குமரனின் பார்வையோ நதியை குற்றம் சாட்டும் பார்வை பார்த்துக் கொண்டிருக்க, அந்த பார்வையில் இருந்த கோபத்தில் மிரண்ட நதி, அவன் கண்கள் காட்டிய உணர்வுகளில் செத்துவிட்டாள்.
குமரனின் கரமோ மகளை விடவே மாட்டேன் என்பதைப் போல் பிடித்திருக்க, இத்தனை நாள் குற்ற உணர்வில் மறுகிக் கொண்டிருந்தவனின் நெஞ்சம், நதியின் செயலில் ஒரேயடியாய் செத்துவிட்டிருந்தது.
நடப்பது நிஜம் தானா என்று அவன் மீண்டும் மீண்டும் தியாவின் முகத்தைப் பார்த்து தன்னை சமப்படுத்த நினைக்க, அதோ பரிதாபம் அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.
தியாவோ அவனைக் கழுத்தோடு கட்டிக் கொண்டு விடவே இல்லை. இத்தனை நாள் புகைப்படத்திலும் செல் போன் திரையிலும் பார்த்த தந்தையின் முகத்தை நேரில் கண்டதும் அந்த குழந்தையின் மனதிலும் தந்தைக்கான தேடல் அதிகமாகவே இருந்தது.
அவனைக் கொஞ்சுவதும், முத்தமிடுவதும், அவன் மீசையை இழுத்துப் பார்ப்பதுமாய் சில நிமிடங்களில் தியாவின் அத்தனை பரிமாணங்களையும் பார்த்தவனுக்கு இதயத்தின் ஏக்கம் கூடி, இத்தனை நாள் இழந்த பேரிழப்பு அவன் கண் முன் தெரிந்தது.
நதியை அனல் தெறிக்க பார்த்தவனின் பார்வை மகளைக் கண்டதும் பனியாய் உருகிவிட, உணர்வுகளை வெளிக் காட்ட தெரியாமல் தவித்தான் குமரன்.
அதீத கோபத்தில் அவன் இப்படித்தான் இருப்பான் என்று குருவிற்கு தெரியும். இத்தனை நாள் குமரனுடன் இருந்ததில் அவனுடைய அத்தனை செய்கைகளும் அவனுக்கு அத்துபடி.
“சார்” என்று குமரனின் கையைப் பிடித்த குரு, “ரொம்ப கோபத்துல இருக்கீங்க சார்” என்றான்.
“என் பொண்ணு தான் குரு. இத்தனை நாள் எனக்கே தெரியாம இருந்த என் பொண்ணு. வேடிக்கையா இருக்குல்ல” என்றான் வேதனை நிறைந்த குரலில்.
“சார்” என்ற குருவிற்கு நடப்பது எதுவும் புரியவில்லை என்றாலும், குமரன் உணர்ச்சிகளின் பிடியில் இருக்கிறான் என்ற அளவிற்கு மட்டும் புரிந்தது.
“இங்க வேடிக்கை என்னன்னா? பொண்ணுக்கு அப்பாவைத் தெரியுது. ஆனா பெத்த அப்பாவுக்கு பொண்ணைத் தெரியலை? என் பொண்ணு சொல்லித் தான் அவ அப்பா நான்றதே எனக்குத் தெரியுது. எத்தனை பேருக்கு இப்படி ஒரு பாக்கியம் கிடைக்கும் குரு? ரொம்ப வினோதமா இருக்குல்ல. இதெல்லாம் என்ன பிரம்மாதம்? என் வாழ்க்கையே வினோதமா தான் இருக்கும்” என்றான் குமரன் விரக்தி நிறைந்த குரலில்.
அவன் பேச்சில் நதியின் கண்களில் இருந்து கண்ணீர் அவள் அனுமதியின்றி வந்து கொண்டிருந்தது.
“சார்” என்றான் குரு.
“நீங்க போயிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு வாங்க குரு, எனக்கு இங்க கொஞ்சம் வேலை இருக்கு” என்றான் குமரன். பார்வை என்னவோ நதி மீது தான் இருந்தது.
“டாடி” என்றாள் தியா.
“என்னடா?” என்றான். குரலில் கரகரப்பு ஏறி இருந்தது.
“லவ் யு டாடி” என்று சிரித்தபடி அவனுக்கு முத்தமிட,
“லவ் யு டா குட்டி” என்று முத்தமிட்டவன்,
“தியா குட்டிக்கு அப்பாவைப் பிடிக்குமா?” என்றான்.
“ம்ம் பிதிக்கும்” என்றாள் தியா. அவர்கள் இன்னமும் வெளியவே நின்று கொண்டிருக்க,
“மாப்பிள்ளை எதுவா இருந்தாலும் உள்ள வந்து பேசுங்க” என்றார் வரதன்.
“யாருக்கு யார் சார் மாப்பிள்ளை” என்றவனின் குரலில் வரதனும் சாரதாவும் விக்கித்துப் பார்க்க, அவன் இப்படித்தான் பேசுவான் என்று தெரிந்த நதியோ அழுகையுடன் உள்ளே ஓடிப் போனாள்.
“மாமா” என்றான் நரேன்.
“அடடே, சொல்லு நரேன். நான் மாமான்னு உனக்கு இப்பத்தான் தெரியுது இல்லையா? நீ கூட பொய் பேச கத்துகிட்ட? என்ன இருந்தாலும் உன் அக்கா சொல்றதை தான நீ செய்வ. அவ உன் கூட பிறந்தவ. உன் ரத்தம். நான் யாரோ தான?” என்றான் குமரன் அதிருப்தி கலந்த குரலில்.
“இப்படி எல்லாம் பேசாதிங்க மாமா. எங்களுக்கு கஷ்ட்டமா இருக்கு. பெரியவங்க உங்க சண்டையில நாங்க என்ன பண்ணோம்?” என்றாள் மகதி உரிமையாக.
ஏனோ மற்றவர்களைப் போல் அவளிடம் கோபத்தைக் காட்ட முடியவில்லை குமரனால்.
“தியா குட்டி கொஞ்ச நேரம் சித்தி கூட இருக்கிங்களா?” என்றான் குமரன்.
“மாத்தேன். தியாக்கு டாடி வேணும்” என்றாள்.
“டாடிக்கும் தியா தான் வேணும். சித்தி பாவம்ல, கொஞ்ச நேரம்” என்றான் குமரன்.
“ம்ம்” என்றவள் மகதியிடன் செல்ல,
“நான் சொல்ற வரைக்கும் ரூமை விட்டு வெளிய வரக் கூடாது. வெளிய என்ன நடந்தாலும் அது குழந்தைக்கு தெரியக் கூடாது” என்றான் மகதியிடம்.
குமரனின் இந்த முகம் மகதிக்கு புதிது. அவனின் முகமும், கோபமுமே அவளுக்கு அல்லு விட்டது.
மகதி குழந்தையுடன் அறைக்குள் செல்லும் வரை தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு நின்றான் குமரன். ஒரு பக்கம் இதயமெல்லாம் வலிப்பதைப் போன்ற ஒரு உணர்வு அவனுக்கு.
அவன் நதியைத் தேடி உள்ளே சென்ற வேகத்தில் வரதனும் சாரதாவும் பதறியடித்துக் கொண்டு சென்றனர். இதற்கு முன்பு அவனின் கோபத்தை அவர்கள் நேரில் பார்த்ததில்லை.
“அப்போ அன்னைக்கு அபார்ஷன் ஆகலை இல்லையா?” என்றான் அவள் அருகில் சென்றபடியே.
“ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளுங்க உதய்” என்றவளுக்கு பயத்தில் வார்த்தைகள் தடுமாறியது. அவ்வளவு தான், அதுவரை அவன் பிடித்து வைத்திருந்த பொறுமை எல்லாம் காற்றில் பறக்க,
அவளின் குரல்வளையைப் பிடித்தவன்,”என் பேரை சொல்லாத. என் பேரை சொல்றதே பாவம்ன்னு சொன்னவ தானடி நீ. இன்னொரு தடவை என்னை உதய்னு சொன்ன கொன்னுடுவேன்டி” என்றவன், என்றவன் மேலும் அவள் கழுத்தை நெறிக்க, அவன் கண்களோ ரவுத்திரத்தில் மின்னியது.
“என்ன பண்றிங்க? விடுங்க?” என்ற வரதன் அவன் கைகளை இழுக்க, அவரால் அசைக்கக் கூட முடியவில்லை.
“எங்க கண்ணு முன்னாடியே இப்படி மிருகம் மாதிரி நடந்துக்கிறிங்க? அப்போ அன்னைக்கும் அப்படித்தான நடந்திருப்பிங்க?” என்றார் வரதன்.
அவரின் கேள்வியில் அவளை விட்டவன்,
“ஏதே மிருகம் மாதிரி நடந்துக்கிறேனா? என்னைய மிருகமா மாத்திட்டிங்க சார் நீங்க. உங்க பொண்ணுக்கு ஒண்ணுன்னா துடிக்குதோ உங்களுக்கு. ஆனா… ஆனா, எனக்கு பொண்ணு இருக்குங்கறதையே மறைச்சிருக்கிங்க சார் நீங்க. அது தப்பா தெரியலையா உங்களுக்கு. சொல்லுங்க, நீங்க செஞ்சது சரியா?” என்றான் ஆத்திர மிகுதியில்.
“தம்பி கொஞ்சம் பொறுமையா இருங்க” என்றார் சாரதா.
“எப்படிங்க பொறுமையா இருக்க முடியும்? என் குழந்தைய எனக்குத் தெரியாம வளர்க்க இவளுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு? இரண்டு வருஷம் குற்ற உணர்ச்சியில் செத்திருக்கேன் நான். பைத்தியக்காரன் மாதிரி இருந்திருக்கேன். கண்ணை மூடினா, உங்க பொண்ணு கொலைகாரன்னு சொன்ன வார்த்தை தான் கண்ணு முன்னாடி வருது? அதையெல்லாம் கூட விடுங்க, இப்ப என்னைப் பார்த்த பிறகாவது உண்மையை சொல்லி இருக்கலாம்ல. ஆனா, ஏன் சொல்லலை? சொல்லுங்க ஏன் சொல்லலை?” என்றான் குரலை உயர்த்தி.