‘நீ கூப்பிட்டா எப்பவும் நான் ரெடி தான்’ என்று மனதிற்குள் எண்ணியவன்,
“இப்பவேவா?” என்ற குமரன் யோசிக்க,
“எனி ப்ராப்ளம்?” என்றாள் நதி.
“அது ப்ராப்ளம் எல்லாம் ஒன்னுமில்லை மேடம். உங்க கூட எஸ்ஐ வருவார். கலெக்டர் வரும் போது நான் இங்க இருந்தாகணும்” என்றான்.
“அவர் நேரா அங்க தான் சார் வர்றார். அதனால தான் அங்க கூப்பிடுறேன்” என்றாள்.
“ஆனா எனக்குத் தகவல் வரலை மேடம்” என்றான்.
“அதான் நான் சொல்றேனே? இதுக்குமேல என்ன சார்?” என்றாள்.
“அதுக்கு மேல ஒண்ணுமில்லை தான் மேடம், ஒரு பைவ் மினிட்ஸ்” என்றவன்,
“குடிக்க ஏதாவது?” என்றான்.
“வேண்டாம் இன்ஸ்பெக்டர்” என்றவள் போன் வரவும் பேசிக்கொண்டே வெளியே சென்று விட்டாள்.
“இந்த மேடம் கொஞ்சம் ரப் அன்ட் டப் தான் போல சார்” என்றான் குரு.
“அப்படியா சொல்ற?” என்றவன், முகத்தைக் கழுவிக் கொண்டு தலையை சீவிக் கொண்டு வர,
“என்ன சார் திடீர்ன்னு பிரஷ் ஆகிட்டிங்க?” என்றான் குரு.
“முகம் கழுவினது ஒரு குத்தமாயா?” என்றவனின் பார்வை என்னமோ நதி மீது தான்.
அதற்கடுத்து வேலைகள் துரிதமாக நடக்க, அந்த இடத்திற்கு சென்ற பிறகுதான் அது பொட்டல் கரட்டுப் பகுதி என்பதே அவளுக்குத் தெரிந்தது.
“என்ன சார் மரம் ஒன்னையும் காணோம்?” என்றாள்.
“எல்லாத்தையும் வெட்டிட்டா எங்க இருந்து மேடம் மரம் இருக்கும்?” என்றான் குமரன்.
“அதுவும் சரி தான்” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
கலெக்டர், சப் கலெக்டர் என்று அனைவரும் வர, அதற்கடுத்து நேரம் இறக்கைக் கட்டிக் கொண்டு சென்றது. கலெக்டர் சற்று நேரத்தில் கிளம்பி விட, டிசி மட்டும் இருந்தான்.
அந்த மொட்டை வெயிலில் நதிக்கு வேர்த்து ஊத்திக் கொண்டிருந்தது. முகமெல்லாம் சிவந்து அவள் படும் பாட்டைப் பார்த்த குமரனுக்கு பாவமாய் இருந்தது.
நதியோ குமரனைப் பார்க்க,
“எனக்கு இதெல்லாம் பழக்கம் தான்” என்பதைப் போல் நின்றிருந்தவனைக் கண்டு அவளுக்குத் தான் ஆச்சர்யம்.
அந்த டிசி(டெப்டி கலெக்டர்) யின் பார்வை நதியின் மீது ஆர்வமாய் விழ, அது குமரனின் பார்வையிலும் விழுந்தது. யோசனையுடன் பார்த்திருந்தான் குமரன்.
“நீங்க வேணும்னா காருக்குள்ள உட்காருங்க மேடம். இன்னும் கொஞ்ச நேரம் வெளிய நின்னா அவிஞ்சுடுவிங்க போல” என்றான் குமரன்.
“ஆமாங்க நதி, நீங்க கார்ல உட்காருங்க. அல்மோஸ்ட் எல்லா பிளான்ட்டும் பார்த்தாச்சு. ஏன் ஸ்ட்ரெயின் பண்ணிக்கிறிங்க?” என்றான் அந்த டி.சி.
“இட்ஸ் ஓகே சார்” என்று நதி சொல்ல, குமரனின் கை முஷ்டிகள் இறுகியிருந்தது. அவன் வகிக்கும் பதவியின் பொருட்டு அமைதி காத்தான்.
அதற்கடுத்து ஒரு மணி நேரம் சென்ற பிறகே அனைத்தும் முடிந்திருந்தது. வீடியோ கவரேஜ், பத்திரிகை, செய்தி சேனல் என அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாகக் கலைந்து செல்ல, அப்போது தான் ஆசுவாசமாய் மூச்சு விட்டாள் நதி.
குமரனுக்கோ தலையெல்லாம் வலியில் தெறித்துக் கொண்டிருந்தது.
“சார் நம்மளும் கிளம்பலாமா?” என்றான் குமரன்.
“அதான் அந்த டிசி கிளம்பலையே? அவர் கிளம்பாம நாம எங்கயும் போக முடியாது குரு. இருக்குற வரைக்கும் சாருக்கு பந்தோபஸ்து பண்ணி தான் அனுப்பி வைக்கணும்” என்றான் குமரன்.
“சார் டைம் மூணு மணி ஆகிடுச்சு. லஞ்ச் சாப்பிடனும்” என்றான்.
“உனக்கு அந்த நினைப்பு வேற இருக்கா? அதையெல்லாம் தூரக் தூக்கி கடாசு. பாட்டில்ல தண்ணி இருக்கு. எடுத்து குடிச்சுக்கோ” என்றான் சன்ன சிரிப்புடன்.
“நான் என்னய்யா பண்றது? நாய்க்கு வாக்கப்பட்டா குலைச்சு தான ஆகணும்” என்றவனுக்கு குருவை நினைத்து கவலை தான். தனக்கு டிரைவராய் இருந்தாலும் விபரம் இல்லாமல் அவ்வப்போது வெகுளியாய் பேசி வைப்பான். சிறு வயதிலேயே கான்ஸ்டபிலாக வந்திருந்தவனின் பேச்சைப் பார்க்கும் போதெல்லாம் குமரனுக்கு தன்னையேப் பார்ப்பதைப் போன்று இருக்கும்.
“உனக்குக் கல்யாணம் ஆகிடுச்சா குரு?” என்றான்.
“இன்னும் இல்லை சார், உங்களுக்கு சொல்லாம எப்படி சார் பண்ணுவேன்?” என்றான்.
“கல்யாணம் பண்ணிப் பார், பசி தூக்கம் எல்லாம் தன்னால மறந்துடும்” என்றவனின் குரல் நதியின் காதுகளிலும் விழுந்து வைத்தது. அவளோ அவனை முறைத்து வைத்தாள்.
ஒரு வழியாக கிளம்ப எத்தனித்த டிசி,
“என்ன மேடம் இவ்வளவு நேரம் ஆச்சு, புட் எதுவும் அரேஞ்ச் பண்ணியிருக்கிங்களா?” என்றான் நதியிடம். அப்போது தான் அவளுக்கும் அது உரைத்தது. அனைத்தையும் சரியாக செய்தவள் அதை மறந்திருந்தாள்.
“சாரி சார்” என்றாள்.
“ஹோ..! இட்ஸ் ஓகே. நான் ஹோட்டல்ல பார்த்துக்கிறேன், நீங்க” என்றான்.
“நான் வீட்ல சாப்பிட்டுக்குவேன் சார்” என்றாள்.
“ஏன் எங்களை எல்லாம் வீட்டுக்கு கூப்பிட மாட்டிங்களா?” என்றவனைக் கண்டு திகைத்தாள்.
‘இதென்னடா வம்பா இருக்கு?’ என்று எண்ணியவள், வேறு வழியின்றி “வாங்க சார்” என்று ஒரு பேச்சிற்காக அழைத்தாள். அவன் வர மாட்டான் என்று நினைத்து அவள் அழைக்க,
“கண்டிப்பா, வாங்க போகலாம்” என்றான். நதிக்கோ ‘அய்யோ’ என்றிருந்தது.
“டிசி கிளம்புற வரைக்கும் அவர் கூட இருந்து அனுப்பி வச்சுட்டு கிளம்புங்க குமரன்” என்ற டிஎஸ்பி கிளம்பிவிட, பல்லைக் கடித்துக் கொண்டான் குமரன்.
“இதென்ன சார் கூத்தா இருக்கு? அந்த மேடம் முகத்துலையே தெரியுது, அவங்க வேண்டா வெறுப்பா கூப்பிடுறாங்கன்னு. இவர் கொஞ்சம் கூட யோசிக்காம சரின்னு சொல்லிட்டாரே?” என்றான் குரு.
“நான் வேணும்னா போய் கேட்டு சொல்லவா?” என்று குமரன் கோபத்தில் வார்த்தைகளை காத்து துப்ப, அமைதியாகிவிட்டான் குரு.
நதியோ அவரசமாய் அன்னைக்கு அழைத்து விஷயத்தைக் கூறியிருந்தாள்.
“ஒன்னும் பிரச்சனை இல்லை நதி. எல்லாமே சேர்த்து தான் சமைச்சிருக்கேன்” என்றார் சாரதா.
“அம்மா, டிசி வர்றதால.. அது உதயும் கூட தான் வருவார்” என்றாள் நதி.
“அவர் சாப்பிடுவாராடி” என்றார் சாரதா ஆர்வமாக.
“அது தெரியலை” என்றாள்.
“நான் வேணும்னா மாப்பிள்ளைக்கு ஆம்ப்லேட் போட்டு வைக்கவா?” என்றார் ஆர்வ மிகுதியில்.
“அம்மா… நான் என்ன மருவீட்டுக்கா மாப்பிள்ளையை கூட்டிட்டு வர்றேன். அதுவும் இல்லாம டிசி இருக்கும் போது அவர் சாப்பிட மாட்டார். அதனால அடக்கி வாசிங்க. தியாவை நரேன் கூட பார்க்குக்கு அனுப்பி வைங்க” என்றாள்.
“என்னாச்சு சாரதா? ஏன் கோபமா இருக்க?” என்றார் வரதன். நதி அழைத்ததற்கான காரணத்தை அவரிடம் சொல்ல,
“வேலை பார்க்குற இடத்தில் இதெல்லாம் அவாய்ட் பண்ண முடியாது” என்றவர், குமரனும் வருவான் என்று தெரிந்தவுடன் அமைதியாகிவிட்டார்.
“நீங்க அந்த தம்பிகிட்ட பேசுங்க” என்றார் சாரதா.
“ம்ம் பேசுறேன் சாரதா” என்றார். அவருக்கு மட்டும் மகள் இப்படி தனி மரமாய் இருப்பதில் விருப்பமா என்ன?
வரும் வழியெங்கிலும் அந்த டிசி பேசிக் கொண்டே வர, நதிக்கு தலைவலியே வந்துவிட்டிருந்தது. ஒரு வழியாக வீட்டிற்கு வந்த பிறகு தான் அவளுக்கு நிம்மதியாய் இருந்தது.
வரதனும், சாரதாவும் வாசலுக்கே வந்து வரவேற்க, நதிக்குத் தான் அவஸ்தையாய் இருந்தது. ஜீப்பில் இருந்து இறங்கிய குமரன் வெளியவே நிற்க,
“உள்ள வாங்க தம்பி” என்றார் வரதன்.
“இல்லைங்க இருக்கட்டும். உள்ள வர்றதுக்கு எனக்கு பெர்மிஷன் இல்லை” என்றான் குமரன்.
“வாங்க இன்ஸ்பெக்டர்” என்றாள் நதியும்.
“இட்ஸ் ஓகே மேடம்” என்றவன் உள்ளே செல்ல மறுத்துவிட்டான். முகமோ வழக்கத்தை விட இறுகிப் போயிருந்தது. வந்திருப்பவன் சாப்பிட மட்டும் வந்ததைப் போல் தெரியவில்லை குமரனுக்கு.