மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து, அவளுக்குண்டான அரசு வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள் தீராநதி. ஆட்சியர் அவசர கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருக்க, அதை முடித்துக் கொண்டு கிளம்பியிருந்தாள். அன்று காலையில் இருந்து அவளுக்கு அதிகப்படியான வேலைப்பளு.உடல் ஓய்விற்கு கெஞ்சியது. கண்கள் தீயாய் எறிய, எப்போதடா வீடு செல்வோம் என்றிருந்தது.
ஏனோ அந்த சந்திப்பின் போது அந்த டெப்டி கலெக்டர் அவளிடம் கொஞ்சம் ஆர்வமாய் பேசியதைப் போல் உணர்ந்தாள். சாதாரண ஆர்வமாக இருந்துவிட்டால் பரவாயில்லை என்று எண்ணியவள், தானாக எதையும் ஆரம்பித்து வைத்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.
அவளின் சிந்தனை தன் போக்கில் இருக்க, பார்வை என்னமோ சாலையை வேடிக்கை பார்த்திருந்தது. அப்போது தான் சாலையின் ஓரத்தில் தலையை பிடித்தபடி அமரும் சங்கரன் அவளின் கண்ணில் பட்டார்.
“அண்ணா ஒரு நிமிஷம் வண்டியை நிறுத்துங்க” என்றவள் வேகமாய் இறங்கி சென்றாள்.
அவர் தானா? என்ற சந்தேகத்துடன் இறங்கிச் சென்றவளுக்கு அருகில் சென்றவுடன் அது சங்கரன் தான் என்று புரிந்தது.
“என்னாச்சு மா..மாமா?” என்றாள் தயங்கியபடி.
அப்போது தான் அவர் நதியையே கவனித்தார். அவளைக் கண்டவுடன் அவரின் பார்வையில் தான் எத்தனை சந்தோசம்.
“அம்மாடி நதி” என்று அவர் மேலும் உணர்ச்சி வசப் பட,
“ரிலாக்ஸ் ஆகுங்க மாமா” என்றவள் காரில் இருந்த தண்ணீரை எடுத்துக் கொடுக்க, அதைக் குடித்து கொஞ்சம் தெளிந்தார்.
“என்னாச்சு உங்களுக்கு? ஏற்கனவே முடியாதவர் நீங்க? எதுக்கு இப்படி தனியா நடந்து போயிட்டு இருக்கீங்க” என்றாள் புரியாமல்.
“அப்படில்லாம் இல்லம்மா! வாக்கிங் வந்தேன். லேசா தலை சுத்துற மாதிரி இருந்தது. தான் இங்க கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு போகலாம்னு” என்றவர்,
“எப்படிம்மா இருக்க? நீ எப்படி இங்க?” என்றார் மெதுவான குரலில்.
“அது, எனக்கு இங்க தான் போஸ்ட்டிங் மாமா, தாசில்தார்” என்றாள்.
“கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குமா” என்றவர்,
“குமரன் கூட இங்க தான் இருக்கான்மா. இன்ஸ்பெக்டர் ஆகிட்டான்” என்றார்.
“தெரியும் மாமா! பார்த்தேன்” என்றாள்.
“அப்போ அவனுக்கும் நீ இங்க இருக்குறது தெரியுமா நதி?” என்றார்.
“ம்ம் தெரியும் மாமா” என்றாள்.
“ஆனா, இதைப் பத்தி அவன் கூட என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லலைமா நதி” என்றவருக்கு அப்போது தான் அன்று மகனின் முகத்தில் இருந்த தெளிவிற்கு காரணம் தெரிந்தது.
“இப்படி தனியா வாக்கிங் எல்லாம் வராதிங்க. இடையில ஏதாவது ஒண்ணுன்னா என்ன பண்ணுவிங்க?” என்றாள்.
“எப்பவும் இவ்வளவு தூரம் வர மாட்டேன்மா. இன்னைக்கு என்னமோ யோசனை, அப்படியே வந்துட்டேன்” என்றார்.
“இப்போ எப்படி போவிங்க?” என்றவளுக்கு மேலும் தயக்கம். அப்படியே அவரை விட்டுவிட்டு செல்வதா என்று.
“நான் கொஞ்ச நேரம் இப்படியே உட்கார்ந்துட்டு மெதுவா போய்டுவேன்மா” என்றவர்,
“இன்னமும் குமரன் மேல இருக்குற கோபம் போகலையா நதிமா. இன்னும் எத்தனை நாளைக்கு ரெண்டு பேரும் இப்படியே இருக்க போறீங்க? அன்னைக்கு அப்படி நடந்திருக்க வேண்டாம்மா. அதை நினைச்சு இப்ப வரைக்கும் அவன் வருத்தப்படுறான். இந்த ரெண்டு வருஷமும் யாருமே இல்லாதவன் மாதிரி தனியா தான் இருக்கான். நான் தான் மனசுக் கேட்காம ஒரு பத்து நாள் அவன்கூட இருந்துட்டு போகலாம்னு வந்தேன்” என்று அவர் வேகமாய் பேசிக் கொண்டே போக,
“அதைப் பத்தி பேச வேண்டாம் மாமா” என்றவள்,
“வாங்க நான் உங்களை வீட்ல விட்டுட்டு போறேன்” என்றாள்.
“உனக்கு எதுக்குமா சிரமம்?” என்றவர் தயங்கினார்.
“இதுல என்ன சிரமம் இருக்கு மாமா?” என்றவள், “வீடு எங்க இருக்கு?” என்றாள்.
“போலீஸ் குவாட்ரஸ் தான்மா” என்றார்.
“போற வழி தான் வாங்க” என்றவள், அவரையும் அழைத்துக் கொண்டு சென்றாள்.
ஏதோ ஒரு தைரியத்தில் அவரை ஏற்றிக் கொண்டு சென்றாலும், உள்ளுக்குள் ஒரு வித படபடப்பு இருக்கத்தான் செய்தது. அவள் வேண்டாம் வேண்டாம் என்று விலகிப் போக முயற்சிக்க, விதி மேலும் அவளை அவனருகில் கொண்டு சேர்த்துக் கொண்டிருந்தது.
சங்கரனும் வரும் வழியெல்லாம் குமரனைப் பற்றி பேசிக் கொண்டே தான் வந்தார்.
அவனின் வீட்டின் முன்பு அவள் வண்டி சென்று நின்ற அடுத்த இரண்டாவது நிமிடத்தில், குமரனின் ஜீப்பும் வந்து நின்றிருந்தது.
“சார், தாசில்தார் மேடம் கார்” என்றான் குரு.
“தெரியுது குரு” என்றவன் யோசனையுடன் இறங்க, அப்போது தான் அவளின் காரில் இருந்து இறங்கிய சங்கரனைப் பார்த்தான்.
வேகமாய் அருகில் சென்றவன்,”என்னாச்சுப்பா” என்றான்.
நதி அவனைப் பார்ப்பததை தவிர்க்கும் பொருட்டு, வேறு எங்கெங்கோ பார்த்துக் கொண்டிருந்தவள்,
“அது வர்ற வழியில தலைசுத்துன்னு சொல்லி உட்கார்ந்திருந்தார். அதான் கூட்டிட்டு வந்தேன்” என்றாள். குரலில் பதில் சொல்ல வேண்டும் என்ற அக்கறை மட்டும் தான் இருந்தது. அதை குமரன் நன்றாகவே புரிந்து கொண்டான்.
“ரொம்ப தேங்க்ஸ் மேடம்” என்றவன்,
“இப்படி தனியா நடந்து போகாதிங்கன்னு சொன்னா நீங்க கேட்குறதே இல்லை” என்று கடிந்து கொண்டவன்,
“ஹாஸ்பிட்டல் எதுவும் போகலாமாப்பா” என்றான்.
“அதெல்லாம் ஒண்ணுமில்ல குமரா. லேசா தலைசுத்தல் அவ்வளவு தான்” என்றார்.
“குரு நீங்க போயிட்டு, நைட் பத்து மணிக்கு வந்திடுங்க. நைட் ரவுண்ட்ஸ் போகணும்” என்று சொல்ல, அவன் ஜீப்பை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.
“அப்போ நான் கிளம்புறேன். உடம்பைப் பார்த்துக்கோங்க” என்றவள் செல்ல எத்தனிக்க,
“என்னம்மா நதி இவ்வளவு தூரம் வந்துட்டு, வீட்டுக்குள்ள வராமப் போற?” என்றார் சங்கரன்.
“உள்ள வாங்க மேடம்” என்றான் குமரன். அவன் பார்வையில் என்ன இருந்தது என்று அவளுக்கு சுத்தமாகப் புரியவில்லை.
“இல்லை இருக்கட்டும்” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கோதாவரியின் குரல் கேட்டது.
“வந்து இவ்வளவு நேரம் ஆகியும் ஏன் வீட்டுக்குள்ள வராம வெளிய நின்னு பேசிட்டு இருக்கீங்க?” என்றபடி வந்த கோதாவரி அங்கே நதியைக் கண்டு அப்படியே ஆணியடித்தார் போல் நின்றுவிட்டார்.
இனி வரவே மாட்டாள் என்று எண்ணிக் கொண்டிருந்தவளை, திடீரென்று வீட்டு வாசலில் பார்த்த அதிர்ச்சி அவளுக்கு.
கோதாவரியின் குரலைக் கேட்ட நதிக்கு அவ்வளவு நேரம் இருந்த இலகுத் தன்மை நொடியில் மறைந்து, முகம் இறுக்கத்தை குத்தகைக்கு எடுத்தது. அவள் நின்றிருந்த விதமே அவள் நிலையை சொல்லாமல் சொல்ல, நதியையே பார்த்திருந்த குமரன்,
“உள்ள வாங்க மேடம்” என்றான் மீண்டும்.
“இல்லை இன்ஸ்பெக்டர், எனக்கு வேலை இருக்கு. அண்ணா வண்டியை எடுங்க” என்றவள் அங்கிருந்த யாரையும் பார்க்கவில்லை. அவள் கார் சென்று மறையும் வரை பார்த்திருந்தவனின் முகத்தில் வேதனையின் சாயல்.
“தெரியும் ப்பா. நீங்க போய் ரெஸ்ட் எடுங்க” என்றவன் உள்ளே சென்று விட்டான்.
“ஏங்க இவ எப்படி இங்க? அதுவும் கார்ல?” என்று கோதாவரி கேட்பதை சட்டை செய்யாமல் சங்கரன் வீட்டினுள் செல்ல,
“என் பையன் இன்ஸ்பெக்டர் ஆனது தெரிஞ்ச உடனே வந்து ஒட்டிக்கலாம்னு பார்க்குறாளா?” என்று கோதாவரி பேசி முடிக்கும் முன், அவரை ஓங்கி அறைந்திருந்தார் சங்கரன்.
கோதாவரி கன்னத்தில் கை வைத்தபடி திகைத்து நிற்க, நடப்பது தெரிந்தாலும் குமரன் வெளியே வரவில்லை.
“நீ எல்லாம் கடைசி வரைக்கும் திருந்துற ஜென்மமே இல்லடி. இப்போ அடிச்ச அடியை நான் ஏற்கனவே அடிச்சிருக்கணும். பெத்த பையன் வாழ்க்கை இப்படி இருக்குன்னு கொஞ்சம் கூட கவலை இல்லை. மூணு பிள்ளைங்களும் ஒவ்வொரு விதத்துல கஷ்ட்டப்படுறாங்க அப்படின்ற என்னமோ, அக்கறையோ கொஞ்சமும் இல்லை. உனக்கு எப்பவுமே உன்னோட சுயநலம் மட்டுமே பெருசு. எதுக்குடி நீயெல்லாம் பூமிக்கு பாரமா இருக்க? உன்னை மாதிரி ஒரு பெத்த தாயை நான் உலகத்துல பார்க்கலை” என்றவருக்கு மூச்சு வாங்கியது.
எங்கே இன்னொரு கன்னத்திலும் அறை விழுமோ என்று கோதாவரி பயந்து பார்த்திருக்க,
“நதி ஒன்னும் ஒட்டிக்க வரலை. என்னை வழியில பார்த்துட்டு, முடியலைன்னு தெரிஞ்சு என்னை இறக்கி விட வந்த பொண்ணை என்னெல்லாம் பேசுற. இன்ஸ்பெக்டர்ன்னு ஒட்டிக்க வந்துட்டான்னு வாய் கூசாம பேசுற? அந்த பொண்ணே இப்போ தாசில்தார்டி” என்றவர்,
“மரியாதையா நாளைக்கு ஊருக்கு கிளம்புற வழியைப் பாரு. கூட இருந்து அவன் வாழ்க்கையை கெடுத்தது எல்லாம் போதும்” என்று உறுதியாக கூறிவிட்டார் சங்கரன்.