“நீங்க வெளிய அரேஞ்ச் பண்ணியிருந்தா கூட இப்படி ஒரு டேஸ்ட்டியான புட்டா இருந்திருக்குமான்னு தெரியாது. ரியல்லி வெரி டெலிஷியஸ்” என்றான்.

“தேங்க் யு சார். அம்மா பிரிப்ரேஷன் தான் சார்” என்றாள்.

“நான் தான் தேங்க்ஸ் சொல்லணும், உங்க வொண்டேர்புல் லஞ்ச்க்கு” என்றவன் நன்றாகவே சாப்பிட்டான்.

“நீங்களும் சாப்பிடுங்க நதி,  நோ பார்மாலிட்டிஸ்” என்றான்.

“நான் அப்பறம் சாப்பிட்டுக்கிறேன் சார்” என்றவளுக்கு “எப்படா கிளம்புவ?” என்ற நிலைதான்.

சாப்பிட்டு முடித்தவன், மீண்டும் ஹாலில் அமர, “மறுபடியுமா?” என்றிருந்தது நதிக்கு.

“எனக்கு உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும் நதி. சுத்தி வளைச்சு பேச விரும்பலை. எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு. மேரேஜ் பண்ணிக்கணும்னு ஆசைப் படுறேன். உங்களுக்கும் இந்த ப்ரோப்சல் ஓகேன்னா மேற்கொண்டு பேசலாம்” என்றான் வரதன் சாரதாவையும் வைத்துக் கொண்டே.

இதை நதி சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. அவன் ஏதோ மற்றவர்களைப் போல் ஆர்வமாய் பார்க்கிறான் என்று நினைத்திருக்க, அவன் இப்படி ஒரே போடாய் போடுவான் என்று நினைக்கவில்லை.

அதே நேரம் வெளியே காம்பவுண்ட்  சுவற்றின் மீதிருந்த பூந்தொட்டி கீழே விழுந்து பட்டென்று உடைந்திருந்தது. சத்தம் கேட்டு வெளியே வந்த நதி பார்த்தது என்னவோ, கைவிரல்களை இறுக மடக்கிக் கொண்டு, கோபத்தை அடக்கிக் கொண்டு நின்ற குமரனின் முகத்தைத் தான். குரு கூட குமரனின் நடவடிக்கைகளை புரியாமல் பார்த்திருந்தான்.

“இப்ப எதுக்கு இதை போட்டு உடைச்சாரு?” என்ற ரீதியில் பார்த்துக் கொண்டிருந்தான். குரு மட்டுமல்ல, டிசி யின் டிரைவர், டிசியின் பாதுகாவலர் என அனைவரும் பார்த்திருந்தனர்.

“மன்னிக்கணும் சார், நதிக்கு ஏற்கனவே மேரேஜ் ஆகிடுச்சு” என்றார் வரதன்.

“வாட்” என்ற அந்த டிசிக்கு பாவம் முகத்தில் ஈயாடவில்லை.

நதி வேகமாய் உள்ளே வர,

“ஐ யாம் சாரிங்க நதி. ஐ திங்க் இட்ஸ் மை மிஸ்டேக்” என்றான்.

“இட்ஸ் ஓகே சார்” என்றாள்.

“அகைன் ஐ ஆம் சாரி” என்றான் மீண்டும்.

“சார் இட்ஸ் ஓகே. தெரியாம கேட்டதுல எந்த  தப்பும் இல்லை. ரொம்ப எம்பேரிசிங்கா பீல் பண்ணாதிங்க” என்றாள்.

“நல்லா பிரண்ட்ஸா இருக்கலாம் தப்பில்லையே” என்றவன் கையை நீட்ட,

“ஷயர் சார்” என்றவளுக்கு அப்போது தான் நிம்மதியாய் இருந்தது.

“அப்போ வரும் போது எல்லாம் என்னைக் கழுவி ஊத்திட்டே தான் வந்திருப்பிங்க இல்லையா?” என்றான் சிரிப்புடன்.

“இல்லை சார்” என்றவள், அவன் நம்பாத பார்வை பார்க்கவும்”லைட்டா” என்றாள்.

“தட்ஸ் பைன், ஜஸ்ட் பார் ஜோக்” என்றவன் புன்னகை முகமாகவே கிளம்பிவிட்டான்.

“நல்லவன் தான், விஷயம் இதுன்னு தெரிஞ்ச உடனே டீசன்ட்டா பேசிட்டு போய்ட்டான்” என்று நினைத்தாள் நதி.

ஒரு வழியாக அவன் கிளம்பவும் நிம்மதிப் பெருமூச்சு விட்டான் குரு.

“சார் இப்பவாவது நம்ம சாப்பிட போகலாமா?” என்றான்.

“எனக்கு வயிறு புல்லா இருக்கு குரு. நீ வேணும்னா கிளம்பு. இன்னைக்கு ஜீப்பை நான் எடுத்துட்டு போறேன்” என்றான்.

“இருக்கட்டும் சார், உங்களை வீட்ல டிராப் பண்ணிட்டே போறேன்” என்றான்.

“தம்பி உள்ள வாங்க சாப்பிடலாம்” என்றார் சாரதா வேகமாய் வெளியே வந்து.

“இல்லைங்க இருக்கட்டும்” என்றவன் ஜீப்பில் ஏறி அமர்ந்துவிட்டான்.  அப்போது தான் மிரர் வியூவில் நரேனும் மகதியும் வருவது தெரிய, மீண்டும் இறங்கினான்.

கிளம்பியிருப்பார்கள் என்று நினைத்து அவர்கள் வந்திருக்க, குமரனை அங்கு பார்த்த நரேன், பதட்டத்தில் கையில் இருந்த தியாவை தோளில் படுக்க வைத்துக் கொண்டான்.

“ஹேய் மகதி? எப்படிமா இருக்க?” என்றான் உண்மையான மகிழ்ச்சியுடன்.

“நான் நல்லா இருக்கேன் மாமா. நீங்க எப்படி இருக்கீங்க?” என்றாள் உற்சாகமாய். இது தான் மகதி. அவளுக்கு யாரைப் பற்றியும் கவலை இல்லை. நதியைப் பற்றி கூட யோசிக்கவில்லை. குமரன் பெண் பார்க்க வந்த போதே உரிமையாய் மாமா என்று அழைத்தவள் ஆகிற்றே.

அவளுக்கு குமரன் வருவதோ, அதனால் தியாவை பார்க்கிற்கு அழைத்து செல்ல சொன்னதோ எதுவும் தெரியாது. ஆனால் நரேனுக்குத் தெரியும்.

சத்தம் கேட்டு வெளியே வந்த நதிக்கு பயத்திலும், படபடப்பிலும் பேச்சே வரவில்லை. அவள் நரேனை முறைக்க, அவனோ பாவமாய் பார்த்து வைத்தான்.

“ஹேய் நரேன்? இதென்ன கையில பாப்பாவை வச்சிருக்க? யார் பாப்பா இது?” என்றான் குமரன் எதார்த்தமாய்.

“அது, மாமா.. பக்கத்து “ என்று எதையோ சொல்ல வந்தவன் சாரதாவின் முறைப்பில் வாயை மூடிக் கொண்டான்.

“பக்கத்து வீட்டு பாப்பாவா, அதுக்குள்ள பிரண்ட் ஆகிட்டிங்களா?” என்றவன்,

“ஓகே நான் கிளம்புறேன். மகதி, நரேன் நல்லா படிக்கணும்” என்றபடி மீண்டும் ஜீப்பில் ஏறப் போக, ஏனோ அந்த குழந்தையின் முகத்தைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குத் தோன்றியது.

தூங்காத குழந்தையை தோளில் படுக்க வைத்திருந்தால், தியாவும் எவ்வளவு நேரம் தான் அமைதியாய் படுத்திருப்பாள்.

மெல்லத் தலையைத் தூக்கி குமரனைப் பார்த்தவள், கண்களை சுருக்கியபடி இரண்டு நிமிடம் பார்த்திருந்தாள்.

குமரனும் குழந்தையைத் தான் பார்த்திருந்தான். பொசு பொசு கன்னங்களுடன், துருத்திய விழிகளுடன் இருந்த குழந்தையைப் பார்த்தவனுக்கு, ஏதோ உடல் முழுவதும் புதியதாய் ஒரு உணர்வுப் பிரகாரம். தவிப்பும், பாசமும் கலந்த ஒரு உணர்வு அவனுக்குள்.

திகைப்பில் நதி ஆணியடித்தார் போல் சுவற்றில் சாய்ந்து நின்றுவிட்டாள். குமரனுக்குத் தான் தியாவைத் தெரியாது. ஆனால் தியாவிற்குத் தான் குமரனைத் தெரியுமே. நதி செய்ததில் ஒரே நல்ல விஷயம் குமரனை தந்தை என்று காட்டி வளர்த்திருந்தது தான்.

கண்களையும், மூக்கையும் சுருக்கியபடி அவனைப் பார்த்திருந்தவள்,

“டாடி” என்று நரேனின் கையில் இருந்து குமரனிடம் தாவியிருந்தாள். குழந்தையின் ஸ்பரிசத்திலும், டாடி என்ற வார்த்தையிலும் உடலெல்லாம் கூசி சிலிர்த்தது குமரனுக்கு. சட்டென்று குழந்தை தாவியதில் தடுமாறியவன், ஜீப் பேனட்டின் மீது சாய்ந்து தன்னை நிலைப்படுத்திக் கொள்ள, ஒரு கை  என்னவோ குழந்தையை இறுக்கமாய் விடாமல் பிடித்திருந்தது.

“டாடி” என்றவள் அவன் கழுத்தோடு கட்டிக் கொள்ள, குமரனுக்கோ உடலுக்குள் புது ரத்தம் பாய்ந்ததைப் போன்று இருந்தது. ஆனால் அவனுக்கு எதுவும் புரியவில்லை.

அவனின் பார்வை நதியைப் பார்க்க, அவளின் முகத்தில் இருந்த பதட்டமும், அவள் உடல் மொழியும் எதுவோ சரியில்லை என்று அவனுக்கு உணர்த்தியது.

சாரதாவையும் வரதனையும் பார்க்க, அவர்கள் முகத்தில் தெரிந்த நிம்மதியின் சாயலில் அவன் புருவங்கள் நெருங்கியது.

“எங்க போய்திங்க டாடி. தியா பாப்பா தேத்னா” என்று மழலைக் குரலில் தத்தித் தத்தி பேசியவள், குமரனின் கன்னங்களில் மாறி மாறி முத்தமிட, யாரின் முன்பும் காட்டாத அவன் கண்ணீரெல்லாம் அந்த நொடி வெளியே வந்திருந்தது. வரையறுக்க முடியாத உணர்வுகள்,தன் ரத்தத்தில் உதித்த உயிரைக் கண்டதும் அவனைத் தாக்கியது. குழந்தையின் முகத்தை தனக்குள் நிரப்பி ஆசை தீர பார்த்துக் கொண்டிருந்தவன்,

“தியா பாப்பாக்கு என்னைத் தெரியுமா?” என்றான் கரகரப்பான குரலுடன்.

“ம்ம், பாப்பா டாடி” என்றாள்.

“டாடி பேர் என்ன?” என்றான் நதியை கூர்மையாய் பார்த்துக் கொண்டே.

“உத்தய்” என்றாள் அழுத்தி.

அதுவரை கொஞ்ச நஞ்சம் அழுத்திக் கொண்டிருந்த சந்தேகமும் அவனை விட்டுச் செல்ல, குழந்தையை இறுக்கி அணைத்துக் கொண்டவன், அவள் முகம் முழுவதும் முத்தமிட்டு கரைய, தந்தையின் கண்களில் இருந்து வந்த கண்ணீரை தளிர் கரங்களால் துடைத்து விட்டாள் தியா.

“டோன்ட் க்ரை டாடி” என்றாள்.

அவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டவன், தன் எதிரில் நின்றவர்களை பார்த்த பார்வையில் மருந்துக்கும் அமைதியில்லை. விழிகளில் ஏறிய சிவப்பைக் கண்டு நதிக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது. அவளைத்தான் விடாமல் பார்வையால் எரித்திருந்தான்  குமரன்.