வாசல் 13:

மூன்று மாத திருமண வாழ்க்கை கனவு போல் ஆகியிருந்தது நதிக்கு. ஆசை ஆசையாய் செய்து கொண்ட திருமணம், ஆசையாய் காதலித்த கணவன், அவர்களின் பந்தத்திற்கு சாட்சியாய் கிடைத்த குழந்தை என்று அனைத்தும் ஒரே நாளில் அவளை விட்டு சென்றதை போன்ற பிரம்மை அவளுக்கு.

மகளின் பார்வை ஒரே இடத்தில் வெறித்தபடி நிலைகுத்தி இருப்பதைப் பார்த்து சாரதாவின் மனம் அரண்டது. அவ்வளவு சீக்கிரம் பிடிவாதம் பிடிக்காத பெண். ஆனால் உறுதியாய் ஒரு முடிவு எடுத்துவிட்டாள் என்றாள் அதை மாற்றிக் கொள்ளவே மாட்டாள். அதுவே அவள் குணம்.

“நதி” என்று அவர் அவளை நிஜத்திற்கு கொண்டு வர முயற்சி செய்ய,

“எப்படிம்மா அப்படி பேச அந்தம்மாவுக்கு  மனசு வந்தது? என் குழந்தை உருவானதுனால தான் அவங்க புருஷனுக்கு அட்டாக்கே வந்ததாம். கொஞ்சம் கூட வாய் கூசாம எப்படி இப்படி பேச முடிஞ்சது? இப்படி பேசியே இப்போ என் குழந்தையை இல்லாம பண்ணிட்டாங்களே” என்றவள் மீண்டும் அழ ஆரம்பிக்க,

“நதி அழாதம்மா, இந்த நேரத்துல அழக் கூடாதும்மா” என்றார் சாரதா.

அவள் பார்வையில் பட மாட்டேன் என்று சொல்லி விட்டு வந்தாலும், அவள் இருக்கும் இடத்தை விட்டு கால்கள் நகர மறுத்தது குமரனுக்கு.

வெளியே அமர்ந்திருந்தவனுக்கு அவளுடைய கதறல்கள் எல்லாம் வெளியே கேட்டுக் கொண்டு தான் இருந்தது. கண்கள் கலங்கி அவன் அமர்ந்திருந்த விதம் கண்டு போவோர் வருவோர் எல்லாம் ஒரு மாதிரி பார்த்துவிட்டு சென்றனர்.

“நான் அந்த வீட்டைப் பிடிச்ச கிரகமாம். மூணு மாசமா அந்த வீட்டை பிடிச்சு ஆட்டுறேனாம்? அந்தம்மா சொல்றாங்கம்மா..! எனக்கு பொறாமையாம்” என்றவள்,

“நான் அப்படிப்பட்ட பொண்ணாம்மா? சொல்லுங்கம்மா நான் அப்படிப்பட்டவளா?” என்று அழுதவள்,

“எல்லாம் உங்களால தான், நான் உங்ககிட்ட கல்யாணம் கேட்டேனா? சொல்லுங்கம்மா நான் கேட்டேனா?  இப்படி ஒரு குடும்பத்துல தள்ளி என் வாழ்க்கையவே அழிச்சுட்டிங்களே இப்போ என் குழந்தையையும் அழிச்சுட்டிங்க. நீங்க எல்லாரும் தான் காரணம். உங்க யாரையுமே எனக்கு பார்க்க பிடிக்கலை. போங்க இங்கிருந்து” என்று அவள் ஆவேசமாய் கத்த,

“நதிம்மா, அப்பா அப்படி நினைப்பேனாடா?” என்ற வரதனும் அவளுடன் சேர்ந்து அழ,

“என்னால முடியலைப்பா” என்றவள் அவரைக் கட்டிக் கொண்டு அழ, வெளியே இருந்த குமரன், அந்த நிமிடம் உயிருடன் செத்துவிட்டான். அவளின் கதறலை எல்லாம் அதற்கு மேல் அவனால் கேட்கமுடியவில்லை.

“என்ன ஆனாலும் பரவாயில்லை” என்று உள்ளே செல்ல முயன்றவனை, அவளின் குரல் தடுத்து நிறுத்தியது.

“என்னை மறுபடியும் அங்க போக சொல்ல மட்டிங்கல்ல ப்பா” என்றாள் தேம்பியபடி.

“கண்டிப்பா சொல்ல மாட்டேன்டா. நாம நம்ம வீட்டுக்கே போய்டலாம்” என்றார் வரதன்.

“அப்படி போக சொன்னா, நான் மொத்தமா போய்டுவேன். இல்ல உங்களுக்கு நான் வீட்டோட வந்து இருக்குறது கஷ்ட்டமா இருந்தா சொல்லுங்க. நான் எங்கையாவது போய்டுறேன். ஆனா, கண்டிப்பா அவன் கிட்ட போக மாட்டேன். அந்த கொலைகாரன்கிட்ட போக மாட்டேன். அவன் எனக்கு வேண்டாம். அவன் எனக்கு வேண்டாவே வேண்டாம் ப்பா” என்று அழ,

“நதி கோபத்துல எடுக்குற எந்த முடிவும் சரியா இருக்காது. கொஞ்ச நாள் போகட்டும். காலம் எல்லாத்தையும் ஆத்தும்மா” என்றார் சாரதா.

“காலம் காயத்தை தான் ஆத்தும்மா, தழும்பு அப்படியே தான் இருக்கும். அது எப்பவுமே மாறாது” என்றவளின் பேச்சில் இருந்த உறுதி கண்டு திகைத்தான் குமரன்.

ஏனோ உள்ளே செல்ல முயன்றவனின் கால்கள் தன் போக்கில் வெளியே சென்றிருந்தது. கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தவனை, அவனின் அலைபேசி அழைப்பு நிறுத்தியது.

“சார்”  என்றவனின் குரலில் இருந்த உணர்வில் எதிர்புறம் இருந்தவர் கூட திகைத்தார்.

“குமரன் உங்களை எஸ்பி ஆபீஸ் வர சொன்னேனே? ஏன் இன்னும் நீங்க வரலை? நீங்க இவ்வளவு பீல் பண்ண வேண்டிய அவசியம் இல்லை” என்று அவர், அவன் நேற்று நடந்த பிரச்சனையை எண்ணி கவலையாய் இருக்கிறான் என்று பேசிக் கொண்டிருந்தார்.

“வரேன் சார்” என்றவன் இயந்திர கதியில் கிளம்பி சென்றிருந்தான்.

நதியின் ஸ்கேன் ரிப்போர்ட்டுகள் அனைத்தும் வர,

“பிரக்னன்சி டெஸ்ட் எந்த ஹாஸ்பிட்டல்ல பண்ணிங்க?” என்றான் அந்த மருத்துவர்.

நதி அந்த மருத்துவமனையின் பெயரைச் சொல்ல,

“பிரக்னன்சி கன்பார்ம் பண்ணிட்டு ஸ்கேன் பார்த்திங்களா?” என்றார்.

“இல்லை டாக்டர், ஒன் வீக் கழிச்சு வர சொல்லியிருந்தாங்க. வீட்ல கொஞ்சம் பிரச்சனை. அதனால அவங்க சொன்ன டைம்க்கு போக முடியலை” என்றாள் சோர்ந்த குரலில்.

“எதுவும் பிரச்சனையா டாக்டர்? என் பொண்ணுக்கு ஒன்னுமில்லையே?” என்றார் வரதன்.

“பிரச்சனை ஒண்ணுமில்லை. சொல்லப் போனா நல்ல விஷயம் தான்” என்ற மருத்துவர் அவர்களைப் பார்க்க, நதி அவரைப் புரியாமல் பார்த்தாள்.

“என்ன சொல்றிங்க டாக்டர்?”

“உங்களுக்கு உருவாகியிருந்தது இரட்டை கரு. அதாவது ட்வின் பேபிஸ்” என்றார்.

“ட்வின்ஸா..” என்றவளுக்கு மேலும் கண்கள் கலங்கியது.

”ஒரு குழந்தை தான் என்னை விட்டு போயிருச்சுன்னு பார்த்தா ரெண்டு குழந்தையும் என்னை விட்டு போயிருச்சா டாக்டர்” என்றவள் அதே இடத்தில் அழ ஆரம்பித்தாள்.

“நதி பிளீஸ் காம்டவுன். நான் என்ன சொல்ல வர்றேன்னு முழுசா கேளுங்க முதல்ல” என்றார்.

அவள் தன்னை அடக்கிக் கொண்டு அவர் முகம் பார்க்க,

“உங்களுக்கு உருவான இரட்டை கருல ஒரு கரு தான் கலைஞ்சிருக்கு. இன்னொரு கரு நல்ல ஆரோக்கியமா இருக்கு” என்றவரின் வார்த்தைகளில், அவளின் நெஞ்சம் படபடவென்று அடித்துக் கொள்ள, கைகள் ஏனோ வயிற்றைப் பிடித்துக் கொண்டது. இவ்வளவு நேரம் குழந்தை போய்விட்டது என்று அழுதவள் இப்போது ஒரு கரு இருக்கிறது என்ற வார்த்தைகளையும் கேட்டு அழுதாள். சந்தோஷத்தில் கண்ணீர் அவளறியாமல் வந்து கொண்டே இருக்க, வரதனுக்கும், சாரதாவிற்கும் மனம் முழுவதும் மகிழ்ச்சி.

“என்ன சொல்றிங்க டாக்டர்? என்னால நம்பவே முடியலை? இப்படியெல்லாம் நடக்குமா?” என்றாள் நதி கண்ணீருடன்.

எஸ், இதை நாங்க “வேனிஷிங் ட்வின் சின்ட்ரோம்” அப்படின்னு சொல்லுவோம். அதாவது “மறையும் இரட்டை” அப்படின்னு அர்த்தம்.ஒரு கரு சரியா வளர்ச்சி அடையாம இருக்கலாம்.இன்னொரு கரு நல்ல ஆரோக்கியமா வளரலாம். ஒரு கருவோட ஆரோக்கியமான  வளர்ச்சியை இன்னொரு கரு பாதிக்காது. இல்லண்ணா, ஒரே நஞ்சுக்கொடியை ஷேர் பண்ணிக்கும் போது,ப்ளட் சர்குலேஷன்ல ஏற்படுற பாதிப்புனால கூட ஒரு கரு பாதிக்கப்படலாம். அது தான் உங்களுக்கு நடந்திருக்கு.

பொதுவா ட்வின் பேபிஸ் இருக்கும் போது ரொம்ப உணர்ச்சி வசப்படக் கூடாது. மென்டல் ஹெல்த் ரொம்ப முக்கியம். அதோட சேர்ந்து பிரஷர் ஏத்திக்கக் கூடாது. அதை நீங்க செய்யத் தவறியிருக்கிங்க. இன்னொரு பேபி கண்டிஷன் இஸ் நார்மல். ஹெல்தியாவும் இருக்கு .சோ இனியாவது பார்த்து கவனமா இருங்க. பிசிகல் ஹெல்த், அன்ட் மென்டல் ஹெல்த் ரெண்டுமே ரொம்ப இம்பார்டென்ட்” என்றார் அந்த மருத்துவர்.

அவர் கூறிய அனைத்தும் அவள் காதில் விழுந்தாலும், “ஒரு பேபி நல்லா இருக்கு” என்பது மட்டும் தான் அவளுக்கு மீண்டும் மீண்டும் கேட்டது. நடந்த அத்தனை நிகழ்வுகளிலும் அவளுக்கு அப்போதைக்கு கிடைத்த ஒரு பெரிய ஆறுதலாகவே அதை நினைத்தாள்.

“நான் சொன்னது எல்லாம் புரிஞ்சதா நதி?” என்றார் அந்த மருத்துவர்.

“புரிஞ்சது டாக்டர். ஒன்னை இழந்துட்டேன். இன்னொன்னை அவ்வளவு சீக்கிரம் இழந்துட மாட்டேன். என் குழந்தையை நான் நல்லபடியா பெத்தெடுப்பேன் டாக்டர்” என்று தெளிவாய் பேசியவளைக் கண்டு வியந்தார் அவர்.

‘இவ்வளவு நேரம் அழுகையில் கரைஞ்ச பொண்ணா இது’ என்ற வியப்பு தான்.

அவளை உருக்குலைய வைத்ததும் தாய்மை தான். இப்போது அவளை உறுதியாக்கி இருப்பதும் தாய்மை தான்.

“ரொம்ப அனீமிக்கா இருக்கீங்க. ட்ரிப்ஸ் போட சொல்லியிருக்கேன். ஈவ்னிங் டிஸ்சார்ஜ் ஆகிக்கலாம். நெக்ஸ்ட் எப்போ செக்கப் வரணும்னு கேட்டுக்கோங்க” என்றார்.

“சாரி டாக்டர், என்னால இங்க ரெகுலர் செக்கப் வர முடியாது. ரிப்போர்ட்ஸ் குடுத்திங்கன்னா, நான் இருக்குற இடத்துல ஹாஸ்பிட்டல்ல பார்த்துப்பேன்” என்றாள்.

“ஷயர். டிஸ்சார்ஜ் சம்மரி வாங்கும் போது வாங்கிக்கிங்க” என்றவர் சென்று விட, ஆசுவாசமாய் கண்களை மூடிக் கொண்டாள்.

“ஏங்க விஷயத்தை குமரன் தம்பிக்கு போன் பண்ணி சொல்லுங்க. பாவம் அவருக்கும் வருத்தம் இருக்கும் தான” என்ற சாரதாவை தீயென முறைத்திருந்தாள் நதி.

“ஏன்? இந்த ஒரு குழந்தையும் ஏன் இருக்குன்னு நினைச்சுட்டிங்களா?” என்றாள் கோபமாய்.

“நதி அதுக்காக அவர்கிட்ட சொல்லாம எப்படி?” என்றார் சாரதா.

“அவரே எனக்கு வேண்டாம்னு சொல்றேன்ம்மா. என் பிள்ளைக்கு நான் மட்டும் போதும். என்னை மீறி இந்த விஷயத்தை சொல்லனும்னு நினைச்சா சொல்லிக்கோங்க. ஆனா, என்னை விட்ருங்க” என்றாள் விரக்தியாய்.

“சாரதா கொஞ்ச நேரம் சும்மா இரு” என்ற வரதன்,

“எனக்கு நீ தான்டா முக்கியம். டாக்டர் சொன்ன மாதிரி உன் மென்டல் ஹெல்த் தான் முக்கியம். உனக்கு என்ன தோணுதோ, அதையே பண்ணிடலாம்” என்றார் வரதன்.

“அப்பா எனக்கு ப்ரோமொஷனும், சென்னைக்கு ட்ரான்ஸ்பரும் கிடைச்சிருக்கு. நான் அங்க போகலாம்னு இருக்கேன்” என்றாள்.

“இந்த நிலமையில அங்க எப்படி தனியா போவ நதி?” என்றார் சாரதா.

“நாம எல்லாரும் தான் போறோம் சாரதா. நதியை தனியா எல்லாம் அனுப்ப முடியாது. நரேனுக்கும், மகதிக்கும் இன்னும் பத்து நாள்ல எக்ஸாம் முடிச்சுடும். சென்னையிலையே ஒரு ஸ்கூலா பார்த்து பிளஸ் ஒன் சேர்த்து விட்றலாம்” என்றார் வரதன்.

“எதுக்காக அவ்வளவு தூரம் போய் கஷ்ட்டப் படனும் நதி?” என்றார் சாரதா.

“புரிஞ்சுக்கோங்கம்மா, இங்க இருந்தா நான் பைத்தியம் ஆகிடுவேன்” என்றவளிடம் சாரதா மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.