“சார், அவங்க கோரிக்கையிலும் நியாயம் இருக்கு. இவர் என்னதான் எல்லா இடத்தையும் பிராப்பரா ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணியிருந்தாலும் முன்னூறு ஏக்கர் நிலத்துல நூறு ஏக்கர் புறம்போக்கு நிலம் தான். அதைக் கேட்க அவங்களுக்கு உரிமை இருக்கு. இத்தனை காலமும் அது அவங்க பயன்பாட்டுல தான் இருந்திருக்கு” என்றாள் நதி.

“மேடம் புறம்போக்குன்றது கவர்மென்ட் ப்ராப்பர்ட்டி. இதுவும் கவர்மென்ட் பிராஜெக்ட் தான். இதுல அவங்க கேள்வி கேட்க முடியாது” என்றார் அந்த உரிமையாளர்.

“சாரி சார், கவர்மென்ட் பிராஜெக்டாவே இருந்தாலும், எடுத்துப் பண்றது கவர்மென்ட் இல்லை. இதுல ஆதாயம் கவர்மென்ட்டுக்கு இல்லை. அப்படியே அது புறம்போக்கு நிலம்னாலும், அது உங்க பேருக்கு எப்படி மாறுச்சு? எப்படி புறம்போக்கு நிலத்தை மக்கள் அனுபவிக்க முடியாதோ, அதே மாதிரி நீங்களும் அனுபவிக்க முடியாது” என்று  உறுதியாகக் கூறியவள்,

டெப்டி கலெக்டரிடம் திரும்பி,” சார் அவங்க கோரிக்கைகளை நிறைவேத்துறதைத் தவிர்த்து வேற வழி இருக்குற மாதிரி தெரியலை. இல்லைன்னா, அந்த நூறு ஏக்கரை மட்டும் விட்டுட்டு மிச்சம் இருக்குற இருநூறு ஏக்கர்ல மட்டும் இப்போதைக்கு இவங்க சோலார் பேணல் போடலாம்.

இது வெறும் நாலு ஊர் சம்பந்தப்பட்ட பிரச்சனை இல்லை. மொத்தம் இருபத்தி ஒன்பது கிராமம் இருக்கு. பிரச்சனையை இப்பவே முடிக்கலைன்னா பெரிய இஷ்யூ ஆகிடும். நான் தெளிவான ரிப்போர்ட்டை கலெக்டர் சார்க்கு அனுப்பிட்டேன்” என்றாள்.

“குட் ஜாப் தீராநதி”என்றவன்,

“அப்பறம் என்ன சார்? எதுவா இருந்தாலும் நீங்க மேல சொல்லி மூவ் பண்ணிக்கங்க. இவங்க அதிகாரத்துக்கு உட்பட்டு இதைத் தான் செய்ய முடியும்” என்றான் டெப்டி கலெக்டர் அந்த உரிமையாளரிடம்.

ஒருவழியாக அவர்கள் அனைவரும் கிளம்பியிருக்க, ஆசுவாசமாய் அமர்ந்தவளுக்கு தலையெல்லாம் சுற்றிக் கொண்டு வந்தது.

“என்ன நதி இப்பவே கண்ணைக் கட்டுதா? இப்படித்தான பத்து வருஷத்துக்கும் மேல இந்த பப்ளிக் டிபார்மென்ட்ல இருக்குற குமரனுக்கும் இருந்திருக்கும்” என்று அவளின் மனசாட்சி கேள்வி கேட்க, சட்டென்று தெளிந்திருந்தாள் நதி.

மதிய உணவிற்கான நேரம் கடந்து வெகு நேரம் ஆகியிருந்தது. சரியாக சாரதாவும் அழைத்தார்.

“என்னால வர முடியலைம்மா..! நான் இங்கயே பார்த்துக்குறேன்” என்றாள்.

“நரேன்கிட்ட குடுத்து விட்டிருக்கேன் நதி. இந்நேரம் வந்திருக்கணுமே. சாப்பிட்டு மறக்காம மாத்திரையை போடு” என்றார்.

“அவனை எதுக்கும்மா அலைய வைக்குறிங்க?” என்று சலித்தபடி போனை வைத்தவள், எழுந்து வெளியே வர, அங்கிருந்த வேலைகளை முடித்த குமரனும், அவளைத் தேடித் தான் வந்தான்.

“பிரச்சனையில  சம்பந்தப்பட்டவங்க எல்லாரையும் அரெஸ்ட் பண்ணியாச்சு மேடம். நீங்க பிராப்பரா ஒரு கம்ப்ளெயின்ட் எழுதிக் குடுத்திடுங்க. இப்பவே என்கிட்ட குடுத்தாலும் சரி, இல்லைன்னா உங்க ஸ்டாப்கிட்ட குடுத்துவிட்டாலும் சரி தான் மேடம்” என்றான்.

அவன் துறை ரீதியாக மட்டுமே பேசிக் கொண்டிருக்க, அவளுக்குத்தான் பார்வை அடிக்கடி அவன் நெற்றிக் காயத்திற்கு சென்று வந்தது. அதை குமரன் உணர்ந்தாலும், தெரிந்ததைப் போல் காட்டிக் கொள்ளவில்லை.

“அப்படி என்னடி தயக்கம் உனக்கு? ரெண்டு வருஷம் ஆனாலும், உன் கோபமும் குறையலை, வெறுப்பும் குறையலை போல” என்று எண்ணிக் கொண்டவன்,

“அப்போ நான் கிளம்புறேன் மேடம்” என்றவன் கிளம்ப எத்தனிக்க,

“ஒரு நிமிஷம் இன்ஸ்பெக்டர், நான் கம்ப்ளைன்ட் எழுதித் தர்றேன். வாங்கிட்டே போயிடுங்களேன்” என்றவள் உள்ளே சென்று விட, அவள் போன வேகத்தில் அவளின் உதவியாளர் பர்ஸ்ட் எய்ட் பாக்சுடன் வெளியே வந்தார்.

“சார் உங்க காயத்துக்கு பர்ஸ்ட் எய்ட் பண்ணனும்” என்றார்.

“நோ நீட். நீங்க போங்க, நான் பார்த்துக்கிறேன்” என்றவன் அவரை அனுப்பிவிட்டான்.

அவன் பேசியது அவளுக்கும் கேட்டது.’இந்த திமிருக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை’ என்று எண்ணிக் கொண்டாள்.

அப்போது நரேன் சாப்பாட்டுடன் வர, அங்கே குமரனை அவன் எதிர்பார்க்கவில்லை. இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது அவனைப் பார்த்து.

குமரனைப் பார்த்த நரேன் தயங்கி நிற்க,

“ஹேய், நரேன் எப்படிடா இருக்க?” என்றான் குமரன் எப்பவும் போல்.

“நா..நான் நல்லா இருக்கேன் மாமா. நீங்க எப்படி இருக்கீங்க?” என்றான் தயங்கிபடி. நதி பார்த்து விடுவாளோ என்ற பயம் வேறு அவனுக்கு.

“உங்க அக்காவை நினைச்சு சார் பயப்படுறிங்களோ?” என்ற குமரன்,

“மகதி எப்படி இருக்கா?” என்றான்.

“நல்லா இருக்கா மாமா” என்றான்.

“நல்லா வளர்ந்துட்ட நரேன். மீசையெல்லாம் வந்துடுச்சே. என்ன படிக்கிற? எந்த காலேஜ்” என்று  தோளோடு அணைத்தபடி அவன்  விடாமல் கேட்டுக் கொண்டிருக்க,

நரேன்,கோயம்புத்தூரில் தாங்கள் படிக்கும் கல்லூரின் பெயரை சொன்னவன்,

“நீங்க எப்படி மாமா இங்க?” என்றான் புரியாமல்.

“நான் இங்க தான் வொர்க் பண்றேன்” என்றான்.

நரேன் வரும் போதே நதி பார்த்துவிட்டாள். ஏனோ நரேனை தோளோடு அணைத்தபடி நின்றிருந்த குமரனைப் பார்க்கும் போது அவளறியாமல் கண்கள் கலங்கியது.

“என்ன இந்த நேரத்துல இங்க வந்திருக்க?” என்று குமரன் கேட்க,

“அக்கா சாப்பிட வரலை மாமா. அவளுக்கு காய்ச்சல் வேற. அதான் அம்மா சாப்பாடும் மாத்திரையும் குடுத்துவிட்டாங்க” என்றான்.

“ஹோ” என்ற குமரன் உள்ளுக்குள் எப்படி உணர்ந்தான் என்றே தெரியவில்லை.

காய்ச்சல்,தலைவலி என்று எத்தனையோ நாட்களில், தனக்குத் தானே கவனித்துக் கொண்ட நாட்களும், தனிமையும் கண் முன் வர, அவன் முகத்தில் விரக்தியாய் சிரிப்பு ஒன்று இழையோடியது.

“நீ போய் குடு நரேன்” என்று குமரன் சொன்னவுடன் முன்னே சென்றவன், என்ன நினைத்தனோ திரும்பி குமரனைப் பார்த்தவன்,

“நீங்க சாப்பிட்டிங்களா மாமா” என்றான் தயங்கியபடி.

நரேன் அப்படி கேட்டதும் சட்டென்று கண்கள் கலங்கியது குமரனுக்கு.  அதை சட்டென்று மறைத்தவன்,

“இனி தான் நரேன்” என்றவன்,

குருவை அழைத்து “நீங்க இருந்து கம்ப்ளைன்ட் எழுதி வாங்கிட்டு வாங்க. நான் ஜீப்ல வெயிட் பண்றேன்” என்றவன் சட்டென்று அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

“வா நரேன். நீ வச்சுட்டு கிளம்பு. நான் சாப்பிட்டுக்கிறேன்” என்றாள்.

“அக்கா.. மாமா’ என்று இழுத்தான் நரேன்.

“நரேன்” என்று பல்லைக் கடித்தாள்.

“சாரிக்கா” என்றவன் கிளம்பிவிட்டான்.

அவர்கள் பேசியது அவள் காதிலும் விழுந்திருந்தது தானே. ஏனோ குமரனின் குரல் அவள் மனதை அழுத்திக் கொண்டே இருந்தது. அவள் அறையின் ஜன்னல் வழியே பார்த்திருக்க, அங்கே மரத்தடியில் ஜீப்பினுள் தலை சாய்த்து அமர்ந்திருந்த அவன் தோற்றம் அவளை மிகவும் பாதித்தது.

“உதய்” என்று மனதிற்குள் அழைக்க, சட்டென்று நிமிர்ந்தவன், அந்த ஜன்னலைத் தான் பார்த்திருந்தான். தன்னை மறைத்துக் கொண்டவள், வெளி வந்த கண்ணீரையும் துடைத்துக் கொண்டாள்.

குருவை அழைத்து கம்ப்ளைன்ட் பேப்பரைக் கொடுத்தவள்,

“லஞ்ச் டைம் மீறிடுச்சு. சீக்கிரம் போய் நீங்களும் உங்க சாரும் சாப்பிடுங்க” என்றாள்.

“கையேந்தி பவனுக்கு லஞ்ச் டைம்லாம் எங்க மேடம் இருக்கு. எப்ப போனாலும் சாப்பிடலாம்” என்றான்.

“கையேந்தி பவனா?” என்றவளுக்குத் திகைப்பு.

“எங்க சார் எப்பவும் அங்க தான் மேடம் சாப்பிடுவார். நானும் லஞ்ச் எப்பவும் சார் கூடத்தான் மேடம்” என்றான்.

“ஹோ” என்றவள்,

“கூட்டத்துல அத்தனை பேர் இருக்கும் போது, அந்த ஒருத்தனை மட்டும் ஏன் உங்க சார் அந்த அடி அடிச்சார்?” என்றாள் கேள்வியாய்.

“அது மேடம்” என்று அவன் தயங்க,

“சும்மா சொல்லுங்க” என்றாள்.

“அது, அவன் உங்களைக் கொஞ்சம் தப்பாப் பார்த்தான் மேடம். அதான் சார் புரட்டி எடுத்துட்டாரு. அவருக்கு கோபம் கொஞ்சம் அதிகமா வரும்” என்றான்.

‘அதை நீங்க சொல்லனுமா?’ என்று நினைத்துக் கொண்டவள்,

“நீங்க கிளம்புங்க. நான் இதெல்லாம் கேட்டேன்னு உங்க சார்கிட்ட சொல்ல வேண்டாம்” என்றவளை யோசனையுடன் பார்த்துக் கொண்டு சென்றான் குரு.

மீண்டும் ஜன்னலில் சென்று பார்க்க, குரு அவனிடம் கம்ப்ளைன்ட் பேப்பரை கொடுப்பதும், அதை அவன் வாங்கி படித்துப் பார்ப்பதும் தெரிந்தது. படித்து முடித்தவன் நிமிர்ந்து ஜன்னலைப் பார்க்க, வேகமாய் சென்று இடத்தில் அமர்ந்து கொண்டாள்.

“ச்ச்ச.. நான் என்ன இப்படி ஆகிட்டேன்” என்று தலையில் கைவைத்துக் கொள்ள, அங்கு குமரனோ சிரித்துக் கொண்டான்.