அவன் நினைத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்து  சாப்பிட முடியுமே என்ற ஆச்சர்யம் தான்.

நேராக ஸ்டேஷன் சென்றவன், அங்கு பார்க்க வேண்டிய வேலைகளை முடித்துவிட்டு, தாலுகா ஆபீஸ் நோக்கி சென்றான்.

அங்கு நதியோ சோர்வுடன் வேலை செய்து கொண்டிருந்தாள். வேலையில் சேர்ந்த உடனே விடுமுறை எடுக்க அவள் மனம் ஒப்பவில்லை. அதனால் வந்துவிட்டாள்.

அந்த சோலார் பிரச்சனை பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும் என்று நிலவரங்கள் அவளுக்கு உணர்த்திக் கொண்டே இருந்தது. அது சம்பந்தமான பைலை ஆட்சியரின் பார்வைக்கு அனுப்புவதற்காக தயார் செய்து கொண்டிருந்தாள்.

“மேடம் உங்களைப் பார்க்க இன்ஸ்பெக்டர் வந்திருக்கார்” என்றார் உதவியாளர்.

“வர சொல்லுங்க” என்றாள்.

என்னதான் குமரன் இன்ஸ்பெக்டர் என்றாலும், நதியின் பதவி அவனை விட ஒரு படி மேலே தான். ரேங்கிங் மாதிரியில் பார்த்தால் ஒன்றாய் தெரியும், ஆனால் அதிகாரம் என்னவோ தாசில்தாருக்குத் தான் அதிகம்.

குமரன் கதவைத் தட்ட,

“உள்ள வாங்க சார்” என்றவள் செய்து கொண்டிருந்த வேலையில் இருந்து நிமிரவே இல்லை.

“ஒரு பைவ் மினிட்ஸ் சார், உட்காருங்க” என்றவள் அப்போது தான் நிமிர்ந்து குமரனைப் பார்த்தாள்.

அந்த தாலுகாவில் ஐந்து போலிஸ் ஸ்டேஷன் இருக்கிறது. அதில் ஏதோ ஒரு இன்ஸ்பெக்டர் என்று அவள் நினைத்திருக்க, குமரனை அங்கு எதிர்பார்க்கவில்லை.

சில வினாடிகளில் தன்னை இயல்பாக்கிக் கொண்டாள்.

அவளுக்கு எதிரே அமர்ந்தவன் அவளைத் தான் பார்த்திருந்தான். வேலையில் இருந்தவளுக்கு அவனின் பார்வை ஏதோ செய்ய, கவனம் வேலையில் செல்லவில்லை.

“இப்ப எதுக்காக இப்படி பார்த்துட்டு இருக்கீங்க இன்ஸ்பெக்டர்?” என்றாள் கோபமாய்.

“என்ன மேடம் இது வம்பா இருக்கு? அன்னைக்கு ஸ்டேஷன்ல நீங்க  கூடத்தான் என்னைப் பார்த்துகிட்டே இருந்திங்க. நான் ஏதாவது கேட்டேனா?” என்றான் சாவகாசமாய்.

பல்லைக் கடித்தவள், செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்தியபடி,

“சொல்லுங்க என்ன விஷயமா பார்க்க வந்திருக்கிங்க?” என்றாள்.

“கலெக்ட்ரேட் போற பைல்ல வைக்குறதுக்காக நீங்க கேட்ட டீட்டையில்ஸ்” என்று பைலை நீட்ட,

“ஓகே” என்றபடி வாங்கிக் கொண்டாள்.

“நாங்க கேட்ட டீடெயில்ஸ் நீங்க இன்னும் குடுக்கலை மேடம்” என்றான்.

“பைல் இன்னும் ரெடியாகலை. எப்படியும் அரைமணி நேரம் ஆகும். நீங்க கிளம்புங்க, எங்க ஸ்டாப் கொண்டு வருவாங்க” என்றாள்.

“கான்பிடன்சியல் அப்படின்றதுனால தான் நானே நேர்ல வந்தேன் மேடம். நான் வெயிட் பண்றேன். நீங்க ரெடி பண்ணி குடுங்க” என்றான்.

தனது உதவியாளரை அழைத்தவள்,

“அந்த சோலார் சம்பந்தப்பட்ட நிலத்தோட வரைபடம், பட்டா சிட்டா அடங்கல் எல்லாத்தையும் எடுத்துட்டு வாங்க” என்றவள்,

“அப்படியே ரெண்டு காபி சொல்லிடுங்க” என்றவள்,  அவள் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள்.

சேரில் சற்று சாய்ந்து ஒய்யாரமாய் அமர்ந்து கொண்டவன், முகத்தாடையை ஒரு கையால் தாங்கி அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

கருநீல நிற காட்டன் புடவையும், காதில் அவள் எப்போதும் அணிந்திருக்கும் அதே கம்மல், ஒரு கையில் வாட்ச், ஒரு கையில் கண்களை உறுத்தாத அளவிற்கு மெலிதான பிரேஸ்லெட், இடைவரை நீண்டிருந்த பின்னல், சோர்விலும் சோபையாய் மிளிர்ந்த முகம்.

முன்பெல்லாம் சல்வார் தான் அதிகம் அணிவாள். இப்போது புடவையே அதிகம் உடுத்துகிறாள். ஏற்கனவே அழகில் மிளிர்பவளுக்கு, கூடவே வேலை தந்த கம்பீரமும் சேர்ந்து கொள்ள, அதுவே அவளில் இருந்து பார்வையை எடுக்க முடியாமல் செய்திருந்தது குமரனை.

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அப்போது தான் அவள் டேபிளில் இருந்த பெயர் பலகை கண்ணில் பட்டது. தீராநதி வரதன், வட்டாச்சியர் என்று இருக்க, அவ்வளவு நேரம் இருந்த இலகுத் தன்மை நொடியில் மறைந்து மீண்டும் பழைய குமரனாய் முகத்தை கடினமாய் மாற்றிக் கொண்டான்.

“மேடம் காபி” என்றபடி உதவியாளர் வர,

“எடுத்துக்கோங்க இன்ஸ்பெக்டர்” என்றாள்.

“நோ, தேங்க்ஸ் மேடம். நான் காபி குடிக்கிறது இல்லை” என்றான் பட்டென்று.

‘அதை காபி சொல்லும் போதே சொல்லியிருக்க வேண்டியது தான?’ என்று உள்ளுக்குள் கருவியவள், அவள் மட்டும் எடுத்துக் கொண்டாள்.

காபியை குடித்தபடி அவள் வேலையில் மும்பாரமாய் இருக்க,

“வேண்டாம்னா அப்படியே விட்ருவாளா? மறுபடியும் ஒரு பேச்சுக்காவது சொல்றாளா பாரு” என்று பல்லைக் கடித்தவன், வேறு வழியின்றி பொறுமை காத்தான்.

அப்போது அவள் டேபிளில் இருந்த போன் சத்தம் எழுப்ப, எதேச்சையாய் பார்த்தவனுக்கு  சரியாய் தெரியவில்லை. ஆனால் குழந்தையின் படம் போல் தெரிந்தது. போன் அவளை நோக்கி இருந்ததால் அவனுக்குத் தெளிவாகத் தெரியவில்லை.

“யார்?” என்று அசட்டையாய் போனைப் பார்த்தவள், வேகமாய் குமரனையும் பார்க்க, பதட்டத்தில் சட்டென்று போனை எடுத்து அழைப்பை எடுத்திருந்தாள்.

“எக்ஸ்கியூஸ்மி” என்றவள்,

“சொல்லுங்கம்மா” என்றாள்.

“உடம்புக்கு எப்படி இருக்கு நதி? மதியம் சாப்பிட வீட்டுக்கு வந்துடு நதி” என்றார்.

“கொஞ்சம் பரவாயில்லைம்மா. ம்ம், வந்திடுறேன்” என்றவள் வேகமாய் கட் செய்ய போக,

“நதி பாப்பா பேசணுமாம்” என்ற சாரதாவின் குரலில் அதிர்ந்தவள்,

“அம்மா நான் முக்கியமான வேலையா இருக்கேன். அப்பறம் கூப்பிடுறேன்” என்றவள் பதிலைக் கூட எதிர்பாராமல் சட்டென்று வைத்துவிட்டாள்.

‘அவங்க அம்மாகிட்ட பேசுறதுக்கு எதுக்கு இவ்வளவு பதட்டப்படுறா? ஏதோ தப்பா இருக்கே’ என்று அவன் யோசித்துக் கொண்டிருக்க,

“அம்மா பேசினது வெளிய இவருக்குக் கேட்டிருக்குமா?” என்றவளுக்கு அவள் போக்கில் யோசித்துக் கொண்டிருந்தாள்.

“ எனக்கு டைம் ஆகுது மேடம்” என்றான்.

“முடிஞ்சது, இந்தாங்க” என்றவள் அவனிடம் பைலை நீட்ட, அதை வாங்கிக் கொண்டவன்,

“இதையெல்லாம் நீங்களே பண்ணனும்னு இல்லையே மேடம். டெப்டி தாசில்தாரைக் கூட பண்ண சொல்லலாம்” என்றான்.

“எப்படி வேலை செய்யணும்னு எனக்குத் தெரியும் இன்ஸ்பெக்டர். நீங்க கிளாஸ் எடுக்க வேண்டாம்” என்றாள்.

“சாரி மேடம்” என்றவன் வெளியே செல்ல, தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டாள். அவன் முன் இயல்பாய் இருப்பவளைப் போல் காட்டிக் கொண்டாலும், உள்ளுக்குள் மனம் படபடவென்று அடித்துக் கொண்டது அவளுக்குத் தானே தெரியும். வெளியே சென்றவனைத் தான் பார்த்திருந்தாள்.

முன்பை விட கம்பீரம் கூடித் தெரிந்தான். எஸ்ஐ யாக இருக்கும் போதே, மிடுக்குடன் இருப்பான். இப்போது இன்ஸ்பெக்டர் வேறு, சொல்லவா வேண்டும். எப்போதும் போல் அவனை மனம் ரசித்தாலும், அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு,

போனை எடுத்து சாரதாவிற்கு அழைத்தவள்,

“தியா கிட்ட குடுங்கம்மா” என்றாள்.

“மம்மி” என்ற தியாவின் குரலில் மனம் மீண்டும் இயல்பானது.

“அம்முக்குட்டிக்கு அம்மாகிட்ட பேசணுமா? அம்மு சாப்பிட்டிங்களா?” என்றாள் முகம் முழுவதும் சிரிப்புடன்.

“சாப்பித்தேன் மம்மி” என்றாள் தியா மழைலைக் குரலில்.

அவள் பேசிக் கொண்டிருப்பதை வெளியே இருந்து கண்ணாடித் தடுப்பின் வழியாக பார்த்த குமரனின் புருவங்கள் யோசனையில் சுருங்கியது.

‘நான் இருக்கும் போது பதட்டமா கட் பண்ணவ, இப்போ இப்படி சிரிப்போட யார்கிட்ட பேசிட்டு இருக்கா?’ என்றவனுக்கு தன் மனம் போகும் திசையைக் கண்டு விக்கித்தான்.

“நீ அவளை சந்தேகப்படுறியா?” என்றது மனம்.

“அவளை சந்தேகப்படுறது என்னையே சந்தேகப்படுற மாதிரி” என்றான் பதிலாய்.

‘அப்பறம் என்ன? வந்த வேலை தான் முடிஞ்சது இல்ல, கிளம்பு” என்றது மனசாட்சி.