனைன்னு எதுவும் இல்லை நதிமா. அவர்மேல தப்பு இருக்குன்னா உன்மேலயும் தப்பு இருக்கு தான நதிம்மா. இழப்புங்கிறது உனக்கு மட்டுமில்லை, அவருக்கும் தானடா? அதையும் நாம யோசிக்கனும்ல? நீ பொறுப்பான பொண்ணுமா. கொஞ்சம் யோசிச்சு முடிவெடு” என்றார் பொறுமையான குரலில்.