சரியாக அதே நேரத்திற்கு ஸ்டேஷனில் இருந்து அழைப்பு வந்தது குமரனுக்கு.
“சார் நாலு கிராம மக்களும் சேர்ந்து தாலுகா ஆபீசுக்கு முன்னாடி முற்றுகைப் போராட்டம் பண்றதுக்காக போய்க்கிட்டு இருக்குறதா தகவல் வந்திருக்கு சார்” என்றார் அந்த காவலர்.
ஒரு நிமிடம் யோசித்த குமரன்,
“நான் இங்க தான் இருக்கேன். நீங்க ஸ்டேஷன்ல இருக்க ஸ்ட்ரென்த் எல்லாரையும் இங்க அனுப்பி விடுங்க” என்று போனை வைத்தவன்,
“குரு” என்று அவனை அழைத்தவன், “ இந்த என்ட்ரன்ஸ பேரிகார்ட்ஸ் வச்சு குளோஸ் பண்ணுங்க. யாரும் உள்ள போகக் கூடாது. வெஹிக்கிள்ஸ் எல்லாம் ஓரமா நிறுத்த சொல்லுங்க” என்று உத்தரவு பிறப்பித்தவன்,தனது மேலதிகாரிக்கும் போன் செய்து தகவலைச் சொல்லிருந்தான்.
மீண்டும் வந்தவனை புரியாமல் பார்த்தாள் நதி.
“என்னாச்சு இன்ஸ்பெக்டர்?”
“அந்த நாலு கிராம மக்களும் முற்றுகைப் போராட்டம் பண்றதுக்காக வந்துகிட்டு இருக்குறதா தகவல் மேடம். நீங்கதான் பேச்சுவார்த்தை நடத்தனும். ஆனா உடன் பட்டு வருவாங்களான்னு தெரியாது.” என்றான்.
“ஐ க்னோ” என்றவள் தலையில் கைவைத்துவிட்டாள்.
ஆளும் கட்சிக்கு வேண்டப்பட்டவர்கள் தான் இந்த ப்ராஜெக்ட்டில் சம்பந்தப் பட்டிருக்கின்றனர். மேலதிகாரிகளிடம் எடுத்துச் சென்றால் பார்த்து பேசி முடிங்கள் என்ற பதில். மக்களிடம் பேசப் போனால், எல்லாரும் இதற்கு உடந்தை என்ற பதில். ‘இடையில மாட்டிகிட்டு முழிக்க வேண்டியதா இருக்கே?’ என்று எண்ணிய நதி, அறையை விட்டு வெளியே வந்து நிலவரத்தைக் கண்காணிக்க, அங்கு குமரனோ அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் துரித கதியில் செய்து கொண்டிருந்தான்.
நதி தனது மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க, டெப்டி கலெக்டரும், ஆர்டிஓவும் வந்து கொண்டிருந்தனர்.
தனது உதவியாளரை அழைத்தவள்,
“இந்த ப்ராஜெக்ட் எடுத்திருக்க கம்பெனியோட ஓனரை உடனே வர சொல்லுங்க” என்றாள் உத்தரவாய்.
“மேடம், அவங்க பெரிய இடம். நம்ம எப்படி அவங்களை இங்க வர சொல்றது?” என்றார் அவர்.
“பெரிய இடமா இருந்தா என்ன? பேச்சு வார்த்தை நடத்தும் போது, அவரும் கூடத்தான் இருக்கணும். அவங்க பக்கம் எல்லாம் சரியா இருக்கும் போது ஏன் தயங்கணும்? மக்களுக்குப் புரியலைன்னா, சொல்லி புரிய வைக்க வேண்டியது நம்மளோட கடமை” என்றாள் உறுதியாய்.
சற்று நேரத்தில் கிட்டத் தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்த அலுவலகத்தை முற்றுகை இட்டிருந்தனர்.
“போக்குவரத்துக்கு யாரும் எந்த இடையூறும் பண்ணக் கூடாது” என்றான் குமரன்.
“அப்படிப் பண்ணாத்தான எங்க கோரிக்கைகளையே காது கொடுத்து கேட்குறிங்க? அந்த சோலார் பிராஜெக்டை நிறுத்தனும். அங்க வேலை தொடரக் கூடாது. அப்படி தொடர்ந்து நடந்தா நாங்க இந்த இடத்தை விட்டு போறதா இல்லை” என்றனர்.
“இங்க பாருங்க, நேத்து தான் ஊர் முக்கியஸ்தர்களை கூப்பிட்டு பேச்சு வார்த்தை நடத்தியிருக்கு. அதுக்குள்ளே இப்படி அவசரபட்டா என்ன செய்ய முடியும். உங்க கோரிக்கைளை சொல்லுங்க. ஆனா இதை நிறுத்த முடியாது. அவங்ககிட்ட பிராப்பரான ஆர்டர் இருக்கு” என்றாள் நதி.
“ஆர்டரே நீங்க கொடுத்தது தான மேடம். அதை நீங்களே வேண்டாம்னு சொல்லிடுங்க” என்றனர்.
“இதென்ன மிட்டாய் விவகாரமா?” என்று எண்ணியவள்,
“அது கோர்ட் ஆர்டர். அதை நான் ஒன்னும் செய்ய முடியாது. அந்த இடம் எல்லாத்தையும் அவங்க பிராப்பரா வாங்கி ரெஜிஸ்டர் பண்ணியிருக்காங்க. சொல்லப் போனா உங்க ஊர் மக்கள் நிறைய பேருக்கு நிறைய நல்ல விஷயமும் பண்ணியிருக்காங்க. அவங்களால ஆதாயம் அடைஞ்சவங்க, அதிகப்படியான ஆதாயத்தை எதிர்பார்த்து உங்களை தூண்டி விடுறாங்க. இது தெரியாம நீங்களும் இப்படி போராட்டம் பண்றது சரியில்லை” என்றாள் நதி நிமிர்ந்த தோரணையில்.
“இன்ஸ்பெக்டர் குமரன், அது யார் யாருன்னு பேரோட புல் டீடெயில்ஸ்ம் தரேன். அவங்க மேல உடனே எப்.ஐ.ஆர். போடுங்க. அரசு அதிகாரியை வேலை செய்ய விடாம தடுத்தது, மக்களைத் தூண்டிவிட்டு கலவரத்தை தூண்டுறது, கருப்பு கொடி கட்டி போராட்டம் பண்ண எல்லாரையும் ஒன்னு சேர்க்குறதுன்னு இப்படி நிறைய அபென்ஸ் இருக்கு” என்றாள்.
“என்ன மேடம் மிரட்டுறிங்களா?” என்றான் இன்னொருவன்.
“எஸ், உண்மையை சொன்னா மிரட்டல் மாதிரித்தான் இருக்கும். சம்பந்தப்பட்ட கம்பெனிகிட்ட இருந்து யார் யார் எவ்வளவு பணம் வாங்கியிருக்கிங்க, யாரெல்லாம் அவங்ககூட காண்டாக்ட்ல இருந்திருக்கிங்க. அதானால நீங்க அடைஞ்ச லாபம் இப்படி எல்லாத்தையும் எடுத்துட்டு தான் பேசுறேன்” என்றபடி மக்கள் அனைவரையும் பார்த்தவள்,
“இங்க பாருங்க, அது எதுவும் உங்க சொந்த நிலம் இல்லை. உங்க ஆடு மாடுகளுக்கு மேய்ச்சல் நிலம் இல்லைன்றது தான் உங்க கோரிக்கை. அதுக்கு தகுந்த மாற்று ஏற்பாட்டை கண்டிப்பா நான் பண்ணிக் குடுக்குறேன்.
அந்த பிராஜெக்ட்டால பாதிக்கப்படுறதா நினைக்கிற பக்கத்து நிலத்துக்காரங்க மட்டும், உங்க புகாரை தனித்தனியா குடுங்க. தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே டெப்புட்டி கலெக்டரும் ஆர்டிஓவும் வந்துவிட்டிருந்தனர்.
“அய்யோ சார், நான் அந்த அர்த்தத்துல சொல்லலை. பயங்கரமா, தெளிவா பேசுறாங்க. அதைச் சொன்னேன்” என்றான்.
“அந்த தெளிவு இருக்கப் போய் தானே இந்த போஸ்ட்டிங் வந்திருக்காங்க” என்றான் குமரன்.
“சார் நீங்க எதுவும் பேசாம அமைதியா இருக்கீங்க? எப்பவும் இப்படி இருக்க மாட்டிங்களே?” என்றான் குரு.
“இது அவங்க டிப்பார்ட்மென்ட் சம்பந்தப்பட்டது குரு. அவங்க தான் சால்வ் பண்ணனும். இங்க எந்த அசம்பாவிதமும் நடக்காம தடுக்குறது மட்டும் தான் நம்ம வேலை. மீறி நடந்தா நாலு அப்பு அப்பி, அரெஸ்ட் பண்ணிட்டு போயிட்டே இருக்க வேண்டியது தான்” என்றான் சாவகாசமாய்.
அங்கு நதியிடம் ஒருத்தன் மீண்டும் வம்பு வளர்ப்பதைப் போல் பேசிக் கொண்டிருக்க,
“ஆமா சார், இவங்களைத் தூண்டி விடுறதே இவன் தான்” என்றான் குரு.
“ஆள் எப்படி?” என்றான்.
“ரெண்டு பார் நடத்திட்டு இருக்கான் சார். அது போக மணல் லாரியும் ஓடுது. செய்றது எல்லாம் இல்லீகல். ஆனா கட்சிக்கு வேண்டப்பட்டவன். இதுக்கு முன்னாடி இருந்த இன்ஸ்பெக்டர் எவ்வளவோ போராடி பார்த்தார் ஒன்னும் செய்ய முடியலை” என்றான் குரு.
“அப்பறம்?”
“அப்பறம் என்ன சார், குடுக்குறதை வாங்கிக்கிட்டு சரண்டர் ஆகிட்டார். இந்த ஏரியாவைப் பொறுத்த வரைக்கும் ஆளும்கட்சியோட கிளைச் செயாலாளர் தான் எஸ்ஐ. மாவட்ட செயலாளர் தான் இன்ஸ்பெக்டர்” என்றான் குரு.
குமரன் அவனையே பார்த்திருக்க, அவன் பார்வை நதியை சரியில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தது. நதியை அவன் பார்த்த விதம் கண்டு கைகளை இறுக்கிக் கொண்டவன், கோபத்தை கட்டுப்படுத்திய படி நின்றிருந்தான்.
“குரு, அவனை சுத்தி, புல் போக்கஸ்ல வீடியோ எடு. ஆதாரம் தெளிவா இருக்கணும்” என்றான் குமரன்.
“ஓகே சார்” என்றவன் வீடியோ எடுக்க ஆரம்பிக்க,
“சார் கல் எடுத்து அடிக்கப் போறாங்கனு நினைக்கறேன்” என்றான் குரு.
“எனக்கும் தெரியுது. வீடியோல எதுவுமே மிஸ் ஆகக் கூடாது. குறிப்பா அவன். நான் சொல்லும் போது, வீடியோவை ஆப் பண்ணிடு” என்றான்.
அவனை அடித்துத் துவைக்கும் ஆவேசம் வந்தாலும், டெபுட்டி கலெக்டர் இருக்கும் போது, எதுவும் செய்யக் கூடாது என்பதால் அமைதி காத்தான் குமரன்.
அவர்களின் பேச்சு வார்த்தையில் எந்த பலனும் எட்டப்படாமல் இருக்க, அந்த சோலார் ப்ராஜெக்ட் உரிமையாளரும் வந்திருந்தார். அவரை அழைத்துக் கொண்டு அந்த துணை ஆட்சியர் உள்ளே சென்று விட, அது மக்களின் கொந்தளிப்பை இன்னும் அதிகப்படுத்தியது.
“இப்ப என்ன பண்றது குமரன்? ரொம்ப ரூடா இருக்காங்க” என்றார் டிஎஸ்பி.