வாசல் 14:

நதியை அவள் வீட்டில் இறக்கி விட்டுச் சென்ற குமரனுக்கு மனமெங்கும் அவள் நினைவுகள் தான். நடந்த அனைத்தும் மீண்டும் அவன் மனக்கண்ணில் வந்து சென்றிருந்தது. ஏனோ அவளின் அருகாமை அந்த உணர்வுகள் அவனுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆசுவாசத்தையும் நிம்மதியையும் கொடுத்திருந்தன.

தூங்குவற்காக மாத்திரைகளை வாங்கிச் சென்றவனுக்கு தெரியவில்லை, அன்று மாத்திரை போட்டாலும் அவனுக்கு தூக்கம் வராதென்று.

அவளின் நினைவுகளுடன் வீடு வந்து சேர்ந்திருந்தான். வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே வந்தவன், நேராக அறைக்குள் செல்ல முற்பட,

“சாப்பிட வா குமரா” என்றார் கோதாவரி.

“எனக்குப் பசியில்லை” என்றவன் கோதாவரியின் முகம் கூட பார்ப்பதில்லை.

“குமரா அப்பா தான் சமைச்சேன், சாப்பிடுப்பா” என்றார் சங்கரன்.

“உடம்புக்கு முடியாததோட  நீங்க எதுக்கு  இதெல்லாம் செய்றிங்கப்பா!  எனக்கு நிஜமாவே பசியில்லை” என்றான்.

“நாம இங்க வந்திருக்கவே கூடாதுங்க! கொஞ்சம் கூட அப்பா அம்மான்னு நினைச்சு பேச மாட்டேங்குறான். ஏதோ விரோதிகிட்ட பேசுற மாதிரி பேசுறான். எப்ப போறான்? எப்ப வர்றான்னு ஒண்ணுமே தெரியலை. நாம எதுக்கு தண்டமா இந்த வீட்ல இருக்கணும்?” என்றார் கோதாவரி.

“அதைத் தான் நானும் சொல்றேன். எப்பக் கிளம்புறிங்க?” என்றான் பட்டென்று.

“அவ கிளம்பிட்டு தான் மறுவேலை பார்ப்பா. எல்லாம் நடிப்பு குமரா” என்றார் சங்கரன்.

இரண்டு வருடமாக அவர்களுடன் பேசாமல் தான் இருந்தான் குமரன். அந்த வீட்டிற்கும் செல்லவில்லை. இடையில் சங்கரனுக்கு மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போக, அவரின் முகத்திற்காக பார்க்கச் சென்றான். அதுவும் மருத்துவமனைக்கு மட்டுமே சென்றான்.

ஆனால் கோதாவரிக்கு இது போதாதா? இந்த சந்தர்ப்பத்திற்காகவே காத்திருந்தவர் போல், மீண்டும் அவனிடம் ஒட்ட முயற்சி செய்து கொண்டிருந்தார். குமரனைப் போல் ஒரு இளிச்சவாய மகனாக கல்யாண் இல்லாதது தான் அவரின் வருத்தம்.

குமரனின் கவனிப்பில் செழுமையில் இருந்தவருக்கு, கல்யாணின் பட்ஜெட் குடும்பத்தில் காலம் தள்ளுவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. வாயிருக்க மாட்டாமல் ராணியையும் பேசி வைக்க, கல்யாண் வீட்டில் இப்பொழுதெல்லாம் அடிக்கடி பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது.

ராணி கோவித்துக் கொண்டு தாய் வீடு செல்ல, கல்யாணுக்கோ விழி பிதுங்கிய நிலை.

“உன் வாழ்க்கையை கெடுத்தது பத்தாதுன்னு இப்போ அண்ணன் வாழ்க்கையும் கெடுத்துட்டாங்க குமரா” என்று தீபா சொல்லியிருக்க, குமரனுக்கும் வருத்தம் தான். அதற்காகவெல்லாம் அவன் மனம் இசையவில்லை.

கோதாவரியின் பேச்சுக்களைத் தாங்க முடியாத சங்கரன்,

“மனசே சரியில்லை குமரா. உன்னைப் பார்க்கணும் போல இருக்குப்பா. ஒரு பத்து நாள் உன்கூட வந்து இருந்துக்கட்டுமா?” என்று சங்கரன் கேட்டிருக்க, ஒரு மகனாய் அவனால் வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை.

“நீங்க மட்டும் வாங்கப்பா. நான் பார்த்துக்கிறேன். தயவு செஞ்சு அவங்களை கூட்டிட்டு வராதிங்க” என்றான் தீர்மானமாய்.

“குமரா ஒரு ஒரு மாசம் கூட வச்சுக்கடா. இப்படி கேட்குறேன்னு தப்பா நினைக்காத குமரா. ஒரு மாசம் மட்டும் டைம் குடு. நான் வேற வீடு பார்த்துட்டு இருக்கேன். நான் தனியாவே போய்டுறேன். அவங்க ரெண்டு பேர் மட்டும் இங்க இருந்துக்கட்டும். வர்ற செலவை அப்பறம் பார்த்துக்கலாம். என்னால அவங்களை வச்சு சமாளிக்க முடியலை குமரா” என்று கல்யாண் பேசியது இன்றும் அவனுக்கு மனதிற்குள் வந்து போனது.

“சரி அனுப்பி விடு” என்றிருந்தான்.

ஆனால் கோதாவரியோ,

“என் மகன் தனியா இருக்கான்ல. சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவான். அதான் கூட வந்து இருங்கம்மான்னு கெஞ்சி கேட்டுக்கிட்டான். அவனை மாதிரி நானும் கல்லு மனசா இருக்க முடியுமா? அதான் போய் அவனுக்கு சாப்பாடு ஆக்கி வச்சுட்டு கூட இருக்கலாம்னு போறோம்” என்று தெருவெல்லாம் தம்பட்டம் அடித்துவிட்டு தான் சென்றிருந்தார்.

அவனிடம் வந்ததில் இருந்து அவரும் தலைகீழாய் நிற்காத குறையாய் பேசிப் பார்த்துவிட்டார். எதற்கும் மசியவில்லை குமரன். அவனாக கோதாவரியிடம் பேசுவதில்லை. அதற்காவே அவன் ஸ்டேஷனில் இருக்கும் போது சங்கரனின் போனில் இருந்து விடாமல் அழைப்பார். எடுத்து இரண்டு வார்த்தையில் பதில்

சொல்லிவிட்டு வைத்து விடுவான். இல்லையென்றால் வேலையை நிம்மதியாய் செய்ய விடாமல் தொடர்ந்து போன் வந்து கொண்டே இருக்கும்.

வீட்டிலும் முடிந்தவரை கோதாவரி கையால் சாப்பிடுவதை தவிர்த்து விடுவான். சில சமயம் சங்கரனின் முகத்திற்காக அவரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு வேறு வழியின்று சாப்பிட்டு விட்டு செல்வான். இன்றும் அது தான் நடந்தது.

அறைக்குள் சென்று கட்டிலில் விழுந்தவனுக்கு நினைவெல்லாம் நதி மட்டுமே. இன்று ஹாஸ்பிட்டலில் ஊசி என்றதும் அவள் பேசிய பேச்சையும், அவள் முகம் எப்படி இருந்திருக்கும் என்று மனக்கண்ணில் யோசித்துப் பார்த்தவனுக்கு, நீண்ட நெடிய நாட்களுக்குப் பிறகு உதட்டில் புன்னகை அரும்பியிருந்தது.

அவளைப் பார்க்காதவரை நினைவுகளுக்கு வேலியிட்டவனால் அவளைப் பார்த்தப் பிறகு, நிஜங்களுக்கு வேலியிட முடியவில்லை.

‘ஆனா, முன்னைவிட இப்போ கொஞ்ச வெயிட் போட்டு, ஆள் பார்க்க கும்முன்னு இருக்காளே’ என்று யோசித்தவன் அன்று இரண்டாவது முறையாக சிரித்திருந்தான்.

‘வேண்டாம் குமரா கொஞ்சம் அடக்கி வாசி. இப்பத்தான் கண்ணுல பட்டிருக்கா. நீ ஏதாவது எடக்கு மடக்கா பண்ணப் போய், திரும்பவும் எங்கையாவது ஓடிடப் போறா. அவளைக் கொஞ்சம் பொறுமையா தான் ஹேண்டில் பண்ணனும்’ என்று தனக்குத் தானே கூறிக் கொண்டவனுக்கு, உறக்கம் என்பது கொஞ்சம் கூட வரவில்லை. இத்தனை நாள் வேதனையில் தூங்காமல் தவித்தவன், இன்று மகிழ்ச்சியில் தூங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.

அங்கு குமரனின் நினைவுகளில் நதியும் உறங்கவில்லை. காய்ச்சலும் குறைந்தபாடில்லை. நடந்த சம்பவங்களை தோண்டிப் பார்த்ததில் மீண்டும் அவளுக்குக் காய்ச்சல் கூடித்தான் இருந்தது.

மறுநாள் காலையில் வேகமாய் எழுந்த குமரன், குளித்து முடித்து யூனிபார்ம்மை அணிந்தவன், மீண்டும் மீண்டும் தன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டான்.

‘பீவர் எப்படி இருக்குன்னு தெரியலையே?’ என்று நினைத்தவன்,

“இன்னைக்கு தாலுகா ஆபீஸ் போற வேலை இருக்கே, அங்க போய் நேர்லயே பார்த்துக்குவோம்” என்றபடி கிளம்பி வந்தான்.

கிளம்பி வெளியே வந்த மகனையே பார்த்திருந்தார் சங்கரன். இரண்டு வருடங்களுக்குப் பிறகு அவரை பழைய குமரனாய் பார்க்கிறாய். இத்தனை நாள் அவன் முகத்தில் இருந்த வெறுமை அன்று இல்லாமல் இருந்தது.

“என்னப்பா அப்படி பார்க்குறிங்க?” என்றான் ஷூவை அணிந்து கொண்டே.

“பழைய குமரனை பார்க்குற மாதிரி இருக்கு குமரா” என்றார்.

“வேண்டாம்ப்பா..! பழைய குமரன் வேண்டவே வேண்டாம். அவனுக்கு என்ன வேணும்னு தெளிவு இருந்திருந்தாலும், அதை தக்க வச்சிக்கிற அளவுக்கு சாமர்த்தியம் இருந்ததில்லை. அதனால நான் இப்ப இருக்குற மாதிரியே இருந்துக்கிறேன். எனக்கு என்ன தேவைங்கிறதுல நான் உறுதியா இருக்கேன்” என்றான் குமரன்.

“சாப்பிட்டு போ குமரா” என்று கோதாவரி வந்து நிக்க,

கண்களை மூடி பல்லைக் கடித்தவன்,

“அப்பா அவங்ககிட்ட சொல்லி வைங்க. என்கிட்டே ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்க வேண்டாம்னு. அப்பறம் தயவு செஞ்சு உங்க போனைக் குடுக்காதிங்க. சும்மா போனை போட்டு எப்ப வர்ற? ஏன் வரலைன்னு அக்கறை இருக்குற மாதிரி ஆக்ட்டிங் எல்லாம் குடுக்க வேண்டாம்னு. எல்லாம் கல்யாண் வீடு பார்க்கிற வரை தான்” என்றவன், ஜீப்புடன் டிரைவர் வரவும் கிளம்பிவிட்டான்.

வழக்கமாய் சாப்பிடும் கையேந்தி பவனில் தன்னுடைய காலை உணவை முடித்துக் கொள்ள, அவனையே பார்த்திருந்தான்  டிரைவர் குரு.

“என்ன குரு? என்னையே பார்த்துட்டு இருக்க? நீ சாப்பிடலையா?” என்றான் குமரன்.

“நான் வீட்டுலயே சாப்பிட்டுட்டேன் சார்” என்றவன்,

“கேட்குறேன்னு தப்பா எடுத்துக்காதிங்க சார், நல்ல ஹோட்டல்லையே சாப்பிடலாமே? ஏன் தினமும் கையேந்தி பவன்ல சாப்பிடுறிங்க?” என்றான் குரு.

“இங்கன்னா ஐம்பது ரூபாய்ல முடிஞ்சுடும். ஹோட்டல்னா ஐநூறு ரூபா ஆகுமே. நமக்கு அதெல்லாம் கட்டுபடி ஆகாது” என்றான் எதார்த்தமாய். குரு அவனை ஆச்சர்யமாய் பார்த்தான்.