“பார்த்து முடிச்சு விடுப்பா, ரிட்டையர்ட் ஆக ஒரு வருஷம் தான் இருக்கு, அதுக்குள்ள என்னை முடிச்சு விட்ருவாங்க போல” என்றவர் உள்ளே செல்ல,

“என்ன சார் எல்லாரும் உள்ள போயிட்டா, எங்களுக்கு யார் பதில் சொல்றது?” என்றான் அவன்.

குமரன் குருவிடம் கைகாட்ட, வீடியோவை ஆப் செய்தான்.

“பதில் தானே,இதோ நான் சொல்றேன்” என்ற குமரன், அவனை இழுத்து கன்னம் கன்னமாக அறைந்து தள்ளியிருந்தான்.

“இதெல்லாம் அராஜகம் சார். யூனிபார்ம் போட்டா என்ன வேணும்னாலும் பண்ணுவிங்களா?” என்றான் அவன்.

அவனை அடித்துத் துவைத்து முன்னால் கொண்டு வந்து நிறுத்தியவன்,

“மேடம் அந்த லிஸ்ட் புல்லா குடுங்க. எல்லாரையும் இப்பவே அரெஸ்ட் பண்ணறேன்” என்றவன்,

“இவனே ஒரு பிராடு. இவனெல்லாம் ஒரு ஆளுன்னு இவனை நம்பியா எல்லாரும் போராட்டம் பண்ண வந்திங்க?” என்று அவனை மீண்டும் ஒரு அடி அடித்தான் குமரன்.

“அமைதியா கலைஞ்சு போங்க. உங்க கோரிக்கைகளை நியாயமான முறையில் நிறைவேத்த வேண்டியது என்னோட பொறுப்பு” என்றாள் நதி.

“இன்னும் பேச என்ன மேடம் இருக்கு?” என்றவன்,

“இங்க பாருங்க! உங்களுக்கு இந்த ப்ராஜெக்ட்டை நிறுத்தணும்னா நல்லா வக்கீலா பார்த்து கோர்ட்ல ஸ்டே ஆர்டர் வாங்கிட்டு வாங்க. அதை விட்டுட்டு இங்க நின்னு போராட்டம்  பண்ணி ஒன்னும் ஆகப் போறது இல்லை. பப்ளிக் நியூசென்ஸ் கேஸ் தான் ஆகும். எத்தனை பேரா இருந்தாலும் அரெஸ்ட் பண்ணிட்டு போய்ட்டே இருப்பேன்” என்றவன், அந்த ஊரின் முக்கியமான ஒருவரை கைகாட்டி,

“என்ன சார்? நீங்க ஊருக்குள்ள எவ்வளவு பெரிய ஆள். உங்களுக்கு கூடவா புரியலை. நீங்க படிச்சவரு, கொஞ்சம் பண்பா யோசிப்பிங்கன்னு நினைச்சேன். நீங்களும் இவங்களோட இப்படி வந்து நிக்கிறிங்க? இவங்களுக்குத் தான் தெரியலை, உங்களுக்குக் கூடவா சட்டம் தெரியலை” என்றான் அடிக்க வேண்டிய இடத்தில்.

அதில் அகம் மகிழ்ந்தவர்,

“குமரன் சார், நான் சொன்னா எங்க கேட்குறாங்க? நீங்க சொன்ன மாதிரி கோர்ட்லயே பார்த்துக்கலாம் சார்” என்றவர் கிளம்பிப் போக, அவருடன் சேர்ந்து பாதிப் பேர் கிளம்பினர்.

நதி வியப்புடன் பார்க்க,

இன்னொரு முக்கியத் தலையைப் பார்த்தவன்,

“என்னண்ணே உங்க ஊருக்கு நீங்க தான் அடையாளம். நீங்களே இப்படி பண்ணலாமா? உங்க வார்த்தைக்குத் தான எல்லாரும் கட்டுப் படுவாங்க. எங்களை நம்ப மாட்டிங்களா? நம்பி, உங்க ஊர்க்காரங்ககிட்ட சொல்லுங்கண்ணே. அதிகாரிங்க எங்களை விட உங்களைத் தான் அவங்க எப்பவும் நம்புவாங்க” என்றான் குமரன்.

அதில் மிதப்பாய் ஒரு பார்வை பார்த்தவர்,

“நீங்க சொல்றதும் சரி தான் தம்பி” என்றவர்,

“நம்ம எதா இருந்தாலும் கோர்ட்ல பார்த்துக்கலாம்ப்பா. அவங்க வேலையை பாதிக்கற மாதிரி நம்ம பண்றதும் தப்புத்தான? வாங்க போகலாம்” என்று அவர் செல்ல, முக்கால்வாசிப் பேர் அவருடன் சென்று விட்டனர்.

இப்படியே நான்கு ஊர் முக்கிய புள்ளிகளையும் அவன் உசுப்பேற்றி விட, கூட்டம் கலைந்து கொண்டிருந்தது. குமரனின் கைப் பிடியில் இருந்தவன் கண் காட்ட, அதற்கு முன்பே குருவிற்கு கண் காட்டியிருந்தான் குமரன். அவன் மீண்டும் வீடியோவை ஆன் செய்து வைக்க, கலைந்து சென்று கொண்டிருந்த கூட்டத்தில் இருந்து கற்கள் நேராக நதியை நோக்கி வந்து கொண்டிருந்தது.

சட்டென்று சுதாரித்த குமரன், கைப்பிடியில் இருந்தவனை தனக்கு முன்னால் நிறுத்தி, நதியை இழுத்து தனக்குப் பின்னால் நிறுத்தியிருந்தான். அவன் முதுகோடு சாய்ந்திருந்தவள் சட்டென்று விலகப் பார்க்க, அவன் பிடியோ இரும்புப் பிடியாய் இருந்தது.

குமரனுக்கு முன்னால் இருந்தவன் மேல் தான் அத்தனை கற்களும் விழுந்திருந்தது. அவன் வலி தாங்காமல் துடித்து, கொஞ்சம் தலையைக் குனிந்ததில் ஒரு கல் குமரனின் நெற்றியை சரியாக பதம் பார்த்திருந்தது.

குமரன் கண் காட்ட, குரு வீடியோவை ஆப் செய்தான். அதற்குள் அங்கிருந்த காவலர்கள் கல் எறிந்தவர்களை கையும் களவுமாக பிடித்திருந்தனர்.

“பப்ளிக் யாருக்கும் எதுவும் ஆகலையே” என்றான்.

“இல்ல சார், ரெண்டு பேருக்கு மட்டும் லேசா காயம்” என்றனர்.

“எல்லாரையும் ஸ்டேஷன் கொண்டு போங்க” என்றவன்,

“நீங்க உள்ள போங்க மேடம் “ என்றான். நதி அவன் நெற்றியில் ரத்தத்தைப் பார்த்து தயங்கி நிற்க,

“உள்ள போங்க மேடம்” என்றான் மீண்டும். வேறு வழியின்றி அவள் உள்ளே சென்று விட்டாள்.

தன் கைப்பிடியில் இருந்தவனைப் பார்த்தவன்,

“தாசில்தார்கிட்ட பேசும் போது உன் பார்வை எங்க போச்சு?” என்றான் அவனை ஒரு அறை அறைந்து.

“இதெல்லாம் ரொம்ப ஓவர் சார். நான் அவங்களைப் பார்த்தா உங்களுக்கு என்ன சார்?” என்றான் வலி தாங்காமல்.

“பார்த்தது தப்பில்லை, எங்க பார்த்தங்கிறது தான் தப்பு” என்று மேலும் இரண்டு போடு போட,

“நான் யாருன்னு தெரியுமா சார்?” என்றான் திமிராய்.

“இவ்வளவு வாங்கியும் திமிர் குறையலை. நீ யாருன்னு தெரிஞ்சு நான் என்னடா செய்ய போறேன். நான் யாருன்னு உனக்குத் தான் இன்னும் சரியா தெரியலை” என்று அவன் சட்டையை சரி செய்தவன்,

“குரு, அரசு அதிகாரியை கல்லால் அடித்து தாக்கியது, போராட்டாக்காரர்களை வன்முறைக்கு தூண்டியது, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதுன்னு கேஸ் பைல் பண்ணுங்க. சாருக்கு வெளிய இருந்து போர் அடிச்சிருக்கும். கொஞ்ச நாள் உள்ள இருக்கட்டும்” என்றவன் அவனிடம் ஒப்படைக்க, அவனோடு சேர்த்து அங்கிருந்த அனைவரையும் கூண்டோடு ஏற்றிக் கொண்டு சென்றனர்.

“சூப்பர் சார்” என்ற குரு,

“நீங்க இதை முன்னாடியே பண்ணியிருக்கலாம் சார்” என்றான்.

“அதாவது குரு, டெப்டி கலெக்டரே இங்க இருக்கும் போது நாம ஆடக் கூடாது. இப்போ அவர் டென்ஷன் ஆகி உள்ள போயிட்டார். இப்ப நமக்கு வேற வழியில்லை. களத்துல இறங்கித்தான் ஆகணும். இதை முன்னாடியே பண்ணியிருந்தா, ஓவர் ஸ்மார்ட்ன்னு நினைப்பான்னு அதுக்கும் நம்மளைத் தான் பேசுவாங்கய்யா. இந்த சூட்சுமம் எல்லாம் போகப் போக புரிஞ்சுடும்” என்றான் குமரன்.

“சார் ப்ளீடிங் ரொம்ப ஆகுது” என்றான் குரு.

“என்னதான் சொல்றாங்க தீராநதி?” என்றான் என்றான் அந்த டெப்டி கலெக்டர். அவனுக்கும் இளவயது தான்.