அறைக்குள் இருந்த குமரனோ,“இன்னும் எத்தனை நாளைக்கு தான்டி என்னை இப்படி உயிரோட சித்திரவதை பண்ணுவ?” என்று தலையைப் பிடித்துக் கொண்டவனுக்கு, அன்று அவள் உடையில் தோய்ந்திருந்த ரத்தமும், மருத்துவமனையில் அவள் கதறிய கதறலும் மீண்டும் கண் முன் வர, அவன் மீது அவனுக்கே ஆத்திரம் பொங்கியது.

“நதி நதி” என்று புலம்பியவன், தன் ஆத்திரமும் கோபமும் தீருமட்டும் சுவற்றில் தன் கையை ஓங்கிக் குத்திக் கொண்டிருக்க,  ஒரு கட்டத்திற்கு மேல் அவன் கையே வீங்கி வலி எடுத்திருந்தது.

கையை உதறிக் கொண்டே திரும்பியவன், அங்கே சங்கரனைப் பார்த்து தலையைத் திருப்பிக் கொண்டான்.

“குமரா” என்றவருக்கு பேச முடியவில்லை. அவனின் கையைப் பிடித்துப் பார்த்தவருக்கு, மனம் வெம்பிப் போனது.

“இவ்வளவு கோபம் வேண்டாம் தம்பி” என்றார் பரிவாய்.

“என்னால முடியலைப்பா, நானும் மனுஷன் தான” என்றவன் கலங்கிய கண்ணீரை சட்டென்று உள்ளே இழுத்துக் கொண்டான்.

“நீ நதிகிட்ட ஒரு தடவை பேசிப் பாரு குமரா” என்றார் சங்கரன்.

“என்னைக் கொலைகாரனா பார்க்குறவ கிட்ட என்ன பேச சொல்றிங்கப்பா? அவ நிலமையில இருந்து பார்த்தா அவ சொல்றதும் சரிதான? நான் ஒரு கொலைகாரன் தான? அந்த குற்ற உணர்ச்சியே என்னை தினம் தினம் தூங்க விடாம கொன்னுகிட்டு இருக்கு. என் குழந்தையை கருவிலேயே அழிச்ச பாவிப்பா நான். எனக்கு நிம்மதி எல்லாம் இந்த ஜென்மத்துல கிடைக்காது. என்னை நினைச்சு நீங்க கவலைப்படாதிங்க. இப்பல்லாம் நான் பெருசா எந்த எதிர்பார்ப்பும் வச்சுக்கிறது இல்லை” என்றவன், மேலும் அவரிடம் பேசினால் உடைந்து விடுவோம் என்று அஞ்சியவனாய் குளியல் அறைக்குள் புகுந்து கொண்டான்.

அங்கே திரும்பி சென்று கொண்டிருந்த நதியின் நினைப்பெல்லாம் குமரனை பற்றித் தான்.

“அவன் இப்பல்லாம் மாத்திரை போடாம தூங்குறதே இல்லம்மா.  நடந்த விஷயத்துல இருந்து அவன் வெளிய வரவே இல்லை. அதையே நினைச்சு குற்ற உணர்ச்சியில தூங்குறதும் இல்லை” என்ற சங்கரனின் வார்த்தைகள் அவள் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

“அதான் ஒரு குழந்தை இருக்கே நதி. இன்னுமா அவன் மேல உனக்கு கோபம் போகலை?” என்றது மனம்.

“அப்போ இல்லாமப் போன இன்னொரு குழந்தைக்குக் காரணம் அவர் தான?அதை இல்லைன்னு சொல்ல முடியுமா? அதனால நான் பட்ட வேதனை தான் இல்லைன்னு ஆகிடுமா?” என்றாள் மனதிடம்.

“இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கப் போறதா எண்ணம்?” என்ற மனதின் கேள்விகளுக்கு அவளிடம் விடையில்லை. ஆனால். ஏதோ ஒரு வகையில் சங்கரனின் மூலமாக தெரிந்த குமரனின் நிலை, அவளை வெகுவாகத் தாக்கியது.

அதற்கு ஏற்ப, வீட்டில் சாரதாவும் பிடித்துக் கொண்டார்.

“நரேன் அங்க வரும் போது, குமரன் தம்பியைப் பார்த்ததா சொன்னான்” என்றார் நதியிடம்.

வந்ததும் வராததுமாக, சாரதா அவனைப் பற்றி பேச ஆரம்பித்ததில் அவளுக்கு கோபம் வந்திருந்தது.

“இப்போ ரொம்ப அவசியமாம்மா?” என்றாள் பல்லைக் கடித்துக் கொண்டு.

“நான் சொல்றதைக் கேளு நதி. இன்னும் எத்தனை நாளைக்குத் தான் இப்படியே இருப்ப? ஏதோ கோபத்துல அன்னைக்கு அப்படி நடந்திடுச்சு. இன்னும் அதையே நினைச்சு உன் வாழ்க்கையை கெடுத்துக்கப் போறியா?” என்றார்.

“உங்களுக்கு ரொம்ப தொந்தரவா இருக்கேனாம்மா” என்றவளிடம் என்ன பேசுவதென்று அவருக்குத் தெரியவில்லை.

“சரி வாழ வேண்டாம். குழந்தையைப் பத்தியாவது சொல்லேன்” என்றார்.

“தியா நல்ல குடும்ப சூழல்ல வளரணும்னு நினைக்கிறேன். அந்த வீட்ல கண்டிப்பா அது கிடைக்காது” என்றாள், சற்று முன்பு கோதாவரியைப் பார்த்ததை மனதில் வைத்துக் கொண்டு.

“அப்போ அவருக்கு விவாகரத்தாவது குடுத்துடு. உனக்கு வேற நல்ல மாப்பிள்ளையா பார்க்குறோம். அவரும் வேற ஒரு வாழ்க்கையை அமைச்சுக்கட்டும்” என்றார்.

“விவாகரத்தா?” என்றவளின் கண்கள் அநியாயத்துக்கு அதிர்ச்சியைக்  காட்டியது. இதுவரை அவள் விவாகரத்து என்ற ஒன்றை நினைத்துக் கூட பார்த்ததில்லை.

“ஆமா, அது தான் உங்க ரெண்டு பேருக்கும் நல்லது. அவரும் எத்தனை நாளைக்கு இப்படி தனி மரமா இருக்க முடியும். இல்ல நீயும் தான் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்க முடியும். தியாவுக்கு அப்பான்னு ஒருத்தர் வேண்டாமா?” என்றார் சாரதா.

“அம்மா என்ன பேசுறிங்க? தியாவுக்கு அப்பா குமரன் இருக்கும் போது,  யாரோ ஒருத்தரைப் போய் அப்பான்னு..ச்சீ” என்றாள் நதி. பேச்சிற்கு கூட அதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

“கேட்கும் போதே கஷ்ட்டமா இருக்கா நதி. உனக்காவது ஆறுதலுக்கு ஒரு குழந்தை இருக்கு. அந்த தம்பிக்கு அதுவும் இல்லைடி. இது உனக்குப் புரியுதா புரியலையா?” என்றார் சற்று கோபமாக. சராதா அவ்வளவு சீக்கிரம் நதியின் மேல் கோபப் பட மாட்டார். அவருக்கே கோபம் வந்திருந்தது.

“கடைசியில அவர் பாவமாகிட்டார், நான் பாவக்காரி ஆகிட்டேன் இல்லையாம்மா?” என்று அவள் விரக்தியுடன் கேட்க, அவளின் குரலில்

“நதிமா நான் அப்படி சொல்லலடா” என்றார் வேகமாய்.

“நீங்க எப்படியும் சொல்ல வேண்டாம்மா. எது நடந்தாலும், என்ன நடந்தாலும் ஏன்? குழந்தையவே கொன்னாலும் நான் எதுவுமே கேட்கக் கூடாது. எனக்கெல்லாம் கோபமே வரக் கூடாது. கோபமும், ஆத்திரமும் என்ன ஆம்பிள்ளைங்க சொத்தாம்மா? இல்ல, எல்லா நேரத்துலயும் நாம தான் பொறுத்துப் போகனுமா?” என்றாள்.

“நான் அப்படி சொல்லலை நதி. குமரன் தம்பி வேணும்னா இதை பண்ணுச்சு. அவர் குணம் உனக்கே தெரியும் தான நதிமா. தெளிவா யோசிக்கிற பொண்ணு நீ. நீயே யோசிச்சுப் பாரு. உனக்கு அவரைப் பிடிக்கலைன்னா கூட பரவாயில்லை. மனசு முழுக்க அவ்வளவு பாசத்தையும் வச்சுகிட்டு,  கோபமா இருக்குற மாதிரி முக மூடி போட்டுக்கிட்டு இருக்க. அதை விலக்கிட்டு பாரு. எல்லாம் விளக்கமா புரியும்” என்றார் சாரதா.

“நீங்க ஊருக்கு கிளம்பலையாம்மா?” என்றாள்.

“நரேனுக்கும் மகதிக்கும் இந்த வாரம் ரெண்டு நாள் தான் காலேஜ் இருக்காம். அதான் லீவ் போட சொல்லிட்டேன். ஒரு வாரம் இருந்துட்டே போறோம். அப்பாவைக் கிளம்பி வர சொல்லிட்டேன்” என்றார்.

“எதுக்கும்மா அவங்களுக்குத் தேவையில்லாம லீவ் போட்டுக்கிட்டு” என்றாள்.

“அக்கா, நாங்க தான் அம்மாகிட்ட கெஞ்சி லீவ் போட்டோம். தியா குட்டியை விட்டுட்டு எப்படி போறது. எனக்கு போகவே மனசில்லை. இத்தனை நாள் கூடவே இருந்துட்டா” என்றாள் மகதி.

“அதுக்காக படிக்காம இருக்கப் போறியா? இது தான் லாஸ்ட். இனி ஒரு தடவை தேவை இல்லாம காலேஜ்க்கு மட்டம் போட்டிங்க, பிச்சுடுவேன்” என்றாள்.

“அக்கான்னா அக்காதான்” என்று கொஞ்சியவளிடம்,

“தியா எங்க?” என்றாள்.

“நரேன் கூட மாடியில விளையாடிட்டு இருக்காக்கா” என்றவள் ஓடிவிட்டாள்.

தியா நதியுடன் இருந்த நேரத்தை விட, நரேன் மகதியுடன் இருந்த நேரம் தான் அதிகம். அவர்கள் மூவரும் சேர்ந்து அடிக்கும் கூத்தில் சாரதாவிற்கு தான் மண்டை காயும்.

சாரதா தான் குமரனைப் பார்த்த விஷயத்தைச் சொல்லி, வரதனைக் கிளம்பி வர சொல்லியிருந்தார். எப்படியாவது மகளை மருமகனுடன் சேர்த்து வைத்து விட வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு. ஆனால் நதி இப்படி பிடி கொடுக்காமல் பேசுவதைக் கண்டு அவருக்கும் உள்ளுக்குள் ஒரு பயம் இருக்கத்தான் செய்கிறது.

அடுத்த நான்கு நாட்களும் சென்ற வேகம் தெரியாமல் சென்றிருந்தது. இந்த நான்கு நாட்களில் நதி குமரனைப் பார்க்கவில்லை. இடையில் அவன் வர வேண்டிய வேலைக்குக் கூட எஸ்ஐ யைத்தான் அனுப்பியிருந்தான். ஏனோ அன்று அவனை எதிர்பார்த்தவளுக்கு, அவன் வராமல் போகவும் சற்று  ஏமாற்றம் தான்.

அன்று காலையில் கண் விழித்தவள் கண்டது என்னவோ தன் கழுத்தைக் கட்டிக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்த தியாவைத் தான். குமரனை அவள் மறக்க முடியாமல் இருப்பதற்கு தியாவும் ஒரு வகையில் காரணம். அவளின் ஒவ்வொரு செயலும் குமரனைப் பிரதி எடுத்ததைப் போல் தான் இருக்கும்.

“உன் கழுத்தைக் கட்டிக்கிட்டு தூங்குனாதான்டி தூங்குன மாதிரியே இருக்கு” என்றவனின் பிதற்றல்கள் எல்லாம் நேரம் காலம் தெரியாமல் ஞாபகத்தில் வந்து தொல்லை செய்ய,

“இவரைப் பார்க்காத வரைக்கும் சமாளிச்சுட்டேன். பார்த்ததுக்கு அப்பறம் ரொம்ப டார்ச்சரா இருக்கே” என்று நொந்து கொண்டவளின் கன்னத்தை முத்தத்தால் நிரப்பியிருந்தாள் தியா.

“குத் மார்னிங் மம்மி” என்றாள்.

“குட் மார்னிங்டா தியா குட்டி” என்றவள் மகளின் முகம் முழுவதும் முத்தமிட, அவளோ கிளுக்கிச் சிரித்துக் கொண்டிருந்தாள்.

“அம்மு இன்னைக்கு சீக்கிரமே எந்திருச்சுட்டிங்களா?” என்றாள்.

“ம்ம்” என்று தலையை ஆட்டினாள் தியா.

“ஆனா இந்த சித்தியைப் பாருங்க, இன்னும் எப்படி தூங்குறான்னு” என்ற நதி,

“மகதி எழுந்திருடி,பாப்பாவே எழுந்துட்டா உனக்குத் தூக்கம் கேட்குதா?” என்று எழுப்ப, தியாவோ சித்தியின் மேல் ஏறிப் படுத்துக் கொண்டு, அவளின் கன்னத்தை கடித்து வைக்க,

“ம்மா” என்று வீடே அதிரும் அளவிற்கு கத்திக் கொண்டு எழுந்தாள்.

“ஏன்டி இப்படி கத்துற?” என்றபடி வந்தார் சாரதா.

“இவளை மாதிரியே பண்றாம்மா இவ மகளும். நான் தூங்குனா இவங்க ரெண்டு பேருக்கும் எப்படி இருக்குமோ தெரியாது” என்றவள், “உனக்கு இருக்குடி” என்று தியாவைத் துரத்த, அவளோ சிரித்தபடி ஓடி நதியின் கழுத்தை பின்னிருந்து கட்டிக் கொண்டாள்.

அவளை அல்லேக்காய் தூக்கியவள்,

“கடிப்பியாடி, சித்தியை கடிப்பியாடி” என்று அதட்ட,

“லவ் யு சித்தி” என்றாள் கன்னத்தில் மீண்டும் முத்தமிட்டு.

“அக்கா எப்படி தாஜா பண்றா பாருக்கா. சரியான கேடி இவ. அப்படியே குமரன் மாமா வெர்சன் டு தான் இவ” என்றாள் மகதி பேச்சு வாக்கில்.

குமரனின் பெயரைக் கேட்டதும் நதி அமைதியாகி விட, மகதிக்கு அப்போது தான் அவள் பேசியது உரைத்தது.

“சாரிக்கா, அது ஒரு ப்ளோல வந்திடுச்சு” என்றவள் அடுத்த நிமிடம் தியாவுடன் அங்கிருந்து எஸ்கேப் ஆகியிருந்தாள்.

ஏற்கனவே காலையில் இருந்து குமரனின் நினைவு அடிக்கடி அவளுக்கு வந்து கொண்டிருந்தது. அதையே தடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள்.

இன்று அந்த சோலார் ப்ராஜெக்ட் நடைபெறும் இடத்தை பார்வையிடுவதற்காக ஆட்சியர், துணை ஆட்சியர் அனைவரும் நேரில் வருவதால், அவளும் அவர்களுடன் இருந்தாக வேண்டும் என்பதால் அன்று சீக்கிரமே கிளம்பினாள் நதி.

அங்கு குமரனுக்கும் அதே அளவு பிரஷர் இருந்தது.

“என்ன சார் இது ரெஸ்ட்டே இல்லை” என்று குரு கூட புலம்பினான்.

“ரெஸ்ட் எல்லாம் கிடைக்காது குரு. வேணும்னா ரெண்டு நாள் லீவ் போட்டு ரெஸ்ட் எடுத்துட்டு வா. இத்தனை மணிக்கு கிளம்பி வந்து இத்தனை மணிக்கு கிளம்பிப் போக நாம என்ன ஆபீஸ் டியூட்டியா பார்த்துட்டு இருக்கோம். பப்ளிக் டிபார்ட்மென்ட்னா பப்ளிக்ல தான் இருக்கணும்” என்றான் குமரன் நக்கலாய்.

“இதுவரைக்கும் இப்படி ஒரு விளக்கம் நான் கேள்விப் பட்டதே இல்லை சார். ஜாலியா இருக்கலாம்னு இந்த வேலைக்கு வந்தேன் சார். இப்போ போற போக்கைப் பார்த்தா நான் காலியாகிடுவேன் போல” என்றவனைப் பார்த்து சிரித்துக் கொண்டான் குமரன்.

“சார் இப்படி ஒரு நாள் விட்டு ஒரு நாள் நைட் ரௌண்ட்ஸ் பார்த்தா உடம்பு என்னத்துக்கு சார் ஆகும்? நீங்க ரெஸ்ட் எடுக்கப் போனாத்தானே நானும் ரெஸ்ட் எடுக்க முடியும்?” என்றான் குரு.

“நான் என்ன வச்சுகிட்டா வஞ்சகம் பண்றேன். இதோ வீட்டுக்கு போகலாம்னு கிளம்புனேன். மொத்த கலெக்டர் ஆபீசே இன்னைக்கு இங்க தான் வர்றாங்க. சோலார் ப்ராஜெக்ட் நடக்குற இடத்தை பார்க்குற விஷயமா. நம்மளால இன்னைக்கு நகரக் கூட முடியாது. உனக்கு ஒன் அவர் பெர்மிஷன் தர்றேன். வீட்டுக்கு போய் சாப்பிடனும்னா சாப்பிட்டு வந்துடு” என்றான்.

“இருக்கட்டும் சார், நானும் உங்க கூடவே சாப்பிடுறேன்” என்றான் குரு.

“அப்ப வண்டியை கையேந்தி பவனுக்கு விடு மேன்” என்றான் சற்று இலகுத் தன்மையுடன்.

“டெய்லி அதே இட்லி, அதே தோசை போரடிக்கலையா சார் உங்களுக்கு?” என்றான் குரு.

“என்ன கிடைக்குதுங்கிறதை விட, அது நமக்கு நிறைவா கிடைக்குதான்னு பாரு குரு. அப்பறம் சலிக்காது” என்றான்.

“நீங்க வித்யாசமான ஆள் சார். நிறைய கத்துக்கணும் உங்ககிட்ட இருந்து” என்றான் குரு.

விரக்தியாய் ஒரு சிரிப்பு சிரித்தவன்,”என்னைப் பார்த்து எதையும் கத்துக்காத குரு. உனக்கு ஒரு வகையிலும் உதவாது. ஏன்னா, அது எனக்கே உதவாது. கடமைக்கும், கடனுக்கும் இடையில கிடந்தது அல்லாடாத. கடமைக்கும் உரிமைக்கும் இடையில் கிடந்தது அல்லாடாத. வாழ்க்கை நிம்மதியா போகும்” என்றான் குமரன்.

“சுத்தமா புரியலை சார்”  என்றவன் வழக்கமாய் சாப்பிடும் கடை முன்பு ஜீப்பை நிறுத்தியிருந்தான்.

“நீங்க உட்காருங்க சார், நான் வாங்கிட்டு வரேன்” என்றான் குரு.

“அதெல்லாம் வேண்டாம், வா ரெண்டு பேரும் போவோம்” என்று அவனுடன் சேர்ந்தே அந்த மரத்தடியில் சேரில் அமர்ந்து, எப்போதும் சாப்பிடும் அந்த இட்லியை வாங்கி சாப்பிட ஆரம்பித்தான்.

“பட்ஜெட்+டேஸ்ட்டி” என்று சொல்லிக் கொண்டே குரு சாப்பிட, தலையை ஆட்டியபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தவனை கடந்து சென்ற காரில் இருந்து பார்த்துக் கொண்டு சென்றாள் நதி.