ஒரு வாரம் கழித்து அலுவலகம் சென்றவள், ட்ரான்ஸ்பரை ஏற்றுக் கொள்வதாய் சொல்ல, பிரியாவிற்கு தான் அதிர்ச்சி.
“என்ன நதி? போகலைன்னு சொன்ன?” என்றாள்.
“இப்ப போகணும்னு தோணுது பிரியா” என்றாள்.
“கொஞ்சம் யோசிக்கலாம் நதி. இது வாழ்க்கை விஷயம். எடுத்தோம் கவுத்தோம்னு பண்ணாதடி” என்றாள் பிரியா.
“இனி எடுக்கவோ கவுக்கவோ ஒன்னும் இல்லை பிரியா. உனக்கு ஒரு அட்வைஸ் சொல்லட்டுமா, மேரேஜ் பண்ணனும்னு முடிவு பண்ணிட்டா, பையனை மட்டும் பார்க்காத, அவன் குடும்பமும் உனக்கு ஒத்து வருமான்னு பார்த்துக்கோ. இல்லைன்னா என்னை மாதிரி தான் நிக்கணும்” என்றாள். ஏனோ பிரியாவிடம் கூட தன் வயிற்றில் குழந்தை இருக்கும் விஷயத்தை அவள் உரைக்கவில்லை.
அங்கு குமரனுக்கோ லாக்கப் டெத் பெரிய பிரச்சனையாய் மாறிப் போனதில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தான்.
தீபாவின் வீட்டில் விட்டத்தைப் பார்த்து படுத்திருந்தவனின் முகத்தை தீபாவால் பார்க்க முடியவில்லை. ஷேவ் பண்ணாத தாடியுடன் எதையோ இழந்தவனைப் போல் படுத்திருந்தவனைப் பார்த்தவளுக்கு மனசே ஆறவில்லை.
“இன்னும் எத்தனை நாளைக்கு குமரா இப்படியே இருக்கிறதா உத்தேசம்?” என்ற அக்காவைப் பார்த்தவனின் கண்களில் மருந்துக்கும் உயிர்ப்பில்லை.
“கட்டின பொண்டாட்டியை ஒழுங்கா வச்சு குடும்பம் பண்ணத் தெரியாத எனக்கெல்லாம் எதுக்குக்கா கல்யாணம்? நம்ம வீட்டுல இருக்குறவங்க புத்தி தெரிஞ்சும் கல்யாணம் பண்ணினது தான் பெரிய தப்பு. என்னை மாதிரி அவளும் பொறுமையா இருக்கணும்னு நினைச்சது அதை விட பெரிய தப்பு. மொத்தத்துல இவங்க வயித்துல பிறந்ததே பெரிய பாவம்னு நினைக்கிறேன்” என்றான் விரக்தியான குரலில்.
“குமரா இப்படி எல்லாம் பேசாதடா?” என்ற தீபா கலங்கிவிட்டாள்.
“உண்மையைத் தான சொல்றேன் க்கா..! என் கூட போக சொன்னா மொத்தமா போய்டுவேன்னு சொல்றா அவ. எடுத்த ஒரு உயிரே போதும். இன்னும் மிச்சம் இருக்குற அவ உயிரையும் எடுக்க வேண்டாம்னு தான் திரும்பி வந்துட்டேன்” என்றான்.
“நதி கோபத்துல அப்படி சொல்லியிருப்பா குமரா. கொஞ்ச நாள் போகட்டும். அவளே சரியாகிடுவா” என்றாள் தீபா தம்பியின் மனதைத் தேற்றும் பொருட்டு.
“அவ வர வேண்டாம் க்கா. அவளுக்கு என்னைப் புரியும்னு நினச்சு கொஞ்சம் இறுமாப்பா இருந்துட்டேன். ஆனா, கொஞ்சம் கூட அவகிட்ட என்னைப் புரியவைக்கலை நான். அவ சொன்ன மாதிரி நம்ம குடும்பத்தை பார்த்த நான், அவளைப் பார்க்க மறந்துட்டேன் போல” என்றான் விரக்தி சிரிப்புடன்.
“நதின்னா உனக்கு எவ்வளவு இஷ்ட்டம்னு எனக்குத் தெரியாதா குமரா. மனசு விட்றாதடா” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே, கல்யாணும் ராணியும் வந்தனர்.
“இப்படி நடந்திருக்க வேண்டாம் குமரா” என்ற கல்யாணுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை.
“ஆரம்பத்துலையே தனிக்குடித்தனம் போங்கன்னு சொன்னேன். அதுக்கு நதி எல்லாம் நீங்க பார்த்துப்பிங்கன்னு அவ்வளவு நம்பிக்கையா சொல்லுச்சு” என்றாள் ராணி.
ஏனோ அந்த வார்த்தைகளைக் கேட்ட குமரனுக்கு கண்கள் தானாகக் கலங்கியது.
‘உன்னை நம்பி, நீ எல்லாத்தையும் பார்த்துக்குவன்னு நம்பி பொறுமையா இருந்த ஒருத்தியை இப்படி தொலைச்சுட்ட குமரா’ என்று அவன் மனம் ஊமையாய் கதற, அந்த நொடிகளையும், நிமிடங்களையும் கடக்க முடியவில்லை அவனால்.
“என்ன குமரா? இப்ப எதுக்கு உங்க அக்கா வீட்ல வந்து உட்கார்ந்திருக்க? அவ போனா போகுறா விடு. அவளுக்கே அவ்வளவு திமிர் இருக்கும் போது, நீ ஆம்பளைடா, நீயேன் இப்படி இடிஞ்சு போய் இருக்குற” என்று கோதாவரி வந்ததும் வராததுமாய் வார்த்தையை விட,
கொஞ்சம் நஞ்சம் மனுஷத் தன்மையுடன் இருந்த குமரன் முழு மிருகமாகவே மாறிவிட்டான். அங்கிருந்த சேரைத் தூக்கி நொறுக்கியவன், கோதாவரியின் குரல்வளையைப் பிடித்துவிட்டான். அவன் முகத்திலும் கண்களிலும் அவரைக் கொன்று விடும் ஆவேசம்.
“குமரா என்ன பண்ற விடு” என்று கல்யாண் அவன் கைகளைப் பிரித்தெடுப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.
“என்ன பண்றேன்னு புரியுதா குமரா. இன்னும் கொஞ்சம் அழுத்தி பிடிச்சிருந்தேனா அவங்க செத்திருப்பாங்கடா” என்றான் கல்யாண்.
“நான் மனுஷனே இல்லை, மிருகம் போதுமா? தாய்ன்ற வார்த்தைக்கெல்லாம் அர்த்தம் தெரியுமா உங்களுக்கு. அப்படி என்ன பண்ணிட்டேன் நான் உங்களுக்கு. இப்படி என் வாழ்க்கையவே அழிச்சு விடுற அளவுக்கு?” என்றான் ஆக்ரோஷமாய்.
“குமரா முதல்ல கோபத்தை குறைடா” என்றாள் தீபா.
“போதும்க்கா..! எல்லாத்தையும் குறைச்சு குறைச்சு இதோ இவங்களுக்குன்னு பார்த்து நான் பட்டது எல்லாம் போதும்” என்றவன் கோதாவரியிடம் திரும்பி,
“நதியை இந்த வீட்டைப் பிடிச்ச கிரகம்னு சொன்னிங்களாமே? இப்ப சொல்றேன் கேட்டுக்கோங்க, இந்த வீட்டைப் பிடிச்ச கிரகமே நீங்க தான். என் பிள்ளை இல்லாமப் போனதுக்கு காரணமும் நீங்க தான். அந்த குற்ற உணர்ச்சி கொஞ்சம் கூட இல்லாம, வாய் கூசாம வந்து இப்படி பேசிட்டு இருக்கீங்க” என்றான்.
“அவ பேசுனது மட்டும் சரியா?” என்றார் ஆங்காரமாய்.
“அவளை பேச வச்சிருக்கிங்க நீங்க. என்னமோ கேட்டிங்களாமே நூறு சவரன் விஷயம். நீங்க உங்கப்பா வீட்ல இருந்து அப்படி எத்தனை சவரன் நகை போட்டுட்டு வந்துட்டிங்க? இல்லை எத்தனை லட்சம் கொண்டு வந்து கொட்டி அப்பாவுக்கு ஹெல்ப் பண்ணிங்க? அந்த நினைவெல்லாம் இருந்தா இப்படி பேசியிருப்பிங்களா? போதும், இனி இதுக்குமேல இழக்குறதுக்கு என்கிட்டே ஒண்ணுமில்லை” என்று நெஞ்சை நீவிக் கொண்டவன்,
“என் பொண்டாட்டியும் இல்லை, என் பிள்ளையும் இல்லை, இப்போ என் வேலையும் இல்லை, சந்தோசம் தான உங்களுக்கு எல்லாம்” என்றான் குமரன்.
“என்னாச்சு குமரா?” என்ற தீபா பதறினாள்.
“லாக்கப் டெத், சஸ்பென்ஷன்ல இருக்கேன். கையில ஒரு பைசா இல்லை. இந்த மாசம் சேலரி வராது. அதனால யாருக்கும் எதுவும் என்னால செய்ய முடியாது. இப்பன்னு இல்லை இனி எப்பவுமே என்கிட்டே யாரும் எதையும் எதிர்பார்க்காதிங்க. மொத்தத்துல குமரன்னு ஒருத்தன் இருந்தான், இப்போ செத்துட்டான்னு நினைச்சுக்கோங்க. நதி இல்லாத வீட்டுக்கும் இனி நான் வர மாட்டேன்” என்றான் குமரன்.
“குமரா” என்ற தீபா அழுதே விட்டாள்.
“நீயும் அழுது என்னை பலவீனப்படுத்தாதேக்கா. நதி சொன்னா, ‘உங்களுக்கு உங்க குடும்பம் இருக்கு. நான் தான் அநாதையா இருக்கேன்னு’ என்றவன்,
“ஆனா உண்மை என்னன்னா?அவளுக்குத் தங்கமா தாங்குற ஒரு தகப்பன், இன்னும் அவளை குழந்தையாவே பார்த்துக்குற ஒரு அம்மா, தம்பி தங்கைன்னு அவளுக்கு கிடைச்சது அருமையான குடும்பம்.
ஆனா எனக்குத் தான் யாருமில்லை, சொல்லப் போனா உண்மையான அநாதை நான் தான். எத்தனை பேர் இருந்தாலும், இனி சாப்பிட்டியான்னு கேட்க நாதியிருக்காது. எப்ப போறேன் எப்ப வர்றேன்னு கேட்க இனி எனக்கு யாருமில்லை. பொறுப்பா இருந்து குடும்பத்தை நல்லா பார்த்துக்கணும்னு நினைச்சதுக்கு எனக்கு கிடைச்ச பேர் என்னவோ இளிச்சவாயன், பிழைக்கத் தெரியாதவன். நானும் மத்த பசங்க மாதிரி தண்ணி, சிகரெட்ன்னு அடிச்சு ஊரைச்சுத்திட்டு, வம்பு வழக்குன்னு இழுத்துட்டு வந்திருந்தா தெரிஞ்சிருக்கும் இவங்களுக்கு. அப்படியில்லாம ஒழுக்கமா வளர்ந்து, பொறுப்பா இருந்து பார்த்ததுக்கு இவங்க பதிலுக்கு செஞ்சது என்னவோ என் வாழ்க்கையை அழிச்சது தான். என் உயிரை மட்டும் தான் எடுக்கலை. அதைத் தவிர எல்லாத்தையும் எடுத்துட்டிங்க. இனி எடுக்கவோ, கொடுக்கவோ என்கிட்டே ஒண்ணுமில்லை” என்றவனைக் கட்டிக் கொண்ட தீபா கதறிவிட்டாள்.
“இப்படியெல்லாம் பேசாதடா குமரா. அக்கா நான் இருக்கேன்டா. அநாதை அப்படி இப்படின்னு பேசாத குமரா” என்று தீபா அழ, கல்யாணும் கூட கண் கலங்கி விட்டான்.
“மூத்தவனா குடும்ப சுமையை வாங்காதது தப்புத்தான். அதுக்காக இப்படி எல்லாம் பேசாத குமரா”என்றான் கல்யாண்.
“நான் உன்னை ஒண்ணுமே சொல்லலை ண்ணா! சொல்லப் போனா, நீ உன் பொண்டாட்டி புள்ளைக்கு சரியா இருந்திருக்க. ஆனா நான் அப்படி இல்லை” என்றவன்,
“அந்த வீடு ஒன்னு தான் என் பேர்ல இருக்கு. அதையும் வேணும்னா கூட இவங்களை வச்சுக்க சொல்லுங்க. என்னை இப்படியே விட்ருங்க. என் வழிக்கு யாரும் வராதிங்க” என்றவன்,
“நீ வாடகை வீட்டை காலி பண்ணிட்டு இந்த வீட்டுக்கு குடி வந்துடுண்ணா. ரெண்ட் பணம் மிச்சம் தான. அதை வச்சு உன் அருமை அம்மாவைப் பார்த்துக்கோ. இனி அந்த வீட்டுப் பக்கமே நான் வர மாட்டேன். கண்ணுக்கு காணாம எங்க போக முடியுமோ அங்க போய்டலாம்னு இருக்கேன். அப்பாவைப் பார்த்துக்கோ” என்றவன் அடுத்த நிமிடம் அங்கிருந்து கிளம்பியிருந்தான்.
“குமரா” என்ற தீபாவின் கதறல் காதில் கேட்டாலும், திரும்பிப் பார்க்காமல் சென்று விட்டான்.
“இப்ப உனக்கு சந்தோசம் தான. போ, போய் அந்த வீட்ல நிம்மதியா இரு. எல்லாரையும் துரத்தியாச்சு. இனி உனக்கென்ன கவலை. குமரன் இல்லாத வீட்டுக்கு நானும் வர மாட்டேன். உன்னை அம்மான்னு சொல்லவே எனக்கு அசிங்கமா இருக்கு” என்ற தீபா,
“அண்ணா இவங்களை கூட்டிட்டு போய்டு. இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாலும் என்ன செய்வேன்னு எனக்குத் தெரியாது” என்று கத்த,
“இவங்களுக்கு இந்த ஜென்மத்துல புத்தி எல்லாம் வராது” என்ற யுவராணி சென்று விட்டாள்.
“இன்னும் எதுக்கு நிக்கிறிங்க? கிளம்புங்க” என்ற கல்யாண் வேறு வழியின்றி அவரை அழைத்துக் கொண்டு சென்றான்.
நதியோ குடும்பத்துடன் சென்னை சென்று விட்டாள். ஆயிரம் தான் அவனை வெறுத்தாலும், மனதின் ஏதோ ஒரு மூலையில் அவன் மேல் அன்பு இருக்கத்தான் செய்தது.
எங்கே அவனை மீண்டும் பார்த்தால், மனம் மாறிவிடுமோ என்ற பயம் தான் அவளுக்கு. அந்த அளவிற்கு அவனை கண்மூடித்தனமாக நேசித்திருந்தாள்.
வயிற்றில் குழந்தையுடன், ஆபீஸ், கோச்சிங் கிளாஸ் என்று தன்னை பிசியாகவே வைத்துக் கொண்டாள்.
குழந்தை வளர வளர, அவளறியாமல் கணவனின் அருகாமைக்கான அவள் ஏக்கமும் சேர்ந்து தான் வளர்ந்தது. தன் மனதை அடக்குவதற்குள் அரும்பாடு பட்டுப் போனாள்.
‘நீ தேடி வரக்கூடாதுன்னு சொன்ன ஒரு வார்த்தைக்கு தேடி வராம இருக்கான்னா, உன்மேல அவனுக்கு அவ்வளவு தான் அன்பு நதி. இன்னும் ஏன் அவனையே நினைச்சுட்டு இருக்க?’ என்று அவள் உள் மனம் ஊமையாய் சில நேரம் அழும்.
மாதங்கள் ஆக, மனம் கூட ஒரு நிலையில் மறத்துப் போனது அவளுக்கு. அதற்கு பிறகு இப்போது தான் அவனைப் பார்த்திருக்கிறாள்.
செல்போன் திரையில் அவன் முகத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தவள், நினைவுகளில் இருந்து மீண்டிருந்தாள்.